மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்த போது மலையாள அபிமானிகள், நவீன எழுத்தாளர்கள், மலையாள இலக்கியவாதிகள், ஊடகக்காரர்கள் என்பவர்களில் சிலர் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் இரண்டையும் கேரளத்து இலக்கியங்களாகவே சொல்லிக் கொண்டார்கள். அப்போது மு.ராகவையங்கார் திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் வழி பதிப்பித்த சேரவேந்தர் செய்யுட் கோவை, Some Aspects of Kerala from Tamil literature என்னும் இரண்டு நூற்களும் தூசிதட்டிப் படிக்கப்பட்டன. இது குறித்த கட்டுரைகளும் வந்தன.
கேரளத்தின் பழம்பண்பாடு மொழி இரண்டுமே தமிழைப் போல் பழமையானவை என்று கூறுவதற்கு கண்ணகி வழிபாடு அப்போது தேவைப்பட்டது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் மலையாளச் சார்புடனே பேசப்பட்டன.
பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தில் வரும் பதிகத்தில் (பரணர்) கடவுளர் பத்தினிக்குக் கால்கோள் வேண்டி என்னும் வரி மலையாளத்தில் பலரும் அறிந்த வாசகம் ஆனது. இந்தப் பாடல் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றியது. இவன் சேரமான் இமயவரம்பனின் மகன் சோழன் மணக்கிள்ளியின் மகள் வயிற்றில் பிறந்தவன். இவனே கண்ணகிக்குச் சிலை எடுத்தவன். அதற்காக வடநாடு சென்றவன். இந்தப் பதிகச் செய்தி கூட மலையாளம் செம்மொழி என்பதற்குச் சான்றாக எடுக்கப்பட்டது.
இப்படி எல்லாம் இருந்தாலும் கேரளத்தில் சிலப்பதிகாரத்தின் செல்வாக்கோ கண்ணகி வழிபாடோ முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தோன்றுகிறது. இன்றும் கூட இதைச் செய்யலாம்.
ஆரம்பகாலத் தமிழ் ஆய்வாளர்களான பின்னத்தூர் நாராயண அய்யர், மு.ராகவையங்கார், எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றோர்கள் சங்கப்பாடல்களில் சிலப்பதிகார வேர் உள்ளது என்றனர். சில சான்றுகளையும் எடுத்துக் காட்டினர். இவர்களின் ஆதாரங்கள் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களுக்கு அவல் கிடைத்தது மாதிரி ஆயிற்று. அவர்கள் தங்கள் பங்குக்கு விளக்கம் கொடுத்தனர்.
சிலப்பதிகாரத்தை ஆரம்பத்தில் பதிப்பித்த தி.ஈ.ஸ்ரீனிவாச்சாரியார்(1872) தி.சு.அப்பு ரெட்டியார்(1880) உவேசா(1882) கரந்தை தமிழ்ச் சங்கத்தர்(1942) வேங்கடசாமி நாட்டார்(1946) ஆர்.கே.சண்முகம் செட்டியார்(1957) மர்ரே ராஜம்(1867) சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம்-என்பவர்கள் பழம் பாடல்களில் சிலப்பதிகாரத்தைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இருக்கவில்லை.
கண்ணகியின் கதையின் வேர் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது என்று கூறுபவர்களின் கருத்தை பார்ப்போம்.
வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் குறுநில மன்னன் தம் மனைவி கண்ணகி என்பவளைப் பிரிந்த செய்தியை கபிலர், பரணர், அரிசில், கிழார், பெருங்குன்றூர்க் கிழார் ஆகியோர் பாடியுள்ளனர் (புறநானூறு 141-147) இச்செய்தியைக் கண்ணகி கதையுடன் தொடர்புபடுத்திச் சொன்னார்கள். பண்டைக்காலத்தில் பரத்தை காரணமாக மனைவியைப் ப¤ரிவது அபூர்வமான செய்தி அல்ல; ஆகவே இக்கருத்து பொருத்தமற்றது என்று ஆரம்பகாலத்திலேயே - மறுப்பும் வந்துவிட்டது.
மருதன் இளநாகனார் “காதலனால் கைவிடப்பட்ட ஒருமுலை அறுத்துக் கொண்ட திருமா உண்ணி என்பவள் வேங்கை மரம் ஒன்றின் கீழ் நின்ற செய்தியைக் குறிப்பிடுகிறார்” (நற்றிணை 216). நற்றிணையை முதலில் பதிப்பித்த (1915) பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் “திருமா உண்ணி என்பது கண்ணகியைக் குறிக்கிறது போலும்” என்று எழுதினார். (சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் 1952 ப.24.7).
பின்னத்தூராரின் இக்கருத்தை நீலகண்ட சாஸ்திரி, ராகவையங்கார், வையாபுரிப் பிள்ளை போன்றோர் எற்றுக்கொண்டனர். அதோடு கண்ணகி கதை சங்ககால ஆரம்பத்தில் வாய்மொழியாகப் பேசப்பட்டது என்ற முடிவுக்கும் வந்தனர். நாட்டார் வழக்காற்றியலாளர்களுக்கு இது வசதியாகப் போயிற்று.
பின்னத்தூராரின் இக்கருத்தை மயிலை சீனி வேங்கடசாமி மறுத்து திருமாவுண்ணி முலையிழந்து நின்ற இடமும் கண்ணகி நின்ற இடமும் வேறானவை என்று மறுத்துக் கூறுகிறார்.
யாப்பருங்கலவிருத்தி செய்யுளியல் புறநடையில் ஆரிடைச் செய்யுள் என்பதற்குத் தண்டியலங்காரத்தில் உள்ள மேற்கோள் பாடல் ஒன்று குறிக்கப்படுகிறது.
கண்டகம் பற்றிக் கடகமணி துளங்க
ஒண்செங்குருதியின் ஓ கிடந்ததே-தெண்டிக்
கெழு தகைமை இல்லேன் கிடந்தூடப் பன்னாள்
அழுத கண்ணீர் துடைத்தகை
என்றும் இப்பாடல் பத்தினிச் செய்யுள் எனப்படுகிறது.
இந்தப் பாடலை சிலப்பதிகாரத்திற்கு முற்பட்டதாக ஊகித்த மு.ராகவையங்கார் (ஆராய்ச்சித் தொகுதி ப.238) கூறியதை வையாபுரிப்ப¤ள்ளை ஒத்துக் கொள்ளுகிறார். இதைக் கண்ணகி பாடியதாகவே கொண்டனர். இக்கருத்துக்கு 50களில் மறுப்பு வந்துவிட்டது. இதில் கண்ணகி கோவலன் பெயர்கள் இல்லை. கண்ணகியைத் தவிர வேறு பத்தினிப் பெண்ணைப் பற்றிதாக இப்பாடல் இருந்திருக்கலாம். இந்தப் பாடல் ஒரு வீரன் இறந்தது கண்டு அவனது மனைவி பாடியது போன்ற அமைப்பை உடையது. ஆகவே மு.ராகவையங்கார் கருத்து தவறானது (தமிழ்ப் பொழில், கரந்தை தமிழ்ச் சங்கம் 1959 ப.181).
தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரையில் (சூத் 100)
காதலியைக் கொண்டு கவுந்தியடு கூடி
மாதரிக்குக் காட்டி மனையினகன்று போய்
கோதிலிறைவனது கூடற்கட் கோவலன் சென்
றேத முறுதல் வினை
என்ற பாடல் வருகிறது.
சிலப்பதிகாரம் நாட்டார் மரபுடன் தொடர்புடையது என்பதற்கு இப்பாடலை ஆதாரமாகக் கொள்ளுகிறார் நா.வானமாமலை. இதையும் ஊகமாகவும் கொள்ளுகின்றனர்.
இப்படி எல்லாம் இருந்தாலும் கேரளத்தில் கண்ணகி வழிபாட்டை ஆராய்கின்ற போதும், அங்கு வாய்மொழி வடிவில் உள்ள கண்ணகி பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் போதும் சிலப்பதிகாரம் ஒருகாலத்தில் நடந்த நிகழ்ச்சி வாய்மொழி வடிவில் பரவியதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
‘கண்ணகி’ கேரளத்துத் தெய்வமாக சிலப்பதிகாரம் கேரளத்தின் ஆரம்பகால இலக்கியமாகக் கருதப்படுவதற்கு எவ்வளவோ சான்றுகளை இன்றும் தேட முடியும். ஆனால் இது குறித்த முழுமையான ஆய்வு நடந்ததாகத் தெரியவில்லை.
கண்ணகியைப் பத்தினித் தெய்வமாகக் கருதும் மனநிலை இருந்ததைச் சாலினி வாய்வழி இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார். சாலினி கண்ணகியைப் பார்த்து,
இவளோ கொங்கச் செல்வி குமலையாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்ததவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி
என்கிறார். (வேட்டுவ வரி 47-50).
இந்த வரிக்கு அரும்பத உரையாசிரியர் “இவளைத் தெய்வமாகக் கொண்டாடும் இடம் கூறினபடியாலே இவள் துர்க்கையாகவும் பிறந்தாள்” என்கிறார். (உவேசா 1960 ப.313) வேங்கடசாமி நாட்டார் “இவள் கொங்கு நாட்டிற்குத் தெய்வமாகியுள்ளவள். குடமலை நாட்டை ஆளும் செல்வி. இவள் தமிழ் நாட்டுப் பாவை. உலகோர் செய்த தவத்தின் கொழுந்து” என்கிறார். (1942 ப.233).
வேட்டுவ வரியில் வரும் கொங்கு குடமலை, தென்றமிழ் என்னும் பதங்களுக்கு ஆய்வாளர்கள் சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.
கொங்கு கேரளத்தை ஒட்டிய கோவை, ஈரோட்டுப் பகுதி, குடமலை கேரளத்தை நேரடியாகக் குறிப்பது. தென்றமிழ் மதுரை என்பது பொது வழக்கு. இந்த மூன்று இடங்களில் கேரளப் பகுதியே அதிகம்.
ஆரம்பத்தில் சேரன் மட்டுமல்ல கொங்கு இளம் கோசர், இலங்கைக் கயவாகு, சோழன் மூவரும் கோவில் எடுத்தனர். (உரைபெறு கட்டுரை). இவர்களில் கோசர் முக்கியமானவர். கேரளத்தில் கண்ணகி வழிபாடு சேரர்களால் மட்டுமல்ல கோசர்களாலும் பரவியது. கோசர்கள் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் உள்ளன.
கோசர் பழைய ஆலமரத்தடியில் கூடுவர் (குறுந் 15). கோசரின் நாடு வயல்கள் நிறைந்தது (அகநா 113). வேலெறிவதில் வல்லவர்; முருக்கம் கம்பால் செய்த பலகையில் வேலெறிந்து பழகுவர் (புறநா 169). வாய்மையைக் காப்பவர் (அகநா 305). ஆயுத வடுக்களை உடையவர் (அகநா 90). இவர்களின் தலைவர் தப்பாத வாளை உடையவன் (ம.காஞ்சி 772-773). இது போல பல செய்திகள் (அகநா 5, 196, 19, புறநா 107, 283, குறுந் 73).
கோசர்கள் கேரளத்தின் வட பகுதியில் இருந்தவர். இன்றைய - காசர்கோடு மாவட்டம் கோசர்கள் இருந்த இடம் (எஸ்.ஷெட்டர் 2010 ப.192) கண்ணகி வழிபாட்டை வட கேரளத்தில் கோசர்களும் மத்திய கேரளத்தில் சேரரும் தென்கேரளத்தில் தென்பாண்டியரும் பரவலாக்கினர் என்று கருதலாம்.
சிலப்பதிகாரப் பதிகத்தின் படி கண்ணகி நின்ற நெடுவெண்குன்றம் (திருச்செங்கோடு) இன்றைய கொடுங்கல்லூர் என்பது அடியார்க்கு நல்லாரின் கருத்து. “குற்றம் கொடுங்கல்லூருக்கு அயலதாகிய - செங்குன்றம் என்றும் மலை” என்று கூறுகிறார். (உவேசா 1960 ப.19).
கண்ணகி பாண்டி நாட்டிற்கு கணவனுடன் வந்ததற்குக் காரணம் - வெளிப்படையாக உள்ளது. ஆனால் கணவனை இழந்தபின் ஏன் சேரநாட்டுக்கு சென்றாள். இது புரியாத புதிர். இந்தப் புதிருக்கு விடை கேரளத் தொன்மங்களிலும் இல்லை.
கண்ணகிக்கு முதலில் எடுக்கப்பட்ட கோவில் மங்கலாதேவி கோவில் என்ற நம்பிக்கை இன்றும் தொடருகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் மங்கலமடந்தை கோட்டம் (வரி 63, 88) என்பதற்கு மங்கலாதேவி எனக் கொள்ளுகிறார் அரும்பத உரைகாரர். (உவேசா 1960 ப.580) இவரது காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. எனவே இக்காலத்தில் மங்கலாதேவி வழக்கு இருந்தது என்று கொள்ளலாம்.
இங்கு குறிப்பிடப்படும் மங்கலாதேவிக் கோவில் கம்பம் பள்ளத்தாக்கில் மங்கல மலையில் உள்ளது. கம்பத்திலிருந்து பேருந்தில் ஏறி பனியக்குடி சென்று காட்டுவழி 1335 கி.மீ மலையில் நடந்து இக்கோவிலை அடையலாம். குமுளியிலிருந்து கேரள எல்லை சென்று 850 மீட்டர் உயரம் நடந்து இக்கோவிலை அடையலாம். கூடலூர் வழி தெற்கு மலையில் நடந்து இக்கோவிலின் வடக்கு வாசலை அடையலாம்.
1957 வரை மங்கலாதேவி கோவில் பற்றிய செய்திகள் வாய்மொழியாகவே பேசப்பட்டன. இது பற்றி புலவர் சோமசுந்தரனார் எழுதியபோது பெரிதுபடுத்தப்படவில்லை. தொல்லியலார் இக்கோவில் கல்வெட்டுகளைப் படி எடுத்தபோது (1960) சில செய்திகளை வெளியிட்டனர். 1983 - 84ல் சென்னை ஜார்ஜ் கோட்டையிலிருந்து வெளிவந்த கெசட்டீரில் இங்குள்ள வண்ணாத்திப் பாறை என்ற இடமும் மங்கலாதேவி கோவிலும் தமிழகத்திற்குச் சொந்தம் என்றும் 1927, 1956, 1957ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வரைபடங்கள் இப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. 1975 ஏப்ரல் 18ல் கேரள தமிழக மாநில நில அளவை அறிக்கைகளிலும் இக்கோவில் தமிழகத்திற்குச் சொந்தம் என்று இருந்தது.
அறுபதுகளின் இறுதியில் மதுரை பல்கலைக்கழகம் பேராசிரியர் கோவிந்தராசன் மங்கலாதேவிக் கோவிலைக் கட்டியவன் சேரன் செங்குட்டுவன் என்னும் செய்தியை எழுதினார். இக்கோவிலில் இருந்த ஒரு பெண் தெய்வத்தைக் கண்ணகி என அடையாளம் காட்டினார். அன்றைய நிலையில் இது தமிழக அரசு இதழில் (1972 ஜூலை) செய்தியாக வந்தது. இதன் பின்னர் புலவர் ராசு (1976) துளசி இராமசாமி (1987) ஆகியோர் ஆய்வு செய்து விரிவாக எழுதினார்.
மங்கலாதேவி கோவிலை அடுத்து சிவன் கோவில் இருந்தது பின்னர் இது துர்கா தேவி கோவில் ஆனது என்றும் கருத்துகள் படிப்படியாக வெளியாயின. இக்கோவிலில் எட்டு கல்வெட்டுகளை அடையாளம் கண்டனர்.
இவை முதல் ராஜராஜனின் கல்வெட்டு; இதில் பூர்ணி என்ற சொல் உள்ளது. இது சிதைந்து விட்டது.
முதல் ராஜராஜனின் ஒரு கல்வெட்டு கோவில் பலிபீடத்தைக் குறிக்கிறது.
குலசேகரப் பாண்டியனின் (கிபி 10 நூற்) தமிழ், வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன. இவை நிபந்தம் பற்றிப் பேசுகின்றன. ஸ்ரீவல்லபதேவன் (கிபி 10ஆம் நூற்) நிபந்தக் கல்வெட்டும், இன்னொரு பாண்டியனின் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் உள்ளன. பாண்டியன் கல்வெட்டொன்று மாசாத்துவான் பெயரைக் குறிக்கிறது.
மங்கலாதேவி கோவில் சேரன் செங்குட்டுவன் கட்டியது அல்ல என்றும் அது இராஜராஜ சோழன் காலத்தது என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகளும் வேறு சான்றுகளும் உள்ளன என்பதை உறுதி செய்து உள்ளனர்.
முதல் ராஜராஜன் சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தனை வென்று அவன் மனைவியைச் சிறைப் பிடித்து தஞ்சைக்குக் கொண்டு வந்தான். அவள் மங்கலாதேவிக் கோவிலிலிருந்து பிடிமண் எடுத்துத் தஞ்சையில் கண்ணகிக்குக் கோவில் எடுக்க வேண்டினாள். இராஜராஜனும் அப்படியே செய்தான். அந்தக் கோவிலை சிங்கள அரசி வணங்கியதால் அது செங்களாச்சி அம்மன் கோவில் ஆயிற்று.
நான் தமிழினி வசந்தகுமாருடன் 2004ல் இப்பகுதிக்குச் சென்ற போது கூடலூர் மக்களிடம் செய்தி சேகரித்தேன். கூடலூர் மக்கள் மங்கலாதேவி கோவிலைக் கண்ணகி கோவில் என்றே கூறினர். இக்கோவில் சடங்கில் தாலி, சிலம்பு இரண்டும் எடுத்துச் செல்லப்படுவது நடைமுறை. கூடலூர், கம்பம் பகுதிகளில் உள்ள பகவதி கோவில்களில் கவுண்டர் சாதியினரே பூசகராக உள்ளனர். இங்கு பலியும் உண்டு. இது கண்ணகி கோவிலாக இருந்து மலையாளிகளின் செல்வாக்கால் பகவதி கோவிலாக மாறியது. இது போன்ற செய்திகளின் வழி கி.பி.11ஆம் நூற்றாண்டில் கேரள தமிழக எல்லைப் பகுதிகளில் கண்ணகி வழிபாடு இருந்தது தெரிகிறது.
கேரளத்தை ஒப்பிடுகின்ற போது தமிழகத்தில் கண்ணகி வழிபாடு மிகமிகக் குறைவு. இதற்குக் காரணம் என்ன, சிலவற்றை ஊகிக்கலாம், தமிழகத்தின் மேல் படை எடுத்த கன்னடர், தெலுங்கர், மராட்டியர் செல்வாக்கால் நாட்டார் வழிபாட்டிலும் நிறுவன சமய வழிபாட்டிலும் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்காலத்தில் கண்ணகி வழிபாடு தமிழக அயலாரின் பெண் தெய்வங்களுடனும், வைதீக மரபுடனும் கலந்திருக்க வேண்டும்.
தமிழகப் பெண் தெய்வங்களான காளி, மாரியம்மன், வட்டபுரியம்மன், செல்லத்தம்மன் ஆகியவற்றின் வழிபாட்டுக் கூறுகளில் கண்ணகி வழிபாட்டின் எச்சத்தைக் காண முடியும். வட்டார ரீதியாக துல்லியமாக கள ஆய்வு மேற்கொண்டு செய்தி சேகரித்தால் தமிழகத்தின் கண்ணகி வழிபாட்டை கொஞ்சமாவது மீட்டெடுக்க முடியும்.
சிலப்பதிகாரக் கதையுடன் நெருங்கிய தொடர்புடைய மதுரையில் கண்ணகி வழிபாடு பெரிய அளவில் இல்லை. மதுரை யாதவத்தெரு செல்லத்தம்மன் கோவிலை சிலப்பதிகார மாதரியின் வீடு என்று கூறுகின்றனர் (பி.இ.139) கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த மாதரி செல்லத்தம்மனாகக் கொண்டாடப்படுகிறாள். இக்கோவிலில் கண்ணகி சிலை உள்ளது. கண்ணகி மதுரையை எரித்துவிட்டு அமர்ந்த இடத்தில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. இப்போது இது விராட்டிப்பத்து என்ற இடத்தில் இருக்கிறது. கண்ணகி ஓய்வெடுத்த இடத்தில் (பொன்னமராவதி) அழகிய நாச்சியாரம்மன் கோவில் உள்ளது என்பன போன்ற நம்பிக்கைகள் உள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள துர்க்கையின் மார்பில் வெண்ணெய் வீசும் வழக்கம் கண்ணகியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கண்ணகி மார்பைப் பிய்த்து எறிந்தபோது அவளது மார்பில் வெண்ணெய் தேய்த்து சாந்தப்படுத்தினதால் அவள் யாதவர் தெருவைப் பாதுகாத்தாள் என்பது நம்பிக்கை. புகழேந்திப் புலவரின் கோவலன் கதை அம்மானையின் உருவாக்கம் மதுரையுடன் தொடர்புடையது என்பதை இங்கு நினைத்துப் பார்க்கலாம்.
ஈரோடு சுணக்கம்பாளையம் பகவதி கோவிலைக் கண்ணகி கோவில் என்பர். அம்மனுக்குக் கம்பம் போடுதல் நிகழ்வு கண்ணகி கோவிலைக் குறியீடாகக் கொண்டது. ஆத்தூர் கண்ணகி கோவில் வழிபாட்டுச் சடங்கில் அம்மன் உருவத்தில் தலையினை ஒட்டுதல் என்ற நிகழ்வு உண்டு. இது கம்மாளரைக் கண்டித்த செயலை நினைவுபடுத்துகிறது. சென்னை திருவொற்றியூர் சிவன் கோவில் வடக்கு வீதியில் இருக்கும் துர்க்கை கோவிலை கண்ணகி கோவில் என்பர். புகழேந்திக் கதையுடன் ஒத்து நடக்கும் சடங்குகளை இக்கோவில் வழிபாட்டில் காணலாம். இங்கே விழாவில் பொய்ப் பந்தலை எரிக்கும் நிகழ்ச்சி உண்டு. இது மதுரையை எரியூட்டுவதை நினைவூட்டும்.
- அ.கா.பெருமாள்