தஞ்சாவூர் மாவட்டத்தை நான் எழுதியதைக் காட்டிலும் சி.எம்.முத்து நிறையவே எழுதிவிட்டார் எனத் தி. ஜானகிராமனாலும், நேர்மை, உண்மை, தனக்கு உண்மையாயிருத்தல், சுயத்தை கேள்விக்கு உட்படுத்தல் என்பன பற்றிப் பேசும்போது, சி. எம். முத்து என்னும் ஓர் இளம் எழுத்தாளர் பக்கம் நம் கவனம் செல்கிறது என வெங்கட்சாமிநாதனாலும், சி.எம். முத்துவின் படைப்புகள் பாசாங்கற்ற பாணியில் நேர்த்தியான எழுத்து நடையில் இனிமை தரும் பேச்சு மொழியில் அமைந்து தஞ்சை வட்டாரத் தமிழில் தனிச் சிறந்த படைப்பாளுமையோடு சித்திரமாகியுள்ளது என சா.கந்தசாமியாலும், கள்ளர் சாதியைச் சார்ந்தவரான சி.எம்.முத்து கள்ளர் சாதியில் பிறந்தவர்களின் சமூக வாழ்க்கையை முன்வைத்துப் புனைவாக எழுதினாலும், கதைப்போக்கின் நம்பகத் தன்மை காரணமாக, அவருடைய நாவல்கள் மானுடவியல் நோக்கில் சமூக ஆவணமாகின்றன என ந. முருகேசபாண்டியனாலும் காவேரிப் படுகையின் தனித்த எழுத்தாளராக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.எம். முத்து.

mirasu novelஎண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர், தஞ்சையின் குறிப்பிட்ட நிலவெளியினைத் தமது படைப்பாக்க களமாகக் கொண்டு பல்வேறு கதைகளைப் புனைந்துள்ளார். கதைகள் அனைத்துமே தஞ்சை மக்களின் குறிப்பாகக் கள்ளர் இன மக்களின் சிக்கல்களை, முரண்களை, வேளாண்மையோடு இணைந்த அவர்களின் கொண்டாட்டங்கள், சடங்குகள், விழாக்கள், பண்பாடுகள், அவர்களுக்குள் இருக்கக் கூடிய வன்மம், துரோகம் மட்டுமல்ல, பிற இனத்தாரோடு அவர்கள் கொண்டிருந்த உறவு ஆகியவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்துபவையாக உள்ளன. இவை அனைத்தும் சுய சாதி குறித்துப் பேசியிருந்தாலும், பெருமிதங்களைப் பேசவில்லை.

வேளாண்குடிகள் நிரம்பிய தஞ்சை நிலப்பரப்பு இன்றைய நவீன நகர்வுகளால் தமது ஆன்மாவை இழந்து வருகிறது. மரபுசார் வாழ்க்கை முறையிலிருந்து நவீன வாழ்க்கை முறைக்குத் தக்க, தம்மை தகவமைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. 80, 90களில் பார்த்த தஞ்சை கிராமங்கள் இன்று இல்லை. எல்லாவகையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவர்களின் பிள்ளைகள் விவசாயத்தை நம்பிப் பயனில்லை எனப் பலர் சிங்கப்பூர், மலேசியா, அரபு, தற்பொழுது அமெரிக்கா, கொரியா, பிரான்ஸ் போன்ற இடங்களுக்குச் சென்று பொருள் ஈட்டுகின்றனர். படித்து விட்டு படித்ததற்கு ஏற்ற வேலையும் கிடைக்காமல் விவசாயத்தையும் பார்க்க முடியாமல் அலைந்து திரிந்துகொண்டிருப்பவர் பலர். பிள்ளைகளின் படிப்பிற்காக, கிராமங்களை விட்டு நகரம் நோக்கி இடம்பெயர்தல் எனப் பல்வேறு நிலைகளில் தஞ்சை கிராமப் பகுதி மாறி வருகிறது.

வற்றாத உயிரை செழிக்கச் செய்யும் காவேரி கரைபுரண்டு தஞ்சையில் ஓடியது. நிலங்கள் செழித்துக் கிடந்தன. அதைச் சார்ந்தே மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. சோழர்கள் காலத்தில் பாசனம் முறைப்படுத்தப்பட்டன. கடைமடைவரை தண்ணீர் பாய்ந்து வளம் பெருக்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் கிணறுகள் இருந்தன. நிலத்தடி ஆழ்குழாய் கிணறுகள் குறைந்தளவே இருந்தன. அப்பொழுது நிலத்தின் 100 அடிக்குள்ளாகவே நீர் கிடைத்தது. இன்று 600 அடிக்கு மேல்தான் நீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி உறிஞ்சி நிலம் அதன் தன்மையை மெல்ல மெல்ல இழந்துவருகிறது. மற்றொருபுறம் நிலத்தடியில் படிந்துறைந்துள்ள இயற்கை வாயுக்களை எடுப்பதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான எதிர்ப்புக் குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விவசாய நிலங்கள் பெரும்பான்மை அழிக்கப்பட்டு மனை களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இச்சூழலில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்று வரை அந்நிலப்பகுதி சமூக, அரசியல், பொருளியல் நிலைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பதை மூன்று தலைமுறையின் கதையாக, முதல் தலைமுறையின் கதையை விரித்துக் கூறிச்செல்கிறார். அத்துடன் தஞ்சைப் பகுதி என்றால் பண்ணையார்கள் கூலித் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டினர், அதிக நேரம் வேலை குறைந்த கூலி, சாட்டையடி, சாணிப்பால் புகட்டல், குடிசை கொளுத்தல், வேலை நேரத்தில் தாய்மார் பச்சிளங்குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டினால் தண்டனை, நேரத்திற்கு வேலைக்கு வரவில்லை என்றால் தண்டனை எனப் பேசப்பட்டவையிலிருந்து வேறு வகைப்பட்ட வாழ்க்கை முறையும் இப்பகுதியில் இருந்துள்ளதை சி.எம்.முத்து தமது மிராசு நாவலில் அடையாளப் படுத்துகிறார்.

படைப்பாக்கத்தை இரண்டு வகையாகப் பகுத்துப் பார்க்கலாம். ஒன்று படைப்பாளனின் அனுபவங்களைக் (மனநிகழ்வு) கலையாக்கம் செய்வது. மற்றொன்று இத்தாலிய எழுத்தாளர் உம்பெர்த்தோ எக்கோ கூறுவது போலத் தகவல்களைத் திரட்டி திட்டமிட்டு (மொழி நிகழ்வு) உருவாக்குவது. இவற்றுள் முதல் வகையான எழுத்தாக்கம் சி. எம். முத்துவினுடையது. மிராசு நாவல் குறித்து, இந்த நாவல் அநேக வகையான திருப்பங்களோ கற்பனைக்கும் எட்ட முடியாத மர்ம முடிச்சுகளோ நாயகன் நாயகி போன்ற சம்பிரதாயமான பாத்திரங்களோ அடுக்கடுக்கான சம்பவங்களோ எதிர்பார்ப்பை நோக்கிய நிகழ்வுகளோ கோர்வைகளோ ஏதுமற்று நதி அதன் போக்கிற்கு ஓடுகிற மாதிரி நாவல் அதன் போக்கிற்குச் செல்கிறது அவ்வளவு மட்டும்தான் என அவரே பதிவு செய்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்திலிருந்து தொடங்கி சமகாலம் வரை, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகாலம் ஒரு குடும்பத்தின், ஓர் ஊரின் அவர்கள் பார்வையில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றத்தைக் கவனப் படுத்துகிறது மிராசு. தஞ்சைப் பகுதியுள்ள கிராமமும், அங்கு வாழ்ந்த சேது காளிங்கராய மிராசுவைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. அவரின் பலம் பலகீனம் அனைத்துமே போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே செல்கிறது. மிட்டா மிராசு என்னும் சொல்லுக்குரிய பொருள் உச்சத்தில் இருந்ததையும், மெல்ல மெல்ல அர்த்தம் இழந்து வருவதையும், அதனால் அம் மிராசுகள் அடையும் பதட்டத்தையும் பதிவு செய்வதுடன், ஒற்றுமையின் அரசியலையும் நுட்பமாகப் பதிவுசெய்துள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ் சிறிய கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்த ஏராளமான மிராசுதார்களைப் பற்றி என் சிறு பிராயத்திலிருந்தே ஏராளமாக அறிந்து வைத்திருக்கிறேன். அவர்களின் வாழ்க்கை முறையானது அபாரமானது, ரசிக்கத்தக்கது, நேர்த்திமிக்கது, மிடுக்கானது, கொஞ்சம் சூசகமானதும் கூட. அப்படி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் வாழ்க்கையே இந்நாவல்.

மரபு ரீதியாக வரலாற்றினைக் கதைகளாகக் கூறி, அடுத்த அடுத்தத் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வகையில் சேது காளிங்கராய மிராசுவின் வரலாறும் கதைசொல்லி சி.எம். முத்து அவர்களால் உள்ளதை உள்ளபடிக் கூறுவதுடன் கலைத் தன்மை கொண்ட கதையாக உருமாற்றப் பட்டுள்ளது.

சேது காளிங்கராயரின் வாழ்க்கை பற்றிய சித்திரிப்பு ஒரே திசையை நோக்கிய நகர்வாக இல்லாமல் வலைபோலப் பின்னிப் பின்னி விரிவடைந்து செல்கிறது. சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகம் பல்வேறு நிலைகளில் மறு ஆக்கம் செய்யவேண்டியிருந்தது. பொதுப் புத்தியில் படிந்து போன பல்வேறு கருத்தாக்கங்கள் உடைபடத் தொடங்கின. சேது காளிங்கராயருக்கு ஒரு பெரிய மிராசுதாருக்கு கார்வாரியும் கணக்கப்பிள்ளையும் இல்லாமலிருந்தால் ஊருக்குள் இவ்வளவு பெரிய கௌரவமும் மரியாதையும் கிடைத்துக் கொண்டிருக்குமா? (பக்.28) என மரியாதையும் கௌரவமும் கிடைப்பது சொத்தினாலும், அக்கணக்கு வழக்குகளைப் பார்க்க கணக்கப்பிள்ளைகள் வைத்துக்கொள்ளுவதாலும் தான் என்ற எண்ணம் இருந்தது. வாழ்க்கைக்கு சொத்து இருந்தால் போதும் கல்வி தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆனால் சூழல்கள் மாறி வருவைதை அவருடைய மனைவி உணர்ந்து, அரசாங்கத்தை எதுக்கு எதிர்பார்த்துகிட்டு. நீங்களே ஒரு பள்ளிக்கூடத்தை கட்டி நாலஞ்சி வாத்தியாருகளப் போட்டு ஆரம்பிச்சு வச்சிருங்களேன். ஊர்ல உள்ள அம்புட்டு புள்ளைகளும் படிச்சி முன்னுக்கு வந்தா ஒங்களுக்குத்தான பெருமை. ஒங்க ஆஸ்திக்கும் பாஸ்திக்கும் செய்ய முடியாதா என்ன? என்று ராஜாமணி கேட்டார் (பக்.3) அதற்கு, சேது காளிங்கராயர் தங்களுடைய பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களே ஊர் பிள்ளைகளுக்கு செய்யவேண்டுமா என்னும் எண்ணங்கொண்டவராகவே இருக்கிறார். பின்னாள்களில் அவரின் அக இருப்பையும் புற இருப்பையும் சூழல்களும் அதனால் ஏற்படும் அனுபவங்களுமே தீர்மானிக்கின்றன.

 இந்தளூர்காரர்கள் கல்வி கற்கவில்லை என்றாலும் மாறி வரும் அரசியல் சூழல், அதனால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். கல்வியின் தேவையை உணர்ந்து அவர்கள் ஊரில் பள்ளி தொடங்குவது குறித்து சேது காளிங்கராயரிடம் பேச வருகின்றனர். அவர்கள் அனைவரும் அமர்ந்து பேச ஆலோடியில் போதுமான இடமிருந்தும் சேது காளிங்கராயர் அமரச் சொல்லவில்லை. வந்தவர்கள் அத்தனைப் பேரையும் உக்கார வைத்து அவர்களை உற்சாகப் படுத்துகிற விதமாய் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேசிக் கொண்டுவிட்டு அனுப்பியிருக்கலாம்தான். அது நாகரிகமாய்க் கூட இருந்திருக்கும்தான். அப்படி யெல்லாம் செய்யாமல் பிசுபிசுவென்று தூறி நான்கு தூத்தலைப் போட்டுவிட்டு அடங்கிப் போய்விடுகிற மழை மாதிரி சுருக்கமாகப் பேசி அனுப்பியதும் அவர்களை நிற்க வைத்தே அனுப்பியதும் அவருக்கு எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது மெய்யாகவே இருந்தது. இந்தளூரில் வசிக்கிறவர்களில் முக்கால்வாசி பேர்களுக்குமேல் அவர் ஜாதிக்காரர்களாய் இருந்தும்கூட அவர்களையெல்லாம் உதாசீனப் படுத்திவிட்டு வாழ்வது எவ்வகையில் பொருந்துமென்று உணராதது இன்று வரை புதிராகவே இருக்கிறது.(பக்.98)

ஊர்க்காரர்கள் ஒரே சாதியைச் சார்ந்த நம்மை நிற்க வைத்தே பேசி அனுப்பிவிட்டாரே என்று வருத்தப்படுகின்றனர். இனி அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்ற முடிவினையும் எடுக்கின்றனர். அவ்வூரில் படித்தவரான நாராணச் சோழகரிடம் பிள்ளைகளை அனுப்பிப் படிக்க வைப்பது என முடிவெடுத்து, அவரிடம் அனுமதியும் பெறுகின்றனர். தன்னை மீறி ஊர்க்காரர்கள் செல்கிறார்களே என்ற பதட்டம் காளிங்கராயருக்கு.

தோட்டத்தில் தேங்காய் திருடியவரைப் பந்தகாலுல கட்டி வச்சி இடுப்பு வாரால அடித்தேன் என்று தங்கவேலு தொண்டைமான் கூற, அம்புட்டுதான் செஞ்சீங்களா... அங்கன மாட்டுச்சாணி எதுவும் அம்புடலையா. பால கறச்சி வாய்க்குள்ளயும் தலமேலயும் ஊத்தியிருக்க வேண்டியது தான... ஏ அத செய்யாம உட்டீங்க. நான்னா அப்புடிதான் செஞ்சிருப்பேன் (பக்.148) எனச் சேது காளிங்கராயர் பகர, அதற்கு மறுமொழியாகத் தங்கவேலு தொண்டைமான் காலம் மாறிவிட்டது என எடுத்துரைக்கிறார். இப்படி மேட்டிமைத் தனத்தின் கூறுகளை வெளிப்படுத்துபவராக இருந்தாலும், புதுக் கட்சிகள் முன்வைத்த நிலமற்றவர்களுக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடு என்னும் வாசகம் போன்றவை சேது காளிங்கராயரை உலுக்கி விட்டன.

ராவுத்தர் மகன்கள் வைரமுத்து வம்பாளியார் பற்றிச் சேது காளிங்கராயரிடம் முறையிட்ட பொழுது, “இது கார்த்திகை மாசம். கடும் பஞ்சகாலம். இப்பல்லாம் போயி பாக்கி சாக்கி கேட்டுகிட்டு இருக்க முடியாது. தைமாத்தைக்கப்புறம் இது பத்தியெல்லாம் பேசிக்கல்லாம். இப்ப நீங்க பொறப்பட்டு போங்க” என அவர்களுக்குப் பதிலுரைக்கிறார். அது பற்றி வைரமுத்து வம்பாளியார் சேதுகாளிங்கராயரிடம் விசாரிக்க, அவரை அமரச் சொல்லி, நமக்குள்ளே எது இருந்தாலும் அடுத்தவனிடம் விட்டுக் கொடுத்துவிடுவேனா. ஊர்க்காரர்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்னை வந்து பார்ப்பதுமில்லை, எது பற்றியும் கலந்தாலோசிப்பதுமில்லை என்று வருத்தப்படுகிறார் இத் தகவல் ஊரில் பரவுகிறது. அவர் மீதான எண்ணம் மாறுகிறது. அவ்வூரில் பாழடைந்து போன கோயிலை கட்ட வேண்டும் என்னும் கோரிக்கையோடு அவ்வூரார் காளிங்கராயரைச் சந்திக்க வருகின்றனர். அப்போது அனைவரையும் அமரச் சொல்லுகிறார், அப்பொழுது, வந்தவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், உண்மையில் காளிங்கராயர் வம்பாளியர் சொன்னது போல் ரொம்பதான் மாறிப்போய் விட்டாரோ.. புலி பதுங்குவதும் பூனை பதுங்குவதும் தனக்கான இரையை எப்படி லாவிக்கொள்ளலாம் என்பதற்காகத் தான் இருக்கும். இந்தப் புலி பதுங்குகிற மாதிரி பதுவுசாய் நடந்து கொள்கிற மாதிரி தெரியுதே. எதற்காக இருக்கும்...

என அவரை முழுமையாக நம்பாமல் பார்க்கிறார்கள். காளிங்கராயர் கோயில் கட்டுமானம் தொடங்குவதற்கான பணத்தையும், மீதிப் பணத்தை ஊரில் வசூலித்துக்கொள்ளுமாறு கூறி, தொகை குறைந்தால் தாம் தருவதாகவும் கூறுகிறார். மடப்பள்ளி சிதிலமடைந்துள்ளதை, பூசாரி சேது காளிங்கராயரிடம் முறையிட அதற்குரிய தொகையைக் கொடுக்கிறார்.

நடவு முடிந்து அறுவடைக்காலம் வரும் வரை குடியானவர்கள் தெருவில் உணவு கூட கிடைக்காத நிலை, அத்தெருவில் இருந்த குழந்தை பசி மயக்கத்தால் மயங்கிவிழ அதன் மருத்துவ செலவுக்கு கணேசனிடம் பணம் கொடுத்து அனுப்பி, வண்டியையும் அனுப்பிவைக்கிறார். பஞ்சம் பசியால் மக்கள் துயரும் நிலையைப் போக்கும் பொருட்டு குடியானவர் தெரு தலைவர் தருமன் சேது காளிங்கராயரிடம் வந்து வினவ,

சும்மாருக்குர காலத்துல வாய்க்கால வெட்டச் சொல்லி சுத்தப்படுத்தலாமுல்ல... நம்ம கோயில்ல வேல நடந்துக்கிட்டிருக்கு. அந்த வேலையக்கூட அவனுகளை வுட்டு பார்க்கச் சொல்லலாமுலௌ... பசிங்குறான் பட்டினிங்குறான். கேக்குறதுக்கே மனசுக்கு சங்கடமா இருக்கே. ஊருக்குள்ள பசியால செத்தான்னு சேதி வந்தா நாமெல்லாம் இந்த உசுர வச்சுக்கிட்டு இருக்கலாமா?. ஏங்காலத்துல இப்புடி ஒரு கொடும நடக்குறதுக்கு கொஞ்சமும் நா அனுமதிக்கமாட்டன்யா... சரி பின் கட்டுல இருக்குற பத்தாயத்த தொறந்துவுட்டு அறுவது மூட்ட நெல்ல அளந்து கட்டி நம்ப வண்டியிலேயே ஏத்தி பள்ளத்தெருவுக்கு அனுப்பிவுடுகய்யா என்றார். எலே தருமா சொவத்த வச்சிதான் சித்திரத்த எளுதணும்னு சொல்லுவாங்க. ஒங்களக் கொண்டுதான நாங்களும் சாவடிய பண்ணி காலத்த தள்ளணும்... இந்த நெல்ல ஆரும் திருப்பித் தரவாணாம். இந்த உதவி இந்த வருசத்துக்கு மட்டுமுல்லடா தருமா. எங்காலம் முடியிர வரைக்கும் நடந்துகிட்டே இருக்கும்.(பக்.402)

மனித வாழ்க்கையின் சரித்திரம் தவறுகள் என்ற படிக்கட்டின் வழியாகவே நடந்து வருகிறது. நிறைவான குடும்பம் அமைந்தும் மயிலாம்பாள் என்ற பெண்ணிடம் மோகம் கொள்ளுகிறார். இப்படி நிகழ்வதற்கான காரணம் கடவுளின் விளையாட்டு, அதற்கு ஆட்படாதவர்கள் யார்? எனப் படைப்பாளர் நியாயம் கூறி கடந்து செல்கிறார்.

மயிலாம்பாள் சேது காளிங்கராயர் மீது மையல் கொண்டிருப்பது குறித்துக் கூறும் பொழுது, ஆண்கள் தான் பெண்கள் மீது ஆசைப்பட வேண்டும். பெண்களுக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று ஏதாவது நிர்பந்தம் இருக்கிறதா? ஆண் இன்றிப் பெண் இல்லை. பெண் இன்றி ஆண் இல்லை என்பது தானே விதியாய் இருந்து கொண்டிருக்கிறது. அதை யாராவது மாற்றிவிடப் போகிறார்களா அல்லது மாற்றிவிடத்தான் முடியுமா? ஆணுக்குள் இருக்கும் காமம் தானே பெண்ணுக்குள்ளும் இருக்கும்(பக்.70) மனிதருக்குத் தன்னெழுச்சியாக எழக்கூடிய உணர்வுகள் பெண், ஆண் என்று பேதம் காணுவது முறையல்ல, அது இயல்பு என்று எடுத்துரைக்கிறார்.

ராஜாமணி அம்மையார், ஊர்ப் பிள்ளைகளுக்காகத் தன் கணவரை பள்ளி கட்டச் சொல்லுகிறார். அதே நேரத்தில் கார்வாரி கணேசனுக்கு உணவு பரிமாறச் சொல்லும் பொழுது, வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடாமல் குறிப்பாகக் கணவருக்கு உணவு கொடுக்காமல் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கணவரின் தேவையைக் குறிப்பால் அறிந்து நடக்கக் கூடியவர். குடியானவர் தெருவில் கோயில் அமைக்கவேண்டும் என்று உதவி கேட்டபொழுது மகன் அசோகன் மறுக்க, தன் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் நகையைக் கழற்றிக் கொடுக்கிறார். சேது காளிங்கராயரும், ராஜாமணி அம்மையாரும் காலம் உருண்டோட காலமாற்றத்தை உள்வாங்கி ஊர்மக்களின் தேவைகளை அறிந்து உதவுவதும், எத்தனை நவீனங்கள் உள் நுழைந்தாலும், பிள்ளைகள் மாறச் சொன்னாலும் பிடிவாதமாகச் சில பழமைகளை, வழக்கங்களை விட்டுக் கொடுக்காதவர்களாகவே இருவரும் இருக்கின்றனர்.

இன்று அறம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக நுகர்வு கலாச்சாரத்தில் வாழும் நாம் பொருள்கள் உற்பத்தியும், அதன் வணிகமும் எந்த அளவுக்கு அறம் சார்ந்து நிகழ்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. மண்ணில் நல்ல வண்ணம் வாழ எதுவேண்டுமென்றாலும் செய்யலாம். பொருள்களில் எதனை வேண்டுமென்றாலும் கலக்கலாம். விளம்பரத்தின் வழியே அனைவரையும் மூளைச் சலவை செய்து வாங்க வைக்கும் உத்தியென நீண்டு செல்கிறது. இக்கதையில் வரும் வயதான விளக்கெண்ணை வியாபாரி ஒருவரிடம் அவரது வணிகம் குறித்து அவ்வூர்க்காரர் வினவ, அவர் “வெள்ளக்காரன் காலத்துலருந்து யாவாரம் பண்ணிகிட்டிருக்கன். இதுவரைக்கும் நா குடுக்கற எண்ணெயப் பத்தி ஆரும் பொட்டத்தனமா கொற சொன்னது கெடையாது. கலப்படமான எண்ணெயக் கொடுத்தா பச்சப் புள்ளய கதி என்னாவும்னு நெனச்சிப்பாருங்க... கலப்பட எண்ணெயக் குடுத்தானே பாவின்னு நம்பளதான் நொட்டச் சொல்லு சொல்லுவாங்க.” என்று கூறும் மனநிலை, பசியால் மயங்கிய பிள்ளையைப் பார்க்க வந்த மருத்துவச்சி துலுக்கவீட்டம்மா, தருமன் பணம் கொடுக்கும் “பொழுது, பொளச்சி கெடங்கப்பா... நல்லாயிருந்தா வந்து வாங்கிக்கிறேன். எங்காசு எங்க போயிரப் போவுது” என்று இயல்பாய் கடந்து போன எளிய மனிதர்களுக்குள் இருக்கும் மனிதத்தை அறத்தை தொலைத்துவிட்டோமா என்று எண்ணத் தோன்றுகிறது.

டீக்கடை நடத்தும் சுவாமிநாத மல்லிக் கொண்டாரிடம், ஆண்டமொவனே நம்ம ஊருக்குள்ள வாத்தியாரய்யா பள்ளிக்கொடம் வச்சி நடத்திகிட்டிருக்காங்களே அங்கன எங்கவூட்டு புள்ளைகளையும் சேத்துவுடலாங்களாய்யா - சுக்கிரன் என்பவர் கேட்க, மல்லிக்கொண்டார் என்ன துமுரடியிருந்தா இப்படி கேட்பான். யாரிடமும் இதுபோல் கேட்டுவிடாதே உதைத்து துவம்சம் செய்துவிடுவார்கள் என்று எச்சரித்து அனுப்புகிறார். சுவாமிநாத மல்லிக்கொண்டார் டீக்கடையில் குடியானவர்களுக்கு பித்தளை டபரா செட், சேரி ஆட்கள் கண்ணாடி கிளாஸ் தண்ணீர் குடிக்க தனிக்குவளை. இட்லி, பலகாரம் போன்றவற்றை கீற்று ஓட்டையின் வழி கொடுக்கிறார். அதே மல்லிக்கொண்டார், பஞ்சம் வந்து அம்மக்கள் பசியால் வாடியபோது, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்.

இயற்கை விவசாயம் செய்த பொழுது இயற்கையோடு இணைந்து, இயற்கை மாற்றங்களுக்கு உட்பட்டு விவசாயம் செய்தார்கள். வயல்களில் குரவை, ஆரால், கெளுத்தி, கெண்டைப்பொடி, உளுவை, விலாங்குமீன், சிலேப்பி எனப் பலவகையான மீன்கள் துள்ளி விளையாடின. பசுமைப் புரட்சி வந்த பிறகு வயல்களில் மீன்கள் இல்லை. ஆற்றுப் பாசனமும் இல்லை. மனிதர்களுக்கு புதுப்புது நோய்கள் குறிப்பாகப் புற்றுநோய் அதிகரித்துவிட்டது. இந்த மாற்றத்தை நுட்பமாக இந்நாவலில் பதிவு செய்துள்ளதுடன், நீரானிக்கம், எருயிடுதல், ஆடு மாடு கிடை போடுதல், சித்திரையில் நல்லேர் கட்டுவது, நிலத்தைச் சமன்படுத்தல், விதைவிடுதல், நாற்று நடுதல், களையெடுத்தல், பயிர் விதைத்தல், அறுப்பறுத்தல் ஆகிய விவசாயம் குறித்த நுணுக்கங்களையும், அதன் செய்முறைகளையும் விவரித்துள்ளது. இவை மட்டுமல்லாமல், வேளாண் நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலையினையும் சுட்டிச் செல்கிறது.

திருவிழாக்கள் பண்பாட்டின் அடையாளம். கிராமங்களின் கொண்டாட்டம் திருவிழாக்களின் வழியே வெளிப்படுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பிடிப்புக்கு ஏதோ ஒரு தெய்வத்தின் கையைப் பற்றிக்கொள்ளுகிறார்கள். பெரும்பாலும் கிராம தெய்வங்கள் முன்னோர் வழிபாடாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமங்களுக்கும் வழிபாட்டு முறைகள் வேறுபடுகின்றன. திருவிழாக்களில் ஐம்பது அறுபது ஆடுகள் வெட்டப்படும், நூற்றுக்கணக்கான சேவல் அறுபடும், அர்சனைக்கு வெண்பொங்கல், பழங்கள், சாராயம், சுருட்டு, புகையிலை, பெண்களின் தலைமுடி என்று படைப்பார்கள், என்னும் விவரணை கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் தலைமுடியை வைத்து வணங்குவதற்கான காரணம் தெரியவில்லை. கிராம தெய்வங்களை வணங்காமல் சென்றால் உயிருக்கு, உடலுக்குத் தீங்கு நேரும் என்னும் நம்பிக்கை பொதுவாகக் கிராமங்களில் உண்டு. இங்கும் கோடுகிளி முனியாண்டி வணங்காமல் சென்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நம்பிக்கையின் காரணமாக அக்கோயிலைக் கடந்து செல்லும் சேது காளிங்கராயர் இறங்கி வணங்கிச் செல்கிறார்.

கணினி யுகத்தில் உடல்சார் விளையாட்டுகள் மறக்கடிக்கப்பட்டு அறிவுசார் விளையாட்டுகள் முன்னிருத்தப்பட்டு, இளையோர் வாழ்க்கை முறை மாறியுள்ளது. அதனால் பல்வேறு, உடல் மனம் சார்ந்த சிக்கலுக்கு ஆட்படுகின்றனர். நாம் மறந்து போன பல்வேறு விளையாட்டுக்களான, கல்லான் கல்லான் தாப்புட்டி, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது, கொல கொலகாய் முந்திரிக்காய், ஓடிப்பிடித்து விளையாடுவது, உப்பு மூட்டை தூக்குவது, சில்லுக்கோடு, நொண்டிக்கோடு, கொட்டான் கொட்டான், ஈச்சம் பழம் பறிப்பது, வெண்டைக்காய் அடிப்பாகத்தை அரிந்து முகத்தில் ஒட்டி விளையாடுவது, நுனாங்காய் தேர் செய்வது, நுனாம்பழம் தின்பது, புளியம் பழம் தின்பது, ஓணான் பிடிப்பது, இலுப்பை பொந்துகளில் கிளி பிடிப்பது, குருவி பிடிப்பது, ஊசித்தட்டான் காசித்தட்டான் பிடிப்பது, வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து அதன் றெக்கைகளை உள்ளங்கையில் தேய்த்து மினுமினுப்பைக் காட்டுவது, போலீஸ் திருடன் விளையாட்டு, கூட்டாஞ்சோறு ஆக்குவது, ரயில் வண்டி விளையாடுவது, கோலிக்குண்டு, கிட்டிப்புல் (பக்.568-569) ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளது. மறந்து வரும் இவ்விளையாட்டுகள் நம் மனதிற்கும், உடலுக்கும் புத்துயிர்ப்பைக் கொடுக்கக்கூடியன.

காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி என ஒவ்வொரு அரசியல் பின்புலத்திலும், தமிழகத்தில் குறிப்பாக இந்தளூர் கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காங்கிரஸ் கட்சி ஆளப் புறப்பட்டப் பிறகுதான் சாலைகளின் இரண்டு ஓரங்களிலும் மரங்கள் நடச்சொல்லி உத்தரவு போட்டு குறிப்பாக புளியங்கன்றுகள் நட்டு வளரத் தொடங்கியிருந்தது.(பக்.45) காமராசர் முதல்வர் ஆன பிறகு தார் சாலை, பள்ளிக்கூடம், மின்சாரம் வந்ததும், தார்சாலையினால் பேருந்துகள் இயக்கப்பட்டதும், அம்மாற்றங்கள் உருவாக்கிய வாழ்க்கை மாறுதல்களையும் மிராசு பேசுகிறது.

தாய்மாமன் முதல் மரியாதை, கோழிபிடித்தல், மழை பெய்யப் பெண்கள் ஒன்றுகூடி ஊருணிப் பொங்கல் வைத்தல், பந்தயக் குதிரை வாங்கச் செல்லுதல், குதிரை வாங்குவதில் உள்ள நுணுக்கம், ரேக்ளா வண்டி செய்தல், காலச் சூழல் குறித்த விவாதம், கோயில் நாட்டாமை பெறுவதில் உட்சாதி சிக்கல் வெடித்துக் கிளம்புதல், கோயில் நாட்டாமை தேர்ந்தெடுத்தல், அவர்களுக்குள் நிகழும் உரையாடல், பொங்கல் பண்டிகை குறித்த விவரணை என ஒவ்வொரு நிகழ்வுகளும் கதையினுள் ஊடுபாவாய் நுணுக்கமான விவரணைகளுடன் நெய்யப்பட்டுள்ளன.

காலத்தின் தனித்த தன்மையும், களத்தின் தனித்தன்மையும், அந்தக் காலத்தில் களத்தில், நடமாடும் பாத்திரங்களின் தனித் தன்மைகளையும் படம் பிடித்துக் காட்டுவதுதான் இலக்கியத் தரம் உடைய அசல் நாவலாக இருக்கமுடியும் என கு.அழகிரிசாமி குறிப்பிடுவது போல, மிராசு நாவல் அவர் கூறக் கருதிய காலத்தினையும், நிலவெளியையும், அப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களையும் நம் முன் காட்சிப்படுத்தியுள்ளார். அப்பகுதியின் சூழ்நிலை, பருவநிலைகள், விளைபொருட்கள், தொழில்கள், உணவுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பேச்சு வழக்குகள் ஆகியவை சி.சு.செல்லப்பா வட்டார நாவல் குறித்துப் பிரதேச நாவல் என்பது ஓர் இடத்து மண்ணுக்கு உரிய தனிவித சுபாவம், காற்றாக எங்கும் பரவி இருக்க வேண்டும். அதுதான் பிரதேச நாவலுக்கு மூச்சு என்று கூறுவது போல தஞ்சை மண்ணுக்குரிய தனித்த அடையாளத்துடன் அம்மக்களின் வாழ்வில் விழுமியங்களை நாவல் முழுவதும் பரவி அம் மண்ணின் மணத்தை நுகரச் செய்துள்ளார்.

சேது காளிங்கராயரின் வீடு, அது குறித்த விவரணை, காலச் சுழலுக்குள் அது அடைந்த மாற்றம், அவ்வீட்டின் வழியாக முன் வைக்கும் கொண்டாட் டங்கள், மனக்கிலேசங்கள், துயரங்கள், உணர்வுகளோடு பிணைக்கப்பட்டுத் தன் அங்கமாகக் கருதிய வீடு, தன் கண்முன்னே சிதைந்து மாற்றங்கள் ஏற்படுவதை எண்ணி மனம் புழுங்கி வதைபடும் இருவர் மனம் என வீடு நம்மிடம் மௌனமாகப் பல கதைகளைக் கதைக்கிறது.

கதைசொல்லி சி. முத்து அவர்களின் மிராசு எந்த முடிவினையும் எதற்கும் அளிக்கவில்லை. அவரவர்களின் வாழ்க்கைப் போக்கில் அனைத்தும் சென்று கொண்டிருக்கின்றன. மனித இயல்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது. இதனுள் இப்படி நடக்க வாய்ப்பு உண்டா என்னும் வினா எழவில்லை. அந்தப் பகுதியில் வாழ்ந்த அனுபவம் என்பதால், அதில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிக நெருக்கமானவர் களாகவே இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்படாத எழுதப்படாத எத்தனையோ கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகள் எல்லாம் எழுதப்பட வேண்டும். மிராசு நாவலைப் பொறுத்தவரை மரபான மொழியில் புதிய வளத்துடன் ஓர் இனத்தின் சமூக வரலாற்றைப் பதிவு செய்துள்ளது என்று கூறலாம்.

மிராசு

சி.எம்.முத்து

வெளியீடு:

 அனன்யா, தஞ்சாவூர் - 5,

தொலைபேசி எண்: 9442346504

 விலை - 780/-

Pin It