தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமையான துறைமுக நகரமான கொற்கையில் உயரமான வடிகட்டிக் குழாய்கள் மற்றும் சங்கு அறுக்கும் பட்டறைகளை தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பண்டைய காலத்தில் தொழிற்சாலைகள் நிறுவி பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுடன் வியாபாரம் செய்த துறைமுக நகரமாக தொல்லியல் ஆய்வில் தெரிய வந்திருப்பது கொற்கையின் வரலாற்றில் ஒரு மைல்கல்.
52 ஆண்டுகளுக்குப் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொற்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள அகரம், மாரமங்கலம், ஆறுமுகமங்கலம் போன்ற கிராமப் புறங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.
மேலும் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
கொற்கையில் 17 குழிகளும், மாரமங்கலத்தில் இரண்டு குழிகளும் ஆக 19 குழிகளில் அகழ்வாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர், இதுவரை 517 தொல்லியல் பொருட்களைச் சேகரித்துள்ளனர். அவற்றில் பிரதானமானவை சங்குகளிலிருந்து அறுத்து செய்யப்பட்ட வளையல்கள். மேலும் சங்கினால் ஆன மோதிரம், கருப்பு - சிவப்புப் பானை ஓடுகள், பெண் உருவ பொம்மைகள், குதிரை சாயலில் ஆன பொம்மை, பாசிகள், இரும்பு மற்றும் செம்பு பொருள்கள் கிடைக்கப் பெற்றிருக்கிறது. சில பானை ஓடுகளில் குறியீடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறிப்பாக பல அடுக்குகளான வடிகட்டும் குழாய் மற்றும் செங்கல் கட்டுகள் வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
கொற்கை அகழ்வாய்வு இயக்குனர் தங்கதுரை கூறும் பொழுது, இதுவரை 9 வடிகட்டும் குழாய்கள் ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதை அகழ்ந்து கண்டு பிடித்துள்ளனர். ஒவ்வொன்றும் 27 சென்டி மீட்டர் விட்டமும், உயரமும் மற்றும் ஒரு சென்டிமீட்டர் கெட்டியாகவும் உள்ளது. இந்த வடிகட்டிக் குழாய்களில் ஆங்காங்கே 1.5 சென்டிமீட்டர் விட்டம் அளவிலான ஓட்டைகள் உள்ளன. தற்போது 10வது வடிகட்டி குழாயை அகழ்ந்து வருவதாகக் கூறினார்.
இதற்கு அருகில் பல சிப்பிகள் குவிந்து கிடப்பதாகச் சொன்ன அவர், அருகில் உள்ள குழியில் இதன் தொடர்ச்சியாக பத்து அடுக்குகள் கொண்ட ஒரு செங்கல்கட்டு இருப்பதாகத் தெரிவித்தார். இந்தச் செங்கல்கட்டு சுமார் ஒரு மீட்டர் வரை அகழப்பட்டுள்ளதாகவும் மேலும் இதன் தொடர்ச்சி இருக்க வாய்ப்பு உள்ளது என்பதாகவும் தெரிவித்தார்.
வடிகட்டிக் குழாய்களிலும் மற்றும் செங்கல்கட்டுகளிலும் சாம்பல் படிந்து உள்ளது தெரிய வந்திருக்கிறது. அவை ஒரு தொழிற்சாலையாக இயங்கி இருக்க வேண்டும் என்பதாகத் தெரிவித்த அவர் என்ன உற்பத்தி செய்யப்பட்டது என்பது உறுதிபட கூற முடியவில்லை என்றார்.
மேலும் சங்குகள் அறுக்கப்பட்ட நிலையிலும் துண்டுகளாகவும் குவிந்து கிடப்பதாகவும், அவை சங்கு அறுக்கும் பட்டறைகளாக இருக்கக்கூடும் என்று கூறினார்.
இதன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டமாக இருக்கலாம் ஆனால், அகழ்வாய்வு முழுமையாக முடிவடைந்த பின்னர் ‘நான்-கார்பன் டேட்டிங்' செய்து உறுதிபட கூற முடியும் என்று தெரிவித்தார்.
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் முக்கியமான துறைமுகம் என்று பல இலக்கியங்கள் மூலம் அறியப்பட்ட நிலையில் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள வடிகட்டிக் குழாய்களும், செங்கல் கட்டுமானங்களும், சங்கு அறுக்கும் பட்டறைகளும் இது ஒரு தொழில் நகரமாக விளங்கியதற்குச் சான்று பகர்கின்றன.
ஆம், இப்பொழுதும் கூட துறைமுக நகரங்களில் தான் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பிஷப் ராபர்ட் கால்டுவெல்தான் முதன்முதலில் கொற்கை பகுதியில் 1876 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினார். அவர் பல முதுமக்கள் தாழிகளைக் கண்டெடுத்தார். அவற்றில் ஒன்று சுமார் 11 அடி சுற்றளவு கொண்ட பெரிய முதுமக்கள் தாழி, அதற்குள் ஒரு எலும்புக் கூடும், ஒரு மண்டை ஓடும் இருந்ததாக அவர் 1877 இல் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
கால்டுவெல் தான் இலக்கியங்களில் காணப்படும் முற்கால பாண்டியர்களின் தலைநகரான கொற்கை என்ற துறைமுக நகரம், தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் கொற்கை கிராமம்தான் என்று முதன் முதலில் கண்டறிந்தவர் என்பதாக, 1968 முதல் 69 வரை கொற்கையில் அகழ்வாய்வு செய்த அன்றைய தொல்லியல் துறை இயக்குனர் முனைவர் நாகசாமி குறிப்பிடுகிறார்.
நாகசாமி தலைமையில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில் செங்கல் கட்டு மற்றும் சங்கினால் உருவாக்கப்பட்ட வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் பல கிடைக்கப்பெற்றன.
சுமார் 2.69 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண்ணால் ஆன அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட கரியை கார்பன் டேட்டிங் செய்த பொழுது அதன் காலம் 785 கி.மு. என நாகசாமி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் வடிகட்டிக் குழாய்கள் என்பது இதுவே முதல் முறை.
பண்டைய இலக்கியங்களில் முத்துக் குளித்தலுக்குப் பெயர் போன துறைமுகம் என்று வர்ணிக்கப்பட்ட கொற்கை பிற தொழில்களிலும் அபிவிருத்தி பெற்றிருந்தது வரலாற்றில் மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது.
- இறைமகன்