இந்திய வரலாற்றின் ஓர் திருப்புமுனையாக பிரிட்டிஷார் கலாச்சாரம், விஞ்ஞானம் புத்துயிர்ப்புடன் வந்தடைந்தது. இதுவே தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பாரம்பரிய விஞ்ஞானத்தை வீழ்ச்சியுறச் செய்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதிவேகமாக வளர்ந்த, வளரும் ஐரோப்பிய விஞ்ஞானத்தை நிலை நிறுத்தியது. மேலும் இவர்கள் வருகையினால் இந்தியர்கள் தங்கள் அரசியலை இழந்தனர். அதன் வெற்றிச் சின்னமாக காலனி அரசு மேலை நாட்டு விஞ்ஞானத்தை இந்தியர்களுக்குப் புகுத்தினர். இந்நிலையில் அதற்கு பெருமளவில் எதிர்ப்பு இல்லை. ஆகையால் மீண்டும் மீண்டும் தங்கள் விஞ்ஞானத்தின் சிறப்பைக்கூறி கொஞ்சம் கொஞ்சமாக பரம்பரை உள்ளூர் விஞ்ஞானத்தை தூக்கி எறிந்தனர். அதனைத் தொடர்ந்து காலனிப் பேரரசை விரிவுபடுத்தி தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர்.

siddha medicineஆரம்ப காலத்தில் ஐரோப்பாவிலிருந்து புதிய நாட்டிற்கு கப்பலில் வாணிபம் செய்யச் செல்லும் போது ஒரு மருத்துவரும் உடன் செல்வார். அவர் கப்பலில் உள்ளவர்களுக்கும் கரையில் உள்ளவர்களுக்கும் மருத்துவம் புரிந்ததைத் தாண்டி, சென்ற நாட்டின் இயற்கை வளம், செடி கொடிகளின் விளக்கம் உயிரினத் தொகுதிகள் பற்றிய குறிப்புகளை தன் நாட்டிற்குத் தெரிவிப்பார். அதாவது மருத்துவம் புரிவதை மட்டும் பாராது நாட்டின் இயற்கை வளத்தை அறிந்து ஒரு துணிச்சலாகச் செயல்படும் விஞ்ஞானியாகவும் பணிபுரிந்தார். இவர் இங்கிலாந்தில் எடின்பரோவில் பெற்ற அறிவு சுதேசி மருத்துவரைப் போன்றதாக இராது வேறுபட்டதனால் தான் மிகவும் மேம்பட்டவர் என்ற இறுமாப்புடன் மருத்துவம் புரிந்தார்.

ஆனால் அறிவாதாரப்படி மேலை நாட்டு மருத்துவமும் கீழை நாட்டு மருத்துவமும் வேறுபட்டதல்ல என்று எண்ணிய ஐரோப்பிய மருத்துவர்கள் ஆரம்பகாலத்தில் உள்ளூர் மருத்துவத்தின் மீது மதிப்பு வைத்திருந்தனர். ஆனால் நாளடைவில் இவர்கள் ஆட்சிக்குக் கீழ் இந்தியா அடிமைப்பட்ட போது இக்கருத்து மெல்ல மெல்ல விலகியது. ஏனெனில் உள்ளூர் மருத்துவத்துடன் இணைந்து அல்லது மேலை மருத்துவத்திற்கு கீழ் அதனைக் கொண்டு வர வேண்டும் என்பது அவர்கள் அரசின் செயல் திட்டமாக இருக்கவில்லை.

பேரரசின் கோட்பாட்டின்படி நான்தான் மிகச்சிறந்தவன், தன் மருத்துவத்துறையே உயர்வானது என்பது அவர்கள் கொள்கை. இத்துடன் மற்றவைகளை எல்லாம் நாட்டில் எப்படி அடிமைப்படுத்தலாம் என்ற எண்ணத்துடனே ஆட்சி நடைபெற்றது. இக்கருத் துடனே காலனி அரசின் மருத்துவர்களும் பணி புரிந்தனர் என்றாலும் இம்மருத்துவர்கள் பணி உயர்ந்த நோக்கமுள்ளதாகவும், நவீன மருத்துவத்தின் முன்னோடியாகவும் இருந்தது. இருப்பினும் அது காலனி மருத்துவம் என்றே அழைக்கப்பட்டது.

ஐரோப்பிய மருத்துவர்களின் முதன்மைச் செயல், காலனி அரசில் தன் இராணுவத்தினரை தன் இனத்தவரை நலமுடன் வாழ வழிவகுப்பதுவே ஆகும்.

இத்துடன் அவர்களுடைய பணியாக புதிய நோய்களைக் கண்டறிந்து அவைகளைக் குணமாக்கும் வழியைப் புரிந்து கொண்டு மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இங்கு நிலைநாட்ட முயன்றனர். இதனைத் தங்கள் அரசின் தூண்டுதலாலும் பழக்க நடவடிக்கையினாலும், சட்ட திட்டங்களினாலும், நடைமுறைப்படுத்தினர். இதுவே இம்மருத்துவர்களுக்கு கர்வத்துடனும் அதிகாரத்துடனும் மருத்துவம் புரிய வழிவகுத்தது. இதனை பெரான் பெனான் (Frantz Fanon) குறிப்பிடுகையில் “மருத்துவரைப் பார்ப்பது என்பது அரசு அலுவலரை அல்லது ராணுவ மேஜரை பார்ப்பதற்கு ஒத்ததாக இருந்தது” என்று வர்ணிக்கிறார்.

18-ஆம் நூற்றாண்டில் காலனி மருத்துவம் விஞ்ஞான அடிப்படையில் புதுமை உணர்வூட்டுகின்ற வகையில் நடைபெற்றது. ஆனால் இதுவே விக்டோரியா காலத்தில் காலனி அரசின் துணையுடன் திட்டமிட்டபடி படிப்படியாக மக்களிடம் சென்றடைந்தது.

இங்குள்ள நோய்களுக்கு ஐரோப்பியர்கள் வெப்ப மண்டல நோய்கள் எனப்பெயரிட்டாலும் இவை அனைத்தும் ஓரிரு நோய்களைத்தவிர வெப்பமண்டலத்திற்கு மட்டும் உரித்தான நோயல்ல என்பதே உண்மை. ஐரோப்பாவில் காலரா, பிளேக், பெரியம்மை போன்ற நோய்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன என்பதே வரலாறு. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு; அந்நோயின் வீரியம் மேலை நாட்டைவிட இங்கு சற்று அதிகமாக இருக்கும். ஐரோப்பிய மருத்துவர்கள் இங்குள்ள நோயைக் கண்டுபிடிக்காத பொழுது வெப்பம், கால நிலை, காற்றின் ஈரத்தன்மையினால் ஏற்படும் நச்சாவியின் விளைவாக இருக்கும் என்று லூயி பாஸ்டர் கண்டுபிடிப்பு வரை கூறி வந்தனர். ஆனால் அதன்பிறகு நோய்க்கான பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததன் காரணமாக மேலை மருத்துவத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டு முழுவீச்சில் களைகட்டி நவீன மருத்துவம் சிறப்பாக நடைபெற்றது.

மாறாக தமிழகத்தில் சித்த மருத்துவம் தடுப்பு, தீர்வு, ஆற்றல் மீட்பு, ஆயுள் நீட்சி ஆகிய கொள்கையின் கீழ் திகழ்ந்த மணி, மந்திரம், மருத்துவம் என்ற பிரிவில் குணமளித்து திரிதோஷ அடிப்படையில் நடைபெற்றது. இம்மருத்துவம் பழமையானது, எளிமையானது எனினும் விஞ்ஞான அடிப்படையில் உருவாகாத ஒன்று என்று பிரிட்டிஷார் அரசுமுறை மருத்துவமாக அங்கீகரிக்கவில்லை.

ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவ இதழ்களிலும் சட்டமன்றத்திலும் சுதேச மருத்துவத்தை அங்கீகரித்து அதற்கான கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பொருட்டு, அரசின் பரிந்துரைப்படி மேலை மருத்துவத் துடன் சுதேசி மருத்துவத்தை (சித்தா, ஆயுர்வேதம், யுனானி) கற்பிக்கும் இந்திய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

ஆனால் தொடங்கப்பட்ட கருத்துக்கு மாறாக இக்கல்லூரியின் செயல்பாடுகள் ஆங்கில மருத்துவத்தை நோக்கிச் சென்றது. ஒரு கட்டத்தில் இக்கல்லூரியில் படித்த மாணவர்களே சுதேசி மருத்துவத்தைப் படிக்க விரும்பாததால் அரசு இக்கல்லூரியை மூடியது. இங்கு அந்நிலையில் படித்தவர்கள் மேலை மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றலாகி குறுகிய காலத்தில் மேலை மருத்துவம் கற்று ஆங்கில முறை மருத்துவரானார்கள். இதன் பிறகு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய உள்ளூர் மருத்துவ முறைகளை மட்டும் படிக்கும் விதமாக சென்னையிலும் பாளையங்கோட்டையிலும் சித்த மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டு நடைபெற்று வருகிறது. இக்கல்லூரி ஆரம்பித்த பிறகு கல்லூரியில் மேலை மருத்துவர்கள் அணிந்து கொள்ளும் வெள்ளைக் கோட்டு போல் அணிந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பது வரை 19 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இது ஏன் என்று ஆராய்கையில் இங்கு மாணாக்கராக சேர்ப்பவர்கள் பெரும்பாலும் மேலை மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் பரம்பரை சித்த மருத்துவர்களும் தங்கள் பிள்ளைகளை சித்த மருத்துவத்தைப் படிக்க வைக்க முன் வருவதில்லை. சுமார் 5 விழுக்காடே பரம்பரை சித்தமருத்துவர்கள் பிள்ளைகள் சித்தா பட்டப் படிப்புக்கு முன் வருகின்றனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் தங்கள் தொழிலில் மிகவும் வெற்றிகரமாக விளங்காததற்குக் காரணம் கல்லூரியில் சிறந்த பரம்பரை மருத்துவர் களிடம் நாடிபிடித்து கற்றுக் கொள்ளாததே ஆகும். சித்த மருத்துவத்தின் உயிர் நாடியே நாடி பிடித்துப் பார்த்து மருத்துவம் புரிவதுதான். இதனைப் பட்டப்படிப்பு படிக்கும் சித்தா மாணவர்கள் சரியாக உணராதது வருத்தமளிக்கிறது. இது தவிர படிக்கும் மாணவர்களின் சித்த மருத்துவ நூல்கள் பதிக்கப்படவில்லை மற்றும் மறைபொருள், வழக்குப் பெயர், தாவரப்பெயர் கொண்ட மூலிகை அகராதி இது நாள்வரை தொகுக்கப்படவில்லை. மேலும் இந்திய மருத்துவப் பொருள் தொகுதியும் (Indian Pharmacopoea) பதிப்பிக்கப்படவில்லை.

மூலிகைகளிலிருந்து நோய் நீக்கும் உட்பொருள்கள் விஞ்ஞான ரீதியாக கண்டறியப்படவில்லை. இத்துடன் மருந்து உட்கொண்ட பிறகு உடலில் எவ்வாறு வேலை செய்கிறது என்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன. இதுதவிர ஒரு நோய்க்கு பல மருந்துகள் கூறப்படுகின்றன. அதில் எந்த மருந்து சிறந்தது என்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மேலும் மனிதர்களிடம், விலங்குகளிடம் மருந்துகளின் பக்கவிளைவுகள் நச்சுத் தன்மைகள் ஆராயப்படவில்லை. ஆனால் மேலே கூறப்பட்ட எல்லா சோதனைகளுக்கும் பின்னரே ஆங்கில மருந்துகள் நோயாளிக்கு மருத்துவமாக அளிக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் நாம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். காலனி ஆட்சியில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆய்வுக்கு உட்படுத்தப் படாதது என்று அரசு இம்முறைகளை ஏற்றுக் கொள்ளாது தவிர்த்தது. ஆனால் தற்பொழுது மைய, மாநில அரசுகள் சுதேச மருத்துவ முறைகளை அங்கீகரித்த நிலையில் காலனி ஆட்சிக்கு மாறாக இம்முறைகளுக்கு தனிக் கல்லூரிகளை நிறுவி பல நூறு மருத்துவர்களை உருவாக்கினாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய தரமான மனித ஆய்வு, விலங்கு ஆய்வுக் கட்டுரைகளே வெளிவருவது வருத்தமளிக்கிறது.

ஆனாலும் சித்தர்கள் மெய்ஞானத்தில் மட்டுமின்றி விஞ்ஞானத்திலும் தீர்க்கமான அறிவைப்பெற்று இருந்தார்கள். சித்தர்களின் கட்டு, களங்கு, ககனக்குளிகை போன்றவைகள் நுட்பமான அறிவில் உருவானவைகள். இவர்களால் உருவாக்கப்பட்ட சித்த மருந்துகள் ஒவ்வொன்றும் தீர்க்கமான விஞ்ஞான நோக்கோடு உருவானவை. அக்காலத்தில் கண்டறியப்பட்ட மூலிகைகள், தாதுப்பொருட்கள் மற்றும் சீவப் பொருட்களின் கண்டுபிடிப்புகள் சித்தர்கள் பாடல்களில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பொதிந்து கிடக்கின்றன.

உண்மையிலேயே தமிழ்நாட்டில் எத்தனையோ பாரம்பரிய மருத்துவர்கள் தங்கள் பாரம்பரிய அனுபவத்தால் நாடிபிடித்து மட்டும் என்ன நோய் என்று துல்லியமாகக் குறிப்பிடுகின்றனர். ஆங்கில மருத்துவத்தில் சில நோய்களுக்கு மருந்தில்லை என்ற நிலையில் சித்த மருத்துவம் கை கொடுக்கிறது, பலனளிக்கிறது. சான்றாக சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சித்த மருந்துகள் இந்நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுவதாக அறியப் பட்டுள்ளது. இதனை மேலும் முன்னெடுத்துச் சென்று உலகத்தரத்திற்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொண்டால் சித்த மருத்துவம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும். இதற்கு வேண்டியது ஆய்வுக்கான நிதி, ஆய்வாளர் இவைகளை அடைவதில் தனியார் உழைப்பு அல்லது நிதி மட்டும் நிச்சயம் போதாது. ஆகவே உள்ளூர் மருத்துவத்தை உலகின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல என்ன வழிகள் என்பதை மைய மாநில அரசுகள் அறிந்து செயல்படவேண்டும். இந்நிலையில் மிகப்பெரிய குணப்பாடு உலக மக்களுக்குக் கிடைக்கக்கூடும். இதனால் தமிழினத்தின் நலவாழ்வு மேம்பட்டு மருத்துவமும் கொடி கட்டிப் பறக்கும்.

Pin It