doctor jeevaடாக்டர் ஜீவா என்று பரவலாக அறியப்பட்டவர் ஈரோடு டாக்டர் வெ. ஜீவானந்தம். ஒப்பாரும் மிக்காருமில்லா கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜீவாவைப் போலவே, ஈரோட்டில் மாதக்கணக்கில் தங்கள் வீட்டில் தங்கியிருக்கப் பெற்ற ஜீவாவின் பெயரையே தன் மகனுக்கும் சூட்டினார் தந்தை தோழர் வெங்கடாசலம்.

பிறப்பில் தொடங்கி ஒட்டுமொத்த வாழ்வையுமே ஆக்கபூர்வமான ஒரு பெரும்  புரட்சிக்காரராக வாழ்ந்து சென்றுவிட்டார் டாக்டர் ஜீவா -Constructive Rebel.

டாக்டரின் தந்தை எஸ்.பி. வெங்கடாசலம், சராசரி குடும்பத்திலிருந்து வந்தவர் என்றாலும் ஈரோட்டில் வலுவான சமூக - பொருளாதார பின்புலம்கொண்ட சாதியைச் சேர்ந்தவர்.

இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கத் தொடங்கி, தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றவர். கம்யூனிஸ்ட்டாக அறியப்பட்டு அவ்வாறே கடைசி வரை வாழ்ந்தவர்.

கம்யூனிஸ்டாக செயல்பட்டுக்கொண்டே பல்வேறு வணிக முயற்சிகளிலும் ஈடுபட்டுத் தோற்றும் வென்றும் வந்த வெங்கடாசலம், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பலரையும் தன் வீட்டில் தங்கவைத்துப் பார்த்துக்கொண்டவர். இவர்கள் குடும்பத்தின் வாழ்க்கைச் சூழல் ஒருபோதும் இவற்றுக்குத் தடையாக இருக்கவில்லை.

தோழர் வெங்கடாசலம் அந்தக் காலத்திலேயே குடும்பத்தை எதிர்த்து, டாக்டரின் அம்மா - லூர்து மேரியைக் காதல் திருமணம் செய்துகொண்டார். ஒட்டுமொத்த உறவுகளும் இவர்கள் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டனர்.

டாக்டர் பிறந்தபோது தந்தையின் குடும்ப உறவுகள் ஒருவரும் பார்க்கக்கூட வரவில்லை, புறக்கணிக்கப்பட்டவராகப் பிறந்தார்.

இந்தப் புறக்கணிப்பு சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத்  தொடர்ந்திருக்கிறது. கடைசி வரையிலும்கூட இதுதொடர்பான சிக்கல்களும் சங்கடங்களும் டாக்டரை விடவில்லை.

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்பிபிஎஸ் படிக்கும்போதுதான் லேசான அரசியல் ஈடுபாடுகள் ஏற்படுகின்றன.

ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள், அரசியல் உணர்வுள்ள நண்பர்கள் நிறைய.

எம்பிபிஎஸ்ஸுக்குப் பிறகு, சென்னையில் மயக்கவியல் படித்துவிட்டு ஈரோடு வரும்போது டாக்டர்தான் மாவட்டத்தின் முதல் மயக்கவியல் படித்த மருத்துவர். ஆனால், அந்தப் படிப்பைப் பணமாக மாற்றும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை அவர்.

டாக்டரின் திருமணமும் அந்தக் காலத்தில் அவர் சார்ந்த சமூகத்தில் நினைத்தும் பார்க்க முடியாதது. சாதிவிட்டு, மதம் விட்டுத் தந்தை மணம்புரிந்துகொண்டதால் இவர்கள் குடும்பத்துக்கு எதிரான புறக்கணிப்பு தொடர்ந்துகொண்டிருக்க, டாக்டர் ஏற்கெனவே மணமாகித் தோல்வியில் முடிந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார்.

டாக்டரின் வாழ்நாள் முழுவதும் அவருடைய பணிகளுக்கு எவ்விதத் தொய்வும் நேரிடாமல், குடும்ப விஷயங்கள் பற்றியெல்லாம் டாக்டர் அக்கறை கொள்ளக்கூடிய அவசியமில்லாமல் தாங்கிக் கொண்டிருந்தவர் டாக்டரின் மனைவி இந்திரா.

முதன்முதலில் பிறந்த மகனை - சசிதரன் - அவன் பிறப்பதற்கு முன்னரே, குழந்தையில்லாத அவருடைய சகலைக்குத் தருவதாக வாக்குறுதி தந்துவிட்டு, பிறந்தவுடன் தத்துப்பிள்ளையாகத் தூக்கிக் கொடுத்தவர் டாக்டர்.

அன்றைக்கு டாக்டரின் அந்த முடிவை மனைவி இந்திரா, தாய், தந்தை உள்பட அனைவரும் ஏற்று ஆதரித்தனர். நினைத்தும் பார்க்க முடியாதது.

இரண்டாவதாகப் பிறந்த மகன் சத்யாவும் பின்னர் பிறந்த திவ்யாவும்தான் டாக்டரின் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள். இருவரையுமே டாக்டர் வீட்டுக் குழந்தைகளாக வளர்க்கவில்லை அவர்.

இருவரும் அவர்கள் விரும்பியதைப் படிக்க விட்டார். நாம் அறிந்த பெரும்பாலான டாக்டர்களின் வழக்கப்படி, தன்னுடைய மக்களையும் டாக்டராக்கிப் பார்க்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை நம்முடைய டாக்டர்.

டாக்டரின் மகன் சத்யா காதலித்தபோது, எல்லா எதிர்ப்புகளையும் பேசி சமாளித்து, டாக்டர் ஆதரவுடன் திருமணத்தை நடத்திவைத்தவர் டாக்டரின் தந்தை வெங்கடாசலம்.

டாக்டரின் குடும்பத்தில் நிறைய காதல் திருமணங்கள். டாக்டர் எப்போதும் ஊருக்கு மட்டும் உபதேசிப்பவர் அல்லர், தன்னளவிலும் மிகப் பெரிய விஷயங்களைக்கூட சாதாரணமாகச் செய்து முடிப்பவர்.

டாக்டரின் பேருதவிகள் என்பவை பெரும்பாலும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்ற வகைப்பட்டவைதான்.

பெரும்பாலும் டாக்டர்கள் எப்போதும் வாங்கித்தான் பார்த்திருக்கிறோம், கொடுத்துப் பார்த்திருக்கிறோமா? 1995-97-ல் ஏதோ ஒரு நாள் (நான் ஈரோட்டில் தினமணி செய்தியாளர்).

அப்போதுதான் டாக்டருடைய கிளினிக்கிற்குள் சென்றேன். மனைவியுடன் ஒரு நோயாளி வந்திருந்தார், கொடுமுடி பக்கமிருந்து யாரோ ஒரு கட்சித் தோழர் பரிந்துரைத்து டாக்டரைப் பார்க்க அனுப்பியிருக்கிறார்.

டாக்டரும் பரிசோதித்துவிட்டு நிறைய மருந்து, மாத்திரைகள், ஒரு மாத காலத்துக்காக இருக்கும் என நினைக்கிறேன், எழுதிக் கொடுக்கிறார். அவர்கள் தயங்கியபடியே நிற்கிறார்கள். இவ்வளவெல்லாம் எங்களால் வாங்க முடியாது டாக்டர், காசு கிடைக்கும்போதுதான் வாங்கிக்கொள்ள முடியும்.

கொடுமுடியில் இவை கிடைக்குமா? இதற்காக இங்கே வர முடியுமா, அங்கே கிடைக்கிற மாதிரி எழுதிக்கொடுங்கள் என்கின்றனர். மருந்துச் சீட்டை மீண்டும் வாங்கிய டாக்டர், ஏதோ குறித்துக்கொடுத்து, அருகேயிருக்கும் ஒரு மருந்துக் கடையின் பெயரைச் சொல்லி, அங்கே போய் நான் சொன்னதாகச் சொல்லுங்கள், பணம் எதுவும் கேட்க மாட்டார்கள், வாங்கிச் செல்லுங்கள்.

மருந்து முடிந்ததும் அவசியம் வர வேண்டும் என்றார். நம்ப முடியாத விதத்தில் நகர்ந்து சென்றார்கள் அவர்கள். மருந்துக் கடையில் டாக்டர்களுக்கு கமிஷன் தருவார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கணக்கு வைத்துக் கடன் தந்தார்கள். எத்தனை பேருக்கு இப்படி, எவ்வளவு காலமாக இப்படி, தெரியவில்லை. ஆனால், கடைசி வரை இந்த பாணி ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டுதானிருந்தது.

வீரப்பன் காலத்தில் ஒரு முறை அந்தியூருக்கு மேலே தேவர்மலையில் மலைவாழ் மக்களுக்கான மருத்துவ முகாம். ஒரு நடுத்தர வயதுப் பெண் வந்து தனக்கு இரு கால்களின் பாதங்களும் எரிவதாகச் சொன்னார்.

டாக்டர் சில மருந்து மாத்திரைகளைத் தந்துவிட்டு, சில உணவு முறைகளை மாற்றச் சொன்னார். அந்தப் பெண் சென்ற பிறகு, டாக்டர் அவருக்கு சர்க்கரைப் பிரச்சினையாக இருக்குமோ என்றேன் சந்தேகத்துடன். இருக்கலாம், வாய்ப்பிருக்கிறது.

ஆனால், பொதுவாக மலைவாழ் மக்களுக்கு சர்க்கரைப் பிரச்சினை வருவதில்லை (ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முந்தைய உணவுப் பழக்கவழக்கத்தில்).

இந்தச் சூழ்நிலையில் ஒரு சர்க்கரை நோயாளியாக அவர் வாழ்வதில் நிறைய சிரமமிருக்கிறது.  நிதானமாகத்தான் கையாள வேண்டும், அடுத்த முகாமிற்கு வரும்போது பார்க்கலாம் என்றார் டாக்டர். நோயாளர்களை வெறும் டாக்டராக மட்டும் அணுகுவதில்லை அவர்.

விழுப்புரம் பக்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்குச் சிகிச்சையளிப்பது தொடர்பாக, முன் அறிமுகம் இல்லாத நிலையிலும் என்.சி.பி.எச்.சில் பணிபுரியும் தோழர் என்று அறிமுகம் செய்துகொண்டு தொலைபேசியில் கேட்கிறார் நண்பர் சேகர். வேறெங்கும் அலைய வேண்டாம், அருகில் புதுச்சேரி புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சொல்லுங்கள், பார்த்துக்கொள்வார்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி ஏற்பாடு செய்துவிட்டார்.  

மக்களுக்காக மருத்துவம் என்ற இலக்குடன் டாக்டர் தொடங்கிவைத்த மருத்துவமனைகள், நிறுவனங்களை எல்லாம் கார்ப்பரேட் பாணியில் பெரு நிறுவனங்களாக, லாபத்தை நோக்கமாகக் கொண்டுநடத்தியிருந்தால் இன்று தமிழகம் முழுவதும் சங்கிலித் தொடர் மருத்துவமனைகளை உருவாக்கிப் பெரு வணிக மருத்துவராகியிருக்கலாம்.

ஆனால் டாக்டரின் திட்டங்கள், யோசனைகள் யாவும் ஜனநாயகப்படியானவை. கூட்டுறவு முறை­யில்தான், எண்ணற்றோர் பங்கேற்கும் வகையில்தான் எல்லாவற்றையும் திட்டமிட்டார், தொடங்கினார், நடத்தினார். தமக்கு இணக்கமில்லாத தருணங்களில் சிலவற்றைவிட்டு வெளியேறவும் செய்தார்.

முதன்முதலில் நண்பர்களுடன் இணைந்து கியூரி மருத்துவமனை, சித்தார்த்தா பள்ளி, இயற்கை உரத் தயாரிப்பு, இயற்கை அங்காடி, பாரதிதாசன் கலை - அறிவியல் கல்லூரி, ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை, புற்றுநோயாளிகளுக்கான காப்பகமான இமயம், ஈரோடு புற்றுநோய் மருத்துவமனை, ஊத்துக்குளியில் மக்கள் மருத்துவமனை, தஞ்சையில் ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை புற்றுநோய் மருத்துவமனை, பெங்களூருவில் கேன்சர் சென்டர், புதுச்சேரி புற்றுநோய் மருத்துவ மையம், கடலூரில் நியூ மில்லேனியம் பள்ளி, நியூ மில்லேனியம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஈரோடு பல்நோக்கு மருத்துவமனை, முதியோர் இல்லங்கள்... என சொல்லிக்கொண்டே செல்லலாம். எளிய மனிதரான டாக்டர் முன்னின்று எடுத்த முயற்சிகளும் சாதனைகளும் எத்தனையெத்தனை?

ஈரோட்டில் குடிநோயிலிருந்து குடிநோயாளிகளை மீட்பதற்காக டாக்டர் தொடங்கிய நலந்தா' குடிநோயாளிகள் மீட்பு மையத்தால் குடியிலிருந்து மீண்டவர்கள் பல்லாயிரம்.

குடியிலிருந்து தங்கள் குடும்பத்து ஆண்களை மீட்டதற்காக இன்றும் இந்தப் பல்லாயிரம் குடும்பங்களின் பெண்கள் டாக்டரின் பெயரை நினைக்கிறார்கள்.

டாக்டர் ஒரு கம்யூனிஸ்டாக அறியப்பட்டாலும் அடையாளங் காணப்பட்டாலும் அவரை அவ்வாறு ஒற்றைப்புள்ளியில் ஒருக்காலும் சுருக்கிவிட முடியாது என்பதை அவரை ஓரளவு அறிந்தவர்களாலும் உணர்ந்துகொள்ள முடியும்.

உள்ளபடியே, காந்தியமும் கம்யூனிசமும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட கலவையான மனிதராகத்தான் தோன்றும் டாக்டரைப் பார்க்க. கம்யூனிசத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எள்ளளவும் குறையாமல் காந்திய சிந்தனையிலும் கிராமப் பொருளாதாரத்திலும் நம்பிக்கை வைத்திருந்தார்.

கரோனா காலத்தில் உலகின், குறிப்பாக இந்தியாவின் சமூக - பொருளாதாரச் சூழலை முன்வைத்து, கம்யூனிசமும் காந்தியமும் கலந்த அணுகுமுறையில் அவர் எழுதிய கட்டுரைகள் யாவும் பொருள் பொதிந்தவை, காலத்துக்குப் பொருத்தமானவை.

மகாத்மா காந்திக்கே கிராமப் பொருளாதாரத்தின் நுட்பங்களை அறியத் தந்தவரென அறியப்படும் தமிழரான கிராமப் பொருளியல் வல்லுநர் ஜே.சி. குமரப்பாவைப் பேசிப் பேசி, எழுதி எழுதி மக்களுக்குக் கொண்டுசென்றவர் டாக்டர்.

காந்தியையும் குமரப்பாவையும் காங்கிரஸ்காரர்களே கைவிட்டுவிட்டதுதான் பெரும் சோகம் என்பார் அவர். காந்தி, குமரப்பா தொடர்பாக எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கிறார் டாக்டர்.

நூறுக்கும் அதிகமான நூல்களை, இவற்றில் ஏறத்தாழ பாதி குறுநூல்கள், எழுதியுள்ள  டாக்டர், மொழிபெயர்ப்பில் அதிக அக்கறை கொண்டிருந்தார்.

சுற்றுச்சூழல் தொடங்கி, உலகில் தனக்குப் பிடித்த ஒவ்வொன்றையும் தான் நம்புகிற ஒவ்வொன்றையும் எழுதினார், மொழிபெயர்த்தார். ஒரு முறை கடோபநிஷத் பற்றியும் நசிகேதனின் கேள்விகள் பற்றியும் டாக்டர் விலாவாரியாகப் பேசியபோது என்னால் நம்பவே முடியவில்லை.

சுற்றுச்சூழல் விஷயங்களில், பிரச்சினைகளில் பெரும் அக்கறை கொண்டு செயலாற்றிய டாக்டர் மற்றும் தமிழக பசுமை இயக்கத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று, பவானி நதி நீர் காக்கப்பட்டது.

பவானி ஆற்றில் ஆபத்தான ரசாயனக் கழிவுகளை வெளியேற்றிய விஸ்கோஸ் ஆலைக்கு எதிரான போராட்டங்களை மக்கள்மயப்படுத்தியதிலும் வெற்றி பெறச் செய்ததிலும் டாக்டருக்குப் பெரும் பங்கிருக்கிறது.

திருப்பூர் ஆலைகளிலிருந்து நொய்யலில் வெளியேற்றப்பட்ட சாய, சலவைக் கழிவு நீரும் ஒரத்துப்பாளையம் அணைப் பிரச்சினையும் தொடர்பான போராட்ட முன்னெடுப்புகளில் பெரும் பங்காற்றினார் அவர்.

கோரிக்கையற்றுக் கிடக்கிறது ஒரு டிஎம்சி தண்ணீர் என்ற தலைப்பில் ‘தினமணி’யில் முதன்முதலில் ஒரத்துப்பாளையம் அணையின் சிக்கலையும் திருப்பூர் கழிவு நீரின் ஆபத்தையும் அம்பலப்படுத்துவதில் எனக்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தவர்கள் இருவர் - கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கச் செயலராக இருந்த செ. நல்லசாமி, டாக்டர் ஜீவா.

பின்னால், திருப்பூர் சாயக் கழிவுப் பிரச்சினைக்கு முடிவு கட்ட சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவில் இடம்பெற்று கள ஆய்வுகளை மேற்கொண்ட பாசனப் பொறியியல் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகத்துடன் இணைந்து விவசாயிகளின் தரப்புக்கான நியாயத்தை முன்னெடுத்ததில் டாக்டருக்குப் பெரும் பங்கிருந்தது (திருப்பூர் சாயக் கழிவுப் பிரச்சினைக்கு முடிவு காண்பதில் உயர் நீதிமன்றத்தில் இந்தக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை மிகப் பெரிய பங்காற்றியது).

மத நல்லிணக்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த டாக்டர், ஒரு காலகட்டத்தில் திப்புவைப் பற்றியும் அவருடைய மத நல்லிணக்க அணுகுமுறை பற்றியும் பேசியும் எழுதியும் பிரசாரமே செய்துகொண்டிருந்தார்.

திப்புவின் வாள் நூலையும் மொழிபெயர்த்தார் (என்சிபிஎச் வெளியீடு). தன் வாழ்வின் இறுதிக் காலத்தில்கூட ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து மத நல்லிணக்கம் பேண மாநிலந்தழுவிய அளவில் சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

மருத்துவம் தொடர்பான சில கருத்துகளுக்காக டாக்டர்களிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தபோதிலும் தன் நிலைப்பாட்டை எப்போதும் மாற்றிக்கொண்டதில்லை அவர்.

டாக்டருக்குப் படித்தவர். தொழில்முறை டாக்டர் என்றாலும்கூட அவர் எப்போதுமே தன்னை டாக்டராக மட்டும் சுருக்கிக்கொண்டதில்லை. தீவிரமான சமூக செயற்பாட்டாளராகத்தான் திகழ்ந்தார்.

எண்ணற்ற முகங் கொண்ட ஆளுமையான டாக்டர், கம்யூனிசத்தின் நிறைகுறைகளையும் பேசுவார், காந்தியத்தையும் கிராமப் பொருளாதாரத்தையும் விவாதிப்பார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டிருப்பார்.

மக்களுக்கான மருத்துவத்திலும் ஆர்வம் காட்டிச் செயல்படுத்துவார். மனித உரிமைச் செயற்பாட்டிலும் முன்னிற்பார், மத நல்லிணக்க நடவடிக்கைகளிலும் முனைப்புக் கொள்வார். சாதுவாகக் காட்சியளிக்கும் அவருடைய கோபங்களும் சீற்றங்களும்  ஆச்சரியமூட்டுபவை.

2020 ஏப். 10 - டாக்டரின் 75-வது பிறந்த நாள் விழா. அவருக்குத் தெரிவிக்காமல் பவழ விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தோழர் தா. பாண்டியன் ஆகியோரிடம் உறுதி செய்திருந்தோம்.

கரோனா தொடங்கிவிட்டதால் முடியாமல் போய்விட்டது. 2021-ல் அதே நாளில் பவழ நிறைவைக் கொண்டாடிவிடலாம் எனத் திட்டம். ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் திடீரென எல்லாரையும் ஏமாற்றிவிட்டு டாக்டர் புறப்பட்டுப் போய்விட்டார்.

பவழ விழா மலருக்கெனத் திட்டமிடப்பட்டு டாக்டரிடம் எடுக்கப்பட்ட ஒரு நீண்ட நேர்காணல் அச்சேறக் காத்திருக்கிறது - அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்!

- எம்.பாண்டியராஜன்