காந்தியப் போராளி சர்வோதயத் தலைவர் அமரர் ஜெகந்நாதன் அவர்களின் இந்த ஆண்டுக்கான நினைவுச் சொற்பொழிவுக்கு என்னை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் வலுவான கருத்தினை முன் வைத்து ஆகச் சிறந்த வல்லுநர்களை அழைத்து விவாதிக்கச் செய்வார்கள். அந்த விவாதங்களிலிருந்து உருவாகும் கருத்துக்களை சமூகத்தில் செயல்படுத்திட களச் செயல்பாடுகளுக்கான இளைஞர்களைத் தயார் செய்ய முனைவதைத்தான் அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடந்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளிலிருந்தும் இந்த நிகழ்வுக்கு பங்கேற்பாளர்கள் வருவதுண்டு. இந்த ஆண்டும் அமெரிக்கா, கனடா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். இதில் கருத்தாளர்கள் வயதானவர்களாக இருப்பார்கள், பங்கேற்பாளர்கள் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். இதுதான் இந்நிகழ்வின் சிறப்பம்சமே. இந்த நிகழ்வு ஒரு சடங்காக நடைபெறாமல் செயலாக்கத்திற்காக இளைஞர்களை தயார்படுத்தும் நிகழ்வாக இருப்பதால் அதில் கலந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.

இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் நடைபெறும். எந்த ஆரவாரமும் இல்லாமல், அமைதியாக நடந்தேறும் ஓர் நிகழ்வு இது. இதன் மூன்றாம் நாள் நிகழ்வு “காந்திகிராம ஊழியரகம்” என்ற இடத்தில் அமரர் ஜெகந்நாதன் அவர்களின் நினைவுச் சொற்பொழிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து கிராம மேம்பாட்டுப் பணிகளில் தன்னலம் பாராது சேவை செய்வோரைப் பாராட்டி அவர் பெயரில் விருது வழங்குவதும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். அந்த நிகழ்வை நிறைவு செய்யும் விதமாக அவரின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுக் கலைந்து செல்வர்.

காந்திகிராமம் என்பது ஒரு கிராமம் மட்டுமல்ல, ஒரு நிறுவனம் மட்டுமல்ல, அனைத்தையும் தாண்டிய சமூக மாற்றத்திற்கான ஒரு மக்கள் இயக்கம். காந்திய அமைப்புக்களையும், நிறுவனங்களையும், மக்கள் இயக்கங்களையும் கட்டி உருவாக்கிய மிகப் பெரிய ஆளுமைகள் வாழ்ந்து செயல்பட்ட இடம். அவர்கள் அனைவரின் கல்லறைகளும் அங்குதான் உள்ளது. மகாத்மா காந்தியின் கனவை செயல்படுத்தும் செயற்களம்.youth 443இந்த ஆண்டு இந்த நிகழ்வின் விவாதக் கருத்து “ஒருமித்த ஆரோக்யம்” என முடிவு செய்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பல கருத்தாளர்கள் அழைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தியலை இன்னும் உயர்கல்வி நிலையங்களே உள்வாங்காத சூழலில் இந்த நிகழ்வுக்கு இந்தத் தலைப்பை எடுத்து விவாதித்தது பலருக்கு ஆர்வத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

நாம் வாழும் உலகம் ஒரு மயக்க உலகம். நாம் மயக்கத்தில் உலகைக் கட்டியாள்வதற்கும், நாட்டைக் கட்டியாள்வதற்கும், பதவிகளைப் பிடிப்பதற்கும், புகழில் மயங்குவதற்கும், பொருள் சேர்ப்பதற்கும், சொத்துச் சேர்ப்பதற்கும் நுகர்வில் தோய்ந்து வாழ்வதற்கும் மனித சமுதாயத்தை சந்தைச் செயல்பாடு தயார் செய்து விட்டது. இதன் விளைவு உலகம் அழிவுப் பாதையில் நிற்கிறது, நாம் வாழும் வாழ்க்கைச் சூழல் முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது, இயற்கை சீரழிந்து சீற்றம் கொள்ளத் தொடங்கிவிட்டது. பருவநிலை மாற்றம் பெற்று விட்டது. கோள்கள் இயங்கு தன்மையில் மாற்றம் பெற்று இயற்கைப் பேரிடர் என்பது சமூகத்தால் சமாளிக்க இயலாத அளவில் தொடர் நிகழ்வாக நிகழ்ந்து கொண்டுள்ளது என்பதை அறிந்தும் அறியாததுபோல் நாம் வாழ்கின்றோம். நம் அறிவியல், தொழில் நுட்பத்தின் சக்திக்கு உலகை வெல்லும் ஆற்றல் கிடையாது என்பதைத் தொடர்ந்து இயற்கை நிரூபித்து வருகிறது என்பதை ஐ.நா. அறிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இனிமேல் சமூகம் நலமுடன், அமைதியாக, பாதுகாப்பாக வாழ, பொருளாதார மேம்பாடும், ராணுவமும், அரசாங்கமும் மட்டும் போதாது. இவைகளைத் தாண்டி கோளங்களைப் பாதுகாப்பது, இயற்கையைப் பாதுகாப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பதை தாரக மந்திரமாக அரசும், மக்களும் செய்தால் மட்டுமே சாத்தியப்படும் என்பதைத்தான் இந்த அறிக்கைகள் பிரகடனப்படுத்துகின்றன.

புவியில் படைக்கப்பட்டவைகள் அனைத்தும் மக்களுக்காக என்ற சிந்தனையில் வாழ்ந்த மனித சமூகம் இன்று ஒரு புதிய சிந்தனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. புவியில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் புவி சொந்தமானது. மனிதர்கள் மட்டும் உரிமைகள் கொண்டாட முடியாது. எனவே புவியில் படைக்கப்பட்ட மற்ற உயிரினங்கள் முறையாக, ஆரோக்கியமாக வாழ இயலவில்லை என்றால் அதன் தாக்கம் சமூகத்தையும் பாதிக்கும். எனவே மானுட சமூகத்திற்கு சமூகத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல மற்ற உயிரினங்களைப் பாதுகாப்பதும், அவைகளை ஆரோக்கியமாக வாழவைப்பதும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவைப்படுகிறது என்பதைத்தான் இந்த அறிவியலாளர்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்ததை அறிக்கைகளாகத் தயார் செய்து ஐ.நா.மன்றங்கள் மூலம் வெளியிட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அரசாங்கங்களுக்கு ஆலோசனைகளையும் தந்து கொண்டுள்ளனர்.

இவைகளை மையப்படுத்தியதாகவே இந்த மூன்று நாள்கள் நடந்த சர்வோதய மாநாடு அமைந்தது. மூன்றாம் நாளில் அமரர் தியாகி ஜெகந்நாதன் அவர்களின் நினைவுச் சொற்பொழிவினை ஆற்ற என்னை அழைத்திருந்தனர். அதனை இளைஞர்களுக்கு கள வழிகாட்டுதலுக்கு எதாவது நாம் கூற முடியுமா என்று சிந்தித்து ஒரு சில கருத்துக்களை அங்கிருந்த இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இன்றைய சூழல் கூறும் செய்தி என்னவென்றால், மானுடம் இதுவரை சந்திக்காத சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலை சமாளிப்பது மிகவும் கடினமான செயல். ஆனால் இன்றைய தேவை நமக்கு ஒரு கடப்பாடுடன் செயல்பாடு. ஆகவேதான், சமூகத்திற்கு நான் எதையாவது செய்வேன் என்று சமூக அக்கறையுடன் செயல்படும் இளைஞர்களுக்கு எதாவது வழி காட்டுதல் தரவேண்டும் என்று என் உரையைத் தயார் செய்திருந்தேன். அது மட்டுமல்ல ஜெகந்நாதன் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராட்டக்களத்தைச் சந்தித்தவர். அவருடைய இறுதிக் காலத்தில் அவரைத் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பும், உரையாடும் வாய்ப்பும் கிட்டியது. காரணம், அவர்களின் “ஊழியரகம்” காந்திகிராம வளாகத்திற்குள்ளே இருந்ததால் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்படி அவருடன் உரையாடும்போது, அவரின் செயல்பாடுகளிலிருந்து அவரைப் பற்றிய பார்வை எனக்கு விசாலமடைந்தது. அவர் எந்த இடத்திலும் நிறுவனம் கட்டவில்லை. தொடர்ந்து மக்கள் பணி, போராட்டங்களில் இருந்து மக்களுக்காக செயல்பட்ட வித்தியாசமான மாமனிதராக செயல்பட்டதை என்னால் உணர முடிந்தது. எனவேதான் இது ஒரு வாய்ப்பு எனக் கருதி அந்த நினைவுச் சொற்பொழிவுக்கு ஒப்புக் கொண்டேன். இதற்கு முன்பு நினைவுச் சொற்பொழிவாற்றியவர்களின் பட்டியலைப் பார்த்தால் மிகப் பெரிய காந்திய ஆளுமைகளாக இருந்தார்கள். அது எனக்கு ஒரு மன நெருடலைத் தந்தது. இந்தச் சொற்பொழிவுக்கு நாம் தகுதியானவர்தானா என்ற கேள்வியுடன் என் சொற்பொழிவைத் தயார் செய்தேன்.

நான் அமரர் ஜெகந்நாதனைச் சந்தித்த போதெல்லாம் ஒன்று நிலம் பற்றிய உரையாடல் அடுத்து கிராம சுயராஜ்யம் பற்றிய உரையாடல் இந்த இரண்டும்தான் இடம் பெற்றிருந்தன. இந்த இரண்டிலும் அவர் மிகப் பெரிய விசாலமான சிந்தனையைப் பெற்றிருந்தார். அந்த விவாதத்தில் ஒருசில கருத்துக்களை அழுத்தமாக முன் வைப்பார். இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் செய்யாமல் கிராம சமுதாயத்தை மேம்படுத்த முடியாது, இந்தியாவுக்குத் தேவை பொதுமக்களுக்கான அறிவியல் கல்வி, மக்கள் கையில் வலுவான உள்ளாட்சி அரசாங்கம், மக்களுக்கு எளிய வாழ்வியலுக்கான புரிதல், இயற்கையுடன் அமைதியாக ஆனந்தமாக வாழ்வது பற்றிய பார்வை. இவைகளைத்தான் விவாதிப்பார். அவரிடம் உரையாடும்போது ஒரு பிரச்சினையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதற்கு மிக எளிதாக ஒரு அணுகுமுறையைக் கூறிக்கொண்டேயிருப்பார். அது வேறு ஒன்றும் அல்ல. “எந்தப் பிரச்சினை வந்தாலும் உடனே நாம் என்ன பார்க்க வேண்டும் என்றால், இந்தப் பிரச்சினையால் கடைக்கோடியில் வாழுகின்ற சாதாரண ஏழைகள் எப்படிப் பாதிக்கப்படுவார்கள் என்று பார்க்கும் பார்வை வந்துவிட்டால் மேம்பாட்டிற்கான சூழலை உருவாக்குவது மிக எளிது” என்பார்.

அடுத்து காந்தியின் சுயராஜ்யம் என்பதற்கு காந்தி தந்த விளக்கத்தினை மிகச் சரியாக உள்வாங்கிய காரணத்தால் காந்தியை எதிர்த்தே சத்தியாக்கிரகம் செய்து, காந்தியிடம் அதற்கான விளக்கத்தினை கடிதம் மூலம் பெற்றவர். சுயராஜ்யம் என்பது சுதந்திரம் மட்டுமல்ல, அரசு நியாயம் செய்யத் தவறும்போது அதை எதிர்த்துப் போராடுவதுதான். அதைத்தான் அமரர் ஜகந்நாதன் அவர்கள் கடைசிவரை செய்து கொண்டேயிருந்தார். அந்தப் போராட்டங்களுக்கு உறுதுணையாக எப்படி காந்திக்கு கஸ்தூர்பா காந்தி இருந்து செயல்பட்டாரோ அதுபோல் ஜெகந்நாதன் அவர்களுக்கு கிருஷ்ணம்மாள் இருந்து செயல்பட்டார் என்பது இந்தத் தம்பதியர்களுடன் களத்தில் இருந்து செயல்பட்ட அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த வயதிலும் கிருஷ்ணம்மாள் அழைத்தால் ஒரு இளைஞர் கூட்டம் ஏன் வருகிறது என்றால், இந்தக் காந்தியத் தம்பதியர்களின் குழந்தைகள் இரண்டு பேரும் மருத்துவர்கள். தந்தை விட்டுச் சென்ற பணியை, தாயுடன் இணைந்து ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்கி ஓசையின்றி செயல்பட்டு வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளாது மக்கள் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டிருப்பது இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கிறது.

இன்று பல சேவை நிறுவனங்கள் காந்திய நிறுவனங்கள் உட்பட தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில் இவர்களை நோக்கி மிகப்பெரிய செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய இளைஞர்கள் இவர்களிடம் வந்து புகுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால், ஒன்று மட்டும்தான் நமக்குத் தெரிகிறது. அவர்களிடம் எதுவும் இல்லை. நல்ல சிந்தனையும், நல்ல உணர்வும், தேசப்பற்றும், மக்கள்மேல் மாறா நம்பிக்கையும் அன்பும்தான். அதுதான் நம் இளைஞர்களை இன்று இவர்கள் பக்கம் ஈர்த்திருக்கிறது.

அந்த இளைஞர்களுக்கு எதாவது ஒரு வழிகாட்டல் செய்ய இயலுமா என்ற சிந்தனையில்தான் என் ஒருசில கருத்துக்களை அவர்கள் முன் வைத்தேன். இன்று நாம் வாழும் உலகம் சந்தை உலகம். லாபம் பார்க்கும் உலகம். அறம் இழந்த உலகம். அனைத்தும் சந்தைப்படுத்தப்பட்டுவிட்டது. அரசானாலும் சரி, அரசியலானாலும் சரி, ஆளுகையானாலும் சரி, கலாச்சாரமானாலும் சரி, ஆன்மீகமானாலும் சரி, குடும்பமானாலும் சரி, அனைத்தும் சந்தைப்படுத்தப்பட்டுவிட்டது, இவைகளில் சேவை மறக்கடிக்கப்பட்டு, லாபம் ஈட்டுதல் பார்வையாக சிந்தனையாக வலுவாக உருவாக்கப்பட்டுவிட்டது. இவை அனைத்திலும் சேவை என்பது மட்டும் மறக்கடிக்கப்படவில்லை, அறமும் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு. அது மட்டுமல்ல அடிப்படையில் இந்தியா அதிக ஏழைகளைக் கொண்ட நாடு. இது நடுத்தர வர்க்கம் வாழும் நாடு அல்ல. எனவே இந்த நாட்டில் மேம்பாடு என்பது அரசாங்கத்தின் செயல்களால் மட்டும் நடைபெறுவது கிடையாது. அரசாங்க அமைப்புக்களின் செயல்பாடுகள் அனைத்திலும் மக்கள் பங்கேற்பை உறுதி செய்து மக்கள் கையில் அரசுத் துறைகளை இயங்க வைப்பதில் தான் உள்ளது. இந்தக் கருத்தாக்கம் சுதந்திரப் போராட்ட காலத்தில் வலுப்பெற்றாலும், சுதந்திரம் அடைந்த பின் அரசு வியாபித்து மக்களை பயனாளியாகப் பார்த்து அவர்களை அரசாங்கத்திடம் வர இயலாது அரசாங்கத்தை எஜமானனாக மாற்றிக் கொண்டு விட்டது.

இதன் விளைவுதான், 75 ஆண்டுகால மக்களாட்சி அரசாங்கம் நடைபெற்று வந்த நாட்டில் 80 கோடி மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்பை அரசாங்கத்தின் பொது வினியோகத் திட்டத்தில் விலையில்லா உணவு வாங்கி உறுதி செய்துள்ளனர். ஆனால் 7% பொருளாதாரம் வளர்ச்சி கண்டுவிட்டது இந்தியா. 3% பொருளாதார வளர்ச்சியில், அனைத்து அடிப்படை வசதிகளையும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் செய்த நாடுகளைப் பற்றி நம் தலைவர்களுக்கு ஏன் தெரியவில்லை என்பதுதான் நமக்குப் புதிராக உள்ளது. இந்த முரண்பாட்டை புரிந்து கொள்ள நம் பொருளாதார நிபுணர்கள் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள்தான் இந்த அரசுக்கு வழிகாட்டியவர்கள். அவர்கள் கூறுவது என்ன? அரசும் தோற்றது, சந்தையும் தோற்றது, அரசும் சந்தையும் மக்களுக்கு எவற்றையெல்லாம் சேவையாகச் செய்வோம் என்று கூறி செயல்பட்டனவோ அவைகளைச் செய்ய இயலாமல் தோற்றுவிட்டன. அதை அரசும் ஒப்புக் கொண்டுவிட்டது, சந்தையும் ஒப்புக் கொண்டு விட்டது.

தீர்வு என்ன? தீர்வு எங்கே? தீர்வு மக்களிடம்தான், சமூகத்தில்தான். என்றும் கூறுகின்றனர். அந்தத் தீர்வை நோக்கி எப்படி நகர்வது என்பதுதான் கேள்வி? இதற்கு முதல் படி மக்களை அதிகாரப்படுத்துவது. அவர்களிடம் அரசாங்கத்தில் இருக்கும் வாய்ப்புக்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது. அடுத்து அரசாங்கத்தில் ஆளுகையிலும், நிர்வாகத்திலும் பங்கேற்க வைப்பது. இதற்காகத்தான் புதிய உள்ளாட்சியை அரசாங்கமாக உருவாக்கி அரசியல் சாசனத்தில் இணைத்தார்கள். இந்த உள்ளாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதே மத்திய மாநில அரசுகளால் தொடமுடியாத மக்களைத் தொட்டு அவர்கள் வாழ்வை செம்மையடையச் செய்யத்தான். அடுத்து, இந்த நாட்டில் இன்றும் விளிம்புநிலை மக்களாக வாழக்கூடிய ஆடு மாடு மேய்த்து வாழ்வோர், காடுகளில் வாழும் ஆதிவாசிகள், விவசாயக் கூலிகள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மீனவர்கள், தெரு வணிகம் செய்வோர், கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்யும் பணிப் பெண்கள், குடிசைத் தொழில் செய்வோர், கூடை முடைவோர், மரம் ஏறுவோர், பிணம் புதைப்போர், பிணம் எரிப்போர், பிணவறை காப்போர் இவர்கள் அனைவரும் அரசின் கவனத்திற்கு வராதோர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாழும் பகுதிகளுக்கு கார் செல்ல இயலாது. கார் செல்ல இயலாத பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள் செல்ல மாட்டார்கள்.

ஆனால் அவர்கள் வாழும் பகுதிக்கு வாக்கு பெற மட்டும் கழுதை முதுகிலாவது வாக்குப் பெட்டியை எடுத்துச் சென்று அவர்களின் வாக்குகளைப் பெற்று வந்துவிடுவார்கள். இவர்களின் வாழ்வில் கவனம் செலுத்தி செயல்படத்தான் உள்ளாட்சியை அரசாங்கமாக உருவாக்கியுள்ளனர். அது மட்டுமல்ல இந்த விளிம்புநிலை மக்களை பாதுகாத்து மேம்படுத்த தேவையான அனைத்தையும் உரிமைகளாக சட்டங்கள் மூலம் தந்துவிட்டனர். அத்துடன் இந்த விளிம்புநிலை மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி மன்றங்களில் இடம்பெற இட ஒதுக்கீடும் செய்துவிட்டனர். கட்டுக்கட்டான உரிமைச் சட்டங்கள் அனைத்தும் இந்த விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்கும் ஆதங்கள். இந்த ஆயுதங்கள் இன்னும் பயன்படுத்தாமல் துருப்பிடிக்கின்றன. காரணம், இந்தச் சட்டங்கள் பற்றியும், புதிய உள்ளாட்சி பற்றியும் எந்தப் புரிதலும் இந்த விளிம்பு நிலை மக்களுக்கு ஏற்படவில்லை. ஏற்படுத்த முயலவும் இல்லை. முயன்றவர்களும் களைத்து ஒதுங்கி விட்டனர். இதற்கான புரிதல் வந்துவிட்டால், இந்த சுரண்டல் அரசியலுக்கு, சந்தை அரசியலுக்கு, ஊழல் நிர்வாகத்திற்கு ஆபத்து வந்துவிடும். எனவேதான் இந்தப் புதிய உள்ளாட்சியின் முக்கியத்துவத்தை பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் பேசுவதில்லை, பெரும்பான்மை ஊடகங்களும் விவாதிப்பதில்லை, எந்த அரசியல் சாசனம் மத்திய அரசுக்கு அதிகாரங்களை வழங்குகின்றதோ, அதே அரசியல் சாசனம்தான் மாநிலத்திற்கும் அதிகாரங்களை வழங்குகின்றது, அதே அரசியல் சாசனம்தான் உள்ளாட்சிக்கும் அதிகாரங்களை வழங்குகின்றது. உள்ளாட்சி மட்டும் ஏன் இன்னும் மாநில அரசின் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது என்பதனை நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று நாம் வாழும் உலகம் சமூகச் சிந்தனையற்ற சுயநலம் பேணும், லாபம் பார்க்கும் சிந்தனையுடன் வாழும் பெரும்பான்மை மக்களைக் கொண்ட காலம். இந்தக் காலத்தில் நாம் தேடுவது தியாகத்திற்கான இளைஞர்களை. மாற்றத்திற்கான விடுதலைச் சிந்தனைகளைத் தெளித்த காந்தி, விவேகாநந்தர், அரவிந்தர் போன்றோர் தங்கள் சேவையை ஆரம்பித்தபோது அவர்கள் இளைஞர்கள் என்பது நம் இளைஞர்கள் பலருக்குத் தெரியாது. இன்று பெரும்பாலான இளைஞர்கள் நுகர்வில் மயங்கிக் கிடக்கின்றனர். இந்த மயக்கத்திலிருந்து அவர்களை வெளியேற்றி கடையனுக்கும் கடைத்தேற்றம் செய்ய பல இளைஞர்கள் முன் வருகின்றனர். பலர் களத்தில் பணி செய்கின்றனர். எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல். ஆனால் இன்று இவர்களுக்குத் தேவை அரசாங்கத்தை சமூகத்திற்குப் பணி செய்ய வைக்கத் தேவையான ஆற்றல் மற்றும் புரிதல். அந்த ஆற்றலையும், புரிதலையும் சேவை செய்யத் தயாராக முன்வரும் இளைஞர்களுக்குத் தரவேண்டியதுதான் உண்மையான காந்தியப்பணி. பேராடாமல் சுதந்திரமும் கிடைக்காது, உரிமைகளும் கிடைக்காது, வறுமையையும் போக்க இயலாது. இதற்கான ஒரு புரிதலை மக்களிடம் ஏற்படுத்த நம் இளைஞர்களைத் தயார் செய்யும் பணியில் இறங்குவதுதான் மறைந்த ஜெகந்நாதனுக்கு நாம் செய்யும் முறையான அஞ்சலியாக இருக்கும். அதைச் செய்ய முயல்வோமாக என்று கூறி என் உரையினை நிறைவு செய்தேன்..

- க. பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)