கூடலூரில் பிறந்தவர். தற்போது கோவையில் வசித்து வருகிறார். சர்வதேச வணிக மேலாண்மையில், ஆலோசனை உளவியல் ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டதாரி. வானொலி அறிவிப்பாளர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், உளவியல் ஆலோசகர், கல்லூரிகளின் சிறப்பு விரிவுரையாளர் என பல தளங்களில் இயங்கி வருகிறார்.

இவரது சில கவிதைகளை பார்க்கலாம்.

'நீரானவள்' கவிதையில் நீரை பெண்ணாகப் பார்க்கிறார். நீர் தன் கூற்றில் பேசுவது போல் கவிதை அமைந்துள்ளது. நான்கு பத்திகளில் நீர் பேசுகிறது.

"இப்புவி எனக்கு
இப்'போதைக்கு'ப் புகுந்த வீடு"

- என்பது நயம். சொல்விளையாட்டும் உடன் சேர்ந்து கவிதையை முடிக்கிறார். ஒன்றை நினைக்கும் போது மட்டும் நீருக்கு சிரிப்பு முட்டுகிறதாம்.

"வெயிலில் ஆவியாகி விடுவதாகச்
சொல்வதை பார்த்து மட்டும்
சிரிப்பு முட்டுகிறது"

- நீரின் இயல்புகள் எளிமையுடன் முன்வைக்கப்படுகிறது.

'இரண்டாம் கதவு' என்ற கவிதையில் சொல் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கதவுகள் இருந்தால் அவை இரண்டிற்கும் சம அளவு பயன்பாடு இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது இக்கவிதை நேரடியாக நம்மோடு உரையாடிச் செல்கிறது.

'தழும்பை கொண்டு' என்ற கவிதை காதலைப் பேசுகிறது. பிரிவின் முட்பாதையை மிகக் குறைந்த வரிகளில் இவ்வாறு பதிவு செய்கிறார் ஜெயஸ்ரீ

"எப்போதும் உன்னோடு இருக்கும்
ஒன்றாக என்னை மாற்றத்தானே வேண்டினேன்
எப்போதும் என்னோடு இருக்கும்
தழும்பாக நீ ஏன் மாறிப்போனாய்?"

- என்ற கேள்வியில் ரணம் மாறிவிட்டாலும் வலியின் தீவிரம் மனதைப் பிழிகிறது. வாழ்வைக் கடந்து செல்ல இத்தழும்பு உதவாது எனக் கூறி கவிதை முடிகிறது.

"ஒன்றுக்கும் ஆகாத இத்தழும்பைக் கொண்டு
பெருவாழ்வைக் கடந்து விடுவேன் என்று
எப்படி இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறாய்?"

மனம் கனக்க கேட்கப்பட்ட இக்கேள்விக்குக் காலம்தான் பதில் தர வேண்டும்.

'வேட்கை தேக்கி' - ஒரு பாலியல் கவிதை என்றும் காதல் கவிதை என்றும் சொல்லலாம். நீள் முத்தம் பிடிக்கும் என ஒரு பெண் சொல்ல அவன்,

"அவள் தேகம் எங்கும்
தேடிக் கண்டுபிடித்தான்
முத்தத்திற்கென ஓர் மேடை"

- எனில், அந்தக் காதலன் எப்படிப்பட்டவன்...

"வெண்ணிலாவை ஒத்த தீராப்பசியின்
பயண வேட்கை தேக்கி அலைபவன்"

- என்று உணர்வு பொங்கச் சொல்கிறார் கவிஞர்.

சதுரங்க ஆட்டம் பற்றிப் பேசுகிறது "வெள்ளைக் குதிரைகள்'. இக்கவிதையின் கட்டமைப்பு நன்றாக இருக்கிறது. நேர்படப் பேசுவது வாசித்தலை எளிமையாக்கி இருக்கிறது. ஓர் இடத்தின் மொழிச்சிக்கல் வாசகனை கூர்மையாக வாசிக்கக் கோருகிறது.

"மௌனத்திட்டமிடல்களின் கூர் செயல்களில்
ஓயாச் சலசலப்பின் தீரா மழலைச் சதிராட்டங்கள்
அதிர்ந்து பின்வாங்கும்
கோர நிஜத்தின் அபூர்வ புன்னகை முகம்"

- என்ற பதம் மிக அழகாக இருக்கிறது. சதுரங்க ஆட்டம் பற்றி இப்படி வேறு யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன்.

அடுத்து கவிஞரின் இடைவெளியில் உடையும் பூ நூலிலிருந்து ஓர் அழகான காதல் கவிதை,

"கண்ணாடியில்
வேறு முகம் தெரிகையில்
முளைக்கிறது காதல்"

கண்ணாடி பார்த்தால் நம் முகம்தான் தெரியும். இங்கே வேறுமுகம் தெரிகிறது. இதுதான் கவித்துவம். ஒருவரின் மனப்பாடம் (Mental picture ) கண்ணாடியில் பதிக்கப்படுவது நல்ல உத்தி.

இதே தொகுப்பில் இன்னொரு கவிதை

"இடைவெளியில் விழாது
கொஞ்சிக் களிக்கும்
தென்னங்கீற்றுப் பறவைகள் "

- பறவைகள் கூட இடைவெளியை விரும்புவதில்லை. ஆனால், மனித மனங்கள் காதலற்று வறண்டு போயுள்ளதை வெளிப்படுத்துகிறது.

தமிழக அரசின் சிறந்த மகளிர் இலக்கிய விருதினைப் பெற்ற நூல் - அன்புத்தோழி ஜெயஸ்ரீயின் முதல் கவிதை நூல் 'எமக்கும் தொழில்'. அதில் இயற்கையின் ரசனையோடு அனுபவப் பெருந்தன்மையைப் பேசும் ஒரு கவிதை

'குளித்துவிட்டுப் பின்
கல்லெறிந்து செல்லட்டும்
குளமாகவே இரு
அனுபவ வளையங்களோடு
இன்னும் அழகாய்'

- நீர் வளையம் என்பதை அனுபவ வளையங்கள் என்கிறார் கவிஞர். மேலும் குளம் என்றால் கல் எறிதலை பழகிக் கொண்டுதானே ஆகவேண்டும். மறுக்க முடியுமா என்ன என்ற வலியும் புலப்படுகிறது.

அதே தொகுப்பில் 'பார்வை' என்ற கவிதையில் உள்ள நயம் ரசிக்கத்தக்கது.

"பூக்களைப் பார்
தொடுக்கின்ற நாரெல்லாம்
தூக்குக் கயிறாய்த் தெரியும்"

அவரவர் துயரத்தின் அடி ஆழம் கூடு விட்டுக் கூடு பாய்ந்தாலன்றி பிறர் அறிவது சாத்தியமில்லை என உணர்த்தும் கவிதையிது.

'மறுதலி' என்றொரு கவிதை,

'கம்பீரமாய்க் கடக்கும் போது
வழியில் காதலைக் கொட்டு
மிதிக்காமல்
நிச்சயம் அள்ளிச் செல்வேன் நம்பு'

- அசத்தலான தொடக்கம். புதிய சிந்தனை மொழிசார் கம்பீரத்தைப் போர்த்திக் கொண்டு நிற்பது அழகு.

கடைசிப் பத்தியில் நச்சென்று ஒரு வரி. .

"யாசகம் ஒரு சுயம் பிதுக்கும் வலி போதை"

- இவ்வாறு ஜெயஸ்ரீயின் கவிதைகளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எமக்கும் தொழில், இடைவெளியில் உடையும் பூ, தழும்பின் மீதான வருடல், பிறழ்வி ஆகிய நான்கு தொகுப்புகளிலும் பெருமளவில் கவித்துவமும் வெவ்வேறு பாடு பொருள்களுமாய் நிறைந்து இருக்கின்றன. மொழி சார்ந்த அழகு படிப்படியாகக் கூடுகிறது. சில இடங்களில் மொழிச்சிடுக்கு தவிர்க்கப்படலாம் எனத் தோன்றுவது படைப்பாளியின் புத்தாக்கப் புனைவு மற்றும் மொழித்தேடலென வலியுறுத்த விரும்புகிறேன். பெரும்பாலான கவிதைகள் கவியுலகில் அன்புத்தோழி ஜெயஸ்ரீ, நல்ல உயரத்தை அடைவார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்