கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இன்றைய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் ராணுவ தளபதி பதவியிலிருந்து 2012 ஜூன் 1-ம் நாள் 60 வயது முடிந்து பணி ஒய்வு பெற்றார்.

VK Singh 3602012 மே-25ம் நாள் டெல்லி ராணுவ தலைமையகம், மராட்டிய மாநிலம் பூனா ராணுவ மையம், திருவனந்தபுரம் ராணுவ மையம் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த “தொழில்நுட்ப பணிகள் பிரிவு” என்ற ராணுவ உளவுப் பிரிவின் பல ஆவணங்கள், கணினிப் பதிவுகள் அனைத்தும் ராணுவ ஜெனரல் வி.கே.சிங் உத்தரவுப்படி அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன.

தனது நேரடி மேற்பார்வையில் செயல்பட்டுவந்த TSD என்ற அந்த ராணுவ உளவுப் பிரிவின் முக்கியமான பல கோப்புகளையும் ஆவணங்களையும் பணி ஒய்வு பெறுவதற்கு ஒரு வாரம் இருக்கையில் ராணுவ ஜெனரல் வி.கே.சிங் அழித்துவிடும்படி உத்தரவிட்டது ஏன்?. அவ்வாறு அழிக்கப்பட்ட TSD உளவுப்பிரிவின் ரகசிய கோப்புகளிலும், ஆவணங்களிலும், கணினிப் பதிவுகளிலும் இருந்த தகவல்கள், விவரங்கள் என்ன ?

பணி ஒய்வு பெறுகிற அதிகாரி யாராக இருந்தாலும், தனது பொறுப்பில் இருந்த அனைத்து கோப்புகள், ஆவணங்கள் அனைத்தையும் புதிதாக பதவியேற்கும் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் சட்டம். ஏனெனில் அவையனைத்தும் அரசின் சொத்து. பணி ஒய்வு பெறுபவரின் சொந்த சொத்தல்ல.

வி.கே.சிங் 2010 ல் ராணுவ ஜெனரல் பதவி உயர்வு பெற்றவுடன் பாதுகாப்புத் துறை அமைச்சத்திடம் ஒப்புதல் வாங்காமலேயே தனது மேற்பார்வையில் “தொழில் நுட்பப் பணிகள் பிரிவு - என்ற பெயரில் தனியாக ஒரு ராணுவ உளவுப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டார்.

இவரது தலைமையில் இயங்கிய இந்த TSD ராணுவ உளவுப்பிரிவு ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட்டு உளவு பார்த்து தகவல்கள் சேகரிப்பதற்குப் பதிலாக, தனக்கு சம்பந்தமில்லாத அரசாங்கத்தின் மற்ற துறைகளில் பதவி வகித்த மேலதிகாரிகளின் வருமானம் மற்றும் வேலைகளில் மூக்கை நுழைத்து உளவுபார்த்து தகவல் சேகரித்தன. இந்த TSD உளவுப்பிரிவு எந்தவிதமான விதிமுறைகளும், கட்டுப்பாடும் இல்லாமல் ஏரளாமான பணத்தை தவறான வழிகளில் செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

“ராணுவ ஜெனரல் வி.கே.சிங் பணி ஒய்வு பெற்றபின் ராணுவ மேலிடம் TSD உளவுப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் நிதிமோசடி விவகாரங்களை விசாரிக்க லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்தி மேற்கண்ட உண்மைகளை கண்டறிந்தது” – என்று இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு (2014 ஆகஸ்ட் 4ம் நாள்) முதன்முதலாக வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது.

ராணுவ ஜெனரல் வி.கே.சிங் உத்தரவுப்படி ராணுவ உளவு பிரிவு 2012 மே மாதம் 25ம் நாள் ரகசிய ஆவணங்களையும், கணினி பதிவுகளையும் அழிப்பதற்கு ராணுவ மையங்களால் போடப்பட்ட நான்கு உத்தரவின் நகல்களை இந்து நாளேடு (22.9.2015) பகிரங்கமாக வெளியிட்டது. மேலும் அழிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சி.டி.களில் இருந்த விவரங்களை தங்களுடைய இணைய தளத்தில் பொது மக்கள் பார்வையிட்டுக் கொள்ளலாம் என்று துணிச்சலாக அறிவித்தது.

மத்திய அரசுக்கு சொந்தமான, பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான ஆவணங்களை சட்ட விரோதமாக அழித்துவிட்ட ராணுவ ஜெனரல் வி.கே.சிங் மீது ராணுவம் உரிய நடவடிக்கைள் எடுப்பதற்கு பதிலாக, அழிக்கப்பட்ட ஆவணங்களில் கண்டுள்ள விஷயங்களை வருமானவரி புலனாய்வு துறை மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு சிறிய அதிகாரி ஹவில்தார் சாம்தாசை ராணுவம் 2012 ஜூன் மாதம் 20 ம் நாள் கைது செய்து ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்தது.

ராணுவ ரகசியங்களை வெளியிட உதவி செய்த குற்றத்திற்காக அவருக்கு ராணுவ நீதிமன்றம் 2015 மே 9 ம் நாள் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அவரை திகார் சிறையில் தள்ளியது. நாட்டின் நலன் கருதி அழிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த சில உண்மைகளை வருமான வரி உளவு பிரிவிற்கு தகவல் கொடுத்த ராணுவ வீரர் சாம்தாசுக்கு வேலை நீக்கமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

நாட்டிற்கு சொந்தமான ராணுவ கோப்புகளையும், சிடிகளையும் சட்ட விரோதமாக அழிக்க உத்தரவு போட்ட முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு மோடி அரசாங்கத்தில் இணை அமைச்சர் பதவி எனும் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட திருவாளர் வி.கே.சிங், அவரது சட்ட விரோத இந்த நடவடிக்கை சம்பந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய ஆசிய நெட் இண்டர்நேஷனல் பத்திரிக்கை நிருபரை பார்த்து “ராணுவ உளவு பிரிவின் நடவடிக்கையை சந்தேகிக்கும் நீங்கள் தேசவிரோதி” என்று சொன்னார். மேலும் பத்திரிக்கையாளர் ஆகிய நீங்கள் செய்யும் தொழில் “விபச்சார தொழில்” என்றும் கேவலமாக பேசினார்.

இந்த வி.கே.சிங் தான் அரியானா மாநிலத்தில் ஆதிக்க சாதியினரால் இரண்டு தலித் குழந்தைகள் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மோடி அரசு பதில் சொல்ல வேண்டும் என்று நாடே கொந்தளித்த போது “தெருவிலே போகும் நாய் மீது ஒருவன கல்லெடுத்து விசீனாலும் கூட அதற்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டுமா?” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆணவமாகப் பேசிய நபர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் வி.கே.சிங் மீது விசாரணை வைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

சில அயோக்கியர்களின் கடைசி புகழிடம் - “தேசபக்தி” என்று சொன்ன தந்தை பெரியார் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்பதற்கு இன்று நாட்டில் அரசியல் மற்றும் சமூக தளத்தில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் நிருபித்து வருகிறது.

“நானும் ஊழலில் ஈடுபடமாட்டேன். எனது அமைச்சரவை சகாக்களின் ஊழலையும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” என்று பிரதமராக பதியேற்றபோது வாய்ச்சவடால் அடித்த மாண்புமிகு மோடியவர்கள் வி.கே.சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம்போல் மௌனவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.

- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்