சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன், ஈழத்து இலக்கிய வானின் சுடர் நட்சத்திரம், சிறந்த சிறுகதை ஆசிரியர், பிரபல நாவலாசிரியர், கவிதை, நாடகம், கட்டுரை, விமர்சனம், இதழியல், வானொலி, மொழிபெயர்ப்பு ஆகிய பன்முக இலக்கியத் துறைகளிலும் சாதனை படைத்தவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி எனப் போற்றப்படுபவர் அ.ந.கந்தசாமி.
ஏழை, பணக்கார பேதம், சாதி, சமயப்பாகுபாடு, முதலாளி - தொழிலாளி பிரச்சனை ஆகிய விவகாரங்களில் சமதர்ம சமத்துவத்தை மூலக் கருவாக வைத்து யதார்த்த இலக்கியம் படைத்தவர்.
இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் 08.08.1924 அன்று பிறந்தார். தந்தையின் பெயர் நடராசா, தாயாரின் பெயர் கௌரியம்மா. இவரது தந்தையார் யாழ்பாணத்தில் உள்ள சிறைச்சாலையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இவரது இளம் வயதிலேயே தந்தையும், தாயும் இறந்துவிட்டனர். இவர் யாழ்ப்பாணம் அளவெட்டியில் வாழ்ந்தார். தமது தொடக்கக் கல்வியை யாழ்ப்;பாணம் இந்துக்கல்லூரியில் பயின்றார். பின்னர் தெல்லிப்பனை மகாஜனக் கல்லூரியில் கல்வியைத்; தொடர்ந்தார். இறுதியாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் எஸ்.எஸ்.சி. கல்வியை முடித்தார்.
தமது சிறுவயது முதலே கவிதை எழுதத் தொடங்கிவிட்டார். ‘ஈழகேசரி' இதழின் சிறுவர் பகுதியில் பதினான்காவது வயதில் இவரது படைப்பு வெளியாயிற்று. மேலும், ஈழகேசரி இதழ் மாணவர்களுக்காக நடத்திய இலக்கியப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றார். பின்னர் கொழும்பில் அரசுப் பணியில் சேர்ந்தார்.
இவர் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்;. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பின்னர் இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.
வீரகேசரி இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார். அங்கு அச்சகத் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு போராடியதால் வீரகேசரி இதழிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழுநேர ஊழியராக செயல்பட்டார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிக்கையான தேசாபிமானியின் முதல் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பத்திரிக்கையில் இவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகச் செயல்;பட்டபோது, தொழிற்சங்க நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டதால் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உழைப்பை மட்டுமே நம்பி வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறைக்காட்டித் தீவிரமாகப் பாடுபட்டார். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் தோட்ட நிர்வாகத்துடன் பல போராட்டங்களை நடத்தினார். மேலும், கொழும்பு நகரில் நடைபெற்ற ‘ட்ராம்’ வண்டி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமையேற்று வழி நடத்தி வெற்றி கண்டார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர், சுதந்திரன் இதழில் முதன்மை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். சுதந்திரன் இதழில் பணியாற்றிய காலத்தில் எமிலி சோலாவின் ‘நாநா’ என்னும் புதினத்தை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து ‘பண்டிதர் திருமலைராயர்’ என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி சுதந்திரன் இதழில் எழுதிய கட்டுரைகளை, தமிழகத்தில் தந்தை பெரியார் நடத்திய குடியரசு இதழில் மறுபிரசுரம் செய்தார். மேலும், அக்கட்டுரைகளைப் பாராட்டி குடியரசு இதழில் ஆசிரியத் தலையங்கம் எழுதினார்.
சுதந்திரன் இதழிலிருந்து வெளியேறிய பின்னர், இலங்கை அரசாங்கத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இலங்கை அரசாங்கத்தின் தகவல்துறையிலிருந்து வெளிவந்த ஸ்ரீலங்கா இதழின் ஆசியராகப் பணிபுரிந்தார். சுமார் 13 ஆண்டுகள் இலங்கை அரசின் தகவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் முழுமையாக இலக்கிய உலகில் நடைபோடத் தொடங்கினார். டிரிபியூன் என்ற ஆங்கில வார இதழில் பணியாற்றினார். டிரிபியூன் இதழில் ஆங்கிலத்தில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். மேலும், திருக்குறள் குறித்து ஆங்கிலத்தில் அவ்விதழில் பல கட்டுரைகள் எழுதினார்.
வீரகேசரி, தேசாபிமாணி, சுதந்திரன், ஸ்ரீலங்கா, டிரிபியூன் ஆகிய பத்திரிக்கைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து இலங்கையில் சிறந்த பத்திரிக்கையாசிரியராக புகழ் பெற்று விளங்கினார்.
அமரவழ்வு, கடைசி ஆசை, மதமாற்றம் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். இவரது மதமாற்றம் நாடகம் குறித்து மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் க.கைலாசபதி அப்சர்வர் எனும் ஆங்கில இதழில் தமிழ் நாடகங்களைப் பற்றி எழுதியபோது, “இதுவே தமிழில் எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச் சிறந்த நாடகம்” எனப் புகழ்ந்துரைத்துள்ளார்.
அ.ந.கந்தசாமி ‘மனக்கண்’ என்ற நாவலை எழுதியுள்ளார். இந்நாவல் தினகரன் இதழின் வார மஞ்சரியில் தொடராக வெளிவந்து ஆயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்நாவல் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசனால் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
மேலும், ‘வெற்றியின் இரகசியங்கள்’ என்னும் வாழ்வியல் நூல் ஒன்றையும் எழுதி அளித்துள்ளார். ‘பொம்மை மாநகர்’ என்ற சீனப் புதினத்தையும், பெட்ரன்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’ என்னும் நூலையும், ஓ ஹென்றி சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் க.கைலாசபதி தமது ‘ஒப்பியல் இலக்கியம்’ என்னும் ஆய்வு நூலினை அ.ந.கந்தசாமிக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
“எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் முதலில் செய்யுள் தோன்றிய பின்னர் தான் வசனம் தோன்றியிருக்கிறது. தமிழ் இலக்கியம் இதற்கு விதிவிலக்கல்ல. வள்ளுவர். கம்பர், இளங்கோ வளர்த்த கவிதை, தமிழின் மடியில் பிறந்ததுதான், இன்றைய வசனத் தமிழ். தென்னகத்தைப் போலவே ஈழத்திலும் வசன இலக்கியத்தின் முன்னோடியாகப் பன்னெடுங்காலம் கவிதைத் தமிழ் முழங்கி வந்திருக்கிறது. வசன இலக்கியம் நேற்று பிறந்த பிள்ளை, அதன் சரிதம் கைப்பிடிக்குள் அடங்கும். ஆனால், இலக்கிய உலகின் அரசியாகிய கவிதைத் தேவியோ நீண்டகாலம் வாழ்ந்தவள்;. காவியத்தின் சரிதை காலச் சேற்றில் ஆழப் புதைந்து கிடக்கிறது. நீண்ட அதன் சரித்திரத்தை நிமிர்த்தி நிறுத்திக் கணக்கிடுவது இலகுவான காரியமல்ல. கடினமான அப்பணியை எதிர்காலத்தில் யாராவது நிறைவேற்றுவர்”.
“செந்தமிழின் பொற்காலம் எனப் புகழப்படும் சங்க காலத்தில் கூட ஈழத்துக் கவிதையின் நன்மணம் கடல் கடந்து பரவியிருந்தமைக்குப் போதிய சான்றுகள் உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளின் போக்கை எடுத்து விளக்க நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் எழுதிய அழகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தைக் கடந்து நிற்கிறார். தமிழ் இலக்கியத்தின் சுவையறிந்து போலும் ஆசைமேலிட்டு நீலக்கடல் அதனைப் பெரும்பாலும் உட்கொண்டுவிட்டது. பெரியதொரு கவிதைப் பட்டியலில் எஞ்சியிருக்கும் ஒரு சில நூற்றுவரில் பூதந்தேவனார் ஒருவர். ஆனால், அவர் மட்டுந்தானா முன்னாளில் தமிழ்க் கவிதைச் சங்கூதிய பெருமகன்? இன்னும் பலர் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களைப் பற்றி நாம் இன்று ஒன்றும் அறிய முடியாதிருக்கிறது” என அ.ந.கந்தசாமி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான ‘புதுமை இலக்கியம்’ இதழில் கவிதையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
உலகவரை படத்தில் சிறு புள்ளியாக விளங்கும் இலங்கையில், சிறுபான்மையினராக விளங்கும் தமிழ் பேசுவோர் கவிதையின் மீது கொண்டிருக்கும் ஆர்வமும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றும் தொண்டும் வியக்கக்கூடியதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் 1966 ஆம் ஆண்டு நடத்திய ‘பாஓதல்’ என்னும் கவியரங்க நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய ‘கடவுள் என் சோர நாயகன்’ என்ற கவிதை அனைவரின் பாராட்டையும் பெற்றது. அக்கவிதைக் குறித்து தென்புலோலியூர் மு.கணபதிபிள்ளை ‘ஒரு நூற்றாண்டுக்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்’ எனப் பாராட்டியுள்ளார்.
‘தேசபக்தன்’ இதழில் ‘கசையடிக் கவிராயர்’ என்ற பெயரில் ஈழத்து இலக்கிய உலகில் நடைபெறும் திருகுதாளங்களை அம்பலப்படுத்தி எழுதியதோடு, எழுத்தாளர் தேசிய கீதத்தை எழுதிய பெருமை இவரையேச் சாரும். அந்தக் கவிதையைக் ‘கவீந்திரன்’ என்ற பெயரில் எழுதியுள்ளார். அந்தக் கவிதை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின், அகில இலங்கை எழுத்தாளர் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட ‘புதுமை இலக்கியம்’ சிறப்பு மலரில் இடம்பெற்றது.
“எழுத்தென்னும் சங்கம்
ஒலித்திடுகின்றது
உழுத்திடும் உலகம்
ஒழிந்திடவே”
“சுரண்டல் மிகுந்தது
சூழ்ச்சி நிறைந்தது
இருண்ட இச்சமுதாயம் !
வறண்டு கிடந்திடும்
மக்களின் துன்ப
வதைகள் ஒழித்திடுவோம்
புது அமைப்பும் நிறுவிடுவோம்!!”
என்ற கவிதை மூலம் சுரண்டலும், சூழ்ச்சியும் நிறைந்த இச்சமூக அமைப்பை பேனா முனைக் கொண்டு ஒழித்து புது அமைப்பை நிறுவ அறைகூவி அழைக்கின்றார்.
‘வில்லூன்றி மயானம்’ எனும் கவிதையில்,
“நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்
வாட்டமுற்ற மக்களும் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித் தீ வாழ்கவது”.
“பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று
பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்
பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான
பழக்கமெனப் பகுத்தறிவால் கண்ட பின்னும்”;
“சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்
சிறுமை என்று செகமெல்லாம் நகை நகைத்துச்
சிரிப்பதற்குச் செவிதாரீர் தீண்டாமைப் பேயின்
சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர்”.
என்னும் கவிதையின் மூலம் சாதிக் கொடுமையைக் கண்டித்து சமுதாய நலனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈழத்தில் தீண்டாமைக் கொடுமையும். சாதி ஆதிக்கமும் தலைவிரித்தாடிய காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிணத்தை நகரவைக்குச் சொந்தமான வில்லூன்றி மயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரிய குளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூர படுகொலை நிகழ்வை மையபடுத்தி ‘வில்லூன்றி மயானம்’ என்ற கவிதையை எழுதி வெளியிட்டார்.
“இன்று நாம் வாழும் சமுதாயத்தில் புன்னகையைக் காணவில்லை. துன்பமும் துயரமும், அழுகையும் ஏக்கமும், கண்ணீரும் கம்பலையுமாக நாம் வாழும் உலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும் செல்வத்துக்கும் நடக்கும் போரும் - உயர்ந்த சாதியாருக்கும் தாழ்ந்த சாதியாருக்கும் நடக்கும் போரும் - அசுர சக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் - இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. போர்களினால் வாழ்வே ஒரு சோக கீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழித்துவிட முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அப்போதுதான், போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதனைப் பூக்க வைக்கும் பெரும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டுமென்ற கருத்தைப் புகழ் பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர் என்று ‘புதுமை இலக்கியம்’ என்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட மாத இதழில், ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்ற தலைப்பில் தான் எழுத வந்ததன் நோக்கத்தை பதிவு செய்துள்ளார்.
‘நாயினும் கடையர்’ எனும் சிறுகதை மலையகத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவர் சில ஆண்டுகள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தில் பணியாற்றியதால், தொழிலாளர்களின் துன்ப துயரங்களையும், தோட்டத் துரைமார்களின் அதிகாரங்களையும், சுரண்டலையும் நேரில் கண்டதால், தனது சிறுகதைகளில் யதார்த்தமாக அவற்றைப் பதிவு செய்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான அ.ந.கந்தசாமி தமிழ்நாட்டு சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் வைத்துக் கணிக்கப் பெற்றார். மார்க்சிய அரசியல், இலக்கியத் கொள்கைகளைத் தழுவி புதிய உலகைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியிருக்கும் இவரது சிறுகதைகள் இலக்கிய உலகில் என்றும் அழியாத படைப்புகளாகும்.
“அ.ந.கந்தசாமியின் கதைகளோ வன்மையாகச் சமூகத்தைத் தாக்குபவை. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வை நன்கு புலப்படுத்துவதில் கை தேர்ந்தவர் இவர்”. என மார்க்சீய இலக்கிய விமர்சகரான பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது ‘தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
“கலைக்காகக் கலை என்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார் கண்டு
கலை இந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும்”
என கலை கலைக்காகவே என வாதிட்டவர்களுக்கு மத்தியில் திருவள்ளுவரை நினைவுப்படுத்தி கலை மக்களுக்காகவே என்பதை தமது கவிதையில் வலியுறுத்தியுள்ளார்.
“பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூஸோ, வால்டேர் தொடக்கம், மார்க்சீம் கார்க்கி, எஹ்ரென்பெர்க் வரைக்கும், பெர்னாட்ஷா முதல் பெட்ரன்ட் ரஸ்ஸல் வரைக்கும் அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களும் சமுதாய முன்னேற்றத்திற்குரிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞர் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தில் உடனடியாகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை. உலகப் பண்பாடிய பாரதிதாசனும், சமுதாய ஊழல்களை சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாலான சேவைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களைப் போன்று சமூகம் சார்ந்து எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை படைக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஈழத்து மூத்தப் படைப்பாளி, நாவலாசிரியர் செ.கணேசலிங்கன், அ.ந.கந்தசாமியின் இறுதி காலத்தில் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கவனித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இன்று நான் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய முத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பெயரும், புகழும், மதிப்பும் பெறுவதற்கு மூல காரணம் அ.ந.கந்தசாமி என்ற அறிவுலக மேதை ஆவார். என்னைப் போன்ற எத்தனையோ பேரை அவர் வளர்த்துவிட்டுச் சென்றுள்ளார்” என ஈழத்து எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது ‘நினைவின் அலைகள்’ என்னுமநூலில் பதிவு செய்துள்ளார்.
அ.ந.கந்தசாமி தமது நாற்பத்து நான்காவது வயதில் 14.02.1968 அன்று காலமானார்.
அ.ந.கந்தசாமி புதுமைச் சமுதாயத்தைக் காணத் துடித்த புதுமையாளனாக விளங்கினார். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகப் போராடினார். சுரண்டலை ஒழிக்கவும், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும் தமது இறுதி மூச்சுள்ளவரை போராடினார்.
- பி.தயாளன்