நீண்ட அனுபவம் பெற்ற ஒரு நல்ல தமிழாசிரியர் என்பதோடு மட்டுமல்லாது, நமது தமிழ் மொழியையும், அதன் இலக்கிய இலக்கண வளங்களையும் வெவ்வேறு தளங்களில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவரும் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் ‘தமிழ் இனிது’ என்ற நூலை தற்பொழுது படைத்துள்ளார். இந்நூலை மீண்டும், மீண்டும் படிக்கும்பொழுது, நமது தாய்மொழியாகிய தமிழை நாம் எவ்வாறெல்லாம் பிழைபடவும், தவறாகவும் எழுதி, பேசி வருகிறோம் என்பது நன்றாகத் தெரிய வருகிறது. கற்றவர்களும், குறிப்பாக ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் பாடலாசிரியர்களும் கூட அறிந்தோ அறியாமலோ இவ்வளவு தவறுகளைச் செய்துவருகிறோம் என்பதை அறியும்பொழுது, குற்ற உணர்வால் நெஞ்சம் பதைக்கிறது. இந்நிலை நீடித்துக் கொண்டே போனால் ‘அமிழ்தினும்’ இனிய நமது தமிழுக்கு பெருந்தீங்காகத்தான் அமையும் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.

na muthunilavan book tamil inithuநமது தாய்மொழி ‘உயர்தனிச் செம்மொழி’, ‘சீரிளமைத்திறம் பெற்ற மொழி’, உலகமெல்லாம் பரவிவரும் ‘தேமதுரத் தமிழோசை’ நிறைந்த மொழி, ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணேன்’ என்று புலவர் பெருமக்களால் புகழ்ந்தேத்தப்பட்ட மொழி, பிறமொழிக் கலப்பின்றி தனித்தே செயல்படும் வளமும், செழிப்பும், நுட்பங்களும் நிறைந்த மொழி என்று பிறநாட்டு நல்லறிஞர்களே உளமாரப் போற்றிப் புகழ்ந்த மொழி.

இத்தகைய தனித்துவமிக்க நமது மொழியை நாமே இவ்வாறு பிழைபடப் பயன்படுத்தலாமா? அப்படியானால், எதிர்வரும் காலங்களில் ‘மெல்லத் தமிழ் இனி......’ எந்நிலை அடையும்? இந்நிலையை நன்கு உணர்ந்து, அதுவும் ஆய்வுநோக்கில் உய்த்துணர்ந்து, ‘இவ்வாறான தவறுகளைக் களைந்திட ஏதாவது செய்தாக வேண்டும்’ என்ற நல்ல மொழிப்பணி நோக்கில் தோழர் முத்துநிலவன் இந்நூலைப் படைத்துள்ளார். இதுபோன்ற நூல் காலத்தின் கட்டாயம். தொடர் கட்டுரைகளாக வெளிவந்த 50 கட்டுரைகளை ஒருங்கிணைத்து, ‘இந்து தமிழ் திசை’யால் வெளியிடப்பட்ட இந்நூல் ‘காலத்தினால் செய்த நன்றி’ என்பதே சாலப் பொருந்தும்.

‘தமிழ் இனிது’ என்ற இந்த நூலைப் பற்றி சற்று விரிவாகப் பேச வேண்டும். இந்நூலின் தலைப்பை, ‘பிழையின்றி தமிழ் பயில்வோம்’ என்றோ, ‘தற்காலத் தமிழ் படும்பாடு’ என்றோ நூலாசிரியர் அமைத்திருக்கலாம். ஒரு தமிழாசிரியர் என்பதோடு, தமிழ் மொழியை உளந் தோய்ந்து, உள்ளும் புறமும் நன்கு ஆய்ந்து, ஒருவகைத் தீராத்தாகத்துடன், தமிழைத் தாம் கற்றுணர்ந்து, களிபேறுவகையடைந்த காரணத்தினால், நமது தாய்மொழியின் இயல்பான இனிமைத் தன்மை சிதைந்துவிடக் கூடாது என்ற உள்மன உந்தலால் ‘தமிழ் இனிது’ என்ற தலைப்பைத் தேர்வு செய்துள்ளார் நூலாசிரியர். இதற்கு முன்பு, பலருக்கு எட்டிக் காயாகப்படும் இலக்கணத்தைப் பற்றி ஒரு நூல் எழுதும்பொழுதே ‘இலக்கணம் இனிது’ என்ற தலைப்பில் ஆய்ந்தவர். ஒரு பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர், அந்தப் பாடத்தின் ‘உயிர்ப்பு’ நீடித்து நிலைபெற வேண்டும் என்ற உள்ளுணர்வோடு செயல்படுவது ஒரு ஆசிரியரது உயரிய கற்பித்தல் கடமையாகும். இதில் தமது ஒவ்வொரு வகுப்புக் கற்பித்தல் பணியையும் தவறாது மகிழ்வுடன் கற்பித்தல் என்ற கடமையும் உள்ளடங்கும்.

இந்நூலின் தலையாய நோக்கத்தை, இதன் 37 ஆம் பக்கத்தில் நூலாசிரியர் தெளிவாக வரையறை செய்துள்ளார். “நம்மைச் சுற்றியடிக்கும் காற்று, நம் தலையில் குப்பையைக் கொட்டிவிட்டுப் போவது இயல்பு. பிறகு நம்மை நாமே தூய்மை செய்து கொள்கிறோம் அல்லவா? அதுபோல, அரசியல், பொருளியல், பண்பாட்டு வாழ்க்கை மாற்றம் காரணமாக நம் கண், காதுகளில் தாமே வந்து விழும் தவறான தமிழ்ச் சொற்களைத் திருத்திக் கொள்ள முயல வேண்டும்”. இதில் ‘நம்மைச் சுற்றியடிக்கும் காற்று’ என்பது, இன்றைய நமது அவசர அலங்கோலக் காலச் சுழற்சியில் நாம் செய்யும் மொழிப்பிழைகளுக்கான ‘சூழல்கள்’ என்பதே ஆகும்.

நமது தமிழ்கூறும் நல்லுலகில் ‘தமிழ் இனிது’ என்ற இந்நூல் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்குமுரியதாகும். படைப்பாற்றல் மிகு ஒரு நல்ல கலை இலக்கியச் செயல்பாட்டாளராக நூலாசிரியர் தாம் பதித்து வந்த நீண்ட வரலாற்றுத் தடங்களில், இது ஒரு சீரிய தமிழ்ப் பணி அடையாளமாகும்.

இந்நூலின் மிகக் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால், நாம் தவறாகப் பயன்படுத்தும் சொற்களை ஒவ்வொரு தலைப்பிலும் எடுத்து விளக்கும்பொழுது, அச்சொற்கள் இடம் பெற்றுள்ள அல்லது அச்சொற்களுக்கான விளக்கங்களைத் தரும் பழம்பெரும் நூல்களான தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியப் படைப்புகள் மற்றும் நமது தமிழ் மூதாட்டி ஔவையாரது நூல்கள் போன்றவை ஆங்காங்கு மிகப் பொருத்தமாக எடுத்தாளப்படுகின்றன. இதுமட்டுமல்ல, அந்நூல்களின் செய்யுள் எண், மற்றும் வரிகள் துல்லியமாகக் குறிப்பிடப்படுகின்றன. அதேபோல், அச்சொற்களின் ஏதோ ஒருவகைத் தொடர்புள்ள இக்காலப் படைப்புகள், ஆசிரியர்கள், திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்கள் எல்லாம் மிகச் சரளமாக ஆங்காங்கு குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறான நூலாசிரியரது விரிந்த பார்வையானது தாம் எடுத்துக் கொண்ட ஒரு அரிய தமிழ்ப் பணி மீது நல்ல நம்பகத்தன்மையையும் நூலைப் படிப்போருக்கு அலாதியான கவன ஈர்ப்பையும் உண்டாக்குகிறது.

நூல் முழுவதும் ஒவ்வொரு கட்டுரையிலும் தவறாகப் பயன்படுத்தும் பல்வேறு சொற்கள் விளக்கப்படுகின்றன. அச்சொற்களின் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு, அத்துடன் சரியான சொற்களும் தரப்படுகின்றன. இந்நூலின் முத்தாய்ப்பான பயன் இதுவேயாகும். எடுத்துக்காட்டாக:

மங்களம் - மங்கலம் - (பக்-43) , கட்டிடம் - கட்டடம் - (47), அருகாமை -அருகில் - (46), விபரம் - விவரம் - (93), லோகம் - உலகம் - (95), சித்தரித்தல் - சித்திரித்தல் - (35), சிகப்பு - சிவப்பு - (36), பதற்றம் - பதட்டம் - (37), வாய்ப்பாடு -வாய்பாடு - (89), 60ம், 60 தாம் - 60 ஆம், 60 ஆவது - (29), நினைவு கூறுதல் - நினைவு கூர்தல் - (73), முகம் ‘சுழித்தல்’ - முகம் ‘சுளித்தல்’ - (101), ஆத்திச்சூடி -ஆத்திசூடி - (87), துவக்கப்பள்ளி - தொடக்கப்பள்ளி - (43), கோயில் - கோவில் - (60), முன்னூறு - முந்நூறு - (54), கோறல் - கோரல் - (69), துள்ளியமானது -துல்லியமானது - (75), தடையம் - தடயம் - (111), நாட்காட்டி - நாள்காட்டி - (90).

இந்த 20 சொற்களும் ஒரு எடுத்துக் காட்டுக்காகத்தான். இதே போல் பல்வேறு சொற்களை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நூலாசிரியர் சுவைபட விளக்குகிறார். இத்துடன் ஒரே சொல்லை இருவிதமாகப் பயன்படுத்தும் இக்கால நடைமுறையை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், அதற்குப் பல நூல்களில் உள்ள சான்றுகளையும் கோடிட்டுக்காட்டுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சில சொற்கள்:

ஒரு - ஓர் 2. எத்தனை - எத்துனை 3. உடம்பாடு - உடன்பாடு 4. எல்லோரும்- எல்லாரும் 5. காவிரி - காவேரி 6. பழமை - பழைமை 7.ஐந்நூறு - ஐநூறு 8. செய்நன்றி - செய்ந்நன்றி.

இவ்வாறு, பல சொற்களின் இக்கால இருவிதப் பயன்பாடுகளையும், ஏற்றுக் கொள்ளலாம் என்றால், இன்னும், ஒரு குறிப்பிட்ட இடைவெளிக் காலத்தில், இதற்குமுன் பட்டியலிடப்பட்ட ‘சரி - தவறு’ சொற்கள் இரண்டையுமே ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலை வருமானால், நமது ஒட்டுமொத்த ‘மொழிமாண்பு’ ஒரு காலத்தில் எங்கு போய் நிற்கும் என்பது நமக்குள் எழும் ஒரு வினாவாகும்.

தனித்த சொற்களின் தவறான பயன்பாடுகளை மட்டும் நூலாசிரியர் ஆய்ந்திடவில்லை. மாறாக, பல்வேறு சொற்றொடர்கள், வாக்கிய அமைப்புகள் மற்றும் அவை பயன்படுத்தப்படும் தற்கால, எழுத்து வழக்குகள், பாடல்வரிகள் ஆகியவற்றையும் தம் ஆய்விற்கு எடுத்துக் கொள்கிறார். எடுத்துக்காட்டாக: ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ (அவன் இன்றி)’ ஆவண செய்வது - (ஆவன செய்வது)’ பகலிரவு பாராமல் (இராப்பகல் பாராமல்) இத்துடன், ‘திருவளர் செல்வன் - திருநிறைச் செல்வன்’ என்ற சொற்களிலும், ‘சிந்தாமல் சிதறாமல் என்ற சொற்களிலும், ‘சட்டமன்ற உறுப்பினரோடு அமைச்சரும் வருகிறார்’ போன்ற சொற்றொடர்களிலும் இவ்வளவு நுட்ப-திட்பங்கள் இருப்பதை ‘தமிழ் இனிது’ நூல்தான் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறது. மொழியைக் கவனத்துடனும் தவறின்றியும் பயன்படுத்த வேண்டும் என்பது இவற்றிலிருந்து புலனாகிறது.

இந்நூலில் நூலாசிரியர், தமது ஆய்விற்கு எடுத்துக் கொண்ட ‘மொழியியல் சிந்தனைக்கு’ அப்பாற்பட்டு, தேவைக்கேற்ப ஆங்காங்கு அவர் குறிப்பிடும் முந்தைய எழுத்தாளுமைகள், புதிய படைப்பாளிகள், இன்றைய எழுத்துலகிலும், இலக்கியத்தளத்திலும் தடம் பதித்துவரும், ஆனால் பரந்துபட்ட பொதுவெளியில் அதிக அறிமுகமில்லாத எழுத்தாளர்கள் ஆகியோரது பெயர்களையும் அவர்களது படைப்பாக்க எடுத்துக்காட்டுகளையும் தொடர்ந்து குறிப்பிடும்பொழுது, அவற்றை வாசிக்கும் நமக்கு வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. உ.வே.சா, சி.வை.தா., திரு.வி.க., வ.சுப.மா, பாவாணர், சிவத்தம்பி, உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், ஜெயகாந்தன், வாலி, வைரமுத்து, தமிழண்ணல், பெருமாள் முருகன் போன்ற முதுபெரும் ஆளுமைகளை நாம் அறிவோம். அதேசமயம், நா.கணேசன், முனைவர் வ.கிருஷ்ணன், பேச்சிமுத்து, நவஜீவன், இராம.கி.ஜூலியானா ஜோசப் விஜூ போன்ற இன்றைய நல்வரவுகளையும் குறிப்பிட்டு எழுதுகிறார். இது நூலாசிரியரது பரந்துபட்ட தமிழ் கூறும் நல்லுலக வாசிப்பு அனுபவத்தையும், அனைத்துப் படைப்பாளிகளிடமிருந்தும் பொதுச் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய பல நுட்பங்கள் உள்ளன என்பதையும் அறியத் தருகிறது.

‘தமிழ் இனிது’ நூலில், ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ள சொற்களது ஒன்று அல்லது இரண்டு எழுத்து மாறுபாடுகளால் ஏற்படும் தவறுகள், ஒரு சொல்லிலோ, அல்லது சொற்றொடரிலோ உள்ள சிறு மாறுபாட்டால் ஏற்படும் தவறுகள், ஆங்கில மொழிப்பயன்பாட்டிலும் உண்டா என்பதைத் தெரிந்து கொள்வதும் நன்று. ஆங்கில மொழியின் எழுத்து அல்லது பேச்சு பயன்பாட்டில், உச்சரிப்புப் பிழை (WRONG PRONUNCIATION) இலக்கணப் பிழை (GRAMMATICAL ERROR) எழுத்துப் பிழை (SPELLING MISTAKES) மற்றும் வாக்கிய அமைப்புப் பிழை (CONSTRUCTION MISTAKES) ஆகிய தவறுகள் ஏற்படலாம். இது இயல்பானது. ஆனால், நமது தமிழ் வாக்கியங்களில் உள்ள சொற்களில் தவறாகப் பயன்படுத்தும் ஓரிரு எழுத்துகளினால் ஏற்படும் மொழி இயல்புத் தவறுகள், சொற்களை மாற்றிப் போடுவதால் ஏற்படும் தவறுகள் மற்றும் இத்தவறுகளால் ஏற்படும் பொருள் மாறுபாடுகள் ஆகியன ஆங்கில மொழியில் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இது, ஒரு வகையில் மக்களது இயல்பிற்கு ஏற்ப, எப்படிப் பயன்படுத்தினாலும் அதன் பொருள் தன்மை மாறாது என்ற நமது மொழியின் ஏற்புடைமைப் பண்பாகுமா? இதிலும், ஆங்கில மொழிப் பயன்பாடு நாட்டுக்கு நாடு இப்பொழுது மாறுபடுகின்றன. (AMERICAN ENGLISH, BRITISH ENGLISH) இத்துடன் இந்நூலாசிரியர் பல இடங்களில் தேவையான ஆங்கில இணைச் சொற்களைப் பயன்படுத்தியும் விளக்கங்கள் தருவது சிறப்பானதாகும்.

பொதுவாக, ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். நூலாசிரியர் தேவையான இடங்களில் நன்னூல், தொல்காப்பியம் ஆகிய நூல்களில் வரும் வரையறைகளை (சூத்திரங்கள்) எடுத்தாண்டு ‘உயிர்முன் மெய்’ என்றும், ‘மாத்திரை’ என்றும் ‘எழுத்து, சொல், யாப்பு’ என்றும் விளக்குகிறார். பொதுவான வாசகர்களுக்கு இவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது கண்டிப்பாகத் ‘தலைசுற்றல்தான்’ வரும். எல்லோரும் இலக்கண வல்லுனர்களாகவோ (GRAMMARIANS) நூலாசிரியர் போன்று சொல்லாய்வாளர்களாகவோ (RHETORIC) இருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும், தமிழ் இலக்கணச் சிறப்பை எடுத்துரைப்பதும் தேவையே.

நூல் முழுவதும் பழைய மற்றும் புதிய திரைப்படப் பெயர்கள், கலைஞர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக திரை நட்சத்திரங்களின் எடுப்பான புகைப்படங்கள் ஆகியவை நிறைய இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரது மொழி தொடர்பான பிழைதிருத்தம் என்ற நன்னோக்கு, மேற்குறிப்பிட்டவைகளால் ஏற்படும் வாசகர்களது கவனச் சிதறலினால் அடிபட்டுப் போகுமே என்ற குறுக்கீடும் ஏற்படலாம். ஒருக்கால், ‘இந்து தமிழ் திசையின்’ தொழில்நுட்ப உத்தியாகவும் இது இருக்கலாம். அதே சமயம், புலவர்கள் அறிஞர் பெருமக்கள், மக்கள் தலைவர்கள் ஆகியோரது படங்கள் மற்றும் சில வலைதளப் படங்கள் இடம் பெற்றிருப்பது கவனத்தை ஈர்க்கின்றன. நூலில் மேலும் ஒரு சிறப்பு, நூலின் இறுதியில் பட்டியலிடப்பட்ட ‘சொல் அடைவு’ மற்றும் ‘உதவிய நூல் பட்டியல்’ ஆகியவையாகும். இந்நூலைப் படைக்க நூலாசிரியரது அசாத்தியமான கணினி, விக்கிபீடியா, யூடியூப், முகநூல் ஆகிய சாதனங்களின் பயன்பாட்டு அறிவு மிகவும் துணை நின்றுள்ளன. ஒவ்வொரு தற்காலத்தமிழ் குடும்பத்திலும், தமிழ் வாசகரிடமும் இருக்க வேண்டிய நூல் ‘தமிழ் இனிது'.

தமிழ் மொழியின் அன்றாடப் பயன்பாட்டிற்கான சிறந்த கையேடாகப் பயன்பட வேண்டிய நூல் ‘தமிழ் இனிது’ என்றால் அது மிகையல்ல.

- சி.பாலையா,  ஓய்வு பெற்ற ஆசிரியர், பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்