சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தின் தொடக்கம் மலைவாழ் மக்களைக் குறித்து அழகாகவும் விரிவாகவும் வர்ணிக்கிறது. மலையில் வாழும் ஆதிவாசி மக்களை மலைமிசை மாக்கள் என்ற தொடரால் சிலம்பு குறிக்கின்றது. அம்மக்கள் செய்யும் தொழில்கள், பொழுதுபோக்குகளைக் குறிப்பிடுகின்றது,

குருவி ஓம்பியும்

கிளி கடிந்தும்

குன்றத்துச் சென்று வைகி

அருவி ஆடியும் சுனை குடைந்தும்

அலவுற்று வருவேம்                  (குன்றக்குரவை)

kannaki 640அதுமட்டுமல்ல, மலையில் கிடக்கும் பல்வேறு மலைபடு பொருட்கள், வாழும் விலங்குகள் ஆகிய வற்றையும், எப்பொழுதும் முழவு போல ஒலித்துக் கொண்டேயிருக்கும் அருவியின் அழகு குறித்தும் படம்பிடித்துக் காட்டுகிறது. ‘பெருமலை துஞ்சாது வளம் சுரக்க’ அம்மக்கள் செய்யும் பல்வேறு சடங்கு களையும் பட்டியலிட்டு விவரிக்கிறது. தொண்டகப் பறை, சிறுபறை, கோடுவாய், கொடுமணி போன்ற இசைக் கருவிகளின் பெயர்களும் சடங்குகளோடு அவற்றுக்குள்ள தொடர்பும் சுட்டிக் காட்டப்படு கின்றன. மலை நிலத்திற்குள்ள வாசனை திரவியங்கள் குறித்தும், மன்னர்க்கு அவற்றைப் பரிசாக அளித்து வரவேற்கும் முறைகள் யாவும் குன்றக் குரவையில் அறிந்து கொள்ள முடிகின்றது. கண்ணகி குறவர் குடியினரையே சந்தித்து உரையாடுவதாகச் சிலம்பின் தொடக்கம் அமைந்துள்ளது. கோவலன் மதுரையிலே இறந்தபின் பதினான்கு நாட்கள் கழித்து கண்ணகி திருச்செங்குன்றினைச் சேர்கிறாள். மலைவேங்கை மரத்தின் நிழலில் நின்றிருந்து குறவர்கள் கண்ணகியைக் காண்கின்றனர்.

மலைவேங்கை

நறுநிழலின்

வள்ளி போல்வீர் மனம் நடுங்க

முலை இழந்து வந்து நின்றீர்

யாவீரோ!

எனக் கேட்கின்றனர். கண்ணகி கோபப்படாமல் தீவினையால் மதுரை மாநகரில் கணவனை இழந்த நான் இங்கே வந்துள்ளேன் என்று பதில் சொல் கிறாள். பின்னர் குறவர் கண்ணகியைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்கின்றனர். சேரமான் செங்குட்டுவனைக் கண்டு கண்ணகி குறித்துத் தெரிவிக்கின்றனர். சேரமன்னன் கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டான் என்பதும் சிலம்பு கூறும் வரலாறு.

அவ்வாறு சேரமன்னன் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோயில் இன்னும் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் ‘மங்கலதேவி கோயில்’ என்ற பெயரில் நிலைபெற்றுள்ளதை அனைவரும் அறிவர். இக்கோயில் குமுளியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப் பகுதியில் பளியங்குடி என்னுமிடத்திலிருந்து

6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத் தன்று ஒருநாள் மட்டுமே மக்கள் இக்கோயிலுக்குச் சென்று வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். இக் கோயில் கேரளப்பகுதியில் இருப்பதால் கோயில் கவனிப்பாரின்றிச் சிதிலமடைந்து காணப்படு வதாகவும், புதிய கோயில் கட்டுவதற்கு மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை முயற்சி எடுத்து வருவ தாகவும் விக்கிமீடியாவிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது. இந்த அறிமுகம் சிலப்பதிகாரத்திற்கும், பழங்குடி மக்களுக்கும், இடுக்கி மாவட்டத்திற்கு முள்ள பழைய தொடர்பை அறிந்துகொள்ள உதவும்.

இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். முதுவன், மலைப்புலயன், மன்னான், உராளி, மலை அரையன், உள்ளாடன், மலைவேடன், மலைப்பண்டாரம் போன்றோர் அங்கு வாழும் முக்கியமான ஆதிவாசி மக்களாவர். இடுக்கி மாவட்டம், கிட்டத்தட்ட, முழுவதுமே வனப்பகுதியாகும். பெரியார் ஆறு பாய்ந்து, மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றது. இந்த ஆதிவாசி மக்களின் மொழி தமிழ், மலையாள மொழிகளின் கலவையாக அமைந்தும், தனித்துவம் பெற்றும் விளங்குகின்றன. இம்மக்களிடையே கண்ணகி-கோவலன் கதை பிரபலமாக இருந்து உள்ளது. குறிப்பாக முதுவன், மன்னான் ஆகிய ஆதிவாசி மக்களிடையே கண்ணகி-கோவலன் கதை வழங்கி வந்ததைக் கடந்த காலத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்து பதிவு செய்துள்ளனர். எரிக் மில்லர் என்ற அறிஞர் முதுவன் பழங்குடி மக்களிடையே காணப் படும் கோவலன்-கண்ணகி கதையை இளங்கோவடி களின் சிலம்போடு ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதி யுள்ளார் (2016 ஆசியவியல் கழகம் நடத்திய கருத்தரங்கக் கட்டுரை). முதுவர்கள் கண்ணகியை முதுகில் சுமந்து கொண்டு வந்ததாலேயே முதுவர் என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. மன்னான் என்ற ஆதிவாசி மக்களிடையே கோவலன்-கண்ணகி கதை வழங்கி வந்துள்ளது. இதனைக் குறித்து டாக்டர் நசிமுதின், கேரளப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இனி, இடுக்கி மாவட்டத்தில் மறையூர், காந்தளூர் பஞ்சாயத்துகளில் வாழும் மலைப்புலயர் மக்களிடையே களஆய்வு நிகழ்த்தும்போது ஒரு தகவலாளி கோவலன்-கண்ணகி கதையைச் சொன்னார். அவர் சொன்ன கதை அவரது கிளை மொழியிலேயே கீழே தரப்படுகின்றது.

தகவலாளி பெயர் கண்ணம்மா, வயது 64. பொங்கம்புளி என்ற ஆதிவாசி குடியைச் சேர்ந்தவர். அவருக்கு இந்தக் கதை அவருடைய பெற்றோர் கூறியதாகச் சொன்னார். கண்ணகி என்ற பெயரை ஒருசில இடங்களில் கர்ணகி என்றும் மாற்றிச் சொன்னார். கோவலன் பெயரைச் செட்டியார் என்று அடைமொழி சேர்த்துக் கோவாலன் செட்டியார் என்று சொன்னார். அவர் கதை சொல்கிற எடுத் துரைக்கும் முறை மிகவும் உணர்ச்சிமயமாக இருந்தது. இடையிடையே கண்ணகியைத் தெய்வ மென்றும் அவதாரம் என்றும் உணர்ச்சி மேலிடக் கூறினார். கதை ரொம்ப பெரிசு, இப்பொ சுருக்கி வந்திருக்கு என்று இருமுறை இடையில் கூறினார். கண்ணகி தனது மார்பைப் பிய்த்து எறிகின்ற செயலை எச்சரிக்கையோடு எடுத்துரைத்தார். தயக்கத்தோடு கூறினார். தகவலாளி இக்கதையை வேறு இன மக்களிடம் இருந்தும் கேட்டும் கூறியிருக்க வாய்ப் புள்ளது. வெவ்வேறு மலைப்புலயர் குடிகளில் கோவலன்-கண்ணகி வழங்குவதாகத் தெரிய வில்லை. அத்தகைய கதை தெரியாது என்றே பலரும் கூறினர். இனி, கதை தொடர்கிறது.

கண்ணகி பாண்டியனின் மகள்

பாண்டிய ராசனுக்கும் பாண்டிய ராணிக்கும் கொளந்த இல்ல. ரெம்ப நாளா ஏதோ தெய்வ பத்தியா இருந்து ஒரு பெண் கொளந்தெ கெடச் சிருக்குதாம். கொளந்தெய ராஜ சபையிலெ வெச்சு ரெம்ப பாராட்டி வெச்சிருக்காங்க. அப்போ, சோசியரெ கொண்டு வந்து சோசியம் பாத்திருக் காங்க. சோசியம் பாக்கையிலெ, இந்தப் பெண் கொளந்தெ கிழக்கு முகமா திரும்பி வாய்விட்டு சிரிசா தெம்மதுரெ தீப்பிடிக்கும். வடக்கு முகமா (பாத்து) வாய்விட்டு சிரிசா வடமதுரெ தீப்பிடிக்கும். அப்ப இந்தக் கொளந்தெய வளத்த வேண்டாம். மதுரை அழிஞ்சிரும். வளக்காம கொண்டு போயி தங்கத்துலெ பெட்டி செஞ்சி கடல்ல வுட்ருங்கான்னு சொன்னாரு. அதெ மாரியே தங்கத்துலெ பெட்டி செஞ்சி கொண்டு கடல்ல விட்டாங்க. பெத்த தாயி விடமாட்டாள் எந்து எவ்வளவோ தடபட்டிருக்கா (தடுத்திருக்கிறாள்).

கப்பல் செட்டிமாரு

அப்போ... மாசானம் செட்டியாரும் மாநாய்கன் செட்டியாரும் மச்சானும் மச்சானும் - கப்பல் யாபாரிங்க. இந்த மாசானம் செட்டியாரு வீட்லெ ஒரு பையன் இருக்கான். இவங்க ரெண்டு பேரும் கப்பல்ல போய்க்கொண்டு இருந்தாங்களாம். அப்போ, அந்தப் பெட்டி மெதந்து போய்க் கிட்டிருக்காம். தண்ணியிலெ என்னமே ஒண்ணு மெதந்து போய்க் கொண்டிருக்குது. அதெப் போயி பாப்போம். எந்து மச்சானும் மச்சானும் போனாங் களாம். அப்போ... இந்த ரெண்டு பேரு தம்முள ஒரு சவால்.

‘பெட்டிக்குள்ள என்ன இருக்கோ அது எனக்கு. பெட்டி வந்து உனக்கு.’

இப்படி இவுங்க ரெண்டு பேரும் எடுத்துக் கொண்டு பாக்கும்போது அதுக்குள்ள கொளந்தெ இருக்குது. கொளந்த இல்லாத செட்டியாரு கொளந்தெய எடுத்துக்கிட்டாரு.

மாங்காய கொடுத்து கல்யாணம்

வீட்டுக்குப் போனா என்னாயி போச்சி? கொளந்தெ வளந்து வந்தா நம்ம பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருவோம். அவுங்க மச்சானும் மச்சானும் தானே. அப்படின்னு சொல்லிட்டு அவுங்க கொளந்தெய வளத்திட்டு வந்தாங்க. அஞ்சு வயசு ஆகும்போது கொளந்திக்குக் கல்யாணம் பண்ணிட்டாங்க. இந்தக் கொளந்தெக்குக் கல்யாணம் என்னந்தே தெரியாது. மடியிலெ வெச்சுதான் கோவாலன் செட்டியாரு அந்தக் கர்ணகியெ கல்யாணம் செஞ்சாரு. மாங்காயெ கையிலெ குடுத்துதான் கொளந்தெ சாவட்டுக்கிட்டு இருந்தசெல தாலி கெட்டுனாங் களாம்.

மாதவி நாட்டியம்

கல்யாணத்துக்குத் திருக்கடையூர் சிந்தாமணி மக(ள்) நாட்டியத்துக்கு வாரா. திருக்கடையூர் சிந்தாமணி மக மாதவி ஒரு வேசி. மாதவி நாட்டியம் ஆடயிலெயே கோவாலன் செட்டியாருக்கு மாதவி பேர்ல நோட்டம் ஆயிடுச்சு. அப்ப... என்னா பண்ணிட்டா, “நான் நாட்டியம் ஆடி கடெசியிலெ ஒரு மாலையெ எடுத்துப் போடுவேன். அந்த மாலை யாரு கழுத்துலெ விளுகுதோ அவுங்களெ நான் கொண்டுகிட்டு போயிடுவேன்” எந்து சொல்லிட்டா. அதேபோல மாலை கோவாலன் செட்டியாரு களுத்துலெ வுளுந்தது. அவ வாக்குபடி அவனெ அவளோடெ விட்டுறணும்.

ஆனை வால் மாதிரி தாலி

இந்தக் கொளந்த (கண்ணகி) இன்னும் வளந்து கிட்டிருக்குது. வளந்து பத்து பதினைஞ்சு வயசாகி புஷ்பவதி ஆகுதில்ல. அதுக்கப்புறம் ஒரு நா(ள்) அலங்காரம் செஞ்சி சடங்கெல்லாம் வெக்கிதாங்க. ஒரு நா(ள்) கண்ணகி கண்ணாடி பாக்குறா. பாக்கும் போது கழுத்துலெ ஒரு தாலி இருக்குது. தாலின்னா எப்படி? ஆனை வால் மாதிரி சைஸ். ஆனை தலை மாதிரி தாலி. இப்படி இருக்கையிலெ “தாலின்னா என்ன அர்த்தம்? இது நமக்குத் தெரியவே தெரியாதே” அப்படின்னு தாதிமாருகிட்டெ கேட்டிருக்கா. அப்புறம்தான் சொல்லுதாங்க. உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. இந்தக் கல்யாணம் எப்படி ஆச்சுன்னு கண்ணகி கேட்டுருக்கா. ‘தாலின்னா என்னா?’ ஆணும் பெணும் வெச்சு கல்யாணம் முடிச்சு வெக்கிறது. சொந்தங்களு விட்றகூதாதுன்னு ஒன்னெயும் அவனெயும் கெட்டி வெச்சுட்டாங்க.

கோவலனை மீட்டு வருதல்

கல்யாணம் ஒரு ஐதீகத்துக்குத்தான். வேறெ குடும்பமெல்லாம் கிடையாது. குடும்பம் ஆயி பொழுச்சவ மாதவிதான். கண்ணகி இல்லெ. கண்ணகிதான் தெய்வமாச்சே. இப்டி இருக்கையிலெ அது எங்கெ இருக்க, என்னா விவரம் எந்து கண்ணகி கேட்டிருக்கா. இன்னென்ன மாதிரி காரியம் அவ கொண்டுகிட்டு போயி இத்தனெ வருஷம் ஆச்சு. இன்னும் வந்து சேர்லை - எந்து தாதிமாரு சொல்லிருக் காங்க. அதற்கு கண்ணகி, சரி... அப்படியா இருந்தா, நானு அவரெ கொண்டுகிட்டு வரணும்! என்று சொல்லிருக்கா. மாதவி கோவலனை விட்டபாடே யில்லெ. Ôமாதவி சொன்னா நீ கொண்டு போகணும் எந்தா அந்த நகெ போக்குவரத்து சீவி, சொரண்டி வெச்சுட்டு அவரெ போல ரூவம் செஞ்சி வைச்சுட்டு நீ கொண்டு போ’ அப்படி சொன்னா.

‘சரி, பரவாயில்லெ. நான் அப்டியே பண்ணிடறேன்’ எந்து கண்ணகி சொல்லிட்டு எல்லாம் செஞ்சிட்டுக் கோவலனெ கூட்டிகிட்டு வாறா. கோவலன் செட்டியாரு நகை நட்டு இல்லாம பாளும் கௌவனா தடிய ஊணிக்கிட்டு வாறாரு.

நடுவழியில் கொள்ளைக்காரர்

கண்ணகி கோவலனெக் கூட்டிகிட்டு வாறா. வரும்போது என்னாயிடுச்சு எனக்கு முடியல்ல. “ரெம்ப தாகமாக இருக்க. தண்ணி கொண்டுகிட்டு வாங்க”ன்னு கேட்டுருக்கா கண்ணகி.

“நான் இந்தக் காட்டுலெ உன்னெய மட்டும் விட்டுட்டு எப்டி போவேன்.”

‘எனக்குப் பயமில்ல நீங்க போங்க.’

கோவலன் தண்ணி தேடிக்கிட்டு போயிட்டாரு. அப்போ கொஞ்சம் கொள்ளேகாரு வந்துட்டாங்க. இவ போட்டிருந்த நகை, அழகு இதெல்லாம் பாத்துப் புடுங்க வந்துட்டாங்க. கொள்ளேகாரு நகையெல்லாம் கழட்டி குடுன்னு கேட்டாங்க.

‘நகெயெல்லாம் கழட்டி குடுக்கலாம். அதெபத்திப் பரவாயில்லெ. ஆனா நீங்க இங்கெயிருந்து போக முடியாது’ - கண்ணகி.

‘என்னா... நீ ஒரு பொண்ணா நடுகாட்லெ இருந்துகிட்டு இப்டி பேசுத. எங்களெ நீனாலெ அடிக்க முடியுமா?’ - எந்து கொள்ளேகாரு கேட்டாங்க.

கண்ணகி நகெயெல்லாம் கழட்டிக் குடுத்துட்டு உக்காந்துகிட்டிருந்தா. கொள்ளேகாரு நகையெ எடுத்துக்கிட்டு போகையிலெ ஒருத்தன் மட்டும் இவ அழகெ பாத்து இவளெக் கொண்டுகிட்டுப்போகப் பாத்திருக்கான். கண்ணகி எல்லாரையும் குத்துக் கல்லா மாத்தி சாபம் குடுத்துட்டா. மரத்துமேல இருந்த ஒருத்தனை வெளவாலா மாத்திட்டா.

கோவலன் தண்ணி கொண்டு வந்து பாக்கையிலெ, ‘குத்துக்க கல்லே இல்லாம இருந்தது. நெறைய குத்துக்கல்லு இருக்கே எந்து கேட்டாரு.’ இந்த அம்மா விவரத்தைச் சொல்லிச்சு. குத்துக்கல்லா இருந்தவங்களெ மனுஷாளா ஆக்கியாச்சு.

சிலம்பை விற்று மோர் யாவாரம்

பௌப்புக்கு வழியில்லெ. தெருவுக்குள்ள போயி யார்கிட்டெயும் பிச்சையும் கேட்க முடியாது. மாதவி வந்துட்டு எல்லாத்தையும் பறிச்சிட்டா. ஒண்ணுமே இல்ல. கால்ல சிலம்பு இருக்குது. அதைத் தாறேன். கொண்டு போய் யாவாரம் பண்ணி பொளச்சி வாங்க. கால்ல இருந்த செலம்பு என்னாயிடுச்சு அழுதுது.

‘இல்ல... நீ போ... நான் ஒன்னே ஒரு நாளக்கித் திருப்பி எடுத்துடறேன்’ - எந்து கர்ணகி சொல்றா.

சிலம்ப அடகுக் கடெயிலெ வெச்சுட்டு ‘என்ன யாவாரம் பண்ணலாம்ன்னு யோசிக்காரு. ஏதாச்சும் ஒண்ணு பண்ணுங்க’. ரெண்டு பேரும் சேந்து யோசனை பண்ணிக்கிட்டிருக்காங்க.

‘மோரு யாவாரம் பண்ணுவோம்.’

மோரு தெருத் தெருவா எடுத்துக்கிட்டு போயிருக்காங்க. மோரு யாவாரமே ஆகல்லெ.

‘யாவாரமே இல்லெம்மா, நாம என்னா பண்ணறது’-ன்னு சொல்லிருக்காரு.

‘மோரு யாவாரம் நல்லா ஆச்சின்னா ஆயிரம் வெளக்கு போடறன்-னு காளிக் கோயிலுக்கு நேர்ச்ச போட்டுருங்க’ - என்று கண்ணகி சொன்னா. மோரு எடுத்துக்கிட்டுப் போகையிலெ நல்ல யாவாரம் ஆச்சு. நேர்ச்ச போட்டதனாலெ.

கோவலன் வெட்டப்படுதல்

காளிக்கோயிலுக்குப் போட்ட நேர்ச்சயெ செய்யனும் இல்லெ. ஆயிரம் வெளக்கு போயி கோயில்ல போட்டாச்சு. பாண்டி ராசனோடெ அனுபோகம் (அனுமதி) இருந்தா மட்டும்தான் கோவிலுக்குள்ள போக முடியும். இந்தச் செய்தி பாண்டி ராசனுக்குத் தெரிஞ்சது. ராஜன் பாத்தருக்கான். ‘என்னடா, கோயில்ல வெளக்கு எரியுது. வாளுக் காரன் தோளுக்காரன் வாங்கப்பட்ட சம்பளக்காரன்’ யாராலும் சரி... ‘இப்ப அவனெக் கொண்டு வந்து வெட்றா-ன்னு சொல்லியாச்சு. அதேபோல கோவாலஞ் செட்டியாரெக் கொண்டு வந்து வெட்டியாச்சு.

கண்ணகி மதுரையை எரித்தல்

‘என்னடா- போனவரு வரவேயில்லயே’

கண்ணகி போயிப் பாத்திருக்கு. கோவலன் வெட்டப்பட்டு கீழே கெடக்குறான். எந்தக் காரணத்தைக் கொண்டும் உறுப்புக்கள் அழிஞ்சிடக் கூடாது-ன்னு ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு உயிரு காவல். கண்ணுக்கு மட்டும் கட்டெறும்புதான் காவல்.

கண்ணகி ராஜன்கிட்டெ போயி கேட்டிருக்கா. ‘இப்படி ஏன் அனுபோகம் இல்லாம என் புருஷனை எப்படி வெட்டலாம்.Õ

அதற்கு ராஜன் சொன்னான் ‘நீங்க எங்க அனுபோகம் இல்லாம கோயிலுக்குள்ள போகக் கூடாது. வெளக்கு ஏத்தக்கூடாது’. பெத்த அம்மெ அப்பன் கூடயே மகளுக்குப் பயங்கர கோவம் வந்தாச்சு. கண்ணகிக்கு பயங்கர கோவம். ஆங்காரம் வந்தாச்சு. இந்த நாலு திசை எந்தப் பக்கம் சிரிக்கிறாளோ அத்தனெயும் தீ! வாய்விட்டு சிரிசால் தீ! தீயெ கட்டுப்படுத்த முடியல்ல. எல்லாம் அல கோலமா அங்கிட்டு இங்கிட்டு போக முடியல்ல.

வலகை மார்பைப் பிச்சி எறிஞ்சோடனே வடமதுரெத் தீப்பிடிச்சுது. இடகை மார்பைப் பிச்சி எறிஞ்சோடனே தெம்மதுரை தீப்பிடிச்சுது. எங்கப் பார்த்தாலும் தீ. பயங்கர ஆங்காரத்துலெ நின்றிருக்கா. ஒண்ணும் அவளால முடியல்ல. ஆங்காரம்-னு சொன்னா அழிக்கிற ஆங்காரம்.

இடையமாரு கோபத்தைத் தணித்தல்

கண்ணகி நிக்கையிலெ இடையமாரு மாடு ஆடு மேய்க்கிறவங்க ஓடிவந்து அவளோட மார்பை எடுத்து துணி போட்டுக் கெட்டிட்டு சொளகு இருக்குல்ல (முறம்) அதனால வீசி குடுத்திருக்காங்க அவளது ஆங்காரம் தணியறதுக்கு வேண்டி. ஆங்காரம் தணிஞ்சிடுச்சு. பாக்கையிலெ இடையமாரு சுத்தி நிக்கறாங்க. அப்ப அவங்களுக்குக் கண்ணகி வாக்கு குடுத்தாளாம். “யாரு வீட்லெ தீப்பிடிச்சாலும் எடையரு வீட்ல தீப்பிடிக்கக் கூடாது.”

“நீங்க நாட்டுல எல்லாம் தீப் பிடிச்சா, அந்தப் பட்டணமே அழிஞ்சிடும். எங்களுக்குத் தீப்புடிச்சா இந்த விட்ல மட்டுந்தான் எரியும். அடுத்த வீட்ல தீப்பிடிக்காது. அப்ப அந்த எடையருமாரு யாரா இருக்கும்?” (கதை சொன்னவர் கூற்று)

மதுரையிலெ நடந்த தீக்கலகத்துலெதான் நாடு அங்கிட்டு இங்கிட்டு பிரிஞ்சு கலைஞ்சி மதுரையி லெருந்து வந்தவங்கதான் நாங்க. இந்த அளவுலெ கதையெ முடிச்சுக்கிறேன். (கண்ணம்மா, வயது 64, பொங்கம்புளி, இடுக்கி)

முடிவுரை

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திற்கும் மலைப்புலயர் சொன்ன கோவலன்-கண்ணகி கதைக்கும் ஏணி வைத்தாலும் எட்டமுடியாத அளவுக்கு வேறுபாடுகள் காணப்படுகின்றன. எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து வந்ததனால் இத்தகைய வேறுபாடுகள் ஏற்பட்டனவா? பல்வேறு நாட்டுப்புறக் கதைகளில் வரும் பகுதிகளை இணைத்து புதிய புதிய கதைகளை உருவாக்கும் கதை சொல்லும் மரபு இக்கதையிலும் தொடர்கிறது. செவ்வியல் கதைகள் நாட்டுப்புற மக்களின் கைவண்ணத்தில் அவர்களின் பின்புலத்திற்கேற்ப மாற்றம் பெறும் அழகினை மலைப்புலயர் சொன்ன கதையிலும் காணலாம்.

Pin It