doctor jeeva4ஈரோட்டில் ‘ஐயா’ என்றால் எஸ்.மீனாட்சி சுந்தரமுதலியார் அவர்களைத்தான் குறிக்கும். அக்காலத்திலேயே பி.ஏ., எல்.டி. படித்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றொழுக்கமான சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர்.

தனது பேச்சாற்றலால் ‘இருமொழிச் சொற்கொண்டல்’என்று பட்டம் வழங்கப்பட்டவர். ‘கலைமகள் கல்வி நிலையம்’ என்ற கீர்த்திமிக்க கல்வி நிறுவனத்தின் நிறுவனர்.

அக்கல்வி நிறுவனத்தை அவர் வாழுங் காலத்திலேயே தரம் தகுதியில் தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக வளர்த்தெடுத்தவர்.கல்வியில் வணிகத்தைப் புகுத்தாதவர்.

அடிப்படையில் அவர் காங்கிரஸ் கட்சியில் அங்கம் பெற்றிருந்தவர்.ஆழமான காந்திய நம்பிக்கையாளர்.

1921 ஆம் ஆண்டு மகாகவி பாரதி ஈரோடு வருகை தந்தபோது அவரை நேரில் பார்த்தவர். அவரின் ஆவேசமிக்க உரை கேட்டுப் பரவசமடைந்தவர். ஈரோடு நகரமன்றத் தலைவராகவும் திகழ்ந்தவர்.

இத்தகைய வளம்மிக்க வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட ஐயாவின் உடன்பிறந்த அண்ணன் மகன்தான் டாக்டர் ஜீவாவின் தந்தை எஸ்.பி.வெங்கடாசலம்.

தனது சித்தப்பாவின் அடியற்றி இளம் வயதிலிருந்தே பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தவர் எஸ்.பி.வெங்கடாசலம்.

ஐயா தொடங்கிய கலைமகள் கல்வி நிலையத்தில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஏழாண்டுகள் நான் படித்தேன். பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன் ஐயாவின் இல்லம் உள்ளே இருந்தது.

தொடக்கப் பள்ளி மாணவனாக அரைக்கால் டவுசர் போட்டிருந்த அக்காலத்திலேயே ஐயாவைப் பார்க்க அங்கு வரும் எஸ்.பி.வி. அவர்களை நான் பலமுறை பார்த்துள்ளேன்.

ஐயாவின் இல்லத்திற்கு எதிரில் ஐயாவும் எஸ்.பி.வி.யும் நாற்காலியில் அமர்ந்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள்.

கலப்புத் திருமணக் காரணத்தினால் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவராக எஸ்.பி.வெங்கடாசலம் இருந்த சூழலிலும் ஐயா மட்டும் விதிவிலக்காக எஸ்பிவியுடன் தொடர்பில் இருந்தார்.

எனது தந்தை ஈரோடுப் பொதுவுடைமை இயக்கத் தொடக்க காலத் தோழர்களில் ஒருவர் என்பதால் எஸ்.பி.விக்கு நெருங்கிய தோழராக விளங்கியவர். என்னுடைய எல்கேஜி அட்மிஷனின் போதே என் தந்தையுடன் கலைமகள் பள்ளிக்கு வந்தவர் எஸ்.பி.வி.

நான் ஆறாம் வகுப்பிலிருந்தே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இருந்தவன் என்பதாலும் கட்சிக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதாலும் எஸ்.பி.வி அவர்களையும் டாக்டர் ஜீவா அவர்களையும் பள்ளிப்பருவத்திலிருந்தே நன்கு அறிவேன்.

ஐயா மீனாட்சிசுந்தர முதலியார் அவர்களின் கல்விப் பணியைக் கண்ணாரக் கண்டும் நெஞ்சார உணர்ந்தும் வளர்ந்தவர் ஜீவா. பணத்திற்காகவோ புகழுக்காகவோ கிஞ்சிற்றும் ஆசைப்படாத ஐயாவின் உண்மைத் தொண்டுள்ளம் பேரன் ஜீவாவுக்கு ஆஸ்திபோல் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தேசியத்தோடு புரட்சிகரக் கருத்தையும் கைகோத்துக் கொண்டவர் எஸ்.பி.வி. 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று புரட்சியாளர்களும் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர்.

அச்சூழலில் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு ஈரோட்டிலிருந்து எம்.ஏ. ஈஸ்வரன், கேசவலால் காளிதாஸ் சேட் ஆகிய இருவரும் சென்றிருந்தனர்.

அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அம்மாநாட்டில் சந்தித்து பகத்சிங்கின் அமைப்பான ‘நவஜவான் பாரத் சபா’வின் தமிழக அளவிலான மாநாட்டை ஈரோட்டில் நடத்துவதாகவும், அதற்கு நேதாஜி வருகை புரிய வேண்டுமென்றும் நேரில் கேட்டுள்ளனர்.

நேதாஜியும் வருகைதர இசைவு தெரிவித்து விட்டார். கடைசி நேரத்தில் வேறு அவசரப் பணி நிமித்தமாக அவரால் வரமுடியாத சூழல் ஏற்பட்டு விட்டதால் வங்காளத்தைச் சேர்ந்த புரட்சியாளரான கிரண்தாஸை தன் பிரதிநிதியாக ஈரோட்டு மாநாட்டிற்கு நேதாஜி அனுப்பிவைத்தார்.

கிரண்தாஸ் பகத்சிங்குடன் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு சிறைக்குள் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த ஜதீந்திரநாத் தாஸின் உடன் பிறந்த சகோதரர்.

மூன்று புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்ட அதே 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் ஈரோட்டில் ‘நவஜவான் பாரத் சபா’ அமைப்பின் தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது.

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்று அந்த இளம் வயதில் தன்னை விடுதலைப் போராட்ட இயக்கத்தோடு இணைத்துக் கொண்டவர்தான் எஸ்.பி.வெங்கடாசலம். அம்மாநாட்டில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஜீவாவும் பங்கேற்றுள்ளார்.

பகத்சிங்கின் தாக்கமும், பாரதி மீதான ஈர்ப்பும் பின்னர் ஏற்பட்ட ஜீவாவுடனான தொடர்பும் படிப்படியாக பொதுவுடைமை இயக்கச் சிந்தனையுள்ளவராக எஸ்.பி.வி உருவெடுக்க அடித்தளமாக விளங்கின.

காதல் திருமணம் - ஜாதி மறுப்புத் திருமணம் மட்டுமல்ல, மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டார் எஸ்.பி.வி. எஸ்.பி.வி - லூர்து மேரி திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தவர் தந்தை பெரியார்.

ஈரோட்டுப் பொதுவாழ்வுப் பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார். எஸ்.பி.வி. பொதுவுடைமை இயக்கத்தில் ஊறித் திளைத்தவர்.ஐந்து முறை ஈரோடு நகர மன்ற உறுப்பினராக விளங்கியுள்ளார்.

இந்தோ- சோவியத் நட்புறவுக் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். ஈரோடு அரசியல் களத்தில் ஆழங்கால் பட்டவர் எஸ்.பி.வி.

பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஜீவாவுடன் எஸ்.பி.வி அணுக்கமாக விளங்கினார். எம்.கல்யாணசுந்தரம் எப்போது ஈரோடு வந்தாலும் எஸ்.பி.வியின் வீட்டில்தான் தங்குவார்.

ஏ.எம். கோபு, கே.டி. ராஜு, தா. பாண்டியன் போன்ற முக்கியத் தலைவர்கள் பலர் எஸ்.பி.விக்கு மிக நெருக்கமானவர்கள்.

எஸ்.பி.வி யின் மனைவி லூர்துமேரி இயல்பாகவே விருந்தோம்பல் பண்பு மிக்கவராகவும் எஸ்.பி.வியைக் கரம் பற்றிய பிறகு பொதுவுடைமை இயக்கம் பற்றிய புரிதலுள்ளவராகவும் விளங்கியதால் எஸ்.பி.விக்கு தலைவர்களை விருந்தோம்புவது சாத்தியமாயிற்று.

கட்சித் தலைவர்களையும் எங்களைப்போன்ற தோழர்களையும் உறவாக நினைக்கும் பண்பு எஸ்.பி.விக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தார் அனைவருக்குமே இருந்தது.

எம்.கல்யாணசுந்தரம் தொடக்ககாலத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றியவர். எம்.கே ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்.

கே.டிஆரும் ஈரோட்டில் ரயில்வே ஃபிட்டராகப் பணியாற்றியவர். எம்.கே.வும் கே.டி ஆரும் ஈரோட்டில் ரயில்வே ஊழியர்களாக இருந்தபோதே நெருங்கிப்பழகிய தோழர்கள். எஸ்.பி.வி தொடக்க காலத்திலிருந்தே இருவருக்கும் நெருக்கமானவர்.

அதற்கடுத்து தோழர் தா.பாண்டியன் அவர்களுடனான எஸ்.பி.வியின் பழக்கம் ஆழமானது... நெடியது... குடும்பப்பாங்கானது. இத்தனை தலைவர்களையும் பள்ளி, கல்லூரிக்காலங்களிலிருந்தே அருகிலிருந்து பார்க்கிற, பழகுகிற வாய்ப்பினைப் பெற்றிருந்தவர் டாக்டர் ஜீவா.

சூழ்நிலைதானே மனிதனை உருவாக்குகிறது.டாக்டர் ஜீவாவுக்கு இத்தகைய வரலாற்றுப் பின்புலமும் அமைந்த சூழலும் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருந்தன.

டாக்டர் ஜீவாவின் விரிந்த வாசிப்பும், சமூக உணர்வும், கடின உழைப்பும்,  சுயசிந்தனையும் அவரை அவற்றோடு மட்டும் இருக்கவிடாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கும் இட்டுச் சென்றுள்ளன.

செக்குமாடுபோல் இருந்தவரல்ல ஜீவா. புதிய சிந்தனைக்கும் புதிய வகைச் செயல்பாடுகளுக்கும் தன்னை ஆட்படுத்தியவர்.ஆற்றுப்படுத்திக் கொண்டவர்.

காந்தியடிகளையும் காரல்மார்க்ஸையும் கடைசிமூச்சுவரை இறுகக் கரம்பற்றி நடந்தவர் ஜீவா. இவர், ஒரு போராளிக்கான அறச்சீற்றமும் சேவையாளருக்குரிய மனப்பக்குவமும் சரிவிகிதமாகக் கலந்த மனித உருவமாக விளங்கினார்.

பாரதியியல் சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் ஜீவா. 1980களின் தொடக்கத்தில் ‘பாரதி இலக்கியச் சுற்றம் ’என்ற அமைப்பை நிறுவி பாரதியின் கருத்துக்களைப் பரப்புவதில் தனிக்கவனம் செலுத்திவந்தார். அவருடன் இணைந்து அவ்வமைப்பில் பணியாற்றிய அனுபவமும் எமக்குண்டு.

1982 இல் பாரதி நூற்றாண்டின் போது ஆங்கிலேய ஆட்சியினரால் தடைசெய்யப்பட்ட பாரதியாரின் நூல்களான பொன்வால் நரி, ஆறில் ஒரு பங்கு, பெண் விடுதலை போன்ற நூல்களைப் பதிப்பித்து விமர்சையாக வெளிக்கொண்டு வந்தார்.

1921ஆம் ஆண்டு பாரதி ஈரோட்டிற்கு வருகை புரிந்ததை ஆவணப்படுத்தும் விதத்தில் ‘ஈரோட்டில் பாரதி ’ என்ற நூலொன்றைத் தொகுத்தும் தயாரித்தும் வெளியிட்டார்.

பாரதியின் கருத்துக்கள் அடங்கிய ஐந்து கல்வெட்டுகளைத் தயார் செய்து ஈரோடு நகரின் முக்கிய இடங்களில் அவற்றைப் பதித்தார்.

தமிழகத்தின் தலைசிறந்த சேர்ந்திசைக்குழுவான இசைமேதை எம்.பி சீனிவாசனின் இசைக்குழுவை ஈரோட்டிற்கு அழைத்துவந்து மிகப்பெரும் அரங்கொன்றில் முழுக்க முழுக்க பாரதியார் பாடல்களை இசைக்க வைத்தார்.

அப்போது நேயர் விருப்பமாக சில பாடல்கள் கேட்கப்பட்டபோது அவற்றையும் பாடினர் எம்.பி.எஸ் குழுவினர்.

அப்போது எம்.பி.எஸ் பாடிய ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரேஞ் தோழாஞ் தோழா’, ‘துமேராநாம் மேராநாம் வியட்நாம்... வியட்நாம் ’என்ற இரண்டு பாடல்களும் பாடி 40 ஆண்டுகளான பின் இன்றளவும் எமது

நெஞ்சை விட்டு அகலவில்லை. அன்றைய அந்நிகழ்ச்சி எம்மைப் போன்ற பலருக்கும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

1985இல் சித்தார்த்தா பள்ளி என்ற ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியை தொடங்கினார் ஜீவா.டாக்டரின் சகோதரி திருமதி ஜெயபாரதி அப்பள்ளியை நிர்வகிக்கிறார்.

எல்லா வகையிலும் ஜீவாவின் சிந்தனைக்கும் செயலுக்கும் இசைவாக இருந்ததோடு அவரும் ஒரு செயற்பாட்டாளராக உருவெடுத்தார்.

அப்பள்ளி மாணவர்களிடையே போதி இயற்கைக் காப்பு மன்றம், ஷெல்லி ஆங்கில இலக்கிய மன்றம், கபீர் இந்தி இலக்கிய மன்றம்,  சர்சி.வி ராமன் அறிவியல் மன்றம்,  ராமானுஜன் கணித மையம் ஆகிய குழுக்களைத் தொடங்கி அந்தந்தக் குழுஉறுப்பினர்களான மாணவர்களுக்கு சிறப்பு வல்லுனர்களை அழைத்து வந்து வித்தியாசமான பயிற்சிகள் பலவற்றை தொடர்ந்து இடையறாது அளித்து வந்தார் ஜீவா.

ஆர்வமுள்ள இப்பள்ளி மாணவர்கள் பலரைத் தேர்வு செய்து எம்.பி.எஸ் இசைக்குழு வல்லுனர்கள் மூலம் சிறப்புப் பயிற்சியளித்து தனி மாணவர் இசைக்குழுவையே உருவாக்கினார்.

அக்குழு பல பொது இடங்களிலும் சமூக விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடி வந்தனர். அப்பள்ளி ஆசிரியர்களுக்குள்ளும் அவ்வாறான ஒரு குழு உருவாக்கப்பட்டது. அப்பள்ளி இன்றளவும் அனைத்து வகையிலும் ஒரு வித்தியாசமான பள்ளியாக இயங்கி வருகிறது.

‘விடுதலை வேள்வியில் தமிழகம்' நூலுக்காக ‘காந்திஜியும் தென்னாப்பிரிக்கா தமிழர்களும் ’என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதித்தரும்படி டாக்டரிடம் கேட்டிருந்தோம். டாக்டர் எழுதிய கட்டுரை 2000ம் ஆண்டு வெளிவந்த அந்நூலில் இடம்பெற்றுள்ளது.

இக்கட்டுரைக்காக சில நூல்களை ஆழ்ந்து வாசித்தபோது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பற்றியான ஏராளமான புதிய தகவல்கள் கிடைத்ததாகவும் அவற்றில் முக்கியமானவற்றை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் திருப்பூரிலிருந்து தில்லையாடி வரை நான்கு நாட்கள் ஒரு பயணப் பரப்புரை மேற்கொள்ளலாமென்றும் எம்மிடம் தெரிவித்தார் டாக்டர்.

உடனடியாக அதற்கென ஒரு செயல் திட்டத்தைத் தீட்டி அவ்வியக்கத்தை அறிவித்தார்.

இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்  ந. மார்கண்டன் ஆகியோரையும் அழைத்து டாக்டர்,  நான் உள்ளிட்ட பலரும் திருப்பூரிலிருந்து புறப்பட்டோம்.

அப்பயணக் குழுவில் முக்கிய ஆளுமைகள் உள்ளிட்ட 34 பேர் இடம்பெற்றிருந்தனர். எழுச்சிகரமான தொடக்கவிழா திருப்பூரில் நடைபெற்றது.

வழிநெடுக பள்ளிகள், கல்லூரிகள், தெருமுனைகள் என்று பல இடங்களில் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினோம். பல்லாயிரம் பேரைச் சந்தித்தோம்.

தில்லையாடியில் முடிந்தது இப்பயணம்.அவ்வூரில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் இலக்கியச் செல்வர், துணைவேந்தர்,  டாக்டர் உள்ளிட்ட நாங்களெல்லாம் பேசினோம்.

அந்த நான்கு நாட்கள் கிடைக்கப்பெற்ற அனுபவம் பொது மக்களுக்கு மட்டுமல்ல, வழிநெடுக எங்களின் தொடர்ச்சியான உரை கேட்ட பல்லாயிரம் மாணவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாக அமைந்தது.

1998 ஆம் ஆண்டு நவம்பர் 19, 20, 21, 22 ஆகிய நான்கு நாட்கள் அந்தத் தியாகத்திருப்பயணம் நடைபெற்றது. ஆம்... அதற்கு ‘தியாகத் திருப்பயணம்' என்றுதான் பெயரிட்டிருந்தார் டாக்டர்.

தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத்தான் அவ்வியக்கத்தை அறிவித்திருந்தார் டாக்டர். அந்த நிகழ்வையட்டி தில்லையாடி வள்ளியம்மை பற்றியான 86 பக்க தொகுப்பு நூலொன்றை வெளியிட்டிருந்தார்.

எம்முடைய வேண்டுகோளுக்கு இணங்க ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ நூலுக்காக டாக்டர் எழுதிய கட்டுரை அந்நூலில் இடம்பெற்றிருந்தது. “அந்த நூல் வருவதற்கு முன்பு இந்நூல் வருகிறது.

அதற்காக எழுதப்பட்ட கட்டுரையை இப்போதே இதில் பயன்படுத்தலாமா?” என்று என்னிடம் கேட்டார் ஜீவா. “அதனால் என்ன... ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’  நூலின் நோக்கம் அது வெளிவருவதற்கு முன்பே நிறைவேறத் தொடங்கிவிட்டது என்று தானே அதற்கு அர்த்தம். கண்டிப்பாக அக்கட்டுரை இந்நூலில் வெளியாக வேண்டும்” என்று குறிப்பிட்டேன்.

அத்தோடு யாம் தொகுத்து அப்போது வெளியாகியிருந்த ‘ஜீவா முழக்கம்’ சுதந்திரப் பொன்விழா மலரில் இடம் பெற்றிருந்த ரகமியின் ‘தமிழகமும் காந்திஜியும்’ என்ற கட்டுரையையும் சேர்த்து அந்நூலில் வெளியிடுமாறு கூறினேன். அவ்வாறே அதனையும் அந்நூலில் இணைத்துக்கொண்டார் டாக்டர்.

‘திப்பு: விடுதலைப்போரின் முன்னோடி’ என்ற தொகுப்பு நூலொன்றை 1998ஆம் ஆண்டு வெளிக்கொண்டு வந்தார் ஜீவா. பின்னர் ‘ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்னோடி திப்புசுல்தான்’ என்ற சிறு வெளியீட்டைப் பதிப்பித்தார்.

‘விடுதலைப்புலி திப்புசுல்தான்’ என்ற நூலொன்றை 2005 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். 2016 ஆம் ஆண்டு ‘திப்புவின் வாள் ’என்ற டாக்டரின் புதிதான மொழி பெயர்ப்பு நூல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூல் 2017 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது.

வெள்ளையரை எதிர்த்து திப்பு உயிர்த்தியாகம் செய்த 200 ஆம் ஆண்டை மதச்சார்பின்மையை வலியுறுத்தும் நிகழ்வாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் டாக்டர் ஈரோட்டிலிருந்து திப்பு வீரமரணமடைந்த கர்நாடக மாநிலத்திலுள்ள சீரங்கப்பட்டிணம் வரை மாணவர்கள் பங்கேற்கும் ஒரு சைக்கிள் பயணத்தை ஏற்பாடு செய்தார்.

இவருடைய சித்தார்த்தா பள்ளியுடன் மேலும் மூன்று பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் ஒன்றிணைத்து மொத்தம் 35 மாணவர்கள் 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ஈரோட்டிலிருந்து சைக்கிளில் சீரங்கப்பட்டிணம் புறப்படுமாறு திட்டமிட்டார்.

பயணத்தை அன்றைய ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கருத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

பயணத்தின் முக்கிய நோக்கமாக சீரங்கப்பட்டிணத்தில் சிதிலமடைந்து கிடக்கிற திப்புவின் வரலாற்று நினைவிடங்களைப் புதுப்பித்து சீராக்குவதென அறிவித்தார்.

மாணவர்கள் வழிநெடுக வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மதச்சார்பற்ற சிந்தனையை விதவிதமான முறைகளில் விதைத்துச் சென்றனர்.

பிப்ரவரி 13, 14 இருநாட்கள் மாணவர்கள் சீரங்கப்பட்டணத்திலேயே முழுக்கத் தங்கியிருந்து திப்புவின் வரலாற்று இடங்களை சீர்செய்யும் பணிகளில் நேரடியாகக் களமிறங்கினர்.

டாக்டரும், டாக்டரின் சகோதரி ஜெயபாரதியும்,  இவர்களின் தந்தை எஸ்.பி. வெங்கடாசலம் அவர்களும், சில ஆசிரியர்களும் உடனிருந்து மாணவர்களை வழிநடத்தினர். பணி முடிந்த பின்பு திரும்பவும் மாணவர்கள் சைக்கிளிலேயே ஈரோடு திரும்பினர்.

அந்நிகழ்ச்சியின் நிறைவுநாளில் கர்நாடக மாநில அமைச்சரே பணியிடத்திற்கு வருகைபுரிந்தார்.மாணவர்கள் மூலம் அப்போது அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை பின்னர் ஒரு கட்டத்தில் நிறைவேறியது.

கர்நாடக அரசு அவ்விடத்தை ஒழுங்கு செய்ததோடு திப்பு வரலாற்று இடங்களை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது.

திப்பு பற்றியான டாக்டரின் நூல்கள் அனைத்தும் திப்புவின் விடுதலைப்போராட்டம் தொடர்பான வரலாற்று ஆதாரங்களையும், திப்பு இந்துமதக் கோயில்களுக்கும் நிறுவனங்களுக்கும் கொடுத்த மரியாதையை தக்க ஆவணங்கள் மூலம் நிறுவுவதையும் அடிப்படையாகக் கொண்டவையாகும்.

எந்த இடத்திலும் மறந்தும் ஒரு மதம் சார்ந்து டாக்டர் எதையும் எழுதியதில்லை. இரு மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், பரஸ்பர நம்பிக்கையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும், இருதரப்பு மரியாதையையும் ஏற்படுத்துவதே டாக்டரின் இத்தகைய செயல்பாடுகளுக்கான அணுகுமுறையாக இருந்துள்ளன.

சாதி - மதத்தின் பெயரால் வன்மமும் வன்முறையும், கசப்பும் காழ்ப்பும் இல்லாத ஒரு ஆரோக்கியமும் அமைதியுமான சூழல் ஏற்பட வேண்டுமென்பதைத் தவிர வேறு எவ்விதமான எதிர்பார்ப்பும் டாக்டருக்கு இருந்ததில்லை.

‘இந்து முஸ்லிம் ஒற்றுமை ’என்ற காந்தியடிகளின் கருத்துக்களடங்கிய தொகுப்பு நூலொன்றை 2002ஆம் ஆண்டு மொழிபெயர்த்து வெளிக்கொண்டு வந்தார் டாக்டர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் காந்தியடிகள் மதங்களிடையே நல்லுறவை உருவாக்கும் மிக உயர்ந்த நோக்கில் வெளியிட்ட கருத்துக்களை உள்ளடக்கிய அந்நூலை மொழிபெயர்த்துள்ளார்.

75 பக்கங்கள் கொண்ட அந்நூலை பத்மஸ்ரீ எஸ்கேஎம்.மயிலானந்தன் அவர்கள் தலைமையில் இயங்கும் தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் வெளியிட்டுள்ளது.

‘மதங்களைக் கடந்த மனித நேயத்தை வளர்க்க வேண்டியதே இன்றைய தேவை. சிறந்த மத நம்பிக்கையாளராகவும் மனிதநேயம் மிக்கவராகவும் வாழ விழைவோர்க்கு மகாத்மாவின் சிந்தனைகள் நல்ல வழிகாட்டி’ என்றும் ‘இளம் தலைமுறையினர் மத்தியில் மதச்சார்பற்ற சிந்தனையை வளர்க்கவும், மத நல்லிணக்கத்திற்குப் பாடுபட அவர்களை உருவாக்கவும் தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் உறுதி கொண்டுள்ளது.

அதன் ஒரு அம்சமே இந்நூல். இதை தேசத்திற்கு அர்ப்பணிக்கிறோம் ’என்றும் எஸ்கேஎம்.மயிலானந்தன் அந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழக பசுமை இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக மக்களிடம் விதவிதமான வடிவங்களில் சுற்றுச்சூழல் பற்றியான விழிப்புணர்வை தொடர்ந்து பல்லாண்டுகளாக ஏற்படுத்தி வந்தார் டாக்டர்.

ஒருமுறை ஈரோட்டில் 20க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகளை ஒன்றிணைத்து இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் உண்ணாவிரதம் ஒன்றை முன்னின்று நடத்தினார்.

தாயுள்ளத்துடன் கூடிய நுட்பமான தொடர் முயற்சியால் ஆயிரக்கணக்கான குடி நோயாளிகளை அந்நோயிலிருந்து மீட்டெடுத்து அவர்களின் குடும்பங்களில் நிம்மதி நிலவக் காரணமாக இருந்தார்.

வீதி நாடகங்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி அவற்றின் மூலம் சமூகக்கருத்துகளை விதைத்தார்.தலைசிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் ரசிப்பதற்குமான அமைப்புக்களில் செயல்பட்டார்.

ஆர். நல்லகண்ணு, தா. பாண்டியன், கே.டி. ராஜு, ஏ.எம். கோபு, டி. ராஜா போன்ற கட்சித் தலைவர்கள் வருகிறபோதெல்லாம் கட்சி அலுவலகங்களிலோ, அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலோ சந்தித்து கட்சி வளர்ச்சிக்கான கருத்துக்களை முன்வைத்துக் கலந்துரையாடுவார்.

அவர்களது உடலை அங்கேயே பரிசோதித்து அவர்களுக்கான மாத்திரைகளை, மருந்துகளை பரிவோடு வழங்குவார். பொதுவாழ்வில் தியாக உணர்வோடும் உண்மையாகவும் தொடர்ந்தும் உழைக்கும் எவராகினும் அவர்களைக் காப்பாற்றுவதும் கவனிப்பதும் சமூகத்தின் கடமை என்று கருதுபவர் டாக்டர்.

அத்தகையவர்களின் தனித்திறமைகளை சமூகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கு தம்மைப் போன்றவர்கள் பாலமாக இருக்க வேண்டுமென்றும் கருதிச் செயல்பட்டவர்.

காந்தியச் சிந்தனையாளர்களோடும், தன்னார்வ அறக்கட்டளைகளோடும், எழுத்தாளர்களோடும், கலைஞர்களோடும், கல்வியாளர்களோடும்,  ஆய்வாளர்களோடும், பத்திரிகையாளர்களோடும், களப்பணியாளர்களோடும் கடைசி மூச்சுவரை நெருக்கமான தொடர்புடனும் தோழமையுடனும் விளங்கியவர் டாக்டர்.

நம்மாழ்வாருக்கும் டாக்டருக்குமான தொடர்பு ஆழமும் அர்த்தமும் மிக்கது. பழங்குடி மக்கள் சங்கத்திலிருந்து காந்தி கிராமப் பல்கலைக்கழகம் வரை உயிரோட்டம்மிக்க, செயல்பூர்வமான இடையறாத தொடர்பிலிருந்தவர் டாக்டர்.

எத்தனையோ பேரை எத்தனையோ விதங்களில் பார்த்துக்கொண்ட டாக்டரை அவரது மனைவி இந்திராவும் மகன்களும் மகளும் கனிவுடன் கவனித்துக்கொண்டனர். அவர்களது அக்கறை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான வீ. ராஜமோகன் மறைவையட்டி உங்கள் நூலகத்தில் வெளியான எமது கட்டுரையை வாசித்துவிட்டு எம்மிடம் தொடர்பு கொண்டு நெகிழ்ச்சியுடன் பேசினார் ஜீவா.

அதன்பிறகு தோழர் தா.பா.வின் மறைவையட்டி ஈரோட்டில் நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்கு தான் வர இயலவில்லையென்றும், அப்போது ஒரு முக்கியப்பணி நிமித்தமாக பாண்டிச்சேரியில் இருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்தார்.

அத்தகைய உணர்வாளராக விளங்கிய டாக்டரைப் பற்றியான கட்டுரையை அதே உங்கள் நூலகத்தில் இவ்வளவு விரைவில் எழுத வேண்டியது வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

அவரது இரங்கல் நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நிலை அவர் கடைசியாக எம்முடன் பேசியதிலிருந்து மூன்றாவது நாளே ஏற்படுமென்று எவரால் நினைத்துப் பார்க்க முடியும்?

டாக்டர் ஜீவா... இயங்கிக் கொண்டே இருந்தவர்… இயக்கமாகவே திகழ்ந்தவர்.

- த.ஸ்டாலின் குணசேகரன்

Pin It