Ki Rajanarayanan"என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில் அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகின்ற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துகளில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என் தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்."

- கி.ராஜநாராயணன்

தமிழ் மொழியின் இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் தம்முடைய பெருவாழ்வின் மூலம் நீங்காத இடம் பிடித்திருப்பவர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன். தமிழ்மொழியில் 1960களில் வெளிவந்து கொண்டிருந்த படைப்பிலக்கியத்தை மடைமாற்றம் செய்தவர்களில் கி.ரா.அவர்களுக்கு ஒரு முதன்மையான இடம் உண்டு.

கரிசல் பகுதிசார்ந்து கி.ரா. உருவாக்கிய படைப்புகளைப் படித்த மீ.ரா. அவர்கள் அந்தக் கரிசல் பூமியை நேரில் காண வேண்டும் என்று கடிதம் எழுதும் அளவிற்கு மண்ணையும் மக்களையும் இணைத்து படைப்புகளை உருவாக்கிய இலக்கிய நெசவாளி கி.ரா. என்றால் மிகையாகாது.

ஒரு படைப்பாளியின் சுய வாழ்க்கைக்கும் படைப்புக்கும் நீண்ட இடைவெளியிலான கற்பனைப் பொருண்மைகளைக் கொண்ட கதைகளை உருவாக்கிக் கொண்டிருந்த படைப்புச் சூழலில், தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கரிசல் மண் சார்ந்த வாடையோடு இலக்கியங்களை உருவாக்கிய வட்டாரப் படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் கி.ரா. இத்தகைய படைப்பிற்கு அவர் எடுத்துக்கொண்ட பொருண்மை, வெளிப்பாட்டு மொழி, இலக்கிய நடை முதலானவை எல்லாம் கரிசல்பகுதி மக்களின் வாழ்க்கையை உட்செரித்தே இருந்தன.

இத்தகைய போக்குக்குக் காரணம் கு.அழகிரிசாமி, டி.கே.சி., ஜீவா உள்ளிட்டவரோடு இவர் கொண்டிருந்த தொடர்பும், இவர் சார்ந்திருந்த மார்க்சிய இயக்கமும் ஒரு குறிப்பிட்ட காரணங்களாக அமைந்தன எனலாம்.

கி.ரா. அவர்களின் இலக்கியத்தன்மை என்பது கதை சொல்லல் என்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தான் வாழ்ந்த சமூகம் குறித்த கொண்டாட்டமாகவும் விமர்சனமாகவும் அமைந்தது என்றே கூறலாம்.

இத்தன்மையை கி.ரா. அவர்களால் இயற்றப்பட்டு, இந்திய மொழிகளில் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் பெரும் வாசகர்களின் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டும் பரவலாக்கம்பெற்ற “கரிசல் காட்டுக் கடுதாசி” என்னும் நூலின் இலக்கியப் போக்கின் வழி காணலாம்.

வட்டார வழக்குச் சொற்கள்

கி.ரா. அவர்களின் வாழ்க்கை என்பது தான் வாழ்ந்த கரிசல் வட்டார மண்ணோடும் மக்களோடும் ஒன்றிணைந்ததாகவே இருந்திருக்கிறது. இவற்றின் வெளிப்பாடுதான் தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் தன் மண் சார்ந்த வட்டாரச் சொற்களை எளிதில் உணர்ந்துகொள்ளக் கூடிய அளவில் கதையோட்டத்திற்கு ஏற்ப இழைத்து பதிவு செய்திருக்கும் நிலை.

குலக்கைக்குள், சேம்பியன், துட்டி, பாந்தம், பாதகத்தி, நொட்டாங்கை, முட்டு முழுக்கு முதலான சொற்கள் கரிசல் வட்டாரத் தன்மையை உணர்த்துவதோடு, அச்சொற்கள் கரிசல் பகுதியில் வாழும் மக்களின் சமூக பண்பாட்டுப் பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்காறுகளைப் பிணைக்கும் பாங்கு

கி.ரா. அவர்கள் கரிசல் வட்டார மக்களிடத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் முதலானவற்றை முழுமையாக உள்வாங்கியுள்ளார். நாட்டுப்புற வாய்மொழி வழக்காறுகள் என்பது, அம்மக்கள் தம் வாழ்வின் சூழல் சார்ந்து கொண்டிருக்கும் அறிவின் வெளிப்படுத்துதல்கள்.

இத்தகைய வழக்காறுகளை கி.ரா. அவர்கள் கதையின் போக்குக்கு ஏற்பவும் தான் கூறவரும் கருத்தின் அழுத்தத்திற்கு ஏற்பவும் வருணனைகளாகவும் நேரடியாக பழமொழிகளாகவும் பயன்படுத்தும் நேர்த்தியைக் கொண்டிருக்கிறார்.

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் பிறந்திருப்பாள் என்பதை கதையில் வெளிப்படுத்த எண்ணும் கி.ரா., கரிசல் பகுதியில் வழங்கும் “அம்மி செய்த தச்சன் குழவியையும் செய்து போடாமலா இருப்பான்” என்றும், ‘அண்ணாச்சி’ என்னும் தலைப்பிலான அனுபவப் பகிர்வில், அண்ணாச்சி நாளிதழ்களையும், மாதப் பத்திரிகைகளையும் மேலோட்டமாகப் பார்க்கும் நிலையை “சரகு அரிக்கத்தான் நேரம் இருந்தது, குளிர் காய நேரம் இல்லை” என்ற பழமொழியைக் கூறி வெளிப்படுத்தும் உத்திமுறை கி.ரா. கூறவரும் கருத்தை ஆழப்படுத்துகிறது எனலாம். இவ்வாறு, நாட்டுப்புற வழக்காறுகளை கருத்து வெளிப்பாட்டிற்கு மட்டுமல்லாது கதை உருவாக்கத்திற்கும் பயன்படுத்தும் உத்திமுறை கி.ரா. அவர்களுக்கே உரிய அழகியலாக உள்ளது.

இந்த அழகியலை எமனுக்கு எருமை வாகனம் வந்த வரலாறு, மொய்ப்பன் கதைகேட்ட வரலாறு, டீ, காபி, பேருந்து ஊருக்குள் வந்த வரலாறுகளோடு இணைத்துக் கூறும் முறைகளிலும் உணரலாம்.

கதை சொல்லுதலும் பண்பாட்டுக் குழைவும்

கி.ரா. அவர்கள் தான் வாழும் சூழல் சார்ந்த ஒவ்வொரு பண்பாட்டுக் கூறையும் அனுபவித்தும் நுட்பமாக உள்வாங்கியும் தன் இலக்கிய உருவாக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார். பிறப்பு முதல் இறப்பு வரையிலான மக்களின் பண்பாட்டு வழக்குகளை தம் கதை சொல்லல் திறனால் நுட்பமாகக் கூறும் போக்கு கி.ரா. அவர்களின் இலக்கிய உருவாக்கத் தனித்தன்மை என்றே கூறலாம்.

அவற்றிற்கான எடுத்துக்காட்டாக, ‘நம்பிக்கைகள் பரிகாரங்கள்’ என்னும் தலைப்பிலான கதைப் பகிர்வில், வீட்டுக்கு ‘தூரமான’ பெண்கள் கறிவேப்பிலைச் செடிக்குப் பக்கத்தில் போனாலே பட்டுப்போகும் என்ற கரிசல் வட்டார மக்களின் நம்பிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்.

இதோடு, இந்த நம்பிக்கைக்கு “இனிமேல் கறிவேப்பிலைக் கன்று வைத்தால், வீட்டுக்கு தூரமான பெண்டுகளைக் கொண்டு நடச் சொல்லுங்கள்” என்று ஒரு பாட்டி கூறுவதாகப் பதிவு செய்திருப்பது, நாட்டுப்புற மக்கள் தம் நம்பிக்கையையும், பரிகாரமாகவும் கொண்டிருக்கக் கூடிய வழக்கத்தைத் தெளிவாக கதையோட்டத்தில் வெளிப்படுத்துகிறார்.

இதே போன்று, குழந்தைகளுக்கு கல்யாணச்சீர் தைத்தல், உறம் விழுதல் முதலான நோய்களைப் போக்கும் கரிசல் வட்டார வழக்குகளையும், முச்சந்தி மண்ணெடுத்து கண்ணேறு கழிக்கும் முறையையும் பதிவு செய்கிறார்.

அம்மி, உரல் ஆகியவற்றின் மீது ஒருவர் அமர்ந்தால் அப்பொருள்கள் தேய்வது போல அதன் மீது அமருபவர்களும் தேய்வார்கள் என்பது போன்ற பல நம்பிக்கைகளையும் கி.ரா. பதிவு செய்வது, இலக்கிய வெளிப்படுத்துதலில் பண்பாட்டுக் கூறுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறியச் செய்கிறது.

கிராமிய தனித்தன்மைப் பதிவுகள்

கி.ரா. கிராம மக்களின் வாழ்வியலையும் நகர மக்களின் வாழ்வியலையும் பல்வேறு சூழல்களில் வேறுபடுத்தி, கிராம மக்களின் தனித்தன்மையையும் சிறப்பையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. கிராம மக்களின் தன்னிறைவான வாழ்வியல் சூழல், மக்களுக்கிடையே ஒருங்கிணைந்த உறவு முதலானவற்றை தாம் கொண்ட அனுபவத்தின் வழி, மிகப் பொருத்தமான கதையோட்டத்தில் வெளிப்படுத்துகிறார்.

‘கிராம வினோதங்கள்’ என்னும் தலைப்பிலான கதைப் பகிர்வில், மெட்ராஸில் இருந்து வந்த ஒருவர் ஒரு முருங்கை மரத்தில் காய்த்திருக்கும் முருங்கைக் காயைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கூறும் வார்த்தைகளைக் கேட்ட கிராமவாசி, அப்படியெல்லாம் கூறக் கூடாது, அப்படிக் கூறுவதைக் கேட்டால் முருங்கை மரத்தின் உரிமையாளரின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக்கூடும் என்று கூறுவது, கிராம மக்கள் கொண்டிருக்கும் “கண்ணேறு நிலையை” உணர்த்துகிறது.

இவற்றோடு, தஞ்சாவூரில் இருந்து வந்த ஒருவர் நண்பரின் வீட்டிற்கு ஒரு கூடை நிறைய மாம்பழங்களை இலவசமாகக் கொண்டுவந்து கொடுத்த நிலையைக் கேட்டு ஆச்சர்யம் அடையும் மெட்ராஸ் நபரின் மனநிலையைப் பதிவுசெய்யும் கி.ரா. அவர்கள், கிராம மக்கள் தன் நிலத்தில் விளையும் விளைபொருள்களை இலவசமாகத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் கிராமப் பண்பாட்டு நிலைகளை மேலும் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது எனலாம்.

கி.ரா.வின் சாதியப் பார்வை

கி.ரா. கரிசல் வட்டாரம் சார்ந்த பண்பாட்டு நிலைகளை தம் படைப்புகளால் ஆவணப்படுத்துதலின் மூலம் கரிசல் வட்டார இலக்கியத்தின் தந்தை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒவ்வொரு படைப்பாளியும் பெறும் விமர்சனத்தையும் கி.ரா. அவர்கள் கடந்தவரில்லை.

கி.ரா. அவர்கள் ஒரு நேர்காணலில் தலித் இலக்கியங்களைப் பற்றி கேள்வி முன்வைத்தபோது, அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதை மேற்கோள்காட்டி கி.ரா.வின் எழுத்துக்களை சாதிய நிலையில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட வரலாறும் உண்டு.

இதே போன்று இந்துத்துவக் கட்டமைப்பு கொண்ட இலக்கியங்களை உருவாக்குபவர் என்ற விமர்சனமும் கி.ரா.வின் மீது உள்ளது. ஆனால் “கரிசல் காட்டுக் கடுதாசி” நூலில் மேற்காணும் விமர்சனங்களைக் கடத்துவதாகவும் ஐயம் கொள்ளச் செய்வதாகவும் சில பதிவுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நூலில், ‘தோற்றது’ என்னும் கதையில் உயர்சாதியைச் சேர்ந்த மாயம்மா என்பவள் இளம் வயதிலேயே தன் கணவனை இழந்தவள். இவள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனோடு காதல் கொண்டு இரவில் இணைந்து உடலுறவு கொள்ளும் நிலையை நியாயப்படுத்தும் கி.ரா. அவர்கள்,

“முதலில் மாயம்மா வந்தாள் கூந்தலை முடித்துக் கொண்டே. கூர்ந்து நிலவைப் பார்த்தாள். சிரிப்பதுபோல இருந்தது அவள் முகம். நடையில் ஒரு உல்லாசம் தெரிந்தது. ஊரைப் பார்த்து வேகமாக நடந்தாள்.

கொஞ்சம் கழித்து அவன் வந்தான். தெரிந்தவன்தான்! அந்த ஜோடியின்மேல், முக்கியமாக மாயம்மாவின் மேல் எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது, அந்தக் கணமே. அந்த சாதாரணப் பெண் எவ்வளவு உயர்ந்துவிட்டாள்! இந்தச் சமூகத்தையே அவள் எவ்வளவு சுலபமாக ஜெயித்துக் காட்டிவிட்டாள்!

அவர்கள் தங்கள் காதலை - காதல் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொண்ட விதத்தை நினைக்க நினைக்க ஆச்சர்யமாகவும், மலைப்பாகவும் இருந்தது. உயர்ந்த ஜாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஜாதிகளிலெல்லாம் மிகத் தாழ்ந்ததாக இந்தச் சமூகத்தால் கருதப்படும் ஜாதியில் பிறந்த ஒருவனோடு வாழ்வில் இணைந்து கொண்ட விதத்தை நினைத்து, வியப்பும் ஆனந்தமும் படாமல் எப்படி இருப்பது?

இப்பேற்பட்டவர்களுக்குப் பேராதரவாக நிற்கும் பேயையும், பிசாசையும், ஜடாமுனிகளையும், சாமியையும் கிடையாது என்று நான் அம்பலப்படுத்துவதைப் போலப் பைத்தியக்காரத்தனம் வேற உண்டா?”

என்று பதிவு செய்கிறார். இப்பதிவு ஒரு இலக்கியத் தன்மையுடனான சாதிய மறுப்பையும் கடவுள் மறுப்பை மீறிய நாட்டார் தெய்வ இருப்பையும் அழுத்தமாக நிலை நிறுத்தக் கூடியதாக உள்ளது.

வரலாற்று ஆவணமாக கி.ரா.வின் எழுத்து

ஒரு இலக்கியம் என்பது பொழுதுபோக்குத் தன்மையைக் கொண்டது அல்ல. காலத்தின் கண்ணாடி. ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு. இந்நிலையில், கரிசல் நிலம் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பான கி.ரா. அவர்களின் எழுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றை சுமந்திருக்கும் ஆவணமாகவும் இடம்பெறுகிறது.

இரண்டாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவில் ஏற்படுத்திய விளைவுகளையும், தாது வருடப் பஞ்சம் குறித்து தமிழக மக்களிடையே நிலவும் நினைவுகளையும் “கரிசல் காட்டுக் கடுதாசி” சுமந்திருப்பதன் மூலம் கி.ரா.வின் எழுத்து, வரலாற்றைக் கற்பிக்கும் ஆவணமாகவும் பரிமாணம் பெறுகிறது எனலாம்.

அரசியலை விமர்சிக்கும் கி.ரா.வின் எழுத்து

இலக்கியப் படைப்பாளிகளில் இரண்டு வகை உண்டு. சாதிய அரசியலையும், அரசு அதிகாரத்தையும் சாதுரியமாகக் கடந்து போகும் நிலையிலான படைப்பாளிகள் ஒருவகை. வர்க்க வேறுபாடுகளையும் சாதிய வேறுபாடுகளையும் அரசியல் அதிகாரங்களையும் விமர்சிக்கும் காத்திரமான படைப்பாளிகள் மற்றொரு வகை.

இத்தகைய விமர்சனங்களுக்கான ஆயுதமாக தம் இலக்கியப் படைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் சவாலான போக்கை, பெரும்பாலும் மார்க்சிய இயக்கப் புரிதலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகளிடமே காண முடியும். அந்த வகையில் கி.ரா. அவர்களின் மார்க்சிய வாசிப்பும், இயக்கச் செயல்பாடுகளும் சமூகம் குறித்த புரிதலை ஆழப்படுத்தியிருப்பதை அவருடைய எழுத்துகள் பிரதிபலிக்கின்றன. அவற்றிற்கான உதாரணங்களாக,

“இந்திய நாட்டின் பெரும் பீடைகளான அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடு, அரசு அதிகாரிகளின் ஈரமின்மை, போலீஸின் மனசாட்சியின்மை இவைகளை சரிசெய்ய முடியும் என்று தோன்றவில்லை”

“லெனின் ரொம்ப யோசித்தாராம். புரட்சி பண்ணுகிறது சரிதான்; அரசையும் கைப்பற்றி விடலாம்; அரசை யாரிடம் ஒப்படைப்பது?”

“வெள்ளைக்காரனோடு சுதந்திரத்திற்கென்று போராடினோம். இப்போது நம்மவனோடு வாழ்வுக்காகப் போராடுகிறோம் நாங்கள்”

முதலான பதிவுகளைக் குறிப்பிடலாம். இவை மட்டுமின்றி கரிசல் நில மக்கள் வன அதிகாரிகளாலும், மின்சாரத்துறை அதிகாரிகளாலும் ஏமாற்றம் அடைந்ததை நகைச்சுவையாகவும் கேலி, கிண்டல்களாகவும் விமர்சித்து இருப்பதை பல கதைகளில் இடம்பெறும் பல பதிவுகளின் மூலம் காண முடிகிறது.

இத்தகைய பதிவுகள் தன்னைச் சூழ்ந்த மக்கள் சமூகம் அரசால் ஏமாற்றப்படும்பொழுது, அந்த அரசுக்கு எதிரான தன் கருத்தைப் பதிவு செய்யத் தவறாமை என்பது ஒரு இலக்கியப் படைப்பாளிக்குரிய கடப்பாடு என்பதையும், அக்கடப்பாட்டுக்கு உட்பட்டவர் கி.ரா. என்பதையும் உணர்த்துகிறது.

தொ.ப. அவர்கள், “ஒவ்வொரு கிழவனும் படிக்க வேண்டிய புத்தகம் படியுங்கள். அவர்களைப் படித்துக்கொண்டே இருங்கள்; என்று குறிப்பிடுவார். அதைப்போல கி.ரா. அவர்கள் தான் அனுபவித்ததை, கேட்டதை, பார்த்ததை, மக்களோடு பழகியதை என அத்தனையையும் இலக்கியமாக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறார்.

கி.ரா. தன் கரிசல் நிலம் சார்ந்த மக்களின் இன்பங்களையும், துன்பங்களையும், அறிவையும், பண்பாட்டையும் குழைத்து மண்மணம் மாறாமல் மக்களின் மொழியில் வெளிப்படக்கூடியது அவரின் இலக்கியத் தனித்தன்மை என்றே கூறலாம்.

கி.ரா.வின் கதைகள் மெல்லிய குரலில் நகைச்சுவையாகவும் கோபமாகவும் மக்களின் பல பரிணாமங்களிலான வாழ்க்கையை பல பரிமாணங்களோடு உணர்த்தக் கூடியது. கி.ரா.வின் உடல் மறைந்திருந்தாலும், இன்றும் என்றும் அவரின் எழுத்து நெடிய உருவத்தில் மெல்லியக் குரலில் என்றும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் - தமிழ் நிலமும் தமிழ் இனமும் உள்ளவரை.

- முனைவர் மு.ஏழுமலை