கடுமையானதொரு சூழலில் கலை, இலக்கியப் போராளி ஒருவரை இழந்திருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துவரும் இந்துத்வா பாசிசம், ஆணவக்கொலைகள், சாதியக் கொலைகள் ஆகியவற்றுக்கு எதிரான இயக்கங்களில் முன்னணி போராளியாகக் கலந்து கொண்டவர் எங்கள் பேரன்புக்குரிய தோழர் மணிமுடி. எங்கெல்லாம் பாசிசத்துக்கு எதிராக, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகக் கருத்துரிமை, பேச்சுரிமையைப் பாதுகாப்பதற்கான இயக்கங்கள், கூட்டங்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் முன்னின்று தோள் கொடுத்த தோழர் கவிஞர் ‘கலை’ மு.மணிமுடி உடல்நலக் குறைவால் கடந்த 18.07.2018 அன்று 61வது வயதில் காற்றில் கரைந்து போனார்.

manimudiதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பில் இருந்தவர். அவரது மறைவு முற்போக்கு இயக்கங்களுக்குப் பேரிழப்பு என்றால் எங்கள் குடும்பத்தாருக்கும் தனிப்பட்ட முறையில் தாங்கவியலா துயரம். ஆம், கலை மணிமுடி எங்கள் குடும்பத்தில் ஒருவர். எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரராக விளங்கியவர்.

மு. மணிமுடியின் சொந்த ஊர் கோவில்பட்டி அருகில் உள்ள லிங்கம்பட்டி என்றாலும் அவரின் வளர்ப்பும் வார்ப்பும் சென்னையில் தான். அதுவும் வட சென்னை. அவரது தந்தை தோழர் முத்துசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர். 1950களிலிருந்தே வட சென்னை பகுதியில் கட்சியை வளர்த்ததில் தோழர் முத்துசாமிக்கு முக்கியப் பங்குண்டு.

முத்துசாமி - பொன்னம்மாள் இணையரின் மூன்றாவது மகன் மணிமுடி. இடதுசாரி இயக்கப் பின்னணி கொண்டிருந்ததால் மாணவர் பருவத்திலேயே அகில இந்திய மாணவர் பெருமன்றத்தில் தீவிரமாக இயங்கினார். பின்னர் அகில இந்திய இளைஞர் பெருமன்றத்திலும் இயங்கியவர். சென்னை கல்லூரிகள் பலவற்றிலும் மாணவர் அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரமாகப் பங்கு கொண்டவர். மாணவப் பருவத்திலிருந்தே அவருடன் நட்பு பாராட்டிய, இணைந்து கைகோர்த்து நின்ற தோழர் ஜேம்ஸ் இருவரும் இறுதிவரை இணை பிரியாத இரட்டையராகவே இருந்தனர். தோழமை கடந்த நட்புக்கு இலக்கணம் அவர்கள் இருவரும்.

1970களில் மணிமுடி - ஜேம்ஸ் இணை சேர்ந்து களம் கண்ட போராட்டங்களை சென்னை மாநகரம் நன்கறியும். இன்றும்கூட மூத்த தோழர்கள் இந்த ’இரட்டைப் போராளிகள்’ குறித்துப் பெருமிதத்துடன் கூறுவதைக் கேட்க முடியும். போராட்டக் களத்தில் மட்டுமல்ல, மார்க்சியக் கல்வியையும் இருவரும் இணைந்தே பயின்றனர். தமது மனதுக்குச் சரியென்று தோன்றியது குறித்து விவாதித்தனர். இதிலிருந்து தலைவர்கள்கூட தப்பிவிட முடியாது.

குறிப்பாக, வட சென்னைப் பகுதியின் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகச் சமரசமில்லாமல் போராடினர். இதற்கு அவர்களின் வட சென்னை பகுதி வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் வாழ்ந்த பகுதிகளில் பல ஆண்டுகள் வாழ்ந்ததால் அந்த மக்களின் அன்றாடப்பாடுகள் குறித்து அறிந்திருந்ததும், அதனால் எழுந்த பெரும் கோபமும் ஆளும் சக்திகளுக்கு எதிரான கோபமாகவும் அவர்களிடையே உருவெடுத்தது. அந்தக் கனல் இறுதிவரை தோழர் மணிமுடியிடம் குறையவில்லை. ஆனால், அவரது முகக் குறிப்புகளில் ஒருபோதும் அந்த ஆக்ரோஷமும் கோபமும் வெளிப்பட்டதில்லை. எப்போதும் முகத்தில் மாறாத புன்னகை என்பது அவரது பெரும் பலம்.

தோழர் மணிமுடியின் லட்சியம் முழு நேர ஊழியர் ஆவதுதான். அரசுப்பணி அவ்வாய்ப்பை அவருக்கு அளிக்கவில்லை. அரசுப் பணியை ஏற்காமல் அவர் முழு நேர ஊழியராவதைக் கட்சியும் ஏற்கவில்லை.

அரசுப்பணியில் இணைந்தாலும் இயக்கப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டவர். மக்கள் போராட்டங்களில் தெரிந்தும் தெரியாமலும் பங்கேற்றார். குறிப்பாக இயக்கங்களில் இளைஞர்கள் இணைவதை ஊக்குவித்தார். அதற்காக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஓயாமல் இயங்கினார். கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும் திறமையை அங்கீகரிக்கத் தயங்காதவர். அதனாலேயே பல அமைப்புகள், இயக்கங்கள் சார்ந்தவர்களுடனும் முகம் கோணாமல் அவரால் இணைந்து பணியாற்ற முடிந்தது.

பொதுவாகவே இளகிய மனம் கொண்டவர் தோழர் மணிமுடி. உடல் நலிவுற்ற அதனால் துன்பப்பட்டவர்களுக்கு ஓடி, ஓடி உதவியதிலும் கவிஞராக மலர்ந்ததிலும் வியப்பில்லை. தோழர்களின் நலிந்த நிலை பற்றி அறிந்தாலே கண் கலங்கி விடக்கூடிய மலரினும் மெல்லிய மனம் படைத்தவர்.

மணிமுடியின் காதல் திருமணம், சாதி மறுப்புத் திருமணம். அவரது தந்தையார் தோழர் முத்துசாமியின் மறைவுக்குப் பின், அம்மாவுக்கும் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக, நியூ செஞ்சுரி அறக்கட்டளை அமபத்தூர் நியூ செஞ்சுரி காலனி பகுதியில் நடத்தி வந்த பள்ளியில் இணையர் சுமதி ஆசிரியராகப் பணிபுரியும் எண்ணத்திலும் ஆசிரியப் பணிக்காக 1989ல் அம்பத்தூரில் நியூ செஞ்சுரி காலனி பகுதிக்கு அருகில் குடியேறினார். இதில் என் தந்தையார் கடலூர் பாலன் அவர்களுக்கும் பங்கிருந்தது. மணிமுடி என் தந்தை கடலூர் பாலன் அவர்களின் சீடர் என்று சொன்னாலும் மிகையல்ல. அம்பத்தூர் வந்த பின்னர் கடலூர் பாலனுடன் இணைந்து பணியாற்றினார். அவர்கள் இருவரின் தோழமை உறவு ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவாகவே முகிழ்த்தது. குறிப்பாக, கலை இலக்கிய பெருமன்றத்தில் அவரது ஈடுபாடு பல மடங்குகள் அதிகரித்தது.

எங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையில் அழகான ஒரு நட்புணர்வையும் ஏற்படுத்தியது.

தமிழகத்திலேயே அம்பத்தூர் நியூ செஞ்சுரி கலை இலக்கியப் பெருமன்றக் கிளைதான், சிறார்களை ஒன்று திரட்டி இளந்தளிர் மன்றம் அமைத்து சிறப்பாக இயங்கியது. சிறார்களின் படைப்பாக்கத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் கலைப் பண்பாட்டுப் படைப்புகள் அப்போதே உருவாக்கப்பட்டன. இதில் நாங்கள் பலரும் இணைந்து பணியாற்றினோம். தொலைக்காட்சி மோகம் அதிகரித்து வந்த காலத்தில் அதை முற்றிலும் தவிர்த்து, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இளந்தளிர் மன்றம் உயிர்ப்புடன் செயல்பட்டது. அது மட்டுமல்லாமல் கலை இலக்கியப் பெருமன்ற நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடந்தன. முத்தாய்ப்பாகக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக்குழுக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை எங்கள் கிளை ஏற்று ஒரு மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்தியது. இதன் வெற்றியில் மணிமுடிக்கும் பங்கிருந்தது. கட்சியின் ஆதரவின்றி, நானும் மற்றொரு நண்பரும் இணைந்து நடத்திய ’பாரதி நூலகத்திற்கு’ நூல்களை இலவசமாகப் பெற்றபோது தானாக முன் வந்து தன் வசமிருந்த நூல்களைக் கொடுத்து உதவியவர்.

கட்சியின் கிளைக் கூட்டம் தொடங்கி, கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டம், அப்போது கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் நாங்கள் நடத்தி வந்த கைஎழுத்துப் பத்திரிகை ‘கண்ணாடி’க்கான ஆலோசனைக் கூட்டம் என எந்தக் கூட்டமானாலும், எனக்கும் மணிமுடிக்கும் இடையில் விவாதம் அனல் பறக்கும். வெளியிலிருந்து கேட்பவர்களுக்கு அது பெரும் சண்டை அல்லது சச்சரவு போல் தோன்றும். என் தந்தைக்கோ இருவர் சார்பாகவும் பேச முடியாத தர்மசங்கடமான நிலையில் பெரும்பாலும் அமைதி காத்துவிடுவார். ஆனாலும் அதைத் தனிப்பட்ட முறையிலான விரோதமாக ஒருபோதும் நாங்கள் இருவரும் பார்க்கவில்லை. அரவணைத்துச் சென்றே இயக்கங்களை நடத்தியவர். இப்போது அது பற்றி யோசிக்கும்போது, வீட்டுக்குள் ஒரு அண்ணனும் தங்கையும் போட்டுக்கொண்ட சண்டையாகவே எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய கட்டுரைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகும்போதும், ஒவ்வொரு நூல் வெளி வரும்போதும் உள்ளார்ந்த மகிழ்வுடன் அழைத்துப் பாராட்டுவார். என் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியோடு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

செல்லியம்மன் நகர் பகுதியின் இறுதியில் அயனம்பாக்கத்தை ஒட்டி ஒரு விவசாய நிலம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களால், அவர்கள் அனைவருக்கும் பாகம் பிரித்துக் கொடுப்பதற்காக விற்கப்பட்டது. நியூ செஞ்சுரி பள்ளிக்காக மேலும் ஒரு கட்டடம் கட்டுவதற்காக அங்கு 6 கிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டபோது, அதைச் சுற்றியிருந்த இடங்களையும் நம் தோழர்கள் பலரும் வாங்குவ தென்று முடிவு செய்து வாங்கப்பட்டது. கடலூர் பாலன், மணிமுடி, ஷாஜஹான், துரைசாமி, லட்சுமணன், உமா கண்ணன், ராதாகிருஷ்ணன் என பலரும் தங்கள் வசதிக்கேற்ப முக்கால் கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் என்று வாங்கினார்கள். ஷாஜஹான், மணிமுடி, கடலூர் பாலன் மூவரும் தலா முக்கால் கிரவுன்ட் வாங்கினார்கள். கடலூர் பாலன், மணிமுடி, ராதா கிருஷ்ணன் மகள் சாந்தி ஆகியோர் மட்டுமே வீடுகள் கட்டினர். மற்றவர்கள் விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். விருப்பத்தின் பேரின் அண்டை வீட்டுக்காரர்களாக ஆனவர்கள் கடலூர் பாலனும் மணிமுடியும். இரு குடும்பத்தினரும் சுக துக்கங்களைப் பங்கிட்டுக்கொண்டு இப்போது வரை நட்பும் தோழமையுமாகப் பழகி வருகிறார்கள்.

கடந்த மாதம் கலை இலக்கியப் பெருமன்றத்தின் முன்னோடிக் கவிஞர்கள் சிலரின் பாடல்களுக்கு இசையமைத்து ஒலித்தகடு வடிவில் வரும் தேர்தல் பிரச்சாரத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பாடல்களைத் தேர்வு செய்தார். அதில் கடலூர் பாலன் பாடலும் இருக்க வேண்டுமென விரும்பி, தேர்வு செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கான பணிகளில் தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக இயங்கி வந்தார்.

என் தந்தையார் கடலூர் பாலன் அகால மரணத்தின்போது எங்களுக்கு உற்ற துணையாக இருந்தவர்.’கலை’ இதழ் சார்பாக படைப்பாளர்களுக்கு விருது வழங்க முடிவு செய்தபோது, தன் தந்தையார் முத்துசாமி, கலை இலக்கிய விமர்சகர் அறந்தை நாராயணன் இருவர் பெயருடன் கடலூர் பாலன் பெயரிலும் விருது வழங்கி கௌரவப்படுத்தியவர். கடந்த ஜூன் மாதம் கடலூர் பாலன் நினைவு நாளை மிகப் பெரும் விழாவாகக் கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் கொண்டாட வேண்டும் என்று தன் ஆர்வத்தை வெளிப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தார். ’உங்கள் உடல் நலம் சரியாக இல்லை. அடுத்த ஆண்டு கொண்டாடுவோம்’ என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தினோம். ஒரு மாத இடைவெளியில் அவரே நினைவில் நிற்பவராகிப் போனார். அவரது நினைவைப் போற்றும் நிலை இவ்வளவு விரைவில் ஏற்படுமென்று கனவிலும் நினைக்கவில்லை.

தொடந்து இயக்கப்பணிகள், கட்சிக்கும் தோழர்களுக்கும் வாரி வழங்குதல், தன் அரசுப் பணி மூலம் ஏற்படுத்திக் கொண்ட ‘ஓவர்சீயர் அசோசியேஷன்’ தொழிற்சங்கப் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டாலும் தனது காதல் மண வாழ்வை ஒரு கனவைப் போல் செதுக்கியவர். மணிமுடி - சுமதி, அவரது மகள்கள் ப்ரீத்தி கல்பனா, ஜீவப்ரியா ஆகியோரைக் கொண்ட குடும்பம் முழுவதுமே சாதி, சடங்குகள் பாராமல் பகுத்தறிவு வழியில் நடை போட்டு வருகிறார்கள். ப்ரீத்தி, ஜீவா இருவரும் பொறியியல் பட்டதாரிகள்,

ப்ரீத்தி கல்பனா கணவர் கௌதம் அமரர் ப.ஜீவானந்தம் குடும்பத்தில் பிறந்தவர். ஜீவப்ரியா தன் தந்தையின் நண்பர் ஜேம்ஸ் மகன் பாவெலை காதல் மணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணங்களும் சாதி மறுப்பு மத மறுப்பு திருமணங்களாகவே நிகழ்ந்தன. ஜீவப்ரியா தாய்மைப்பேறு அடைந்திருக்கும் நிலையில் செப்டம்பர் மாதம் தன் மகவின் வரவை எதிர்நோக்கியிருக்கிறார். அடுத்த தலைமுறை வரவை, ஒவ்வொரு நாள் காலண்டர் தாளை கிழிக்கையிலும் ஒரு குழந்தையின் மனநிலையுடன் குதூகலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தார் மணிமுடி. அந்தப் பேரக் குழந்தையைப் பார்க்காமலே பறந்துவிட்டார். தோழர் மணிமுடியின் இறுதி நிகழ்வும் எந்தவித சடங்குகளும் இல்லாமல் நிறைவடைந்தது. தான் கொண்ட கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் மாற்றமில்லாமல் வாழ்ந்து முடித்திருக்கிறார் தோழர் மணிமுடி.

கடந்த முப்பதாண்டு கால வாழ்க்கையை ஒரு தீவிரத்துடன் வாழ்ந்தவர். இயக்கம், தொழிற்சங்கம், கலை - இலக்கியம், குடும்பம் ஆகிய அனைத்து அம்சங்களுக்கும் சம மதிப்பு அளித்து வாழ்தல் கடினம். அதை சாத்தியமாக்கிக் காட்டினார். இவ்வளவு பணிகளுக்கு இடையிலும் ’கலை’ மாத இதழைத் தனது சொந்தப் பணத்தில் பல ஆண்டுகள் நடத்தினார். அது நின்று போனதற்கும்கூட பொருளாதாரம் காரணமல்ல. படைப்புகள், போதிய ஆதரவு இல்லாததுதான் காரணம் என்பேன்.

அவர் சமீபத்தில்தான் தனது விருப்பப்படி முழு நேரப் போராளியாகிக்கொண்டிருந்தார். அரசுப்பணி நிறைவை அதற்கான விடுதலையாகக் கொண்டாடினார். பணி நிறைவு பெற்ற கடந்த மூன்றாண்டுகளில் இந்துத்வ அரச பயங்கரவாதத்துக்கு எதிரான பல பல போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். இந்தக் கடுமையான நேரத்தில் தோழர் மணிமுடியின் மரணம் அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் சமூகத்துக்கும் ஒரு பேரிழப்பாகும்.

‘உஷாராயிரு’. ’கடலோரம்’, பாரா ஜனம்’ ஆகிய மூன்று கவிதை நூல்களின் ஆசிரியர். கடந்த ஆண்டு ‘பாரா ஜனம்’ கவிதை நூல் தொகுப்பு வெளியீட்டின்போதே தன் அறுபதாவது வயது நிறைவையும் இணையர் சுமதியுடன் விழாக் கொண்டாட்டமாக ஏற்றவர்.

‘உஷாராயிரு’ என்பது அவரது முதல் கவிதைத் தொகுப்பு. தன் உடல் நலன் பேணுவதில் அவர் சற்று உஷாராக இருந்திருக்கலாம் என்ற தவிப்பு மேலெழுகிறது. கவிஞன் மணிமுடியைக் காலம் மிக விரைவாகக் கவர்ந்து சென்று விட்டது.

Pin It