எழுத்தாளர் அகிலாவின் இரண்டாவது நாவல் ‘அறவி.’ இவர் ஏற்கெனவே ‘தவ்வை’ என்றொரு நாவல் எழுதியுள்ளார். மனநல ஆலோசகராகப் பணியாற்றுகிறார். இந்தப் பணி அனுபவம்தான் ‘அறவி’ நாவலுக்குப் பின்னணியாகச் செயல்பட்டுள்ளது. அக மனதின் விளைச்சல்கள்தாம் படைப்புகள் என்கிறது உளவியல் ஆய்வு. ‘படைப்புகள் அனைத்தும் நனவிலி மனதிலிருந்தே உருவாகின்றன’ என்கிறார் ப்ராய்ட். ஒடுக்கப்பட்ட அல்லது நசுக்கப்பட்ட ஆசைகள், தீர்க்கமுடியாத முரண்கள், இறந்தகால நினைவுகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நனவிலி மனதைக் கட்டமைக்கின்றன என்பதும் ப்ராய்டின் கருத்து. அவர் நனவிலி மனதை அடிமனம், ஆழ்மனம் என இரு வகையாகப் பிரிக்கிறார். இத்தகைய நனவிலி மனதின் மடைமாற்றம்தான் படைப்பு. சமூக ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்ட ஒருவர், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தன் ஆசைகளைப் புதைத்துக் கொள்கிறார். அந்த ஆசைகள் நனவிலி மனதில் தொடர்ந்து சேகரமாகின்றன. வாய் தவறிப் பேசுதல், அறியாமல் எழுதிவிடுதல், கனவுகள் ஆகியவை இந்தச் சேகரத்திலிருந்தே வெளிப்படுகின்றன என்று உளவியல் திறனாய்வு சொல்கிறது. படைப்பாளர்கள் இந்தக் கனவுகளை மொழிப்படுத்தி படைப்புகளாக மாற்றுகின்றனர். பிறருக்கு அது வெறும் கனவாகவே நின்று விடுகிறது.

akila novel araviதேவகி, வசுமதி என்ற இரு பெண்களின் கதைகளை ‘அறவி’ என்ற புனைவாக எழுதியிருக்கிறார் அகிலா. இரண்டு பெண்களுமே வெவ்வேறு வகைகளில் குடும்பத்தினரால் ஒடுக்கப்படுகின்றனர். ஐம்பது வயதைக் கடந்தபிறகுதான் இவர்களே இதனை உணருகின்றனர். புனைவின் கதை முன்னும் பின்னுமாக இருவரின் நினைவுகளினூடாக நகர்கிறது. இருவரும் எழுதிக்கொள்ளும் கடிதங்களின் வழியாகவும் கதை சொல்லப்படுகிறது. குடும்ப அமைப்பே பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்ற கதையாடல் தொடர்ச்சியாக வெவ்வேறு இலக்கிய வகைமைகளில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ‘அறவி’ நாவலும் இந்தக் கதையாடலுக்குள் தன்னை இணைத்துக் கொள்கிறது. ஆனாலும் சில உத்திகளின் வழியாகப் புனைவை வாசிப்புக்குரியதாக அகிலா மாற்றியிருக்கிறார்.

தேவகி இந்நாவலின் மையமாக இருக்கிறாள். தேவகியின் பாட்டி செல்லம்மா; மகள் யமுனா; தேவகி ஆகிய மூவருமே வெவ்வேறு காலத்தின் குறியீடுகள். தேவகியின் அம்மாவிற்குப் புனைவில் பெரிய அளவில் இடமில்லை. ஆக, மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கை இந்நாவலில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. காலமும் இவர்கள் பயணிக்கும் நிலமும் புனைவுக்குப் பின்னணியாக அமைந்துள்ளன. இம்மூவருடன் வசுமதி என்ற கதாபாத்திரம் குறித்தும் புனைவு விரிவான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறது. வசுமதி, தேவகியின் நெருங்கிய தோழி. குடும்பம் எவ்வாறு ஒரு பெண்ணை அவளுக்கே தெரியாமல் சுரண்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்த வசுமதி கதாபாத்திரத்தை அகிலா இந்நாவலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பெண் குழந்தைகள் மீதான பாலியல் மீறல் நெருக்கமான உறவினர்களிடமிருந்தே தொடங்குகிறது என்ற கதையாடலுக்கு தேவகி கதாபாத்திரம் பயன்பட்டுள்ளது. யமுனா நவீன காலப் பெண்ணின் இருப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரம். தேவகியை வடிவமைத்தவள் செல்லம்மா. தேவகியின் இன்ப துன்பங்களுக்குக் காரணமாக இருந்தவளும் செல்லம்மாதான். இந்தக் கதாபாத்திரமும் புனைவுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

செல்லம்மா நிலவுடைமைச் சமூக கால கட்டத்தைச் சார்ந்தவள். திருச்செந்தூர்தான் இவளது நிலம். ஆனால், நிலம் புனைவில் எவ்வித குறுக்கீட்டையும் ஏற்படுத்தவில்லை. செல்லம்மா, மாமியாரால் தொடக்கத்தில் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறாள். வீடு முழுக்க முழுக்க மாமியாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாமியாரின் இறப்பிற்குப் பிறகு கொஞ்சம் ஆசுவாசமும் கணவரின் மறைவிற்குப் பிறகு சுதந்திரமும் கிடைக்கிறது. செல்லம்மா தன்னை அதிகாரம் மிக்கவளாக உணர்கிறாள். இந்தத் தன்மையை செல்லம்மா அவளது மாமியாரிடமிருந்து பெற்றுக்கொள்கிறாள். பண்ணை ஆட்களும் இவளுடைய மகன்களும் இவளுக்குக் கட்டுப்பட்டே நடக்கின்றனர். தவறு செய்த மூத்த மகனை வீட்டைவிட்டே வெளியேற்றுகிறாள். பெண்கள் தங்களது வீட்டை அதிகாரம் செலுத்தும் மையமாகக் கருதுகின்றனர். உண்மையில் ஆண்கள் அந்தப் போதைக்கு பெண்களைப் பழக்கப்படுத்தி அடிமையாக வைத்திருக்கின்றனர். இதனை வேலைக்குச் செல்லும் புதிய தலைமுறையைச் சார்ந்த பெண்கள்தாம் புரிந்து கொண்டனர். அந்த வகையில் செல்லம்மா முதல் தலைமுறையைச் சார்ந்தவள். யமுனா புதிய தலைமுறையின் வார்ப்பு.

மழலைப் பருவத்திலேயே பெண் குழந்தைகள் அவர்களுக்கு நெருக்கமான ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தன் உடல்மீது நிகழ்த்தப்படுவது பாலியல் மீறல் என்பதே அந்தக் குழந்தைக்கு அப்போது தெரிவதில்லை. Good touch, Bad touch பற்றிய புரிதல் சமீப காலங்களில்தாம் பெண் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுகிறது. அதுவும்கூட எல்லா குழந்தைகளுக்கும் சென்று சேர்ந்திடவில்லை. நெருக்கமான உறவுகளின் தொடுதல் அன்பு சார்ந்த ஒன்றாகவே குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர். தேவகி அப்படித்தான் தன் தாய்மாமாவின் தொடுதலைப் புரிந்துகொள்கிறாள். உறவுகள்மீது ஏற்கெனவே ஒரு புனித பிம்பம் கட்டப்பட்டிருக்கிறது. அந்தப் புனிதத்தன்மை குறித்துக் குழந்தைகளிடமும் கற்பிக்கப்படுகிறது. செல்லம்மா அப்படித்தான் தன் மூத்த மகனைப் பற்றித் தேவகியிடம் கூறியிருந்தாள். எதிர்பாலின தொடுதல்களைப் பாலியல் விருப்பத்தின் உந்துதலாகவே ப்ராய்ட் அவதானிக்கிறார். இந்தத் தன்மையில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை. அளவுக்கதிகமான அன்பில் கொஞ்சம் காமமும் கலந்திருக்கிறது. ஏழு வயதிலிருந்தே தன் மாமனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறாள் தேவகி. செல்லம்மா நேரில் பார்க்கும்வரை இது தொடர்கிறது. உறவுகள் குறித்த புனிதம் அந்த அளவுக்கு இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இதனை ஆண்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்நாவல் இந்தப் புள்ளியில் தீவிரமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதனுடன் சேர்த்து வெவ்வேறு பிரச்சினைகளையும் நாவல் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

தேவகி கனவுத் தொந்தரவுகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள். இதற்காக மருத்துவச் சிகிச்சையும் பெறுகிறாள். அந்தக் கனவுகளுக்கான காரணத்தை மருத்துவரும் யமுனாவும் தேடுகின்றனர். வெவ்வேறு மிருகங்கள் அவள் கனவுகளில் வந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன. மிருகங்கள் நம்முடைய நிறைவேறாத ஆசைகளையும் பாலியல் விருப்பங்களையும் குறிக்கும் குறிப்பான்கள் என்கிறது உளவியல். பிறரிடம் பகிர்ந்துகொள்ள இயலாத மனதின் ஆசைகளுக்குக் கனவுகள் உருவங்களைக் கொடுக்கின்றன. அதில் ஒன்றுதான் மிருகம். ஒவ்வொரு மிருகத்திற்கும் தனித்தனி குணமிருக்கிறது. ப்ராய்ட் இந்தக் கனவுகளுக்கு அணுக்கமான காரணங்களைக் கூற முயன்றிருக்கிறார். ஆண், பெண் உடல் குறித்த புரிதல் இல்லாத பருவத்தில் தேவகிமீது நிகழ்த்திய பாலியல் வன்முறை; திருமணத்திற்குப் பிறகு அவளுக்கிருந்த நிறைவேறாத பாலியல் விருப்பங்கள். இவ்விரண்டுமே தேவகியின் கனவுகளுக்குப் பிரதி முன்வைக்கும் காரணங்கள். மனநிலை பாதிக்கப்பட்ட செல்லம்மாவின் இளைய மகனுக்குத்தான் தேவகி வாழ்க்கைப்படுகிறாள். அவனிடமிருந்து இவள் ஒன்றையும் பெறவில்லை. அவன் இறப்பதுவரை அவனைப் பாதுகாக்கும் தாதியாகத்தான் தேவகி பயன்படுத்தப்படுகிறாள். இதுதான் தேவகியின் பிரச்சினை. ‘சந்தோசமாகத்தான இருக்க’ என்ற வசுமதியின் கேள்விக்கான உள்ளர்த்தத்தைக்கூட தேவகியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தேவகியின் கணவனான வரதன் குழந்தையிலிருந்தே மனநிலை பாதிக்கப்பட்டவன். ‘திருமணத்திற்குப் பிறகு சரியாகிவிடுவான்’ என்ற வழமையான நம்பிக்கையில் பலரது எதிர்ப்பையும் மீறி தேவகிக்குத் திருமணம் செய்து வைக்கிறாள் செல்லம்மா. ஆனால், வரதன் இறக்கும்வரை அப்படியேதான் இருந்தான். தேவகிக்கு அப்போது முப்பத்தோர் வயது. இடையில் வரதனின் சிகிச்சைக்காகக் கொடைக்கானல் சென்றபோது தேவகிக்கு சுகவனம் என்பவன் அறிமுக மாகிறான். அவனிடமிருந்துதான் ஆணுடல் பற்றிய புரிதலை அறிகிறாள். இதில் அவளுக்கு எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லை. ஆனால் அந்த உறவு கொடைக்கானலுடன் முடிந்து போகிறது. இந்த இடத்தில் பிரதி நவீனத்தன்மையுடன் இருக்கிறது. ஆனால், அதன்பிறகு எதேச்சையாக நடந்த வரதனுடனான உறவில்தான் யமுனா பிறந்தாள் என்று பிரதி கூறுகிறது. இதில் தர்க்க முரணும் தமிழ்ப் பண்பாட்டை மீறிவிடக் கூடாது என்ற நுண்ணுணர்வும் படைப்பாளிக்கு இருப்பதாகவே கருதுகிறேன். இந்த இடத்தில் மரபைக் காப்பாற்ற பிரதி கடும் முயற்சி எடுத்திருக்கிறது. அறநிலை சார்புத்தன்மையை நவீனத்துவம் முழுமையாக நிராகரித்தது. அதே நேரத்தில் மரபான கலைப்பண்பிற்கு நேர் எதிரான அலைகளை உருவாக்குவதையும் சோதனைகளை முன்னெடுப்பதையும் நவீனத்துவம் விரும்பியது. படைப்பாளியின் அறச்சிந்தனையால் நாவல் நவீனத் தன்மையிலிருந்து விலகிவிடுகிறது.

வசுமதியின் கதை தேவகி கதைக்கு நேரெதிரானது. கணவன், மகன், மருமகள், மகள், மருமகன், பேரக்குழந்தைகள் என அனைவருடனும் வாழ்பவள் வசுமதி. வாழ்க்கைப்பட்ட நிலத்தைவிட்டுத் தாண்டாத வாழ்க்கை. வசுமதியின் உலகம் குடும்பம் மட்டும்தான். அப்படித்தான் அவளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அன்பு அடிமைப்படுத்தும் தன்மை வாய்ந்தது என்பதை வசுமதியின் வாழ்க்கையின் மூலமாகப் பிரதி பகிர்ந்திருக்கிறது. கணவன் முதல் பேரக்குழந்தைகள் வரை காட்டும் அன்பிற்குப் பின்னால் அவர்களுக்கு ஒரு தேவை இருக்கிறது என்பதைக் காலம் கடந்தே வசுமதி புரிந்துகொள்கிறாள். ‘நீ சமைப்பதைப் போல வருமா?’ என்று ஒவ்வொருவரும் வெவ்வேறு தருணங்களில் கூறுகிறார்கள். இந்தப் பாராட்டு தரும் போதையிலிருந்து வசுமதியால் வெளியே வரமுடியவில்லை. அதற்குப் பின்னாலுள்ள உழைப்புச் சுரண்டலை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னைப் புரிந்துகொள்ள வேண்டிய மகளே தன்னைச் சுரண்டுகிறாள் என்பதைக் காலம் அவளுக்கு உணர்த்துகிறது. தேவகிதான் இந்தப் புரிதலை வசுமதியிடம் ஏற்படுத்துகிறாள். ‘கொஞ்ச காலமாவது உனக்காக வாழ்’ என்பதன் அர்த்தத்தை வசுமதியால் உள்வாங்க இயலவில்லை. விடியற்காலை முதல் இரவு படுக்கும்வரை அவள் வேலை செய்துகொண்டே இருக்கிறாள். ஒருவரும் அவளை ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தவில்லை. ‘என் பிள்ளைகளுக்கும் அவங்களோட பிள்ளைகளுக்கும் ஊழியம் செய்து கொண்டிருக்கிறேன். அப்போது இவர்களுக்கு நான் யார்?’ என்ற கேள்வி வசுமதிக்கு எழுகிறது. வரிசைக்கிரமமாக நினைத்துப் பார்க்கும்போது அனைவரும் இவளை வேலைக்காரியாகவே இதுவரை நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறாள்.

வசுமதியின் இளைய மகன் சரவணன். பெங்களூரில் வேலை செய்கிறான். அவனுடன் சென்று சில நாட்கள் தங்கவேண்டும் என்ற ஆசையை வசுமதி ஒருநாள் வெளிப்படுத்துகிறாள். குடும்பத்தில் அனைவரும் பதற்றமடைகின்றனர். வசுமதியின் கணவர் இறந்த பிறகே பெங்களூர் பயணம் அவளுக்குச் சாத்தியமாகிறது. ‘நீ இல்லேன்னா இந்த வீடு என்னவாகும்மா. வயசான காலத்துல புள்ளைகளைப் பாத்துக்கிட்டு பேசாம கெடக்காம இது என்ன ஊர் ஊரா போற பழக்கம்?’ என்று மகன் கேட்கிறான். அப்போது வசுமதிக்கு ஐம்பத்தாறு வயது. கணவனின் இடத்தை தற்போது மூத்தமகன் எடுத்துக் கொள்கிறான். ‘வாழ்க்கையை இவ்வளவு மகிழ்ச்சியாகக்கூட வாழ முடியுமா?’ என்பதையும் ‘தன்னைத் தன் குடும்பம் ஒரு செக்குமாடு போலதான் நடத்தியிருக்கிறது’ என்பதையும் பெங்களூர் வாழ்க்கை அவளுக்கு உணர்த்துகிறது. ஆனால், மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது வீடு பெரிய அளவில் மாறியிருப்பதை அறிகிறாள். தான் ஆட்சிசெய்த இடத்திற்குத் தற்போது மருமகள் வந்திருப்பதை உணர்கிறாள். இந்த வீழ்ச்சியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு தன்னைவிட்டு வேறொருவர் கைக்குச் சென்றுவிட்டதை அவளால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண்களின் இத்தகைய மனநிலையை ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதையில் அம்பை அருமையாக எழுதியிருப்பார். வீடு தனக்கே தெரியாமல் தன்னைச் சுரண்டுகிறது என்பதைப் பெண்கள் உணர்ந்தே இருந்தனர். ஆனாலும் அவர்களால் அந்த இடத்தைப் பிறருக்கு எளிதில் விட்டுக்கொடுக்க முடியாது என்பதை வசுமதி கதாபாத்திரம் மூலம் அகிலா உணர்த்துகிறார். வீடு தனக்கான அதிகார மையமாகப் பெண்கள் கட்டமைத்துக் கொண்டதன் விளைவாகவும் இதனைப் பார்க்கலாம்.

நவீனத் தன்மைகளை உள்வாங்கிய கதாபாத்திரம் யமுனா. சுய தேர்வுடன் வாழ்பவள். அமெரிக்காவுக்குப் படிக்கப்போன இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஹரியை விரும்பித்தான் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனாலும் ஹரியுடன் தன்னால் ஒத்துப்போக முடியாது என்பதை விரைவில் உணர்ந்து கொள்கிறாள். யமுனாவிற்கு இங்கிலாந்தில் வேலை கிடைக்கிறது. ஹரி அமெரிக்காவைவிட்டு வரமுடியாது என்கிறான். தம் விருப்பங்களைத் துறந்து எப்போதும் பெண்கள்தாம் ஆண்களின் பின்னால் செல்லவேண்டி இருக்கிறது. ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ என்ற மரபிலிருந்து வந்தவர்கள் என்பதால், தன் மனைவியின் விருப்பத்திற்காக எந்தவொரு ஆணும் தன் வேலையை விட்டுவிடத் தயாராக இருப்பதில்லை. இதுதான் கள யதார்த்தம். யமுனா, கணவனா வேலையா என்பதில் வேலையைத் தெரிவு செய்கிறாள். எனவே, தேவகியை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்கு வந்துவிடுகிறாள். மகளைப் புரிந்துகொள்ளும் அம்மாவாகத் தேவகி இருக்கிறாள். யமுனாவும் அம்மாவின் கடந்த காலத் துயரங்களை அறிந்து கொண்டு, அதிலிருந்து அவளை வெளியே கொண்டுவர முயற்சிக்கிறாள். காலமும் நிலமும் யமுனாவிற்கு இத்தகையதொரு வெளியை உருவாக்கிக் கொடுக்கின்றன. திருமண உறவை ஹரியும் யமுனாவும் மனமொத்து முறித்துக் கொள்கின்றனர். இப்படியொரு சமூகம் உருவானால் நன்றாகத்தான் இருக்கும். யமுனாவிற்குக் குழந்தை இல்லை; அதனால் உடனடியாக இப்படியொரு முடிவை அவளால் எடுக்க முடிகிறது. சரவணனும் அவளைத் திருமணம் செய்துகொள்ள முன்வருகிறான். பிரதி சில விஷயங்களில் முன்னோக்கி நகர்ந்தாலும் பண்பாட்டு நெருக்கடிகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கதையாடலைத் திட்டமிட்டு அமைத்துக்கொண்டிருக்கிறது.

தீவிர எழுத்துக்கும் வெகுசன எழுத்துக்கும் இடையில் ஓர் எழுத்து வகைமை காலந்தோறும் இருந்து வந்திருக்கிறது. மு.வரதராசன், அகிலன், நா.பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி, திலகவதி உள்ளிட்டோர் எழுத்துக்களை இவ்வகைக்குள் அடக்கலாம். இன்றும் இந்த வகைமை இருக்கிறது. அப்படியொரு எழுத்தாகவும் ‘அறவி’ நாவலை வாசிக்கலாம். தீவிரமாகத் தொடங்கிய நாவல், இறுதியில் வெகுசன வெளியில் கரைந்துவிடுகிறது. எடுத்துரைப்பியலில் பிரதியாசிரியர் கூடுதல் சிரத்தையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். பெண்களின் அன்றாடங்களை எடுத்துரைக்கும்போது படைப்பாளர் தானொரு பெரும் பண்பாட்டின் தொடர்ச்சி என்பதிலிருந்து முழுமையாகத் துண்டித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது இங்கே நிகழவில்லை. செல்லம்மா, தேவகி ஆகியோரது அக வாழ்க்கை பண்பாட்டுக் கத்தரியால் ஆங்காங்கே நறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களது தூய்மைக்குப் பிரதி அதிக கவனம் கொடுத்திருக்கிறது. இதெல்லாம் என் தனிப்பட்ட வாசிப்பில் கண்டடைந்த அனுமானங்கள்தாம். பிரதி இதனையும் கடந்து வெவ்வேறு வாசிப்புகளை வாசகர்களுக்கு அளிக்கும். அதற்கும் பிரதியில் இடமிருக்கிறது.

- சுப்பிரமணி இரமேஷ், உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், சென்னை