செஞ்சுடர் என்னும் புனைப் பெயர் கொண்ட தோழர் துரைராஜ் ஸ்ரீராமுலு திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். திருச்சி பொன்மலை இரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் தீரமுடன் போராடிய தோழர் ஸ்ரீராமுலுவின் இளைய புதல்வர். முதல்வர் மருத்துவர் கேசவலு மதுரையின் மதிப்புமிகு ஏழைகளின் மருத்துவர். இவர்களது குடும்பமே கம்யூனிஸ்ட் குடும்பம். இக்குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நல்ல கல்வியாளர்கள். பலர் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.

senchudar s durairajதோழர் துரைராஜ் அவர்களை நான் முதன் முதலில் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் 1973-75ல் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்தபோது சந்தித்தேன். அவர் 1972-74ல் படித்தவர். எனக்கு ஒருவயது மூத்தவர். அவரும், வேதாசலம், செ.போசு, சாயுபு மரைக்காயர், இல.க.சுபாசு சந்திரபோசு, மேடையாண்டி என்று பலரும் அவருடன் படித்தவர்கள். துரைராஜ் பி.எஸ்.ஸி. தாவரவியல் ஆங்கில வழியில் படித்தவர். எனவே ஆங்கிலம் சரளமாக எழுதுவார். எங்களது முதல் சந்திப்பிலேயே அவர் எம் தோழர் என்பதை அறிந்துகொண்டேன். நான் இராமநாதபுரம் மாவட்டம் கமுதிவட்டம் நிராவி கிராமத்­திலிருந்து வந்த ஒரு கைத்தறி நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் 1960 முதல் 1975 வரை கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகச் செயல்பட்டு வந்தது. மாதம் ஒரு பொதுக்கூட்டம், தோழர்கள் கூத்தக்குடி சண்முகம், ஆ.ஆதிமுலம், எம்.வி.சுந்தரம், வருதை உலகநாதன், அருப்புக்கோட்டை கிருஷ்ணன், இராசபாளையம் ஏ.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு அரசியல் உரையும், வகுப்புகளும் எடுப்பார்கள். என் தந்தை, மைத்துனர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்கள். என் 13 வயது முதலே இவர்களது கூட்டத்தில் நான் ஆர்வமுடன் கலந்து கொண்டு அரசியல் பாடம் கற்றேன். எனவே துரைராஜின் தோழமை எனக்கு உகந்ததாயிருந்தது. நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர். எதாவது ஒருமுறை நன்றி என்று நான் சொன்னால் நவிலற்க என்று சொல்வார். சந்திக்கும் போதெல்லாம் இரண்டு விரல்களைச் சேர்த்து எனது இரண்டு விரல்களைத் தட்டி கைகுலுக்குவது போன்று பாவனை செய்வது அவரது வழக்கம்.

அவரோடு இணைந்து எம் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைக் கட்டினோம் (AISF).  சுமார் 25பேர் உறுப்பினர்கள் இருப்போம். அண்மையில் காலமான வங்கியாளரும், கலை இலக்கியச் செயல்பாட்டாளருமான தோழர் சூரியகாந்தன் எமக்கு அடுத்தவயதினர் எம்மோடு இணைந்து கொண்டவர். (1974-1976).

தோழர்.துரைராஜின் அறிமுகத்தால் மதுரை மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேலப் பெருமாள் மேஸ்திரி தெரு அலுவலகத்தின் அறிமுகம் கிடைத்தது. அடிக்கடி செல்வோம். தோழர்.தா.பா.அறந்தை.நாராயணன், ஏ.எம்.கோபு, திருப்பூர் சுப்பராயன், எஸ்.பி.ஆண்டி ஆகியோரின் அரசியல் வகுப்புகளில் இணைந்தே கலந்து கொண்டோம். தா.பாவின் உரையில் கட்டுண்ட நாகமாய் நாங்கள் மயங்கிப் போவோம்.

திட்டமிட்டபடி 1976 ஜூலையில் பேராசிரியர் நா.வா.வைச் சந்தித்து பரிந்துரைக் கடிதம் பெற்றேன். சென்னை செல்ல நினைத்ததும் துரைராஜிடம் தொடர்பு கொண்டேன். சென்னையில் ஓராண்டு தொல்லியல் பட்டயக் கல்விக்காக வருகிறேன். தற்காலிகமாகத் தங்குவதற்கு இடம் வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா எனக்கேட்டேன். அப்போது தைரியமாக வாருங்கள். கட்சித் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் தற்காலிகமாகத் தங்குவதற்கு தோழர்.RNK மூலம் ஏற்பாடு செய்யலாம் என்று உறுதியளித்தார். சொன்னது போலவே, தொல்லியல் துறையில் பட்டயப்படிப்பில் சேர்ந்தபின், தற்காலிகமாக ஒருமாத காலம் மட்டும் தங்கிக் கொள்ள தோழர் நல்லகண்ணு உதவியுடன் ஏற்பாடு செய்தார். குறிப்பிட்ட ஒருமாத காலத்தில் எனக்கு அறை கிடைக்காததால் மீண்டும் ஒருமாத காலம் நீட்டிப்பும் கிடைத்தது. அந்த இரண்டு மாதம் நான் தோழர் துரைராஜூடன் பாலன் இல்லத்திலேயே தங்கிப் பயின்று வந்தேன்.

இதன் மூலம் தான் தோழர் நல்லகண்ணு, ஆதிமூலம், ப.மாணிக்கம், து.ராஜா, ரவீந்திரதாஸ், ப.பா.மோகன் ஆகியேரின் அறிமுகம் கிடைத்தது. அந்த காலகட்டத்தில் கட்சிக்கல்வி வகுப்புகள் பல மாவட்டங்களிலிருந்து வந்த 40 தோழர்களுக்கு நடத்தப்பட்டது. தோழர்.எம்.கே, தோழர்.பூபேஷ் குப்தா ஆகியோரின் உரைகளை அங்குதான் நான் கேட்டேன். வகுப்பில் கலந்து கொண்ட தோழர்கள் இரவில் பல குழுக்களாகப் பிரிந்து அன்று பகலில் கேட்ட பாடத்தைப் பற்றிப் பலவிதமாக விவாதிப்பார்கள். நானும் அதில் கலந்துகொண்டு கேட்பேன். பெண்ணாகரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நஞ்சப்பன் அதில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர். நான் தருமபுரிக்கு பணியிடம் பெற்றுச் சென்றபோது அவரின் நட்பும், அவர் மூலம் தோழர்.தேவபேரின்பன், தோழர்.முத்து இளம்பரிதி, பேராசிரியர் A.P.பெருமாள் ஆகிய தோழர்களின் நட்பும் கிடைத்தது. நான் அரசு ஊழியனாகப் பயணித்தேன். தோழர் துரைராஜ் சிறந்த பத்திரிக்கையாளராக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார். நியூஏஜ், இந்து ஆங்கில நாளிதழ்களில் பயணித்தார். பணிநிறைவு பெறும்வரை இந்துவில் பணியாற்றினார்.

பாலன் இல்லத்தில் வாழ்ந்த நாட்களில் தோழர்.துரைராஜின் பழக்கவழக்கங்கள் மகிழ்வானவை. தோழர்.அறந்தையுடன் நகைச்சுவையாகப் பேசுவார். தோழர்.த.பா. இவரும் மதுரைக்காரர் என்பதால் அந்யோன்யமாகப் பழகுவார். பகலில் பத்திரிக்கைப் பணி. மாலையில் கட்சி அலுவலகம், தோழர் சந்திப்பு என வாழ்ந்த வசந்த காலம் அது அவருக்கு. அப்போது திருமணமும் முடிந்திருந்தது. அவ்வப்போது திருச்சி சென்று குடும்பத்தைச் சந்தித்து வருவார். ஒரு பெண் குழந்தை. கவி பாரதியின்பால் கொண்ட காதலால் தன் குழந்தைக்கு கண்ணம்மா என்று பெயர் வைத்தார். மதுரையில் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் படித்த அவர் தற்போது திருச்சி தேசிய பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். அவரது திருமணத்தில் நான் கலந்துகொண்டேன். சென்னை அடையாரில் நடந்தது திருமணம்.

நான் பணியின் காரணமாக தருமபுரி, தஞ்சாவூர், மதுரை எனப்பல ஊர்களில் வாழ்ந்தேன். எனினும் என்னோடு தொடர்பை விடாமல் இருந்தார் துரைராஜ். நான் மதுரைக்கு மாற்றலாகி வந்தபின் மீண்டும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். 2011ம் ஆண்டு ஆங்கில இந்து நாளிதழில் என்னைப் பற்றி ஒரு முழு பக்கக் கட்டுரையை நல்ல படங்களுடன் செய்தியாளர் கவிதா எழுதி வெளியிட்டார். அது வெளிவந்த மறுநாளே என்னை துரைராஜ் தொடர்பு கொண்டு பாராட்டினார். சென்னைக்கு வந்தால் தன்னைச் சந்திக்கும்படி கூறினார். மறுநாளே சென்னை செல்ல வேண்டிவந்தது. அவரை இந்து நாளிதழ் அலுவலகத்தில் சந்தித்தேன். பல தோழர்களை அறிமுகம் செய்து வைத்தார். திரு.டி.எஸ்.சுப்பிரமணியன், இலங்கைத் தமிழர் திரு.கணேசலிங்கன் ஆகியோரை அங்கு சந்தித்ததாக நினைவு. என்படம் உள்ள கட்டுரையைப் புதிதாகப் பல பிரதிகள் எடுக்கச் செய்து எனக்குக் கொடுத்தார்.

அவர் திருச்சி இந்து அலுவலகத்திற்கு மாறுதலாகி வந்தபோதும் திருச்சியில் சந்தித்தேன். அலுவலகத்திற்கும் அழைத்துச் சென்றார். அப்போது திருச்சியில் பணியாற்றிய திரு.அண்ணாமலை (மதுரை) அவர்களையும் சந்திக்க வைத்தார். மாலையில் அவர் இல்லம் சென்றோம். மனைவியையும், மகளையும், பேரக் குழந்தைகளையும் அறிமுகம் செய்தார். இரவு உணவும் அங்கேயே முடிந்தது. அவரிடமிருந்து விடைபெற்று மதுரை திரும்பினேன். அவரும் பணி ஓய்வுக்குப்பின் சில இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். அவரது மைத்துனர் திரு.மு.ப. அவர்களுடன் சேர்ந்து சில முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். எனக்குச் சில மொழிபெயர்ப்பு வேலைகளைக் கொடுப்பார். அப்படி தோழர் ‘மொகித்சென்' கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அது அவருக்கு திருப்தியாக இல்லை. தொல்லியல் தொடர்பாக ஏதேனும் கட்டுரை எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். கடந்த இரண்டாண்டு கால தீநுண்மி அவல நிலை காரணமாகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இறுதியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த இஸ்கப் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். அதன்பின் சந்திக்கவே இயலாத இடம் தேடிப் பயணித்து விட்டார்.

சிவந்த நிறம். சிரித்த முகம். ஒடிசலான தேகம். எஃகு போன்ற உள்ள உறுதி. ஜெயகாந்தனின் அபிமானி. பலமுறை போலிசின் குண்டாந்தடிகளுக்கு உள்ளாகியபோதும் கொண்ட கொள்கையில் மாறாத போராளி. அடிக்கடி முகநூலில் பதிவிட்டு வந்தார். எப்போதும் இரு கம்யூனிச இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும் என்றும், மதவாத சக்திகளுக்கு எதிரான இடதுசாரி சனநாயகச் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர். தன் எழுத்தாலும், பேச்சாலும் அதை நோக்கியே பயணித்தவர். தன் பயணத்தை முடித்துக் கொண்டார். ஆனால் அவரது குறிக்கோள் அப்படியே உள்ளது. அதை முன்னெடுத்துச் செல்வதே தோழர்கள் நமதின் எதிர்காலக் கடமை.

சொ.சாந்தலிங்கம்

Pin It