மலையாளச் சிறுகதைகளுக்கு 125 ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்டது. மலையாள உலகில் இதையட்டி சிறந்த 125 சிறுகதைகள் என்ற வெவ்வேறு பட்டியல்களோடு பல புத்தகங்கள் வந்து விட்டன. மலையாள இலக்கிய உலகில் வெங்கையில் குன்ஷிராமன் நாயர் என்ற பத்திரிகை யாளர் 1891 இல் எழுதிய நகைச்சுவை கதை ஒன்று முதல் கதையாக கணிக்கப்படுகிறது. கெ.ஏ சுகுமாரன் மலையாள இலக்கியத்தின் முதல்வர் என்ற பாராட்டுகளோடு ஜனங்களிடத்தில் மின்னலிட்டவர். கேலி சித்திரம் உத்வேகம் நிறைந்த வசனம் தொடர்கள், காதல், ஆபாசம் என்ற கலவையுடன் கொடுத்தார். அவர் கதைகள் சுவாரஸ்யத்தளத்துடன் விளங்கின மலையாளத்தில் ஆரம்ப காலகட்டத்தில் கெ.சுகுமாரன், மூர்க்கோந்து குமரன், அம்பாடி நாராயணன் பொதுவான் போன்றோர் வெளிப்பட்டனர். நிகழ்ச்சிகளை கதையாக்கி சிறப்பு செய்தனர்.

ஈவி கிருஷ்ணன் பிள்ளை போன்றோர் முன்னிலை வகித்தனர். அடுத்த தளத்திற்கு மலையாள கதைகளை எஸ். ராம வாரியார், எம்.ஆர்.பட்டத்திரி பாடு போன்றோர் நுழைந்து ரியலிஸம் ரொமாண்டிசிசம் கலந்து தந்த காலகட்டத்தைப் பிரதிபலித்தனர். 1930- 35 களில் யதார்த்த அடித்தளங்களில் கேரள சமூக வாழ்க்கை ஓரளவு வெளிப்பட்டது. முந்திரில் கோடு ராம வாரியார், பட்டத்திரி பாடு போன்றோர் இதில் முன்னணி வகித்தனர் . பிறகு வந்த எழுத்தாளர்களில் கேசவதேவ், பொற்றெக்காடு, காரூர், தகழி, பஷீர், லலிதாம்பிகார்ஜனா போன்றோர் சமூக தளங்களுக்கான பொருளை எடுத்துக் கொண்டனர், பாட்டாளி வர்க்க இலக்கியம் ஒருபுறம் கோலோச்சியது. பஷீர் சமூக சிக்கல்களையும் வெளிப்படுத்தினார். கலை பிரச்சாரம் அன்றி வேறில்லை. தானும் முற்போக்குக் கருத்துகளின் பிரசாரகன் என்று கேசவதேவ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் பிரகடனப்படுத்திக் கொண்டனர். பஷீர் போன்றோரின் சிறுகதைகளில் வறுமை சார்ந்த சித்திரங்கள் நகைச்சுவையாகவும் எள்ளலும் கலந்து ஒரு புதிய பரிமாணம் பெற்றன.

தகழியின் கதைகளில் ஒரு புறத்தில் மாப்பசான் பாதிப்பும், செகாவின் ஆழமும் கருக்கொண்டு ஆன்மீகம், வறுமை என்று ஊடாடின. பொன்குன்னம் வர்க்கி, கோவூர், கிருஷ்ணன் குட்டி உருபு போன்றோர் மத்தியதர வர்க்க பிரச்சினைகளையும் வாழ்வியலையும் வெளிப்படுத்தினர். இன்னொருபுறம் கேரளா வாழ் வியலை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தின.

அடுத்ததாய் அந்தப் புதிய தலைமுறை காலத்தின் மாற்றத்தை பிரதிபலிப்பைக் காட்டியது. எம் டி வாசுதேவன் நாயர், குட்டி கிருஷ்ணன், ராபி, வெட்டுவன் போன்றோர் சமூக வாழ்வியலையும் வெளிப்படுத்தினர். அவை இன்னொரு புறம் கேரளா வாழ்வியலை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தின. அடுத்து வந்த புதிய தலைமுறை கால மாற்றத்தின் பிரதிபலிப்பைக் காட்டியது. எம்.டி வாசுதேவன் நாயர் கதைகளில் நசிந்து போன நாயர் சமூக நினைவுத் தொடர்கள் மனோதத்துவம் கலந்த வார்ப்பில் மிளிர்ந்தன. முகுந்தன், சக்காரியா, சி வி பாலகிருஷ்ணன், கமலதாஸ், ஹரிகுமார், பத்மநாபன் போன்றோரின் சிறுகதைகள் தனித்தன்மையாக விளங்கின. பிரஞ்ச் ஆட்சியில் இருந்த நேரத்தில் பிறந்த முகுந்தன் கதைகள் மய்யழி நதிக்கரை மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்தன. அவர் கதைகளில் நினைவுகள் வரலாற்றில் சிறு சிறு பகுதிகளாக நின்றன. எந்தக் காலகட்டத்திலும் தெளிவான கூறுகளைக் கொண்டவை இப்போது, இப்போக்கு பின்நவீனத்துவ தாக்குதலில் இன்னும் தீவிரம் பெற்று மலையாள சிறுகதைகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

இந்தப் பரிமாணத்தைக்காட்ட ஆனந்தகுமார் 12 கதைகளை மொழிபெயர்த்துத் தொகுப்பாக்கியுள்ளார். பல கதைகள் தாமரை இதழில் வந்தவை. தகழி முதல் முகுந்தன் வரை வகை வகையான கதைகள் உள்ளன. மாதவிக்குட்டி என்ற பெண்ணும் இதில் இருக்கிறார். முதல் கதை பஷீரின் உலகப்புகழ் பெற்ற மூக்கு. இது யதார்த்தம் தாண்டியும் வெவ்வேறு பரிமாணங்களுடன் பயணிக்கிறது உச்சமான எள்ளலுடன்... கடைசிக் கதை அசோகன் செரு வில்லின் “இரண்டு புத்தகங்கள்” யதார்த்த கதை களின் உச்சம் இது. இப்படி வகை வகையான கதைகள் உள்ளன. பலரின் மொழிபெயர்ப்புகளில் சுருக்கப்பட்டதனம் இருக்கும். சிரமமான பகுதிகள் மொழிபெயர்க்கப்படாமல் விடுபட்டிருக்கும். சமஸ்கிருதமயமாக்கல் பாதிப்பு இருக்கும். நேரடித் தன்மை இருக்காது. இவையெல்லாம் களைந்த சிறப்பான மொழிபெயர்ப்புதான் ஆனந்தகுமாருடையது. பல்வேறு இலக்கியப் போக்குகளைக் காட்டும் கலை டாஸ்கோப்பாக இத்தொகுப்பு உள்ளது. அதற்குக் காரணமாக காக்கநாடன், ஓ.வி. விஜயன், சேது போன்றோரின் கதைகளும் உள்ளன. மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் அவர்.

'கடற்கரையில்' - மலையாளச் சிறுகதைகள்

தமிழில்: பா.ஆனந்தகுமார்

வெளியீடு: தமிழினி

சென்னை

ரூ. 110/-