a vedhayan'எங்களுடைய முதன்மையான குறிக்கோள் பின்தங்கிய இப்பகுதியில் உள்ள மக்கள் படிக்க வேண்டும். அவர்களிடம் பணத்தை அதிகமாய் பெற்றுப் பல்கலைக்கழகம் ஆக்க வேண்டிய தேவையும் இல்லை. நாங்கள் அதில் வரும் வருமானத்தை நம்பி வாழவும் இல்லை.'

1960 களின் இறுதியில் ஒரு பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக நானும் ஒரு நண்பரும் அரசியல் கட்சித் தலைவரைச் சந்திக்க ஒரத்தநாட்டிற்குச் சென்றிருந்தோம். அவர் இயல்பாகத்தான் இருந்தார்; ஆனால் அவரைச் சுற்றி நிற்கும் கூட்டம் நெருங்க விடவில்லை.

‘தஞ்சாவூருக்கு வாங்க; இங்க பார்க்க முடியாது’ என்று விரட்டாத குறையாக வெளியேற்றி விட்டார்கள். இரவு எட்டு மணி. படிப்பதற்கு எப்படியாவது அவரின் பரிந்துரையில் இடம் வாங்க வேண்டும்.

பேருந்தைப் பிடித்துத் தஞ்சாவூர் போய் அவர்கள் கூறிய இடத்தில் கேட்டால் அந்தத் தலைவர் அங்கே வரவே இல்லையாம். அந்த காலத்தில் குறிப்பிட்ட அளவுக்குமேல் பேருந்தில் ஏற்ற மாட்டார்கள். பட்டுக்கோட்டைக்குப் போகிறவர்களை மட்டும் கேட்டு ஏற்றுவார்கள். கடைசியில் இடம் இருந்தால் ஏறிக் கொள்ளலாம்.

ஒரு வழியாகப் பேருந்தில் ஏறி ஒரத்தநாடு வந்து இறங்கினால் அப்போதுதான் மன்னார்குடிக்குப் போகும் பேருந்து கிளம்பிப் போய்க் கொண்டிருக்கின்றது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்னும் கதைதான். இரவு பத்து மணிக்குமேல் நண்பரும் நானும் எட்டுக் கிலோ மீட்டர் நடந்தே ஊருக்கு வந்து சேர்ந்தோம்.

ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை ஒரத்தநாட்டிலுள்ள உயர்நிலைப் பள்ளிக்கு நடந்தும் மிதிவண்டியில் போயும் படித்ததால் பேருந்தைத் தவறவிட்டு நடந்தது ஒரு பொடி நடையாகவே தெரிந்தது.

பரம்பரைத் தொழில் எல்லோரையும் ஒட்டிக் கொள்வது இயல்பு; அப்படித்தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படிப்புப் பற்றிய ஆர்வம் கரைந்து போனது.

இவ்வளவு எழுதுவற்குக் காரணம், ‘சாமி வரங்கொடுத்தாலும் பூசாரிகள் வரங்கொடுக்க மாட்டார்கள்’ என்றிருக்கும் சொலவச் சொல்லை நினைவு படுத்துவதற்காகத்தான்; ஆனால் அந்தச் சாமியே நமக்கு முன்னால் வரங்கொடுக்கக் காத்து நின்றால்!

பதினோராம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து புகுமுக வகுப்பில் சேர்வதற்காக ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாமா அ.வேதையன் அவர்களும் நானும் கல்விக் காவலர் ஐயா அவர்களைப் பார்ப்பதற்காகப் பூண்டிக்குச் சென்றிருந்தோம்.

இந்தத் தலைமுறையினருக்குக் கல்விக் காவலர், கல்வித்தந்தை, ஐயா என்றால் யார் என்ற குழப்பம் ஏற்படும். ஏனென்றால் தமிழகம் முழுவதும் கல்விக் காவலர்களும் ஐயாக்களும் நிறையத் தோன்றி விட்டார்கள். கல்விக் கண்ணைத் திறந்து வைக்க உண்மையாகப் பாடுபடுபவர்களுக்கு இதை விட உயர்ந்த பட்டம் இருந்தாலும் கொடுக்கலாம். ஆனால் கல்வியை வணிகப் பொருள் ஆக்கியவர்களை எல்லாம் அப்படி அழைக்க முடியுமா? காலந்தான் பதில் சொல்ல முடியும்.

அப்போதும் சரி, இப்போதும் சரி, இந்தச் சோழ மண்ணில் கல்விக் காவலர் என்றால் இந்தப் பகுதி மக்களின் கல்விக் கண்ணைத் திறந்து ஒளி காட்டிய - காட்டிக் கொண்டிருக்கும் பூண்டி ஐயா கி. துளசியையா வாண்டையார் அவர்களைத்தான் குறிக்கும்.

மாமா அ.வேதையன் அவர்களும் நானும் பூண்டிக்குச் சென்று பூண்டி ஐயாவின் இல்லத்திற்குள் நுழையும்போது ஒரு பெருங்கூட்டம் அமைதியாகக் காத்திருக்கின்றது. அவர் வரும் நேரத்தில் எல்லோரும் அமைதியாக எழுந்து நின்றார்கள். ஆர்வமாகக் கிழக்கே பார்க்கிறார்கள். தும்பைப் பூப் போன்ற கதராடையில் அவர் கம்பீரமாக நடந்து வருவது ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் கண்ணுக்குள் அந்த ஒளி வட்டம் ஒளிர்கிறது.

‘அவர் ஒரு பண்ணையார்’ என்று நினைத்துக் கொண்டு அவர் வீட்டிற்குள் நாம் நுழைந்தால் ஏமாந்து போவோம். ஒரு தவ முனிவரின் பர்ண சாலைக்குள் நாம் நுழைவதைப் போலிருக்கும்’ (தினமணி, 20-05-2021, ப.6). திரு. வீரபாண்டியனின் நினைவேந்தலைப் படிக்கும்போது உடம்பு சிலிர்த்தது.

வாலிப மிடுக்கு இல்லை; வாலிபமே மிடுக்காக நடந்து வந்ததைப் பார்த்தது பசுமையாக நினைவுக்கு வருவதோடு, நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகளும் நிமிர்ந்த ஞானச் செருக்கும் என்னும் மகாகவியின் பாடல் அடிகளும் கூடவே வருகின்றன.

தெரிந்த முகம் தெரியாத முகம் என்னும் வேறுபாடு இல்லாமல், இல்லை என்று கூறாமல் தாய்மையின் பரிவோடு பூண்டி ஐயா கல்லூரியில் சேர்வதற்கு வழிகாட்டிக் கொண்ருந்தார்.

மாமா அ. வேதையன் அவர்களிடம் சில பொதுவான செய்திகளைப் பேசிவிட்டு, நான் புகுமுக வகுப்பில் சேர்வதற்கு ஒப்புதல் வழங்கினார்.

அந்தக் காலக் கட்டத்திலும் அதற்கு முன்பும் கிராம மக்கள் பிள்ளைகளைப் பொதுவாகப் படிக்க வைக்க மாட்டார்கள். குறிப்பாக ஆண்பிள்ளைகளைப் படிக்க வைத்தால் உழுவ ஆள் இல்லாமல் நிலத்தில் புல் மண்டி விடும் என்று ஐந்தாம் வகுப்புவரை கூடிப் படிக்க வைக்க மாட்டார்கள். தப்பித்தவறிச் சிலர் படித்தாலும் பதினோராம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்ணே பெற்றிருப்பார்கள். நகரங்களில் உள்ள கல்லூரிப் பக்கம் கால் அடிகூட எடுத்து வைக்க முடியாது.

கடலின் நடுவில் இருந்தாலும் தவித்த வாய்க்குத் தண்ணீர் குடிக்க முடியாத நிலைதான் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் ஒன்றிணைந்த தஞ்சையின் - சோழநாட்டின் நெற்களஞ்சியத்தின் நிலையும் உழைக்கும் மக்களுக்கானதாக இருந்தது.

கீழத்தஞ்சை வளமான பகுதி; கோயில்கள் நிறைந்து ஆயக் கலைகளை வளர்க்கும் பகுதி. மேலத் தஞ்சை கொஞ்சம் புது ஆற்றுப் பாசனமும் வறண்ட தண்ணீர் இல்லாத காடும் நிறைந்த பகுதி. ஆனால் உழைக்கும் மக்களுக்குக் கால்வயிற்றுக்குக் கஞ்சி கிடைக்கும். கல்வி எட்டாக் கனிதான்.

நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் குதிரைகளைச் சேர்த்துக் குதிரைகளாகவே பழக்கி விடும். கிராமப்புறம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் கழுதையைக் குதிரையாகப் பழக்கும் என்பார்கள். எப்படியோ பூண்டியில் உள்ள அ. வீரையா வாண்டையார் நினைவு அருள்மிகு புஷ்பம் கல்லூரி பல்லாயிரக் கணக்கானோருக்குத் தாய் வீடாக இருந்து படிக்க வாய்ப்பை அளித்ததோடு பணியாற்றவும் வாய்ப்பளித்ததை நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

வேறு கல்லூரியிலும் பல்கலைக் கழகங்களிலும் பல பட்டங்களைப் பெற்று, தஞ்சாவூரில் தொடங்கப் பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 1982 இல் தற்காலிகப் பணி ஒன்று கிடைத்தது. நிரந்தரப் பணி நிமித்தமாக பூண்டி ஐயாவைச் சந்திக்க வேண்டி இருந்தது.

ஒரத்தநாடு ஒன்றியப் பெருந்தலைவர் உளூர் சிவஞானம் அவர்களும் மாமா அ.வேதையன் அவர்களும் நானும் சந்திக்கச் சென்றிருந்தோம். முதல்முறை பார்த்ததற்கும் 1983இல் பார்த்ததற்கும் இடையில் இருபது ஆண்டுகளுக்கு மேல் கழிந்து விட்டன. அதே பரிவு, தயாள குணம்; தன் விவரக் குறிப்பை வாங்கிக் கொண்டு மறுபடியும் வந்து பார்க்கச் சொன்னார்கள்.

பூண்டிக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஆத. முத்தையா மாற்றுப்பணியாகத் திருவையாற்று அரசர் கல்லூரியில் பணியாற்றியபோது இருவருமாக பூண்டி ஐயாவைச் சந்திக்கச் சென்றோம்.

வேறு யாரும் இல்லை. அவரைப் பொதுவாக எல்லோரும் சந்திக்கும் இடத்தைத் தாண்டி உள்ளே சென்றோம். வணக்கம் கூறி என்னிடம் உள்ள தன் விவரக் குறிப்பைக் கொடுத்தேன். கையில் வாங்கிக் கொண்டே உட்காரச் சொன்னார்கள். நாங்கள் தயங்கியபடியே நின்றோம்.

‘அட உட்காருங்கையா’ சொல்லும்போது பரிவும் கண்டிப்பும் மிடுக்கும் ஒன்று சேர வெளிப்பட்டன. இருக்கையின் நுனியில்தான் இருக்க மனம் ஒப்புக் கொண்டது. அப்போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது பணியிலுள்ள ஒரு பேராசிரியர் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய வந்திருந்தார். அந்த பேராசிரியரும் புதிதாகப் பதவி ஏற்ற துணை வேந்தரும் நண்பர்கள்; கூட்டங்களுக்கு அடிக்கடி பேசப் போவார்களாம்.

துணைவேந்தருக்கு வாழ்த்துக் கூறிவிட்டுப் பேராசிரியர் இருக்கையில் அமர்ந்து விட்டாராம். அவர் அமர்ந்ததும் துணைவேந்தரின் முகத்தில் கடுகைப் போட்டால் வெடித்திருக்குமாம். ‘நான் உட்டாரச் சொல்ல மாட்டேனா? நீங்களா உட்கார்ந்துட்டீங்க?’ ஒன்றும் சொல்லாமல் எழுந்து வந்து விட்டாராம்.

மறுபடியும் அந்தப் பேராசிரியர் அந்தத் துணைவேந்தரைச் சந்திக்கவேயில்லை. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரின் முன் துறைத்தலைவர்களே உட்காரமாட்டார்கள். அந்தக்கால நடைமுறை; வயதுக்கு ஏற்ப விதிவிலக்கு இருந்திருக்கலாம்.

இந்நிகழ்வை இங்கே குறிப்பதற்குக் காரணம் ஐயா தாளாளராகவும் செயலாளராகவும் உள்ள கல்லூரியில் ஆத. முத்தையா தமிழ்ப்பேராசிரியர். நானோ பணி நிரந்தமில்லா முனைவர் பட்டதாரி!

பூண்டி ஐயா நான் கொடுத்த விவரக் குறிப்பைப் புரட்டிப் பார்த்தார்கள். ஓர் இடத்தைப் பார்த்தபோது அவர்கள் பார்வை நங்கூரம் பாய்ந்தது போல நிலைத்திருந்தது. அவர்கள் பார்வை எதற்காக அவ்விடத்தில் நிலைத்திருக்கிறது என்பது எனக்கு நன்றாகப் புரிந்தது.

1980களில் அவர் தலைமையில் இயங்கும் கல்லூயில் எத்தனை பேர் இவ்வளவு பட்டங்களைப் பெற்றிருப்பார்கள் என்பது தெரியவில்லை. ஐயா வியப்போடு கேட்ட ஒரு வினாவுக்கு அப்போதுதான் பொருள் புரிந்தது. ஐயா வியப்போடு தொடுத்த வினாவை என் பெற்றோர் கேட்டிருக்க வேண்டும்! உலகப் பொதுமறையை அளித்த திருவள்ளுவர் எவ்வளவு உணர்ந்து எழுதி இருக்கின்றார்! ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் / சான்றோன் எனக் கேட்ட தாய் (திருக். 69).

பல்கலைக் கழகங்கள் சேர்ந்து படித்துப் பெற்றிருந்த பட்டங்களைப் பார்த்துத்தான் அந்த வினாவைக் கேட்டார்கள். அம்மா - அப்பா இருவரும் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள். அப்பா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர்.

கல்வியின் மேன்மையை உணர்ந்தவர்; பண நெருக்கடி ஏற்பட்டபோது நிலத்தை, உழவுமாட்டை விற்றுப் படிக்க வைத்தவர். அப்போதைக்கு அதற்கு மேலே படிக்கப் படிப்பு இல்லை. ‘இன்னும் படிப்பதாக இருந்தால் படி’ என்று கூறியவர்.

நான் பெற்றிருந்த பட்டங்களைப் பார்த்துத்தான் கல்விக் காவலர் வியப்போடு வினா எழுப்பினார். புதாற்றுப் பாசனப் பகுதி, மேட்டுப்பாங்கான பகுதி என்னும் வேறுபாடு இல்லாமல் சருகு அரிக்கவும் குளிர்காயவும் சரியாக இருக்கும் என்னும் நிலையில்தான் மக்களின் வாழ்க்கை நிலையும் இருந்தது.

கொஞ்சம் வாய்ப்பு வசதி உள்ளவர்கள் மட்டும்தான் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள். இப்படிப்பட்ட சூழலை எல்லாம் நினைத்து, என்னுடைய தன் விவரக் குறிப்பைப் பார்த்து பூண்டி ஐயா கேட்டார்.

‘நம்ப பகுதிலயும் இவ்வளவு படிச்சு இருக்கிங்களா?’

இந்த வினாவில் தஞ்சை மாவட்டத்தின் சமூகப் பின்னணியே அடங்கி இருக்கின்றது. ஐயா அவர்கள் கேட்டபோதுதான் விளையாட்டுப் பிள்ளையைப் போலப் பெற்ற பல பட்டங்களின் அருமை புரிந்தது. முதுகலைத் தமிழ், முதுகலை மொழியியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் போன்றவற்றைப் பார்த்துத்தான் பூண்டி ஐயா அப்படிக் கேட்டார்.

ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பெரும் நிலக் கிழார்கள் வாழ்ந்தாலும் பூண்டி வாண்டையார் குடும்பத்தைச் சாந்தோருக்குத் தான் ஒரு கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும் என்னும் எண்ணம் எழுந்துள்ளது. உழைக்கும் மக்களுக்கு கல்வியைக் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் அவர்களின் உள்ளத்தில் இருந்துள்ளது என்பதற்கு இன்னொரு நிகழ்ச்சியைக் கூடக் கூறலாம்.

சிங்கப்பூரில் இந்தியத் தேசிய இராணுவத்தில் பணிபுரிந்த என் தந்தை தியாகி ச. சண்முகம் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் தாயகம் திரும்பி விட்டார். நாடு விடுதலை பெற்றபிறகு 1952 இல் முதல் தேர்தல் நடைபெறுகின்றது. வாக்குச் சாவடியில் முகவராக என் தந்தை உள்ளே இருக்கின்றார்.

தொகுதியின் வாக்குப் பதிவு நிலவரம் எவ்வாறு இருக்கின்றது என்பதைப் பார்வையிட ஐயாவின் தந்தையார் கிருஷ்ணசாமி வாண்டையார் எங்கள் ஊரிலுள்ள வாக்குச் சாவடிக்கு வருகின்றார்கள். தேர்தல் அலுவலர்கள், முகவர் எல்லோரும் பரபரப்போடு இருக்கின்றார்கள்.

வாகனத்தில் இருந்து இறங்கிய ஐயா அவர்களின் தந்தை நேராக வாக்குச் சாவடிக்குள் போகவில்லையாம். பள்ளிக்கூடத்தின் பின் பக்கம் சென்றதும் அங்குக் குடியிருந்த நாராயணசாமி ஐயர் என்னும் ஆசிரியர் எழுந்து வந்தாராம்.

“இந்தப் பகுதியில் காலங்காலமாகப் படிப்பு வாசனையே கெடயாது; பசங்களுக்கு ஆடு, மாடு மேய்க்கவும் உழவும் தான் தெரியும். மொரட்டுப் பாலு குடிச்ச பசங்க; கண்டிச்சுச் சொல்லிக் கொடுங்க”.

இவ்வாறு கூறிவிட்டுத் திரும்பி வந்த ஐயாவின் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையார் வாக்குச் சாவடிக்குள் போகவே இல்லையாம். வாகனத்தில் ஏறி அடுத்த ஊருக்குப் போய் விட்டாராம். என்னுடைய தந்தையார் கல்வி தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்த போது கூறிய நிகழ்ச்சி இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. தான் ஆடா விட்டாலும் தன் சதுரம் ஆடும் என்பதற்கு இந்தச் சான்றைவிட வேறு எதைக் கூறமுடியும்?

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு அதிகச் செலவில்லாமல் கல்வியைக் கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட வேண்டும் என்பதில் வாண்டையார் குடும்பம் அக்கறையோடு இருந்தது என்பது புகழ்ச்சிக்காகக் கூறப்படும் வெறும் வார்த்தை அன்று; இயல்பாக அவர்கள் குருதியில் பாய்ந்தோடும் தியாக எண்ணமாகும்.

தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள் பல தோன்றி உள்ளன. நிறுவனங்கள் பலவற்றில் எதிர் பார்க்காத அளவிற்குப் பணமழை பொழிகின்றது. பல கல்லூரிகளின் வளர்ச்சியும் அப்படித்தான் இருக்கின்றது. பூண்டி அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி 1956 இல் ஆரம்பிக்கப்பட்டது. பல கல்லூரிகள் பல்கலைக் கழகங்களாக மாறிய போதிலும் பூண்டியிலுள்ள கல்லூரி மட்டும் இப்போதும் கல்லூரியாகவே இருக்கின்றது.

கோயம்புத்தூரில் ஏற்கனவே கல்லூரியாக இருந்து நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டுள்ளது பல்கலைக் கழகத்தோடு தொடர்புடையவர் பூண்டி ஐயாவிடம் ஒரு செய்தியைக் கூறினாராம். தாளாளர் எடுத்த எடுப்பிலேயே மறுத்து விட்டாராம்.

“எங்களுடைய முதன்மையான குறிக்கோள் பின்தங்கிய இப்பகுதியில் உள்ள மக்கள் படிக்க வேண்டும். அவர்களிடம் பணத்தை அதிகமாய் பெற்றுப் பல்கலைக்கழகம் ஆக்க வேண்டிய தேவையும் இல்லை. நாங்கள் அதில் வரும் வருமானத்தை நம்பி வாழவும் இல்லை. நிலத்தில் வரும் வருமானம் எங்கள் சாப்பாட்டிற்குப் போதும்.” எனக் கூறியிருக்கிறார்.

கல்வி வணிகம் ஆக்கப்பட்ட சூழலிலும் தற்போதும் தரமான கல்வியை அனைவருக்கும் வழங்குவதில் பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி தன்னிகரற்று ஆல் போல் தழைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

பல லெட்சம் மக்களுக்குக் கல்விப் பெரும் புணை (மணி. 11:77) என இருந்த கல்விக் காவலர் கி. துளசிஐயா வாண்டையாரின் மரணம் (17-05-2021) அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் பூண்டிக் கல்லூரியின் வழி ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றிருக்கும் அனைவர்க்கும் பேரிழப்பாகும்.

எழுத்தாளராகவும் (இராகபாகம், மனோரஞ்சிதம், குரல் கொடுக்க, பயணங்கள் தொடரும், இன்ப வாழ்வு) எழுதப் படுபவராகவும் (மணம் வீசும் பொன் மலர், மனிதரில் புனிதர் பூண்டி ஐயா, A Humanist Par Excellence , பூண்டி வாண்டையார் குடும்பத்தின் அறப்பணிகள்) வாழ்ந்து மறைந்த கல்விக் காவலுக்கும் பயன் பெற்ற லெட்சக் கணக்கான குடும்பங்கள் சார்பாக அஞ்சலி செலுத்துவோம்.

பட்டங்களை இந்தக் காலம் மட்டுமல்லாமல் எல்லாக் காலங்களிலும் பெறுவது எளிது. ஆனால் கற்ற கல்விக்கு ஏற்ப நாட்டுக்கோ மொழிக்கோ ஏதாவது செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். 1983 இல் ஐயா அவர்கள், ‘நம்ம பகுதியிலயும் இவ்வளவு படிச்சு இருக்கிங்களா?’ என்று கேட்டது இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அ. வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரி பலரின் அறிவாற்றலை வெளிக்காட்டக் காரணமாக உள்ளது. இக்கல்லூரி பல பழனி மாணிக்கங்களையும் இராமுக்களையும் இராஜ மாணிக்கங்களையும் மத்திய அமைச்சராகவும் மாவட்ட ஆட்சியராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அறியச்செய்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான பேராசிரியர்களும் மருத்துவர்களும் வழக்குரைஞர்களும் அரசு அலுவலர்களும் தோன்றத் துணையாக இருந்துள்ளது.

அறியாமையில் மூழ்கிக் கிடந்தோருக்குக் கை கொடுத்துக் கரைசேர்த்து அறிவுக் கடலில் நீந்தக் கல்விப் பெரும் புணையாக ஒளிரும் கல்விக் காவலர் ஐயா கி. துளசியையா வாண்டையார் அவர்களின் பணி இருந்துள்ளமை என்றென்றும் நினைவுகூரத்தக்கது.

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It