kannagiதமிழகத்திலும் கேரளத்திலும் கண்ணகி தொடர்பாகக் கிடைக்கின்ற கதைகளில் பொதுவான தன்மை உண்டு. இந்தக் கதைகள் வாய்மொழியாகவும் அச்சுப்புத்தகமாகவும் ஏட்டு வடிவாகவும் உள்ளன. இவற்றில் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரக் கதையின் மூலக்கூறுகளைக் காண முடியும். இவை இவற்றின் பொதுத்தன்மை. இதைக் கருதுகோளாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதுவே கேரளக் கண்ணகி வழிபாட்டு பழமையைக் காட்டும்.

புகழேந்தி

தமிழகத்திலும் கேரளத்திலும் காணப்படும், வழக்கில் உள்ளதும், வாய் மொழியாகப் பேசப்பட்டதுமான கண்ணகி கதைகளில் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தது புகழேந்திப் புலவரின் பேரில் உள்ள கோவலன் கதை. இக்கதையின் செல்வாக்கு ஆழமாய் உடுருவி இருக்கிறது.

தமிழ் அம்மானைப் பாடல்களில் புகழேந்திப் புலவரின் பேரில் உள்ளவை அதிகம். இந்தப் புகழேந்தி நளவெண்பா பாடிய புகழேந்தி அல்லர். இவர் பேரில் மகாபாரதக்கதை தொடர்பாக 13 அம்மானைப் பாடல்கள் உள்ளன. இவை தவிர கோவிலன் கதை உட்பட 12க்கு மேற்பட்ட வேறு அம்மானைகளும் உள்ளன.

தமிழகக் கதைப் பாடல்கள் பற்றி விரிவான நூல் எழுதிய மு.அருணாசலம், அட்டாவதானம் வீராசாமிச் செட்டியாரே அம்மானைப் பதிப்புகளில் புகழேந்திப் புலவரின் பெயர்வரக் காரணமாய் இருந்திருக்கிறார் என்கிறார். வீராசாமிச் செட்டியார் தம் காலத்தில் வழங்கிய வாய்மொழிக் கதைகளைப் புகழேந்திப் புலவரின் பெயரில் சேர்த்துச் சொன்ன தகவலை BRN Sons போன்ற பதிப்பாளர்கள் ஆதாரமாக ஏற்றுக் கொண்டனர்.

கோவிலன் கதையின் காலம்

புகழேந்திப்புலவர் பேரில் உள்ள அம்மானை வரிசைப் பாடல்களில் கோவிலன் கதை காலத்தால் முற்பட்டது. இது 3184 வரிகளைக் கொண்டது. 1894ஆம் ஆண்டு முதல் பதிப்பு வந்தது. பின் எத்தனையோ பதிப்புகள் வந்துவிட்டன. (பி.இ.எண் 7) ப.எண். 152 பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை இக்கதைப் பாடலின் ஓலைச் சுவடியைத் தென்திருவிதாங்கூரிலிருந்து பெற்றிருக்கிறார். இந்த ஏடு-1700 அளவில் பிரதி செய்யப்பட்டிருக்கலாம் என்பது அவரது ஊகம். எனவே புகழேந்திப் புலவர் பேரில் உள்ள கோவிலன் கதை 1700க்கு முன்பே வழக்கில் இருந்தது என்று கொள்ளலாம், (எஸ். வையாபுரிப் பிள்ளை இலக்கிய மணிமாலை 1964 - ப168).

புகழேந்தியின் செல்வாக்கு

தமிழில் 17க்கும் மேற்பட்ட கூத்து நாடகவடிவங்கள் உள்ளன. இவை படிப்பதற்கும் நடிப்பதற்கும் எழுதப்பட்டவை. உரைநடை நாடகங்கள் 1933ல் திரைப்படமாகி விட்டது. அதன் பின் 3 திரைப்படங்கள் வந்துவிட்டன. கண்ணகி கதையைக் கதைப் பாடல் வடிவில் 12 பேர்கள் எழுதியுள்ளனர். இவை பிற்காலத்தவை (பி.இ.எண் 8) ப.எண் 153. கேரளத்தில் தமிழ் மொழியிலமைந்த 5 கோவிலன் கதைகள் கிடைத்துள்ளன. மலையாளத்தில் அமைந்த 11 கதைகளைச் சேகரித்துள்ளனர் (பி.இ.எண் 9) ப.எண்.154.

இந்த வடிவங்கள் எல்லாவற்றையும் ஒரே போக்கில் வைத்து ஆராய்ந்தால் இவற்றின் மூலம் புகழேந்திப் புலவரின் கோவிலன் கதை என்பதை ஊசிக்க முடியும்.

கோவிலன் கதை பதிப்பு

புகழேந்திப் புலவர் பேரில் உள்ள கோவிலன் கதைப்பாடலை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பதிப்பித்துள்ளனர். இவற்ற¤ன் மொத்தக் கதையமைப்பில் வேறுபாடில்லை. ஆனை கண்ணியப்ப நாயக்கர் பதிப்பில் (1908) பின்இணைப்பில் வட்டபுரியம்மன் என்னும் காளி பாட்டு (பி.இ.எண் 10) ப.எண் 155 என்ற பாடலும் உள்ளது.

இந்த அம்மானைப் பாடலில் காளி கண்ணகியாகப் பிறந்தாள் என்றும் அவள் பாண்டியனைப் பழிவாங்கிய பின் உலகெங்கும் கோவில் கொள்ளப்போனாள் என்றும் அவள் மாரியம்மன் பகவதி எனப்பெயர் பெற்றாள் என்றும் உள்ளது. அம்மானைப் பாடல்களும் பழைய பாடல்களும் கண்ணகியைக் காளி, பகவதி என்னும் சொற்களால் குறிக்கின்றன. ஒரு கூத்து நாடகம் பகவதியை மலையாள பகவதி எனக் குறிப்பிடுகிறது.

நாட்டார் தெய்வ நிலைப்பாடு

கண்ணகி வழிபாடு பெற்றலின் அவள் தொடர்பான செய்திகள் வாய் மொழியாகப் பரவி­யிருக்கலாம். ஒரு நாட்டார் தெய்வம் ஏதோ காரணத்தில் குறிப்பிட்ட இடத்தில் வழிபாடு பெறுவதற்குப் பல காரணங்கள் உண்டு. வெப்புநோய், செழிப்பு காரணமாக வழிபாடு பெறும் பெண் தெய்வங்கள் பற்றிய செய்திகள் பயணிகளாலும். குடிபெயர்ந்து செல்பவராலும், வணிகர்களாலும் பரவும்; இப்படிப் பரவும் தெய்வங்கள் கோவில் கொள்ளுவதற்கும் காரணங்கள் உண்டு. இதை பேரா.தெ.லூர்து ஒரு கருதுகோளாகவே கூறுகிறார். (1986 ப.24).

கதாபாத்திரங்கள்

சிலப்பதிகாரத்தில் இல்லாத கதாபாத்திரங்கள் புகழேந்திப் புலவரின் அம்மானையில் வருகின்றன. சில பெயர் மாற்றங்களுடன் உள்ளன. இவை ஏற்கெனவே வாய்மொழி மரபில் வழக்கில் இருந்திருக்கலாம். வஞ்சிக்காண்ட நிகழ்வு புகழேந்திப் புலவர் அம்மானையில் இல்லை; கேரள மரபுக் கண்ணகிக் கதைகளிலும் இல்லை. மேலும் கவுந்தியடிகளின் பாத்திரமும் அம்மானையிலும் வாய்மொழி மரபிலும் இல்லை. அம்மானையில் உள்ள பாத்திரங்கள் வருமாறு:

மாசாத்துவான்                    மாச்சோட்டன்

மாதவி                                         மாதகி

மாதவி                                         ஆச்சி

சித்திராவதி                            வசந்தமாலை

கோவலனின் தாய்           வர்ணமாலை

பாண்டியனின் மனைவி                கோவிலங்கி

கண்ணகி                                  கர்ணகி (கோவிலங்கியின் மகள், மாநாய்க்கனின் வளர்ப்பு மகள்)

பொற்கொல்லன்                                   வஞ்சிப்பத்தன்

கோவலனைக் கொலை செய்யும் ஆள்                       மழுவரசன்

பொற்கொல்லனின் மக்கள்                                         சுந்தரலிங்கம் சோமலிங்கம்

சிலப்பதிகாரம் உவேசாவின் காலத்திலேயே தமிழ்ப் புலவர்களிடம் நன்கு அறியப்பட்ட காப்பியமாய் இருக்கவில்லை, அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஒரு ஊரில் சைவகுரு ஒருவர், சிலப்பதிகாரத்தை சிறப்பதிகாரம் என்று உச்சரித்தார். 1880ல் அச்சிடப்பட்ட சிலப்பதிகாரம் புகார¢ காண்டத்தில் முன் அட்டையில் சேரமான் பெருமாணாயனார் இயற்றிய சிலப்பதிகாரம் என்றிருந்தது.

உவேசா தமிழகமெங்கும் தேடி அலைந்து 22 சிலப்பதிகார ஏட்டுப் பிரதிகளே சேகரித்திருக்கிறார். இவற்றில் உரையுடன் கூடிய பிரதிகள் 14 மட்டும்தான் ஆக 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலும் கேரளத்திலும் அறியப்பட்ட கண்ணகி கதையின் மூலப்பனுவல் தமிழ்ப்புலவர்களாலேயே அறியப்படவில்லை என்பது முக்கியமான விஷயம். இக்கதை பல்வேறு வடிவங்களைப் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

கேரளத்துக் கதைகள்

கேரளத்தில் கண்ணகி கதை தொடர்பான கதைகளில் கோவலன் கர்ணகி கதை 1979ல் வந்தது. (நடராஜன் பதிப்பு பி.இ. 11) மன்னான் சாதியிடம் வழக்கில் உள்ள கதையை டாக்டர் நகீம்தீன் பதிப்பித்துள்ளார் (1992 பி.இ.12). நிர்மலா தேவி கோவிலன் கதை என்ற ஒரு வடிவத்தை வெளி­யிட்டுள்ளார் (2003 பி.இ.13). கண்ணகி கதை என்றும் பேரில் ஏட்டுப் பிரதி ஒன்று கேரளப் பல்கலைக்கழகக் சுவடிப்புலத்தில் உள்ளது. கன்னியாகுமரி கேரள எல்லையில் உள்ள குலசேகரம் ஊரை அடுத்த மங்கலம் என்னும் குக்கிராமத்தில் உள்ள காளி கோவில் விழாவில் கண்ணகி கதை பாடப்படும் வழக்கம் 70களில் இருந்தது. இது வாய் மொழி வடிவம்.

கேரளத்தில் மலையாளத்தில் தோற்றம் பாட்டு (பி.இ.14) ப.எண்.192 சிலம்பு கதை (பி.இ.15) ப.எண்.194 கோயிலாண்டி கதை (பி.இ.எண் 16) ப.எண்.195 ஸ்ரீ குறும்பா கதை (பி.இ. 17) ப.எண். 197) ஆவியர் பாட்டு மரக்கால் பாட்டு, ஏட்டப்பாடி இருளரின் கதை, நல்லம்மா கதை, பாலக்காடு சித்தூர் வண்ணாரிடம் வழங்கும் கதை கொடுங்கல்லூரில் வழங்கும் கதை திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோவிலில் பாடப்படும் வில்லுப்பாட்டு கதை மணிமங்கலம், தோற்றப்பாட்டு கதை என 12க்குமேல் கதை வடிவங்கள் உள்ளன.

சில செய்திகள்

புகழேந்திப் புலவரின் கோவிலன் கதையில் வரும் சில செய்திகள் கேரள மரபிலும் வருகின்றன. இவற்றில் குறிப்பாக,

கோவிலன் குடும்பத்தார் செட்டி சாதியினர் காளி பாண்டியனின் மகள் பாண்யள். காளி கோவில்களின் கதவை அடைக்கக்கூறுதல் பாண்டிமாதேவியும் குற்றவாளி கண்ணகி வட்டபுரி அம்மானாக அவதாரம் பெறுதல்

ஆக இப்படியான செய்திகள்-வாய்மொழி மரபிலிருந்து கேரளத்திற்கும் புகழேந்திப்புலவர் அம்மாளைக்கும் சென்றன என்று தெரிகிறது.

கோவலன் செட்டியார்

புகழேந்திப் புலவர் அம்மானையில் கோவிலன் குடும்பத்தார் செட்டி சாதியினர் என்று குறிக்கப்படுகின்றனர். இவர்கள் பூர்வீகமாய் காவிரிப்பூம்பட்டிணத்தினர். தமிழக வாய்மொழி மரபிலும் கோவலன் செட்டியார் எனவே குறிக்கப்படுகிறான்.

மாச்சோட்டன் மரபில் வந்த முத்துச்செட்டி (மாநாய்க்கன்) இவனது மகன் (கோவலன் செட்டி) 16 வயதில் கொலைப்பட வேண்டும் என்ற காமதேனுவின் சாபம் உண்டு. திருவனத்தபுரம் ஆற்றுக்கால் கோவில் சுற்று மதில் சிற்பங்கள் கண்ணகி கதை தொடர்பானவை. இவற்றில் செட்டி சமூகத் தொடர்புச் சிற்பங்கள் உண்டு. வட மலபார் கண்ணகிக் கோவில்களுடன் செட்டியார்களுக்குத் தொடர்பு உண்டு என்பதும் கேரளக் தோல் பாவைக் கூத்தை நிகழ்த்திய ஆரம்பகாலக் கலைஞர்கள் செட்டிசாதியினர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. (பி.இ.எண் 18) ப.எண் 199.

செட்டி சாதியினர் பூம்புகாரிலிருந்து குடிபெயர்ந்த போது கண்ணகி கதையையும் கூடவே கொண்டு சென்றிருக்கிறார்கள். இது பற்றிய செய்திகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இப்படி இவர்கள் குடிபெயர்ந்ததற்கு பூவந்திச் சோழனுடன் மணவுறவு காரணமாக ஏற்பட்ட பூசல் என்ற ஒரு கதை உண்டு. (பி.இ.எண் 11 ப.எண் 520).

காவிரிப்பூம் பட்டிணத்திலிருந்து குடிபெயர்ந்த செட்டிகள் அரியூர் பட்டிணத்தில் குடியேறினர். இவர்களில் சிலர் மலையாள தேசத்திற்குச் சென்றனர். இவர்கள் கண்ணகியையும் உறவினர்களாகச் சொல்லிக் கொண்டனர்.2 கேரளத்துக்குச் சென்ற நகரத்தார் செட்டிகளுடன் தமிழகச் செட்டிகள் உறவை முறித்துக் கொண்டனர். (ராமநாதன் செட்டியார் 2013, ப.9) இப்படியாக கண்ணகி கதை கேரளத்துக்குச் சென்றது.

கண்ணகி பாண்டியனின் மகள்

சிலப்பதிகாரம் தவிர தமிழகத்திலும் கேரளத்திலும் வழங்கும் வாய்மொழி மரபிலும் எழுத்து மரபிலும் கண்ணகி பாண்டியனின் மகள் என்னும் கதை பொதுவாக வழங்குகிறது. கண்ணகி பாண்டியனின் மகளாகப் பிறப்பதற்கும் ஒரு காரணக்கதை உண்டு.

பாண்டியன் ஒருவன் ஏதோ காரணத்தால் தன் தலைநகர் மதுரையின் எல்லையில் உள்ள காளிகோவிலின் கதவை அடைக்கச் சொல்லுகிறான். அக்கோவிலில் வழிபாடு செய்து விளக்கேற்றுபவர் தண்டிக்கப்படுவார் என்று ஆணை இடுகிறான். இந்த வழமை தெரியாத எண்ணெய் வாணியன் ஒருவன் காளி கோவிலில் விளக்கேற்றுகிறான், இதை அறிந்த பாண்டியன் வாணியனைக் கொல்ல உத்திரவு இடுகிறான்.

வாணியன் கொலைப்படுகிறான். அப்போது காளி வாணியனிடம் பாண்டியனின் மகளாக நான் பிறந்து உன் கொலைக்குப் பழிவாங்குவேன் என்கிறான்.

பாண்டியன் பிள்ளைவரம் வேண்டும் என்று காட்டில் தவம் செய்கிறான். அவன் மனைவி கோவிலாங்கி தவமிருந்தாள். மதுரை சொக்கலிங்கம் காளியின் உயிரை எலுமிச்சம் பழமாக மாற்றி பாண்டியன் மனைவியிடம் கொடுத்தான். அவள் அதை உண்டு கர்ப்பமானாள், பத்தாம் மாதத்தில் கண்ணகி வலது காலில் செஞ்சிலம்பும் இடது கையில் செப்பேடுமாகப் பாண்டிமாதேவியின் கன்னம் வழிப்பிறக்கிறாள். (புகழேந்திப்புலவர் கோவிலன் கதை பக் 10).

பிறந்த குழந்தை கொடி சுத்திப் பிறந்ததால் வீட்டிற்கு ஆகாதென்று சோதிடர் கூறினார்.3 அதனால் குழந்தையைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விடுகின்றனர். ஆற்றில் மிதந்து செல்லும் குழந்தையை மாநாய்க்கன் எடுத்து வளர்க்கிறான். அவளைக் கோவலனுக்கு மணம் செய்து வைக்கிறான். கண்ணகி காளியின் அம்சம் ஆதலால் கோவலனுடன் உடலுறவு வைக்கவில்லை.

மன்னான் கதையில்

பாண்டியன் காளிகோவிலின் கதவை அடைத்தது. காளி பாண்டியனுக்கு பிறந்தது ஆகிய செய்திகள் கேரளப் பழங்குடியினரான மன்னான் என்பவர்களின் வாய்மொழி மரபுகதையிலும் உள்ளது. (டாக்டர் நசீம்தீன் பதிப்பு கோவலன் சரித்திரம் 1992) வர்ணமாலை என்பவள் தவமிருந்து ஒரு பெண் குழந்தை பெறுகிறாள். இதே நேரம் பாண்டியன் குழந்தைக்காகத் தவமிருக்கிறான். குழந்தை பிறக்காததால் காளி கோவிலில் விளக்கேற்ற தடை விதிக்கிறான். இதை மீறி கம்மாளன் ஒருவன் காளி கோவிலில் விளக்கேற்றுகிறான். அதனால் பாண்டியனின் காவலன் கம்மாளனை வெட்டுகிறான்.4 இதனால் காளி பாண்டியனின் மகனாகப் பிறந்து அரசனைப் பழி வாங்குகிறான் (டாக்டர் நசீம்தீன் 1992 ப.59).

கேரள வாய்மொழி மரபில்

கண்ணகி தோற்றம் பாட்டில், தென் கொல்லத்தில் நாராயணன் என்னும் அரசன் இருந்தான் என்றும். இவன் பாண்டிய வம்சத்தினன் என்றும், இவனது மகன் காளியின் அம்சமுடையவன் என்றும் செய்திகள் வருகின்றன. ஸ்ரீ குறும்பா கதையிலும் இதே செய்தி வருகிறது. தென் கேரளத்தில் கிடைத்துள்ள கண்ணகி ஏடு பாண்டியனின் மனைவி கோப்புளாங்கியின் வயிற்றில் காளியின் அம்சமாக கண்ணகி பிறந்தாள் எனக் கூறும். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மங்கலம் கோவில் கல்வெட்டு ‘பாண்டியனார் பெற்றெடுத்த கண்ணகியே தாலேலோ’ எனக்கூறும்.

அம்பாப்பாட்டில்

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் கண்ணகி கதை பற்றிய செய்திகள் வாய்மொழியாகவும், பாடல் வடிவிலும் உள்ளன. இவற்றில் கண்ணகி மாரியம்மனாகக் கொள்ளப்படுகிறாள். கடல் மக்களின் அம்பாப்பாடலில் கண்ணகி மாதாவே காப்பாற்று தாயே என வரம் கேட்பதுண்டு. இங்கும் கண்ணகி பாண்டியர் குலத்தவளாகக் கருதப்படுகிறாள். காளி கோவிலில் கதவடைத்த செய்தி அம்பாப்பாடலிலும் வருகிறது.

சிலம்பின் மூலம்

கண்ணகி கதை தொடர்பான,

  1. காளி கோவில் கதவைப் பாண்டியன் அடைக்குமாறு உத்தரவு இடுதல்
  2. பாண்டியன் மகளாகக் காளி பிறத்தல் அல்லது அம்சமாக இருத்தல்
  3. கண்ணகி காளியாக/துர்க்கையாக உருவகிக்கப்படுதல்

என்னும் செய்திகள் தமிழ். மலையாள மரபில் உள்ளன. இச்செய்திகள் சிலப்பதிகார மூலத்திலிருந்து உருவாயின என ஊகிக்க முடியும்.

பாண்டியன் காளிகோவிலின் கதவை அடைக்கச் செய்த செயலுக்கு சிலப்பதிகாரம் கட்டுரைக்காதையில் வரும் (54-125-107-112) ஒரு நிகழ்வு காரணம். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இப்பகுதியில் வரும் ஐயை என்ற தெய்வத்தை துர்க்கை, கொற்றவை என்று கூறுகின்றனர். (சோமசுந்தரனார், மதுரைக் காண்டம் ப.323, வேங்கட சாமிநாட்டார் 1943 ப.481).

ஐயை கோவில் மதுரையில் உள்ள துர்க்கை கோவில் என்றும் சிவன் கலையமர் செல்வி என்றும் வரும் அரும்பத உரையாசிரியர் கூறுகிறார். (உ.வே.சா. 1960 ப.502, 311)

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எடுக்கிறான். இக்கோவிலுக்கு தேவந்தி முதலியோர் வருகின்றனர். கண்ணகி தெய்வமாக வந்து எல்லோரையும் வாழ்த்துகிறாள். (சிலப்பதிகாரம் வாழ்த்துக்கதை பாடல் 10).

தென்னவன் தீதிலன்; தேவர்கோன் தன் கோவில்

நல்விருந்து ஆயினான்; ஞானவள்தன் மகள்

வௌ¢வேலன் குன்றில் விளையாட்டு யானகலேன்

என்னோடும் தொழியிர் எல்லோரும் வம்மெலாம்

என்பது அப்பகுதி.

இப்பகுதிக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் ‘முன் மானிட யாக்கையில் கொண்ட சிவப்பறித் தெய்வ யாக்கை கொண்ட சிலப்பதிகாரத் தெய்வ யாக்கை பெறுதற்குக் காரணமாயினான் என்பது பற்றி நான் அவன் மகள் என்றாள்’ என்கிறார். (உ.வே.சா 1960 ப.573) பெருமழைப் புலவரும் ‘... யான் இப்போது அப்பாண்டியன் காரணமாக தெய்வப் பிறப்பு எய்தினமையால் அவனுடைய மகளாவேன்.’ என்கிறார் (சிலப்.வஞ்சி.ப.169).

சாபம் கொடுத்தல் முதலியன

முன் குறித்த இரு செய்திகள் தவிர புகழேந்திப் புலவரின் அம்மானையில் உள்ள வேறு செய்திகளும் கேரள வாய்மொழி மரபிலும் எழுத்து வடிவிலும் உள்ளன. இவை

  1. கண்ணகி திருடர்களுக்குச் சாபம் கொடுத்தல்
  2. பாண்டிமாதேவி குற்றவாளி
  3. கோவலன் தானே மாய்த்துக்கொள்ளுதல்
  4. மாதரியின் வீட்டை எழுப்பியது
  5. பொற்கொல்லன் குடலை உருவியது
  6. வட்டபுரியம்மனாக மாறுதல் ஆகியவற்றைக் கூறலாம்.

புகழேந்திப் புலவர் அம்மானையில் கண்ணகி சாபம் கொடுக்கும் நிகழ்ச்சி வருகிறது. கோவலனும் கண்ணகியும் காட்டுவழி மதுரைக்குச் செல்லுகின்றனர். ஒரு இடத்தில் கோவலன் அவளைத் தனியே விட்டுவிட்டு தண்ணீர் கொண்டுவரச் செல்லுகிறான். அப்போது ஏழு திருடர்கள் அவளை வழிமறிக்கின்றனர். அவளது மங்கலநாணைக் கழற்றுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். கண்ணகி அவர்களைக் குத்துக்கல்லாகுமாறு சாபமிடுகிறாள். இந்த நேரத்தில் அங்குவந்த கோவலன் நடந்ததை அறிந்து அவர்களை மன்னித்து மறுபடியும் மனிதர்களாக்கி விமோசனம் அனிக்கக் கேட்கிறான். அவளும் அப்படியே செய்கிறாள். இது புகழேந்திப்புலவர் அம்மானையில் ஒரு நிகழ்ச்சி (பக் 5,5,56)5

இதே நிகழ்ச்சி தென் திருவிதாங்கூர் குலசேகரம் மங்கலம் காளி கோவில் விழாவில் பாடப்படும் வில்லுப் பாட்டு கதையிலும் வருகிறது.6 வடகேரளக் கதைகளில் இந்த நிகழ்ச்சி இல்லை.

சிலப்பதிகாரத்தில் நாடுகாண் கதையில் (வரி 2:14-215) கண்ணகியையும் கோவலனையும் பார்த்து வம்பப்பரத்தனும் வறுமொழியானனும் கிண்டலாகப் பேசுவது கண்டு கவுந்தியடிகள் சாபம் கொடுப்பதான நிகழ்ச்சி வருகிறது. இதே செய்தி புகழேந்தியிடம் நாட்டார் தன்மையுடன் மாறுதல் பெற்றிருக்க வேண்டும்.

பாண்டிமாதேவி கோவலனுக்காக இரங்குவதும். அதனால் பாண்டியன் அவளைச் சந்தேகப்படுவதுமான நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் இல்லாதது, புகழேந்திப்புலவர் அம்மானையில் வருகிறது. கோவலன் அநீதியாகக் கொல்லப்படப் போகிறான் என உணர்ந்த கோவலனின் மனைவி கோவிலங்கி, கோவலன் ராஜ வீதியில் கைதியாய் செல்லப்படுவதைக் கண்டு ‘பார்த்து அழலுற்றாள் ராஜகன்னி’ இதனால் பாண்டியன் கோபப்படுகிறான்(பக் 74-76). இதே நிகழ்ச்சி தென்கேரளத்தில் கிடைத்த கதைப்பாடலிலும் வருகிறது (நடராஜன் 1970 ப.64).

கேரள மன்னான் பழங்குடி மக்களிடம் வழங்கும் கோவலன் கதையிலும் இந்த நிகழ்ச்சி வருகிறது. டாக்டர் நசீம்தீன் 1992 பக் 60-67) ஸ்ரீ குறும்பா கதையில் தட்டான் கோவலனின் அழகில் பாண்டிமாதேவி மயங்கிவிட்டாள் என்கிறான். இது போன்ற செய்தி வடகேரளக் கதைகளில் வருகிறது.

பொதுவான சில செய்திகள்

புகழேந்தி தன் சமகால நாட்டார் வழக்காற்றுக் கதைகளுக்கேற்ப கோவிலன் கதையை மாற்ற¤ இருக்கிறார். இவை கேரளக் கதைகளில் சில மாறுபாடுகளுடன் வருகின்றன.

கோவலனைக் கொலையாளிகள் வெட்டுகின்றனர். ஆனால் அவன் கழுத்தில் பூமாலை விழுகிறது. கொலையாளிகள் அஞ்சி ஓடுகின்றனர். உடனே கோவலன் வாளை எடுத்துத் தன் மீது பாய்ச்சிக்கொள்ளுகிறான். இது நாட்டார் கதைப் பண்பின் ஒரு கூறு. தன்னேரில்லாத காவியத் தலைவனை யாரும் அழிக்க முடியாது. அவனே விரும்பினால் மட்டுமே அது முடியும், இது போன்ற நிகழ்ச்சி கான்சாகிப் சண்டை, மதுரை வீரன் கதை, தேவசகாயம் பிள்ளை கதை போன்றவற்றில் வருகிறது.

கோவலன் இறந்த செய்தியைக் கண்ணகியிடம் சொல்லாமல் மறைக்கிறாள் இடைக்குலப்பெண். இதனால் கண்ணகி அவள் வீட்டை எரிக்கிறார். பின் இடைச்சி கண்ணகியைப் பணிந்து தான் அப்படி மறைத்ததன் காரணம் என்ன என்பதை விளக்கியபின் அவளது வீட்டை எழுப்பிக் கொடுக்கிறார். (கோவிலன் கதை ப.83). இது போன்ற நிகழ்ச்சி மத்திய கேரளக் கண்ணகி கதையிலும் குலசேகரம் வில்லுப்பாட்டிலும் வருகிறது.

கண்ணகி பொற்கொல்லனைக் கொன்று அவனது குடலை உருவி மாலையாகப் போடுவதான நிகழ்ச்சியைப் புகழேந்திப் புலவரின் அம்மானை வருணிக்கிறது. (கோவிலன் கதை பக்.98, 99) இதைத் தென் கேரளத் தமிழ் கதைப் பாடல் ஒன்று கூறும் (நடராஜன் ப.ஆ.1979 ப 144).

வட்டபுரியம்மன்

புகழேந்திப் புலவர் பேரில் உள்ள கோவிலன் கதையில் கண்ணகி வட்டபுரி அம்மனாக மாறிய செய்தி வருகிறது. (ப. 103) கோவலன், மாதவி ஆசிய இருவரின் உடல்களை எரித்துக் கங்கையில் கரைத்த பிறகு கண்ணகி திருவொற்றியூர் வருகிறாள். அங்கே தியாகராஜனைக் (சிவன்) காண்கிறாள். குடிக்க நீர் கேட்கிறாள். அவர் ஒரு சுனையைக் காட்டுகிறார். அவள் சுனையில் இறங்குகிறாள். சிவன் சுனையை மூடுகிறார். அவள் வேறு இடத்தில் முளைக்கிறாள். அங்கும் மூடுகிறார் சிவன், அவள் வேறு இடத்தில் தோன்றி வட்டபுரி அம்மனாகப் பெயர் பெறுகிறாள்.

திருவொற்றியூர் சிவன் கோவிலில் துர்காதேவியாக இவள் வழிபாடு பெறுகிறாள். என்றாலும் பழைய சடங்கின் எச்சம் உண்டு. 15 நாள் விழாவின் இறுதியில் ஓலைப்பந்தலை எரிக்கும் நிகழ்ச்சி உண்டு. இது மதுரையை எரித்ததன் அடையாளம்.

முந்திய காலங்களில் கம்மாள சாதி இளைஞன் ஒருவனை இங்கு பலி கொடுத்தார்களாம். பின் மிருகபலி வந்தது. இக்கோவில் சாசனம் ஒன்று இந்தத் துர்க்கையை 'திருவட்டப்பிளை பிடாளியார்' எனக்கூறும் (மு.ராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி 1960 ப.239)7

தமிழக நாட்டார் மரபில் கண்ணகியைப் பகவதி என்று கூறும் மரபு உண்டு. கண்ணகி பசும்பாலை தெளித்து மதுரையை எரித்துவிட்டு கேரளத்தில் பகவதியாக நிலைபெற்றாள். (இராமசாமிக் கோன் கண்ணகி பகவதி கூத்து நாடகம் மதுரை, 1932).

அடிக்குறிப்புகள்

1. இந்தக் கூத்து நாடகத்தை உடையார்பிள்ளை என்பவர் பதிப்பித்திருக்கிறார் (1925) பதிப்பாளர் ராமசாமிக்கோன் இதே பதிப்பு 1928ல் இரண்டு பாகங்களாக வந்திருக்கிறது. இரண்டிலும் வேறுபாடில்லை. 1929ஆம் பதிப்பில் திருவிதாங்கூரில் நிலைகொண்ட மலையாள பகவதி கொடுங்கொல்லூரில் கோவில் கொண்ட மலையாளத்துக் காளி என்ற வர்ணனை இறுதிப் பகுதியில் வருகிறது. இது தனிப் பாடலாகப் பிரசுரமாயிருக்கிறது. (எம்.இ.எம். முத்துமலையம்மன் தெரு 1929 மதுரை) இச்¢சிறு பிரசுரத்தில் கண்ணகி கேரளத்தில் பரவலாகக் குடிகொண்டவள் என்றும் வருகிறது.

இந்நூலைப் பதிப்பித்த உடையார்பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் கடுக்கரை ஊரினர். (1875-1962) இவர் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியில் இருந்தவர். இவர் கோவலன் கூத்து உட்பட 16க்கு மேற்பட்ட கூத்து நாடகங்களை வெளியிட்டிருக்கிறார்.

2. சிலப்பதிகாரம் குறிப்பிடும் பொலந்தெரி மாக்கள் (செட்டி) 14-20 அரட்டன் செட்டி என்ற பெயரும் மணிமேகலை குறிப்பிடும் சந்திதத்தன் செட்டி என்ற பெயரும் செட்டி சமூகம் பழமையானது என்பதைக் காட்டும்.

3. இது நாட்டார் நம்பிக்கை கர்ணன், வள்ளுவன், மதுரைவீரன் ஆகியோர் இப்படிப் பிறந்தவர்கள் என்பதைக் கதைப்பாடல்கள் கூறுகின்றன.

4. காளிகோயிலில் போற சனங்களை வீசிப்போடணும் பாண்டியராசனே அப்படியே ஆகட்டும் பாண்டியராசன்சாமி பாண்டியராசன் ஏழுபேர் சாலவாணிய ஊர்த்தலைவர் எல்லாம் கன்னிக் காவுந்திமாய்க வைத்துவிட்டோ
-டாக்டர் நசீம்தீன் 1992 கோவலன் சரித்திரம் ப.55

5. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நல்லதங்காள் கதையிலும் வருகிறது. நல்லதங்காள் ஒரு குழந்தைகளுடன் காட்டு வழிச் செல்லும்போது ஏழு திருடர்கள் அவளை வழிமறிக்கின்றனர். அவளது மாங்கல்யத்தைக் கேட்கின்றனர். நல்லதங்காள் அவர்களைக் குத்துக்கல்லாக்குமாறு சபிக்கிறாள். அவளது மூத்த மகளின் வேண்டுகோள்படி திருடன்களுக்குச் சாபவிமோசனம் கொடுக்கிறாள்.

6. கண்ணகி திருடர்களை உப்பு பரதவர்களாகவும் ஒட்டகர்களாகவும் ஆகுமாறு சாபங்கொடுத்தாள் என்றும் கதை குலசேகரம் வில்லுப்பாட்டில் பாடப்பட்டது.

7. தமிழக நாட்டார் மரபில் கண்ணகியை மலையாள பகவதியாகக் கூறுவது உண்டு.

மலையாளத்து எல்லையிலே
மயிலளையள் வந்திருந்து
பகவதியாள் என்று சொல்ல
பட்சமுடன் பேரும் பெற்று
வட்டபுரி அம்ம என்று
வடக்குவாய் செல்வி என்றும்
கண்ணகி தேவி என்றும்
காச்சக்கார நீல என்றும்
கூடலைமாடன் கதை ஏடு

உதவிய நூல்கள்

1. வையாபுரி பிள்ளை (1968) இலக்கியமணி மாலை, தமிழ்ப்புத்தகாலயம் சென்னை
2. புகழேந்திப்புலவர் (1962) கோவிலன் கதை, ஸ்ரீ மகள் கம்பெனி, சென்னை
3. நடராஜன் தி(1979) கோவலன் கண்ணகி கதை, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை
4. இராகலையங்கார் மு (1964) ஆராய்ச்சித் தொகுதி, பாரி நிலையம், சென்னை
5. டாக்டர் நசீம்தீன் (1992) கோவலன் சரித்திரம், அன்னம், சிவகங்கை.
6. சாமிநாத அய்யர் உ.வே. (1960) சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும், சென்னை.
7. சோமசுந்தரனார் (1977) சிலப்பதிகாரம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

- அ.கா.பெருமாள்

Pin It