தமிழல்லாத பிற மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் பின்னர், அவை ஆங்கிலத்தில் இருந்து, தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுவதுதான் பெரும்பாலும் நடந்து வருகிறது.

jeyaseel stephen book on dictionaryஅதில், மூல மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் மூல இலக்கியத்தின் மொழியில் போதுமான அளவுக்குப் புலமை பெற்றவரா, மூல இலக்கியத்தின் பொருளைத் துல்லியமாகப் புரிந்து கொண்டாரா, அந்த மொழியினத்தின் நிலவியல், பண்பாடு போன்றவற்றை அறிந்தவரா, மூல நூல் சொல்ல வரும் கருத்தியலை ஏற்றுக் கொள்கிறவரா ஆகியவை கவனிக்கப்பட வேண்டியவை. இவற்றையெல்லாம் அறிந்து கொண்ட பிறகுதான், மொழிபெயர்த்தவரின் ஆங்கிலப் புலமையையும், அவருடைய மொழிபெயர்ப்புத் திறனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதனால் தான், தமிழல்லாத மொழியின் இலக்கியம் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் போது, அந்தப் பல ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து, அதிலிருந்து நாம் தமிழ் மொழிபெயர்ப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில், தமிழல்லாத ஒரு மொழியின் எழுத்து, ஆங்கில மூலமாக இல்லாமல், நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது துல்லியமான பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!

அந்த வகையில், தமிழறிந்த ஒருவர் ஆங்கிலத்தின் உதவியின்றி, போர்ச்சுக்கீசு மொழியைக் கற்றறிந்து கொள்ளவும், இவ்விரண்டு மொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்பு செய்யவும் உதவும் வகையில் போர்ச்சுக்கீசு – தமிழ் அகராதி ஒன்று அவசியமாகிறது. இந்தச் சூழலில் ஆய்வறிஞர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் எழுதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள போர்ச்சுக்கீசு - தமிழ் அகராதி அவசியமான நூல் ஆகும்.

கி.பி.1507ஆம் ஆண்டு போர்த்துக்கீசிய வணிகர்கள் முதன்முதலாகத் தமிழகத்துக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, மதபோதகர்கள் மறைபரப்புப் பணியில் ஈடுபடுவதற்காக இங்கே வந்தனர். அப்படி வந்தவர்கள் தமிழ்மொழியைக் கவனமாகக் கற்றனர். அவர்கள் தமிழ் மொழியின் தன்மையை, வலிமையைப் புரிந்து கொண்டதன் விளைவாக, செய்யுள் வடிவில் இருந்த தமிழ் இலக்கணத்தை உரைநடை வடிவில் போர்ச்சுக்கீசு மொழியில் எழுதினர்.

இத்தகைய சுவடிகள் அச்சுக்குச் செல்லவில்லை. அவர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கே அவை உதவி வந்தன.

கி.பி.1549ஆம் ஆண்டு முதல் போர்த்துக்கீசு - தமிழ் அகராதிகள் உருவாக்கப்பட்டு வந்தன.

அன்றீக் அன்றீக்கசு, பல்தசார் த கோசுதா, யாக்கோமே கொன்சால்வசு, பல்தசார் எசுதவசு த குருசு, யூசிபியோ து ரொசாரியோ, ஒர்னராத்தோ தே உதின் ஆகியோரால் போர்த்துக்கீசு - தமிழ் அகராதிகள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டன.

அவை ஆவணக் காப்பகங்கள் மட்டுமின்றி, நூலகங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று நூலாசிரியர் ஜெயசீல ஸ்டீபன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நூலகங்கள் :

  • கிருட்டிணதாசு சமா கோவா அரசாங்க மத்திய நூலகம் , பனாசி;
  • புவியியல் சங்க நூலகம் , இலிசுபன்;
  • இரண்டாம் விக்டர் இமானுவேல் மத்திய தேசிய நூலகம்;
  • தேசிய நூலகம், பாரீசு.

இந்த நூலின் சிறப்பு :

இந்த நூலில், சொற்கள் சுவடிகளில் உள்ளவாறே கொடுக்கப்பட்டுள்ளன.

சுருக்கக் குறுக்கங்களும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன.

சுவடிகள் உருவாக்கப்பட்ட பாணியிலேயே போர்த்துக்கீசிய சொற்களும் அகர வரிசையில் வழங்கப்பட்டுள்ளன.

 A தொடங்கி Z வரையிலான போர்த்துக்கீசியச் சொற்களைக் கொண்டு 200 பக்கங்கள் வரை தொகுக்கப்பட்டுள்ளதுடன், இறை மற்றும் இறை பொருட் பெயர்கள், நிலம் மற்றும் வானியல் சொற்கள், திங்கட்கணக்கு, சுற்றுச்சூழல் சார் சொற்கள், உலகியல் பகுதிப் பெயர்கள், காலங்கள், ஆண்டுக்குரிய கால வரையறைப் பெயர்கள், எண்ணிலக்கங்கள், மானுட வரையறைச் சொற்கள் மிக நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

முதன்முறையாகத் தமிழில் வெளிவந்துள்ள இந்த நூல், உலகெங்குமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர், பயணிகள் ஆகியோருக்கு மிக அவசியமான ஒன்று!

- இந்திரா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.