தமிழ்க் கல்வி என்பது பொதுவெளியில் வெறும் இலக்கண இலக்கியத்தைப் படிப்பதே என்ற நிலை இருந்தது.இந்த நிலையை மடைமாற்றம் செய்து ‘தமிழ்க்கல்வி’ என்பது தமிழ்ப் பண்பாடு தொடர்பான கல்வியாக அமைய வேண்டும் என்று செயல்பட்ட ஆளுமைகள் சிலர். அவர்களுள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் ஏறத்தாழ முப்பதாண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் வீ.அரசு முதன்மையானவர். தமிழ் இலக்கியத் துறையின் துறைத்தலைவராக அவர் பொறுப்பேற்றதும் தமிழ் முதுகலைப்படிப்பின் பெயர் “தமிழ் இலக்கியமும் பண்பாடும்” என மாற்றமடைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் கைக்கொண்ட ஆய்வு முறையின் ஊடாக தமிழ் ஆய்வு வெளியின் இடைவெளிகள் குறைந்தன.வகுப்பறைக்குச் செல்வதையே தன்னுடைய முதன்மைப் பணியாகக் கருதிச் செயல்பட்ட பேராசிரியர் அவர்கள் வகுப்பறைக்கு அப்பால் மாணவர் நலன், தமிழியல் ஆய்வு சார்ந்து செயல்பட்ட முறைமை தமிழ்ச்சூழலில் கூடுதல் கவனம் பெறுவதாக உள்ளது.

v arasu 375பொதுவாகத் தமிழ் படிக்கிற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்தைக் கொண்டவர்கள். அதனால் தமிழ் இலக்கியத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் பொருளாதாரப் பிரச்சனை இல்லாமல் ஆய்வு செய்யும் சூழலை உருவாக்கினார். அதற்காக பல்கலைக்கழக நல்கைக் குழு நடத்தும் தேர்வினை முதுகலை இரண்டாமாண்டு படிக்கிற மாணவர்கள் எழுதும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டன. அதன் விளைவாக ஆண்டுக்கு இருபது மாணவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சியும் ஏறத்தாழ பத்து மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்கான உதவித் தொகையைப் பெற்றும் வந்தனர். ஒருநிலையில் இலக்கியத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்ட நாற்பது ஆய்வாளர்களும் ஏதாவதொரு உதவித்தொகையைப் பெறும் சூழலை உருவாக்கினார்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் பிற துறைகள் அனைத்திலும் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வழங்கும் நிதியைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை விட தமிழ் இலக்கியத்துறை மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலை ஏற்பட்டது.

பேராசிரியர் அடிப்படையில் ஒரு நூல் சேகரிப்பாளர். தனக்குக் கிடைத்த ஓய்வூதியப் பணத்தில் ‘கல்மரம்’ என்ற நூலகத்தை தன்னுடைய வீட்டில் உருவாக்கினார். அந்நூலகம் அவர் சேகரித்த இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டதாக இருக்கிறது. அவரைப்போலவே அவருடைய மாணவர்கள் பலரும் நூல் சேகரிப்பாளர்களாகவும் புத்தகங்களைப் பதிப்பிக்கும் முறையை அறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

பயணங்களே வாழ்வை முழுமையாக்கும் என்ற அடிப்படையில் இலக்கியத் துறையில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ‘கங்கு’ என்ற அமைப்பின் ஊடாக குடியம், பழவேற்காடு, காஞ்சிபுரம், செங்கம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஒருநாள் பயணம் செல்லும் நடைமுறையை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆண்டுக்கு பதினைந்து நாள்கள் இந்திய சுற்றுலா செல்லும் வாய்ப்பினை உருவாக்கினார். சுற்றுலாவில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் உடன் சென்றால் மாணவர்களின் சுதந்திரம் கெட்டுப்போகும் என்ற அவரின் நிலைப்பாட்டால் முற்று முழுதாக மாணவர்களே ஒருங்கிணைத்து செல்லும் வகையில் அச்சுற்றுலா அமைந்தது. தொடர்ச்சியாக பத்தாண்டுகள் அதிக அளவில் மாணவிகள் பங்கேற்றும் சில ஆண்டுகள் பெண் ஆய்வாளர்களே ஒருங்கிணைத்தும் சென்றனர். இதன் விளைவாக அந்தமான் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இலக்கியத்துறை மாணவர்கள் பயணம் மேற்கொண்டு இந்தியாவின் நிலவியல், பன்முகத்தன்மையை அறியும் வாய்ப்பினை மாணவர்களுக்கு உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகுப்பறைச் செயல்பாடுகளுக்கு அவர் வழங்கிய அதே முக்கியத்துவத்தை கருத்தரங்குகளுக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளுக்கும் வழங்கியுள்ளார் என்பது பேராசிரியரின் தனிச்சிறப்பு. தமிழ் ஆளுமைகள் மயிலை சீனி.வேங்கடசாமி, ப.ஜீவானந்தம், சிங்காரவேலர், தந்தை பெரியார் உள்ளிட்ட பலரின் பெயரால் தமிழ் இலக்கியத்துறையில் அவரின் முன்னெடுப்பால் அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டன.இதன் காரணமாக பத்தாக இருந்த அறக்கட்டளைகள் இருபத்து நான்காக உயர்ந்தன. ஆண்டுதோறும் நடைபெற்ற ஆய்வு மாணவர்களுடைய கருத்தரங்கம், பல்வேறு தமிழ் ஆளுமைகளுடைய 100, 150, 200 ஆவது ஆண்டு நினைவுக் கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், திட்டமிடாமல் பல தமிழ் ஆளுமைகளைக்கொண்டு திடீரென நடத்தப்பட்ட சொற்பொழிவுகள் எனத் தொடர்ச்சியாக தமிழியலின் ஆகச்சிறந்தவர்களைக் கொண்டு சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. அத்தகைய சொற்பொழிவுகளால் வகுப்பறையைத் தாண்டி தமிழியலின் பல்வேறு தன்மைகளை மாணவர்கள் அறியும் வாய்ப்பு உருவானது. அவ்வகையில் ஓராண்டு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளின் அழைப்பிதழ்களைக் கொண்டே ஒரு கையேடு உருவாக்கப்பட்டது. அக்கையேடுகள் தமிழ்ச்சூழலில் பேராசிரியரின் தனித்த பங்களிப்பு, அவர் முன்னெடுத்த அரசியல் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.

தமிழ்க் கல்வி உலகளாவிய தன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பதில் பேராசிரியர் தனித்த அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார். அதன் காரணமாக சமகாலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், போர் உள்ளிட்டவற்றின் பிரக்ஞையோடு மாணவர்கள் வளரும் சூழல் துறையில் உருவானது. அதோடு பேராசிரியர் வெகுசன ஆக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்ததன் விளைவாக ‘திரைவெளி’யின் மூலம் ஆகச்சிறந்த உலகத் திரைப்படங்கள் மாதந்தோறும் திரையிடப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டன. அதைப்போல மேற்கத்திய நடைமுறைகளோடு இயங்கிவரும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்துடனான உறவும் அந்நிறுவனம் முன்னெடுக்கும் கருத்தரங்குகளில் தம் துறை மாணவர்களை பங்கேற்கச் செய்யும் நிகழ்வும் தமிழியல் குறித்த புரிதலை அடுத்த தளத்திற்குக் கொண்டுசென்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியரால் தமிழ் இலக்கியத்துறையில் முன்னெடுக்கப்பட்ட திரைவெளி, கங்கு, நூலகம், பயணம், சொற்பொழிவுகள், கலைவெளிப்பாட்டுக்கான களம் போன்ற பல்வேறு செயல்பாடுகள் இன்று பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களுக்கான சமூகப் பண்பாட்டு அரசியல் புரிதல்களுக்காக முன்னெடுக்கப்படும் கட்டாய நிகழ்வுகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பள்ளிக் கல்வித்துறையின் தமிழ்ப் பாடநூல் ஆலோசகராகச் செயல்படுவது, மாற்றுவெளி ஆய்விதழை உருவாக்கி தம் மாணவர்களையே ஆசிரியர் குழுவில் இணைத்துச் செயல்பட்டது, தமிழ் இணையக் கல்விக்கழகம் முன்னெடுத்த மின்னூல் உருவாக்கும் திட்டத்தில் தம் மாணவர்களைப் பங்கேற்கச் செய்து பல்லாயிரம் தமிழ் நூல்கள், ஆவணங்கள் மின்னுருவாக்கம் பெற துணையாய் நின்றது, கொரோனா காலத்தில் ஒன்றரை ஆண்டுகாலம் வாரந்தோறும் தம் மாணவர்களுக்கு மார்க்சிய வகுப்பெடுத்தது, வெகுசன தமிழ்ச் செய்தி ஊடகங்களில் தமிழ், தமிழர் பண்பாடு குறித்த விவாதங்களில் பங்கேற்பது, மக்கள் கல்விக் கூட்டியக்கத்தில் இணைந்து தமிழகக் கல்விச் சூழலில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் குறித்து உரையாடுவது போன்ற பல்வேறு பங்களிப்புகளைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் ஆளுமையாக பேராசிரியர் வீ.அரசு அவர்கள் இருக்கிறார்கள். பேராசிரியரின் தாக்கம் அவரிடம் பயின்ற மாணவர்களிடம் வெளிப்படுவது மிகவும் இயல்பானது. இடதுசாரி சிந்தனையோடு அவர் முன்னெடுத்த அரசியலைக் கைக்கொண்டு செயல்படும் அவரின் மாணவர்கள் அதிகம். அதனாலேயே அவரிடம் பயின்ற மாணவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள். தமிழ்க் கல்வியை பண்பாடு தொடர்பான கல்வியாக மடைமாற்றம் செய்து சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் அடுத்த தலைமுறையையும் உருவாக்கியிருக்கிறார் என்பது கவனத்திற்குரியது. தமிழ்க் கல்விச் சூழலில் பேராசிரியர் வீ.அரசு ஒரு கலகக்காரர் என்பதை அவர் மேற்கொண்ட முன்மாதிரியான பணிகள் எப்போதும் நினைவூட்டும்.

(குறிப்பு: பேராசிரியர் வீ.அரசு அவர்களின் எழுபதாம் அகவை நிறைவையொட்டி சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையில் 31.05.2024 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

- தே.சிவகணேஷ், மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர்.