சிவன் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்பதால் சிவ வழிபாடு சங்ககாலத் தமிழகத்தில் இல்லை என்பதல்ல, மாறாகச் சிவன் வேறு பல பெயர்களில் அறியப்பட்டான் எனவும் சிவபெருமானுக்கு ‘கணிச்சியோன்’ என்றொரு பெயர் இருந்தது என்பதையும் அப்பெயர் கணிச்சி என்ற ஆயுதத்தால் ஏற்பட்டது என்பதையும் சிவனின் பழமையான ஆயுதமான கணிச்சி அவரது கையில் காணப்படும் மழு என்னும் ஆயுதத்திற்கும் முற்பட்டது என்பதையும் இந்நூல் அறிய தருகிறது. மட்டுமன்றி கணிச்சி என்னும் ஆயுதம் ஒருகாலத்தில் பயன்பாட்டில் இருந்த நிலையையும் அதன் புராதனத்துவத்தையும் இந்நூலாசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார்.

senthee nadarasanஇந்த நூலில் ஊடுசரடாக ஆசிரியர் நமக்கு விடுக்கும் கேள்வி சங்க காலத்தில் ‘சிவன்’ என்ற சொல் அக்கால இலக்கியங்களில் காணப்படாமை ஏன்? என்பதுதான். அதற்கு அவர் இந்திரனும் வருணனும் சங்கப் பாடல்களில் இடம்பெறாத தெய்வங்கள். இப்புதிருக்கு விடை கிடைக்கும்போது சிவன் பற்றிய புதிருக்கும் விடை கிடைக்கும் என அமைதி காண்கிறார்.

பழங்காலத்தில் சிவனை வணங்கியவர்கள் உருவம் இல்லாத ஓர் அடையாளத்தை வைத்து வணங்கினார்கள். சிவன் உருவம் இல்லாத அந்த அடையாளத்திற்குப் பெயர்தான் இலிங்கம். சிவலிங்கத்துக்குத் தமிழர் வழங்கி வந்த பெயர் கந்தழி என்பது. லிங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் வழங்கத் தொடங்கிய பிறகு பழைய பெயரான கந்தழி என்பது மறைந்து விட்டது. கந்தழி யாகிய சிவலிங்க வழிபாடு மிகத் தொன்மையானது. சிவ பெருமானுக்குப் பல பெயர்கள் உள்ளன. ஆதிரை முதல்வன், ஆதிரையான், ஆலமர் கடவுள், ஆனேற்றுக் கொடியான் என்னும் பெயர் பிற்காலத்தில் வழங்கத் தொடங்கிய பிறகு பழைய பெருஞ்சடை அந்தணன், எரிதழல் கணிச்சியோன், ஏற்றூர்தியான், கறைமிடற்றண்ணல், காரியுண்டிக் கடவுள், சடையன், செல்விடைப் பாகன், தாழ்சடைக் கடவுள், நீர்சடைக் கரந்தோன், நீலமிடற்றொருவன், புதுத்திங்கட் கண்ணியான், மணிமிடற்றண்ணல், மழுவாள் கொடியோன், முக்கட் செல்வன் முதலிய பெயர்கள் சங்க நூற்களில் காணப்படுகின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தமிழகத்துடன் அரசியல் வணிகத் தொடர்புகளில் ஈழம் இறுக்கமாகப் பிணைந்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தோடு மிகவும் நெருங்கிய பகுதி ஈழநாடு ஆகும். எனினும் ஈழத்து இலக்கியங்களிலும் பிராமிக் கல்வெட்டுகளிலும் ‘சிவன்’ என்ற பெயர் குறிப்பிடப்பட, தமிழகத்தில் மட்டும் இவ்வாறு குறிப்பிடப் படாதிருப்பது துலக்கமுடியாத மர்மமாக இருக்கின்றது. சிவன் என்ற பெயர் வடிவம் தமிழகம் தவிர்ந்த இந்தியப் பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளிலும் ஈழத்துக் கல்வெட்டுகளிலும் இடம்பெற்றிருக்கின்றது.

ஈழத்தின் மிகப் பழைய வழிபாடுகளில் ஒன்றாகச் சிவ வழிபாடு விளங்குகின்றது. வரலாற்றுக் காலம் தொடங்கியதி லிருந்து மன்னர்கள் சூட்டியிருந்த பெயர்கள் சிவ வழிபாட்டின் தொன்மையை உணர்த்தும். விஜயனுக்குப் பின் ஆட்சி செய்த பாண்டுவாசு தேவனின் பதினொரு பிள்ளைகளில் ஒருவன் ‘சிவ’ என்ற பெயரைத் தாங்கியிருந்தான். பாண்டுகாபய மன்னனின் மாமன்மார்களில் ஒருவன் ‘கிரிகண்டசிவ’ என்பவன் ஆவான். பாண்டுகாபய மன்னனுக்குப் பின் அரசு கட்டிலேறியவன் ‘முடசிவ’ என்பவன் ஆவான். தேவநம்பீயதீசனின் சகோதரர்களில் ஒருவன் ‘மகாசிவ’ என்பவன் ஆவான். தாதுவம்சம் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் கல்யாணி மற்றும் சேருவாவில் ஆகிய இடங்களை ஆண்ட சிற்றரசர்கள் ‘சிவ’ என்ற பெயரைத் தாங்கி நின்றதைக் குறிக்கின்றது.

ஈழத்து இலக்கியச் சான்றுகளைவிட கிறிஸ்து பிறப்பதற்கு முன்னருள்ள பிராமிக் கல்வெட்டுகளில் ‘சிவ’ என்ற பெயர் உள்ளதோடு சிவதத்த, சிவரக்கித, சிவகுத்த என்னும் அடைமொழிகள் கொண்ட பெயர்கள் காணப்படுகின்றன. சிவதத்த என்றால் சிவனால் அளிக்கப்பட்டவன் என்பது பொருள். சிவரக்கித, சிவகுத்த என்ற சொற்கள் சிவனால் பாதுகாக்கப்படுபவர் எனப் பொருள்படுகின்றன. சிவன் அருளைப் பெற்றவன் என்ற பொருளைச் ‘சிவபூதிய’ என்ற சொல் உணர்த்துகிறது. ‘சிவ’ என்ற சொல் பிற்காலத்தில் ‘மங்களம்’ என்ற பொருளைத் தந்து நின்றாலும் தொடக்கத்தில் மூலத் திராவிடத்தில் சிவப்பு, செம்மை என்ற பொருளையே தந்தது. அதனாலேயே தமிழில் ‘சிவந்தமேனியன்’ என்ற பொருள் சிவனுக்கு ஆகி நின்றது. ‘சிவ’ என்ற பெயர்தான் பிற்காலத்தில் ‘சிவன்’ என்று வழங்கப்பட்டிருக்கலாம். ஞாயிற்று வழிபாட்டைக்கூட சிவந்தமேனியன் வழிபாடு என்று கூறுவர். ஞாயிற்றைச் சிவன் என்று எண்ணும் வழக்கம் இருந்திருந்தால் சிலம்பு குறிப்பிடும் ஞாயிற்று வணக்கம் சிவ வணக்கம் என்பதில் ஐயமில்லை. அதுபோல இளங்கோவடிகள் குறிப்பிடும் மழைவழிபாடு என்பது இந்திர வழிபாடு என்று கொள்ளலாம். புறநானூறு (182), பரிபாடல் (8:33, 19:50), பரிபாடல் திரட்டு (2:97), நாலடியார் (346) ஆகிய நூல்கள் இந்திரனைக் குறிப்பிட்டுச் சென்றாலும் பிற தெய்வங்களுக்கு இருக்கும் இடம் இந்திரனுக்கு இல்லையென்றே கூறலாம். ஆரியக் குடியேற்றம் நடந்த காலத்தில் வருணன் மற்றும் இந்திரன் ஆகியோர் செல்வாக்கு இல்லாத தெய்வங்களாகவே இருந்துள்ளனர். இதிகாச புராண காலத்தில் இவர்கள் இடத்தைத் திரிமூர்த்திகள் பெற்றுக்கொண்டனர்.

சிந்துவெளியில் காணப்பட்ட சிவன் வேதத்தில் உருத்திரனாக உருமாறினாலும் பிற்பட்ட இலக்கியங்களில் குறிப்பாக ஸ்வேதாரண்ய உபநிடதத்தில் சிவன், உருத்திரன் ஆகியோரின் பண்புகள் இணைய, இதிகாச - புராண காலத்தில் சிவன் மேன்மைப்படுத்தப்படுகிறான். மகாபாரதம் கிருஷ்ணனின் முதன்மையைக் கூறும் நூலாகக் காணப்பட்டாலும் கூட, கிருஷ்ணன், அர்ச்சுனன் ஆகியோர் சிவனின் ஆதரவைப் பெற்றவர்களாக உள்ளமை சிவ வழிபாட்டின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. தாழ்ந்த சடையன், பிறை கங்கை ஆகியவற்றைச் சூட்டியவன், முக்கண்ணன் முதலிய சிவனது பல அம்சங்கள் தமிழகத்திலும் சிவ வழிபாட்டில் காணப்பட்டதை சங்கநூல்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் காணலாம். இதே செய்திகள் அவற்றுக்குப் பிற்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் காணப்படுகின்றன. இதனால் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இடம்பெற்ற ’சிவன்’ என்ற சொல் ஏன் சங்க நூல்களில் இடம்பெறவில்லை என்பது புதிராகவே உள்ளது.

சங்க காலத்தில் ‘சிவன்’ என்ற பெயர் இலக்கியங்களில் இடம்பெறாமைக்குப் பலவாறு விளக்கம் கொடுக்கப்படுகிறது. சங்கநூல்களின் கடவுள் கோட்பாடு பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவற்றில் தெய்வம், கடவுள் என்ற இருவேறு அம்சங்கள் காணப்படுகின்றன எனக்கூறி, தெய்வம் என்பது ஒரு நிலத்திற்குரிய தெய்வமாக மதிக்கப்பட, கடவுள் அதற்கப்பால் முழுமுதல் நிலையில் மதிக்கப்பட்டது என விளக்கம் தந்துள்ளனர். மாயோன், சேயோன், கொற்றவை ஆகியோர் ஒரு நிலத்திற்குரிய தெய்வங்களாக விளங்கியதால்தான் இந்நூல்களில் அத்தெய்வங்கள் இடம்பெற்றன. சிவன் முழுமுதற் கடவுள் என்னும் நிலையில் பேணப்பட்டதால் பிற தெய்வங்களைக் குறிப்பிட்டது போல, சிவன் அந்நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்பது அவர்களது கருத்து ஆகும். இக்கருத்தினை முற்றிலுமாக நிராகரிப்பதற்கும் இடமில்லை. காரணம் வரலாற்றடிப்படையில் நோக்கும்போது சிவன் அகில இந்தியாவிலும் முதன்மை பெற்ற தெய்வமாகப் பேணப்பட்டான். சிவன் பற்றிச் சங்க நூல்களில் காணப்படும் பின்வரும் வருணனைகள் இதனை உறுதிசெய்கின்றன. தொன்முது கடவுள் (மதுரைக்காஞ்சி-41), கடவுணிலை இய கல்லோங்கு நெடுவரை (பதிற்றுப்பத்து-43;6), காரியுண்டிக் கடவுள் (மலைபடுகடாம்-83), மழுவாணெடியோன் தலைவனாக (மதுரைக்காஞ்சி-455), ஆல்கெழு கடவுள் (திருமுருகாற்றுப்படை-256).

சங்க இலக்கியங்கள் சிவனை இவ்வாறு வருணித்தும் சிவன் என்ற பெயரை எடுத்தாளாததற்கு இன்னுமொரு காரணத்தையும் எடுத்துக்காட்டலாம். அதாவது முழுமுதற் கடவுளை அவரின் பெயர் கொண்டு அழைப்பதைச் சங்க இலக்கியகர்த்தாக்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு அழைப்பது அவர்களது தரத்தினைக் குறைப்பதாக அமையும் என அவர்கள் எண்ணியிருந்திருப்பது அதற்கொரு காரணமாக அமைந்திருக்கலாம். இதற்கு மற்றொரு சான்று இப்படி அமைகிறது: பௌத்தம் வளர்ச்சி அடைந்த தொடக்க காலகட்டத்தில் புத்தருக்குச் சிலை வடிப்பது என்பது அவரது புனிதத்தன்மையை, முதன்மையைக் குறைப்பதோடு மாசுபடுத்திவிடும் எனக்கருதிய பௌத்த மதத்தினர் சிலைக்குப் பதிலாகப் புத்தரின் பாதங்களைச் சிற்பமாகக் கற்களில் வடித்து வணங்கினர். பின்னர் கி.பி யின் தொடக்க காலத்தில்தான் புத்தருக்குச் சிலை வடிக்கப்பட்டது. சங்க இலக்கியவாதிகள் சிவன் பற்றிய வருணனைகளைத் தாம் படைத்த இலக்கியங்களில் குறிப்பிட்டாலும் கூட, அவரது பெயரைத் தமது இலக்கியங்களில் கையாளாமைக்கு இந்த மனப்பான்மைகூட காரணமாக இருக்கலாம்.

இதற்கு தற்காலத்தில் வழக்கிலிருந்து மறைந்த ஒன்றைக்கூடச் சான்றாகக் கூறமுடியும். தாய்வழிபாடு மேன்மையுற்றிருந்த தமிழகத்துக் குடும்பங்களில் ஆண்தான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தான். பெண்கள் தங்கள் கணவன்மாரை உயர்வு என்ற காரணத்தால் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. தமிழில் வெளிவந்துள்ள பழைய சினிமாக்களில் கூட மனைவி தன் கணவனை “சுவாமி’ என்றும் அதற்கு அடுத்த நிலையில் ’நாதா’ என்றும் அழைப்பதையே காணமுடியும். தாய் தந்தையைப் பெயர்சொல்லி அழைக்காதபோது அவர்களது பிள்ளைகளும் தந்தையைப் பெயர்சொல்லி அழைப்பதில்லை. இது தமிழ்ப் பண்பாட்டு மரபு. இதனாலேயே தமிழ்ப் பண்பாட்டைப் போற்றும் சங்க இலக்கிய நூல்களில் முழுமுதல் கடவுளான சிவன் பெயர் சொல்லி அழைக்கப் பெறாமல் முழுமுதல் தெய்வமாகவே விளங்குகின்றான் என்ற ஒரு கருதுகோள் முன்வைக்கப்படுகிறது.

பொதுவாகத் தமிழர்களுக்குக் கணிச்சியோன் என்ற பெயருக்குச் சொந்தக்காரன் சிவன் என்பது தெரிவதில்லை. மழுவேந்துவதற்கு முன்னரே சிவன் கணிச்சியை ஏந்தியவன். மழுவேந்திய சிவனைத்தான் மக்கள் சிற்பங்களில் காண்கின்றனர். கணிச்சி என்னும் ஆயுதத்தை ஏந்தி கணிச்சியோன் என்று பெயர் பெற்றிருந்த சிவன் தமிழர்களின் நினைவில் இல்லை; அதனால்தான் அத்தகைய சிற்பங்களும் இல்லை எனலாம். சிவனது இப்பெயரை இந்நூலாசிரியர் திரு. செந்தீ நடராசன் அவர்கள் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அதற்காக அப்பெயர் குறித்த செய்தியைப் பலவாறு ஆராய்ந்து கருத்துகளை முன்வைத்துள்ளார். கல்வெட்டு ஆராய்ச்சியாளராகத் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் சிற்பங்கள் குறித்தும் ஆய்வு செய்து வரும் இந்நூலாசிரியர் ஒரு காலத்தில் புதைந்துபோன இத்தகையப் புதையல்களையும் தோண்டி எடுத்து ஒளிகொடுக்க முயற்சிக்கிறார். அவ்வாறு சிதறிப்போன புதையலில் கிடைத்துள்ள ஒரு சிறு பருக்கைதான் இக் கணிச்சியோன். திரு செந்தீ நடராசன் அவர்கள் மீண்டும் பல புதையல்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒளியேற்றுவதற்கு இக்கணிச்சியோன் வழிகாட்டும் என நம்பலாம். பதினாறு பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூல் 1600 பக்கங்கள் கொண்ட ஒரு நூலின் தரத்தைக் கொண்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இச்சிறு நூலை சிறுநூல் வரிசையில் ஒன்றாகச் சேர்த்து அழகாக வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச் நிறுவனத்தை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

இம்மதிப்பீட்டிற்குக் கைகொடுத்த நூல்கள்:

1.      க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்- 1991

2.      தேவநேயன், தமிழர் மதம், 1972

3.      வி. கனகசபை, ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், 1962

4.      சி.க. சிற்றம்பலம், ஈழத்து இந்துசமய வரலாறு, 1996

5.      மயிலை சீனி வேங்கடசாமி, சைவ சமய வரலாறு (கட்டுரை) ஆய்வுக்கட்டுரைகள்-3, 2001

6.      K.R. Subramanian, The Origin of Saivism and its History in the Tamil land,1985

7. R.S. Gupte, Iconography of the Hindus Buddhists and Jains,1980

8. சங்க இலக்கிய நூல்கள்

***

சிவ... சிவ... (கணிச்சியோன்)

ஆசிரியர்: செந்தீ நடராசன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ. 10/-

Pin It