ரகுநாதனின் நாவல்கள் என்று கூறும்பொழுது மூன்று நாவல்கள் மட்டுமே அவர் எழுதியுள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் படைப்பிலக்கியத்தில் மிகக் குறைந்த அளவே சில சாதனைகளைச் செய்துள்ளார். அதிலும் நாவல்கள் மிக மிகக் குறைவானவையே ஆகும். இதன் காரணமாக அவரது நாவல்களில் ரகுநாதன் என்ற இலக்கியவாதியின் வளர்ச்சியை மதிப்பீடு செய்வது கடினமாகி விடுகிறது. இருப்பினும் அவரது நாவல்களைப் பற்றி எழுதும்பொழுது ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
ரகுநாதன் எழுதிய முதல் நாவல் ‘புயல்’ (1945), இரண்டாவது நாவல் ‘கன்னிகா’ (1950), மூன்றாவது நாவல் ‘பஞ்சும் பசியும்’ (1953). இந்த நாவல்களைக் கற்கும்பொழுது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிகிறது. முதல் இரண்டு நாவல்களுக்கும், கடைசி நாவலுக்கும் இலக்கியரீதியில் ஒரு பெரிய வேறுபாடு இருப்பதைக் காண முடிகிறது. அவரது பஞ்சும் பசியும் பற்றி நிறைய விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. ‘பஞ்சும் பசியும்’ பற்றி எழுதிய அளவிற்கு அவரது மற்ற நாவல்களைப் பற்றி விமர்சகர்கள் எழுதவே இல்லை. பெரும்பாலும் அந்த நாவல்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இது கவனிக்கத் தகுந்த விஷயம் ஆகும். தலைசிறந்த ஆய்வாளரான கலாநிதி, க.கைலாசபதி, பேரா.நா.வானமாமலை ஆகியோர் இது பற்றி மௌனம் சாதித்தே வந்துள்ளனர். இது பற்றிய ஓர் ஆய்வு தேவையாகிறது. அதாவது ரகுநாதனின் முதல் இரு நாவல்களின் தன்மைக்கும், ‘பஞ்சும் பசி’க்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளதை எவ்வாறு விளக்குவது! இது ரகுநாதனிடம் காணக்கூடிய முரண்பாடு என்றால் அதற்கு என்ன காரணத்தைக் கூற முடியும்? இது போன்ற கேள்விகள் எழுகின்றன.
ஒரு படைப்பாளியின் முன்னேற்றம் ஒரே நேர்கோட்டுப் பாதையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சகஜம். ஆனால், எல்லாப் படைப்பாளிகளிடமும் இது இடம்பெறுவதில்லை. அவன் வளரும்பொழுது பல கலாச்சார - சமூக இயக்கங்கள் அவனைத் தாக்குகின்றன. இதன் காரணமாக அவன் பல ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாவது இயல்பானதே. ரகுநாதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்குரிய காரணங்களைக் காணும் முன்னர் இந்த நாவல்களின் தன்மையையும் காண வேண்டும்.
‘புயல்’ என்ற நாவல் ஒரு வகையில் உளவியல் சார்ந்த நாவல். இதன் கருப்பொருள் காதலித்தவனை மணக்க முடியாமல் வேறு ஒருவனை மணப்பதும், காதலித்தவன் அவளை தன்னுடன் வருமாறு வற்புறுத்தும் பொழுது அவள் அதை மறுப்பதும் ஆக அமைந்துள்ளது. இதன் கதாநாயகன் சந்துரு. அவன் காதலித்த பெண் ரஞ்சனி வேறு ஒருவருக்கு மனைவியாகிறாள். அவளை தன்னுடன் வருமாறு சந்துரு கூறும்பொழுது அவள் மறுக்கிறாள். அவர்களது உரையாடல் நாவலின் முடிவாக உள்ளது.
“சந்துரு கேட்டார். ரஞ்சி, வரவில்லையா?”
“ஆம்” என்றேன் முரட்டுத் துணிவோடு.
“என்ன, பைத்தியம் பிடித்துவிட்டதா?”
"அதெல்லாமில்லை, என்னுடைய காதலுக்காக பெண்மையைக் களங்கம் செய்ய மாட்டேன். யுகாந்திர காலமாக காப்பாற்றப்பட்டு வந்த திரவியம். இந்தப் பாவியால் கொள்ளை போக வேண்டாம்" (புயல்: 119).
இந்த நாவலைப் பொறுத்தமட்டிலும் நிறைவேறாத காதல் கருப்பொருளாக இருந்தாலும், பாரம்பரியம் உடையக் கூடாது என்பதில் ஆசிரியர் உறுதியாக இருக்கிறார்.
அவரது இரண்டாவது நாவல் ‘கன்னிகா’ ஒரு பெண்ணின் பருவ வளர்ச்சியை மையமாகக் கொண்டது. இதன் கதாநாயகி கமலாவின் பிள்ளைப் பருவம் தொடங்கி 35 வயது வரையுள்ள பருவப் போராட்டங்கள் இந்த நாவலில் சித்திரிக்கப்படுகின்றன. இதன் கதாநாயகி கமலி, பாரம்பரியத்தை உடைப்பவளாக இடம்பெறுகிறார். நாவலின் முடிவில் அவளைவிட வயது குறைந்த அவளது மாணவனை ஏற்றுக்கொள்கிறாள்.
“அவள் கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன” கைகள் குறுகுறுத்தன.
மறுகணம், “இல்லை பாலா! இதோ நான் இருக்கிறேன்! நான் இருக்கிறேன்” என்று சப்தமிட்டுக் கொண்டே பாலனைத் தாவி அணைத்தாள். இத்தனை நாள் காணாத சுகம் அவளுக்கு உடம்பில் தென்பட்டது" (கன்னிகா - 160).
இந்த இரு நாவல்களும் சமூகம், சமூக உணர்வு ஆகியவை பற்றிப் பேசாதவை. இதன் கதை மாந்தர்கள் தனி நபர்கள், அவர்களது மன உணர்வுகளையே பிரதானப்படுத்துபவர்கள். இவர்களது மன உணர்வுகளைப் பிரதானப்படுத்துவதற்கு பிராய்ட் ஒரு வேளை உதவியிருக்கலாம். ஆனால், இவற்றை உளப் பகுப்பாய்வு (psycho analysis) நாவல் கூற முடியாது. இவை சாதாரண உளவியல் நாவல்கள். இதன் கதா மாந்தர்கள் சாமான்ய மனிதர்கள். லட்சியம், வருங்காலம் என்றெல்லாம் பேசாதவர்கள். இந்தத் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவல்.
இது ஒரு சோசலிச யதார்த்தவாத நாவல் என்பது விமர்சகர்கள் எல்லோராலும் குறிப்பிடப்பட்ட விஷயம் ஆகும். அதன் கூறுகள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன என்பதில் ஐயமில்லை. விடுதலை பெற்றபொழுது நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியும், ஏகாதிபத்தியத்தின் கெடுபிடியும், நமது மக்களைப் பல வழிகளில் பாதித்தன. அதில் கைத்தறி நெசவு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நூல் விலை ஏற்றம், கருப்புச் சந்தைக்காரர்களின் ஆதிக்கம் ஆகியன பல நடுத்தர, கூலி, நெசவாளிகளை தற்கொலைக்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக எழுந்த நாவல் தான் ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’. இந்த நாவல் உழைக்கும் மக்களின் போராட்டம் பற்றியதாக அமைந்துள்ளது. இதன் மையக்கரு ஏழை நெசவாளிகள் தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுதிரண்டு போராடுவதாக உள்ளது. கதை சொல்லும் முறையில் பல சம்பவங்களை ஆசிரியர் கையாண்டிருந்தாலும், அடிப்படையான அம்சம் நெசவாளிகளின் (கூலி உழைப்பாளிகளின்) போராட்டம்தான். அது படிப்படியாக உருவம் பெற்று இறுதியில் வலுவாக இடம்பெறுவதாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். உழைக்கும் மக்களது ஒற்றுமை ஒரு வலுவான அமைப்பாக உருவம் பெறுவதை ஒரு குறியீடு மூலம் ரகுநாதன் உணர்த்துகிறார்.
அம்பாசமுத்திரம் நகரின் நெசவாளிகள் ஒன்று திரண்டு, உரிமைக் குரல் எழுப்பியவண்ணம் ஊர்வலமாக வருகின்றனர். இந்த ஊர்வலத்தை ஆசிரியர் ஒரு நதியின் பிரவாகத்திற்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
“அந்த ஊர்வலத்துக்கு ஆதரவாக பல தெருக்களிலிருந்து மக்கள் வந்து குழுமி ஊர்வலத்தோடு செல்லத் தொடங்கினார்கள். பல்வேறு சிற்றாறுகளைத் தன்பால் இழுத்துச் சேர்த்து, மகா பிரவாகமாய்ப் பரிணமித்துச் செல்லும் ஜீவநதியைப் போல் அந்த ஊர்வலம் கணத்துக்குக் கணம் பலம் பெற்று விரிவடைந்துகொண்டேயிருந்தது. (‘பஞ்சும் பசியும்' 316).
இது நாவலின் மையக்கரு; ஆசிரியரின் வாழ்க்கைக் கண்ணோட்டமும்கூட ஆகும். இருப்பினும் நாவலின் அமைப்பு இந்த மையத்தினை வலுப்படுத்த பல தளங்களில் இயங்குகிறது எனலாம். நாவலின் ஊடாக இயங்கும் மையமான தளம் கூலி நெசவாளிகளின் பிரச்சினை. இதனைப் பல இடங்களில் வெளிப்படுத்தும் பாத்திரமாக இடம்பெறுபவர் வடிவேலு முதலியார். இந்தக் கூலி நெசவாளிகளைச் சுரண்டும் ஒரு பெருமுதலாளியாக வருபவர் தாதுலிங்க முதலியார். அவரைச் சார்ந்தவர்கள் ஒரு குழுவாக இந்த நாவலில் இடம்பெறுகின்றனர். உலகநாத முதலியார் என்ற சிறு முதலாளி, பெருமுதலாளியான தாதுலிங்க முதலியாரால் பழிவாங்கப்படுகிறார். அதன் விளைவு அவர் குடும்பம் சின்னாபின்னமாகிறது. அவரது மகன் மணி, மனம் உடைந்து வெளியேறி, வாழ்க்கை அனுபவங்களைப் பெற்று தொழிற்சங்கத் தலைவனாக மாறுகிறான். தாதுலிங்க முதலியாரின் மகன் சங்கர் ஒரு படிப்பாளி; இடதுசாரி சிந்தனையாளன். தன் தந்தையை எதிர்த்து போராட்டத்தில் இறங்குகிறான். இது நாவலின் அடுத்த முக்கியத் தளமாக உள்ளது. மற்றொரு தளம் கிருஷ்ணக்கோனாரையும், காணாமல் போன அவரது மகனையும் பற்றியது ஆகும். அந்த மகன்தான் மதுரையில் தொழிலாளர் தலைவனாக இடம்பெறுகிறான். இந்தத் தளம் ஒரு மர்மக் கதையின் தன்மையைப் பெற்றதாக உள்ளது. இந்த இரு தளங்களும் கூலி உழைப்பாளிகளின் போராட்டத்திற்குத் துணையாக நிற்கும் தளங்களாக இருப்பதைக் காண முடியும். வடிவேலு முதலியார், சங்கர், மணி, ராஜு (வீரையா), கிருஷ்ணக் கோனார் ஆகியோர் ஓர் அணியிலும், தாதுலிங்க முதலியார், அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோர் ஓர் அணியிலும் நிற்பதை ஆசிரியர் தெளிவாகவே வர்ணிக்கிறார். இதற்கு அப்பாற்பட்டதுதான் கமலா-மணி காதல் உறவு. இந்த உறவு இல்லாமலேயே இந்த நாவல் இயங்க முடியும்.
இந்த மூன்று நாவல்களையும் கற்கும்பொழுது சில ஐயங்கள் எழுவது இயற்கை. ஓர் இடதுசாரி இயக்கத்துடன் நீண்ட காலம் தொடர்புள்ள படைப்பாளியான ரகுநாதன் எழுதிய முதல் இரண்டு நாவல்கள், தன்மையில் ‘பஞ்சும் பசியும்’ நாவலில் இருந்து முற்றிலும் வேறுபட்டு உள்ளதே அது எதனால், ‘புயல்’, ‘கன்னிகா’ ஆகிய இரு நாவல்கள் உருவாக்கியுள்ள கலை உலகம் வேறு; ‘பஞ்சும் பசியும்’ முன்வைக்கும் கலை உலகம் வேறு. இங்கு ரகுநாதனது கலை உலக வளர்ச்சி நிலையில் ஒரு பாய்ச்சல் வேக முன்னேற்றத்தைக் காண முடிகிறது. இந்தத் திடீர் திருப்பத்தை அப்படியே திருப்பமாக ஏற்றுக்கொள்வதா? அல்லது இந்த மாற்றத்திற்கான காரணத்தை எங்குக் காண்பது? இது போன்ற கேள்விகள் எழுவது சகஜம்.
ரகுநாதனின் ‘புயல்’, ‘கன்னிகா’ ஆகியவை உளவியல் சார்ந்த நாவல்கள் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல்களின் நோக்கத்தை ஆசிரியரே தெளிவாகக் கூறிவிடுகிறார். இவற்றை உணர்ந்தே அவர் செய்துள்ளார். உதாரணமாக, ‘கன்னிகா’ நாவலுக்கு எழுதியுள்ள முன்னுரைக் குறிப்பில் அவர் எழுதுகிறார்.
“இந்தக் கதையின் மூலக் கருத்தைச் சிறுகதையாக எழுதிப் பா£¢த்தேன், திருப்தியில்லை. எனவே, அடிமுடி தொட்டு நாவலாக்கி எழுதினேன். அதுதான் ‘கன்னிகா’.
பெண்களின் பருவகாலம் பற்றிக் கொக்கோகம், இலக்கண விளக்கப் பாட்டியல் முதலியவற்றில், வெவ்வேறு விதமான வயது வரையறை காணப்படுகிறது. இது எழுதப்பட்ட ஆண்டு 1950. இது எழுதப்பட்ட காலத்திற்குப் பின்வந்த ‘பஞ்சும் பசியும்’ தோன்றிய சூழலை அவரே பின்வருமாறு கூறுகிறார்.
‘பஞ்சும் பசியும்’ சரித்திர நாவல். பத்தாண்டுகளுக்கு முன்னால் நமது நாட்டில் கைத்தறி நெசவாளர்கள் பட்ட அவலத்தையும் அதைப் போக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்திரிக்கும் நாவல். அன்று எல்லோரையும் போலவே நானும் மவுன்ட் ரோட், ரவுண்டானா வாயிலும், மங்கம்மாள் சாலையாயினும் எங்கும் எந்தத் திக்கிலும் பஞ்சையராகித் திரிந்த நெசவாளர்களைக் கண்டேன். நாட்டு மக்களின் மானத்தைக் காப்பதற்காக உழைத்த மக்கள், தங்கள் மானத்தைக் காப்பதற்கு வகையற்றுத் திரியும் அலங்கோலத்தைக் கண்டேன்... நான் அன்றைய சரித்திர சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முனைந்தேன். அதன் காரண காரியங்களை ஆராய்ந்தேன். அதற்காக எவ்வளவோ படித்தேன். அந்தத் துறையில் அனுபவம் மிகுந்தவர்களிடம் பேசினேன். நெசவாளர்களின் துன்ப துயரங்களையும் பிரச்சினைகளையும், அந்தச் சமூகத்தாரிடமிருந்தே கண்டும் கேட்டும் அறிந்தேன்” (பஞ்சும் பசியும்: 320).
‘கன்னிகா’ நாவலின் முன்னுரைக்கும், இதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருப்பதை எளிதாகக் கண்டுகொள்ள முடியும். ‘புயல்’, ‘கன்னிகா’ ஆகியவை தனி நபர் மன உணர்வுகளை வெளிப்படுத்துபவை. ‘பஞ்சும் பசியும்’ நாவல் கூட்டு மன உணர்வை வெளிப்படுத்தும் நாவல் ஆகும். இந்த மாறுதல் ரகுநாதனிடம் எப்படி இடம் பெற்றது? இது படிப்படியான மாறுதலா? அல்லது ஒரே சமயத்தில் இரண்டு நிலைகளையும் வெளிப்படுத்தும் போக்கா? இது பற்றிக் காண வேண்டும்.
முதலில் ரகுநாதனின் வாழ்க்கை பற்றிக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு மத்திய தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ரகுநாதன் பாரம்பரியத்தின் தாக்கத்திற்கு இளமையிலேயே உள்ளானவர். அவருடைய முப்பாட்டனார் முருகதாச சுவாமிகளின் சீடர். அவருடைய பாட்டனார் ‘நெல்லைப் பள்ளு’ என்ற நூலின் ஆசிரியர். அவருடைய சகோதரர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்; ஒரு கலை ரசிகர். ரகுநாதனின் சிந்தனைகளை உருவாக்கியதில் ஒரு கணிசமான பகுதி பேரா.அ.சீனிவாச ராகவன், மு.அருணாசலக் கவுண்டர் ஆகியோர்களுக்கு உண்டு. இவர்கள் அனைவரும் ரகுநாதனிடம் ரசனை அணுகுமுறை வளர்த்தவர்கள் என்றால் மிகையாகாது. இதன் விளைவாக பாரம்பரிய நோக்கத்தில் தமிழ் இலக்கியத்தை அணுகுவது என்பது ரகுநாதனிடம் ஆழமாகப் பதிந்துவிட்ட ஓர் அம்சமாகும். இதன் பிரதிபலிப்பை அவர் புதுக்கவிதை பற்றி இன்றும் கொண்டுள்ள கருத்தில் காணலாம். புதுக்கவிதையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவரது பல கூற்றுக்களில் இருந்து தெளிவான ஒன்று ஆகும். அவரது கவிதைகள் அனைத்துமே பாரம்பரியக் கவிதைகள் தாம்.
இந்த அணுகுமுறை ரகுநாதனின் இளமையிலே அவரிடம் காணப்பட்ட ஒன்று. அவர் இளமையில் படித்த நூல்களை அவரது சொற்பொழிவு ஒன்றில் கூறும்பொழுது சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கூளப்ப நாயக்கன் காதல், விறலி விடு தூது போன்ற பல இலக்கியங்களைப் படித்ததாகக் கூறுகிறார். மேலை நாட்டு இலக்கிய கர்த்தாக்கள், உளவியல் அறிஞர்களில் பிராய்டு ஆகியோரைக் கற்றதாகக் கூறுகிறார். இந்த இலக்கிய கர்த்தாக்கள், ஆய்வாளர்கள் ஆகிய எல்லோருமே பூர்ஷ்வா முகாமை, அல்லது நிலப்பிரபுத்துவ முகாமைச் சார்ந்தவர்கள். இவர்களது இலக்கியச் சூழல் இடதுசாரிச் சிந்தனையிலிருந்து வேறுபட்டது என்பதை விளக்கத் தேவையில்லை. இது மிகத் தெளிவான ஒன்று. அவருடைய முதல் படைப்பு வெளியான பத்திரிகை பிரசண்ட விகடன் ஆகும். (1941) இதுவும் இடதுசாரிப் பத்திரிகை அல்ல. தேசிய உணர்வு, சற்று முற்போக்கான சிந்தனை, பொழுதுபோக்கு ஆகியவை கலந்த ஒரு பத்திரிகையாக அந்தக் காலத்தில் விளங்கியது இது.
இந்தச் சூழ்நிலையின் இலக்கிய நோக்கு ரகுநாதனை ஓர் இலக்கியச் சூழலுக்கு இடம்பெறச் செய்தது. அதுதான் மணிக்கொடி சூழல். ரகுநாதன் இலக்கிய வாழ்வைத் துவங்கும்பொழுது தீவிரமான இலக்கியப் பத்திரிகையாக இருந்தது ‘மணிக்கொடி’தான். அதில் எழுதிய பல எழுத்தாளர்களுடன் குறிப்பாகப் புதுமைப்பித்தனுடன் ரகுநாதன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். புதுமைப்பித்தன் ரகுநாதனின் இலக்கிய ஆசானும் கூட. புதுமைப்பித்தன் தனிநபர்களையே மையமாகக் கொண்டுதான் இலக்கியம் படைத்துள்ளார். மணிக்கொடியின் இலக்கிய தரிசனம் என்பது சமூக இயக்கங்களில் இருந்து ஒதுங்கியிருந்துகொண்டே இலக்கியப் பரிசோதனைகள் செய்வது ஆகும். இந்தக் குழுவில் அதிகமாகச் சமூகப் பிரச்சினைகளைக் கையாண்ட புதுமைப்பித்தன்கூட இலக்கியத்தை ஒரு சுத்தமான உருவப் பரிசோதனையாகத்தான் கண்டார்; அதனை ஓர் உபாசனையாக, வேள்வியாகக் கண்டார். இதன் விளைவாக அவர் பல மொழிப் பரிசோதனைகளை அவர் சிறுகதையில் செய்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
ரகுநாதன் இந்த இலக்கியச் சூழலில் இருக்கும் பொழுது தான் அவரது படைப்பு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முதல் இரு நாவல்களில் இந்தச் சூழலின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. இடதுசாரி இயக்கத்தில் இருந்தாலும், இந்த இரு நாவல்களிலும் தனி நபர் உணர்வையே அவர் மையப்படுத்துவதைக் காண முடிகிறது. புயலின் கதாநாயகி, தன் மனதில் ஏற்படும் உணர்வுகளைப் பற்றியே சிந்திக்கிறாள். ‘கன்னிகா’வின் கதாநாயகி அவளது உணர்வு மாறுபாடுகளைப் பற்றியே சிந்திக்கிறாள். இவை அனைத்தும் நுட்பமான அக உணர்வுகளைப் பற்றியதாகவே அமைந்துள்ளது. இது ரகுநாதனின் படைப்புலக வளர்ச்சியின் ஒரு கட்டம். அதே சமயத்தில் ரகுநாதனின் வளர்ச்சியில் மற்றொரு கட்டமும் இடம் பெறுகிறது. அவரது வாழ்க்கையின் மற்றொரு பகுதி புரட்சிகர இயக்கத்துடன் அவர் கொண்ட தொடர்பு ஆகும். இதன் தாக்கத்தை அவரது நாவல்களைவிட ஆய்வு நூல்களில் அதிகமாகக் காண முடியும்.
சிதம்பர ரகுநாதன் அந்தக் காலத்திலேயே தடை செய்யப்பட்ட பொது உடைமைக் கட்சியோடு தொடர்புகொண்டிருந்தார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்து இடம்பெற்ற மாணவர் போராட்டத்தில் பங்குகொண்டார், அதன் விளைவாகச் சிறையும் சென்றார். இயக்கத் தலைவர்களோடு நெருங்கிய தொடர்புள்ளவர். வாழ்நாளின் பெரும் பகுதியை சோவியத் நாடு பத்திரிகையிலேயே கழித்தவர். ‘தாமரை’ ‘சரஸ்வதி’ ஆகியவற்றில் பல கதைகளையும், கட்டுரைகளையும் எழுதியவர். இது ரகுநாதனின் கண்ணோட்டத்தின் வலுவான அம்சம் ஆகும். இது, இன்று வரை தொடர்ந்து இடம் பெறுகிறது. ‘புயல்’, ‘கன்னிகா’வின் போக்கு இன்று அவரிடம் வலுவாக இல்லை. இருப்பினும் இந்தப் போக்குகளில் ‘பஞ்சும் பசியும்’ போக்கு காலத்தால் பிந்தி ஏற்படுகிறது. ஆனால், அதற்குரியதன் கைகள் ‘புயல்’, ‘கன்னிகா’ காலகட்டத்திற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது எனலாம். இதற்கு ஆதாரமாக சாகித்திய அகாடமியினரால் பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஆசிரியரைச் சந்திப்போம்’ என்ற நிகழ்ச்சியில் (21.4.2001) அவர் பேசும்பொழுது குறிப்பிட்ட விஷயங்கள், ‘பஞ்சும் பசியும்’ நாவலுக்கு எழுதிய பின்னுரை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
‘ஆசிரியரைச் சந்திப்போம்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, ‘பஞ்சும் பசியும்’ நாவலுக்கான கரு நீண்ட நாட்களாகவே அவர் மனதில் உறைந்து கிடந்ததைக் குறிப்பிட்டார். அவர் இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்கும்பொழுதே அவரைப் பாதித்த நாவல்களில் ஒன்று மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ என்பதைக் குறிப்பிட்டார். இதைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற அவா அவருக்கு இருந்ததையும், இது போன்ற ஒரு நாவல் தமிழில் வர வேண்டும் என்ற ஆசை இருந்ததையும் குறிப்பிட்டார். அவர் மனதில் உறைந்து கிடந்ததற்கு ஆதாரமாக ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவலின் பின்னுரையில் ஒரு பகுதி அமைந்துள்ளது.
“...எனது படைப்புகள் எல்லாம் அந்தக் கணத்திலேயே கருவுற்று, அந்தக் கணத்திலேயே ரிஷிபிண்டமாக அவதாரம் செய்துவிடும் என்று அர்த்தமல்ல. சொல்லப்போனால் நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகளும்கூட என் மனக் குகையில் பல்லாண்டு காலம் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பிறவிப் பேற்றைக் காணாமல் மோனச் சிறையில் தவம் கிடந்ததுண்டு; கன்னிக் கோழியின் வயிற்றுக்குள்ளேயுள்ள கருக்குலையைப் போல் என் உள்ளத்திலேயே கதாபாத்திரங்களும், சம்பவங்களும் என்றோ எப்போதோ கருப்பிடித்து உறங்கும்; வளர்ந்துகொண்டிருக்கும். ஆனால், எந்த நேரத்தில் எந்தக் கரு பூரண வளர்ச்சிபெற்று வெளியுலகத்தைப் பார்க்கும் என்பது எனக்கே தெரியாது. சமயங்களில் சின்னக்கருவே பெரிய கருக்களை முந்திக்கொண்டு வளர்ந்துவிடும்” (பஞ்சும் பசியும் - 319). ரகுநாதனின் இக்கூற்றுப்படி கண்டால் பல கருக்கள் அவரது மனதில் ஏககாலத்தில் இடம்பெற்றிருந்ததையும், சில முதலில் வெளிவந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதில் சின்னக்கரு என்பது ‘புயல்’, ‘கன்னிகா’ என்று எடுத்துக்கொண்டால், ‘பஞ்சும் பசி’யைப் பெரிய கரு என்று கருதலாம். ஆனால், இவை வெளிவந்ததற்குக் காரணம் என்று ஆசிரியரது படைப்பு ஆர்வம் மட்டும் தான் என்று கூறிவிட முடியாது. அதற்குரிய புறச் சூழ்நிலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கன்னிகா, புயல் ஆகியவை தோன்றிய காலம் அதற்குச் சாதகமாக இருந்தது. எனவே, அவை காலத்தால் சற்று முன்னதாகவே வெளிவந்தன. இது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டோம். ஆனால், 1952வாக்கில் ‘பஞ்சும் பசியும்’ வெளிவந்தது என்பது ஒரு பெரிய மாறுதல். இதற்குரிய அக விருப்பங்கள் ரகுநாதன் மனதில் ‘புயல்’, ‘கன்னிகா’ வருவதற்கு முன்பே இருந்தன என்பது அவரது கூற்றுக்களில் இருந்து தெரிய, வருகிறது. இருப்பினும் புறக் காரணிகள் அந்தக் காலகட்டத்தில் வலுவாகச் செயல்படவில்லை எனலாம். அதாவது ஒரு சோசலிச யதார்த்தவாத நாவல் உருவாவதற்குரிய இலக்கியச் சூழல் அந்தக் காலகட்டத்தில் இடம் பெறவில்லை. இந்தியப் பொதுஉடைமை இயக்கம் பெரும்பாலும் தலைமறைவாகச் செயல்பட்டது அந்தக் காலகட்டம் ஆகும்.
அது மட்டுமல்ல, ஆரம்ப கால பொதுஉடைமைத் தலைவர்கள், தொண்டர்கள் இலக்கிய விஷயங்களைப் பற்றி அதிகம் சிந்திக்காதவர்களாகவே இருந்தனர். அவர்கள் கவனம் முழுவதும் வர்க்கப் போராட்டத்தினை வளர்ப்பதிலேயே இருந்தது. அதற்கு அப்பாற்பட்டதை அவர்கள் அவசியமற்றதாகவே கருதினர். அதற்குரிய வரலாற்றுக் காரணங்கள் உண்டு. கடுமையான அடக்குமுறை, அடிப்படை மாற்றத்திற்கான போராட்டம் பற்றிய அதிகமான சிந்தனை, இலக்கியம் பற்றிய சரியான கண்ணோட்டம் இல்லாமல் இருந்தது, தகவல் ஊடகங்கள் இடதுசாரிகளின் கைவசம் இல்லாமல் இருந்தது போன்றவை அக்காரணங்கள். இதில் ஜீவானந்தம் மட்டுமே விதிவிலக்கானவர் ஆவார்.
மேலும் 1952-க்கு முந்திய காலகட்டத்தில் இருந்த இடதுசாரி இலக்கிய ஆர்வலர்கள் - (ஜீவா தவிர) தேசிய இயக்கத்திலும், விடுதலைப் போராட்டத்திலும் அது தொடர்பான இலக்கிய எழுச்சியிலும்தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதன் விளைவாக முற்போக்கான பூர்ஷ்வா சிந்தனையின் தாக்கம் இவர்கள் மீது அதிகமாக இருந்தது. இடதுசாரி சிந்தனையை நோக்கி இவர்கள் நகர்ந்து வந்து கொண்டிருந்தனர். 1948-க்குப் பின்னர் நிலைமை மாறியது. விடுதலை பெற்ற பிறகு உள்ள சூழ்நிலை இடதுசாரிகள் பகிரங்கமாகச் செயல்படுவதற்குச் சாதகமாக இருந்தது. விடுதலைப் போராட்டம் என்ற ஒன்று முடிவடைந்த பிறகு, வெறும் அடிப்படைப் போராட்டத்திற்கும் அப்பாற்பட்ட பல விஷயங்களை இடதுசாரி இயக்கத்தினர் காண நேரிட்டது. இதன் விளைவுதான் இலக்கிய அரங்கிலும், பண்பாட்டு அரங்கிலும் இடதுசாரியினர் அடியெடுத்து வைத்தது எனலாம். இதில் இலக்கிய அரங்கில் இடதுசாரிகள் இன்று வரை வலுவாகவே உள்ளனர். இந்த மாறுபாடு நிகழ்ந்தது சுமாராக 1950 களில் எனலாம். இந்தச் சூழ்நிலையில்தான் பல ஆண்டுகளாக ரகுநாதன் சிந்தித்து வைத்திருந்த கதைக்கரு, நாவலாகவும் வர முடிந்தது. வெளிப்பார்வைக்கு இது ஒரு பாய்ச்சல் வேக முன்னேற்றம் போலத் தோன்றும். ஆனால், பல ஆண்டுகளாக உறைந்துகிடந்த ஒன்று 1950 வரைக்கும் காத்திருந்து வெளியாகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். படிப்படியாக வளர்ந்து நேரம் கனியும் பொழுது வெளிப்படும்பொழுது அந்தத் திடீர் வெளிப்பாடு நமக்குத் தெரிகிறது. அதற்குப் பின்னால் உள்ள வளர்ச்சி நம் கண்ணுக்குத் தெரியவில்லை. ரகுநாதன் நிறைய நாவல் எழுதியிருந்தால் இந்த வளர்ச்சி திடீர் வெளிப்பாடாகத் தோன்றியிருக்காது.
இவற்றினைக் கூர்ந்து கவனிக்கும்பொழுது ரகுநாதன் என்ற நாவலாசிரியரின் வளர்ச்சி இரு கட்டமாக இடம்பெறுவதைக் காண முடிகிறது. ஒன்று, ரசனை காலகட்டம். இது ‘புயல்’, ‘கன்னிகா’ ஆகிய இரு நாவல்களைக் கண்டது. இரண்டு, ‘பஞ்சும் பசியும்’ காலகட்டம், இது இடதுசாரி இயக்கம் பகிரங்கமாக செயல்பட்ட காலத்தைச் சார்ந்தது. இந்த இரண்டிற்கும் உள்ள வேர்கள் படைப்பாளி என்ற முறையில் ரகுநாதனிடம் ஏக காலத்தில் காணப்பட்டாலும், விளைநிலம் பக்குவப்பட்ட பின்னரே அவை வெளியாகின்றன எனலாம். எனவேதான் ஒரு பெரிய இடைவெளியை இந்த இரண்டிற்கும் இடையில் காண முடிகிறது. இந்த இடைவெளி மேற்போக்கானதுதானே ஒழிய அடித்தளத்தில் இந்த இரண்டும் ஒரே சமயத்தில் தான் வளர்ந்து வந்துள்ளன எனலாம்.
(இந்த கட்டுரை 2004 ஜனவரி, தொ.மு.சி. ரகுநாதன் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை. தற்போது மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)
- எஸ்.தோதாத்ரி