கண்களை இழுத்து நிறுத்துகிற கவிதைத் தலைப்பு. கடவுளுக்கு முன் பிறந்தவர்கள். கடவுளுக்கு முன் பிறந்தவர்களா? இம்மூன்று வரிகளுக்குள் புதைந்திருக்கும் பேருண்மை என்னைப் பிரமிக்க வைத்தது. ஆதிவாசி ஒருவரின் அற்புதக் கவிதை. மகாகவியின் நாக்கில் காளி சூலத்தால் எழுதிய சொற்கள் அல்ல. அது வாழ்க்கையின் வெம்மையில், போராட்டத்தின் புழுதியில் ரத்தமும் சதையுமாக வந்து விழுந்த வார்த்தைகள். மெல்ல மேய்ந்த கண்களில் மின்னதிர்ச்சி. அடுத்தப் பக்கத்தைப் புரட்டும் அவசரம். அடுத்தடுத்த பக்கங்களில் ஆதி மனிதர்களின் நீண்ட நெடுங்கால நிதானம்! அதிர்ச்சியும் நிதானமும் சேர்ந்த அற்புதக் கலவை. நெஞ்சில் நிலைக்குத்தி நின்றுவிடுகிற நிச்சலனமா? காற்றில் அசைந்துகொண்டே இருக்கிற தாவரங்களின் இலையசைவுகளா? பறவைகளின் கூட்டுக் குரலிசையா? அருவிகளின் பேரோசையா? விலங்குகளின் விநோத ஒலிகளா? கானகத்தின் அடர் இருட்டா? இப்படி அதிர்ச்சியும் நிதானமும் சேர்ந்த அற்புதக் கலவைதான் இந்தப் பழங்குடியின மக்களின் கவிதைத் தொகுப்பு.
ஆதிகுடிகளின் இன்றைய நிலை என்ன? “இவர்கள் கானகங்களில் பதுங்கி நகரும் நிழல்கள். தங்களின் வாய்மொழிக் கவிதைகள் மூலமாகத்தான் வாழ்க்கையின் சுவடுகளைப் பாதுகாக்கிறார்கள்” என்கிறார் இந்திரன்.
அந்த ஆதி ஆயுதத்தைத்தான் பின்னொருநாள் அவன் பேரன் எடுத்துப் பிரயோகிக்கிறான். மிகப் பிரம்மாண்டமான அணையின் எதிர்ப்புப் போராட்டத்தில் அனைவருக்கும் முன்னால் பயன்படுத்தப்படும் ஆதிவாசியின் அம்பு. 1994 – 95 இல் தெற்கு பீகார் பகுதியில் கோயல்- கேரா அணைத்திட்டத்தின் எதிர்ப்புப் போராட்டத்தில் வில்லிலிருந்து வெளிப்பட்டுக் காட்டு மரத்தின் வாசனையுடன் மீண்டும் வந்து விழுந்ததுதான் இந்த வன வாளி. இந்த ஓர் அம்பு வில் மட்டுமல்ல, கோடாரி, தொன்னை, வைக்கோல் கயிறு, மூங்கில் கூடை, குகை ஓவியங்கள், குலக்குறிச் சின்னங்கள், மர விறகுகள், மரத்தாலான சிற்பம், மழை தருவிக்கும் கடவுள், சிறு தெய்வ எச்சங்களின் குறியீடுகள், என இக்கவிதைத் தொகுப்பில் ஒரு கண்காட்சியையே வைத்திருக்கிறார் கலை விமர்சகர் இந்திரன்.
இந்திரன் பழங்குடியினப் பாடல் ஒன்றிலிருந்தே இந்தப் பெயரைத் தன் தொகுப்புக்குச் சூட்டியிருக்கிறார்.
//கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்.
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்.
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்.
நாங்கள்
கடவுள்களுக்கு
முன்பிறந்தவர்கள்//
இந்தப் பழங்குடிப் பாடல் வரிகளுடன் 2002 ஆம் ஆண்டிலேயே நமது முகர்தலுக்குப் பழக்கப்பட்டிராத காட்டு வாசனையுடன் பிறந்த ஆதிவாசிகளின் முதல் தமிழ்க் கவிதைத் தொகுப்பு இந்தப் புத்தகம்தான்.
ஒன்றைப் போல் இருப்பது அல்ல, ஒன்றிலிருந்து வேறொன்றாக இருப்பதுதான் அழகின் பரிமாணம். ஒரே மாதிரி வார்ப்படம் அலுப்புக்குரியது. வண்ணங்களின் கலவைதான் வாழ்க்கையின் சுவாரசியம். ஆதிவாசிகள் அல்லது தொல்குடிகள் என்கிற பொது அடைவுக்குள் ஏராளமான குட்டிக்குட்டிக் கூட்டுப் பண்ணைகள். கோலிகள், பில்கள், கோண்டுகள், டஃப்லாக்கள், நாகர்கள், காசிகள், காரோக்கள், சந்தால்கள், ஓரயான்கள், முண்டாக்கள், ஹோஸ்கள், ஜ்வாங்குகள், சவராக்கள், கடபாக்கள், சென்ச்சுக்கள், ஷோஅலேகாக்கள், தோடர்கள், இருளர்கள், குரும்பர்கள், காடர்கள் இப்படிப் பலப்பலப் பண்பாட்டு விழுமியங்களின் பழங்குடியினப் பாடசாலைகள். இவர்கள் இயற்கையின் பிள்கைகள். அவர்கள் மார்புகளில் பதக்கங்கள் அணிவித்துக் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். நவீன உலகமயமோ அவர்களின் மார்புகளைத் தோட்டாக்களால் துளைத்தெடுக்கிறது.
அவர்களின் கனவுகளை இந்திரன் தொகுத்திருக்கிறார். இல்லை ஓர் ஒழுங்கற்ற மண்தரை மெழுகிய குடிசைகளடர்ந்த ஓர் வன கிராமத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். அவர்களின் கனவுகள் எளிய கனவுகள். அவர்கள் ஆவிகளை நம்புகிறார்கள். ஆனால் அவர்களின் ஆவிகள் அடுத்தவனின் உயிரைக் காவு கேட்பதில்லை. // அந்தப் பகுதியின் ஆவி சால் மரங்களை வெட்ட வேண்டாமென்று கேட்டுக் கொண்டது //, அவர்கள் காட்டின் காவலர்கள். இன்று காட்டின் அநாதைகளாகத் துரத்தப் படுகிறார்கள். அவர்களுக்குக் கடை உணவு கசக்கிறது. காற்று பிரதான உணவு. வறுத்த அணில், அரிசி மது, காட்டெருமை இறைச்சி ஆகியவை துணை உணவு. அதனால்தான் அவர்களுக்கு இரண்டாம் முறையாகப் பால் பற்கள் முளைக்கின்றன. அவர்கள் காட்டின் குழந்தைகள், மலையின் மகவுகள். காற்றில் கைபேசியின், வாகன ஒலிப்பான்களின், ரயில் கூவலின், ஜேசிபியின் இரைச்சல் இல்லை.
கார்ப்பரேட்டுக் கம்பெனிகளின் சுரங்கப் பணிக்காக விலங்குகளைப் போல விரட்டப்படும் அவர்களின் வாழ்க்கை விழுமியங்கள் என்னவாக இருக்கும்? அவர்களின் கவிதைகளின் வழியே கனவுகளைத் தரிசிக்கிறோம். ஒரு தொகுப்பு வெறும் சொற்குவியல்களின் ஒழுங்கமைவு அல்ல, அது வாழ்க்கையின் பல சிறு சிறு துண்டுகளின் சேர்க்கை, கண்ணாடி வளையல்களின் ஓவிய உலகமாய் விரியும் கலைடாஸ்கோப்.
தென்மத்திய கர்நாடகா தொடங்கி ஆந்திராவில் அனந்தப்பூர், சோனபேடா பீடபூமி, வடகிழக்கு, கிழக்கு இமய மலைக்காடுகள், பிரம்மபுத்ரா, இந்திராவதி, நர்மதா நதிகளின் தீரங்கள், விந்திய சாத்புர மலைத்தொடர்கள், தண்டகாரண்யம், தார்ப்பலைவனம் என மாறுபட்ட நிலவியல், மலையியல், ஆற்றுப் புலங்கள்தாம் அவர்களின் வீடுகள். இத் தொகுப்பைப் படிக்கிறபோது நாம் இழந்திருக்கும் மகத்தான வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. அலங்காரங்கள் அற்ற ரத்தமும் சதையுமான கரடுமுரடான பாடல்களாலும், கதைகளாலும், சித்திரங்களாலும் ஆனதுதான் அவர்களின் வாழ்க்கை. அனைத்தின் அர்த்தங்களும் பாசாங்கற்ற அன்பின் வழியது உயிர்நிலைகளாக இருக்கின்றன.
கோண்டுகள், கோந்த், பூஞ்சியா போன்ற குடிகளின் வாழ்வியல் இன்றும் சங்ககாலப் பாணர் மரபு தொடர்கிறது என்றும் கோண்டுகளின் ஆதி சிவனாகிய பாராதியோவும், எண்ணற்ற தாய்த் தெய்வங்களும் விரிவான குலக்குறி மரபும் பண்டைத் தமிழர் மரபை நினைவூட்டுகின்றன என்றும் பக்தவச்சல பாரதி குறிப்பிடுவார். அவர் மேலும் குறிப்பிடும்போது, சடங்குகள் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அசைவியக்கமாகவும் இதிலிருந்து சமூகம் பற்றிய மனவியல் கருத்தினங்களை அறிய முடிகிறது என்றும் குறிப்பிடுகிறார். ரெங்கையா முருகனும் ஹரி சரவணனும் எழுதிய “அனுபவங்களின் நிழல் பாதை” படித்த பின்பு இந்தத் தொகுப்பை வாசிக்கிறபோது பழக்கப்பட்ட மனிதர்களின் பாஷைபோல நெருக்கமாக இருக்கிறது.
கவிஞர் இந்திரன் இந்தக் காட்சி சார் பண்பினை ஒவ்வொரு தொல்குடி மனித இலக்கியத்திலும் உட்பொதிந்த ஒன்று என்று கண்டுபிடிக்கிறார். “காலம், வெளி ஆகியவற்றில் வெளியை உயிரியல் ரீதியாக உருவாக்கப்பட்ட காட்சி ரூபங்களால் நிறைக்கிறார்கள் இவர்கள் இவர்களது கற்பனை மனித மனத்திற்கு உயிரியில் ரீதியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை உருவாக்கும் சக்தி சம்பந்தப் பட்டது” என்கிறார்.
காலனி ஆதிக்கத்தினால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிற இந்தியாவின் இலக்கியங்களைப் போல அல்லாமல் மூல சக்தியுடன் திகழும் ஆதி இலக்கியமாக இருக்கிறது இவர்களது வாய்மொழி இலக்கியம். //காடு எங்களது கோயில்// என்பதுதான் இவர்களது ஒட்டுமொத்தக் குரல். //நிலம் நமது ஆசிரியர்// என்று இவர்கள் சொல்வதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? பழங்காலத்தில் பாறைகள் நகர்ந்து கொண்டிருந்தன. அனைத்தும் உயிரோடு இருந்தன// என்கிற கவியின் குரல் கேட்டு அதிர்கிறோம்.
மஹுல் மரங்கள் பூக்களால் குலுங்குவதைப்போல அவர்கள் மனங்களும் மகரந்தம் பூசி மணம் வீசுபவை. ஆனால் அவர்களின் கையறுநிலை நம் மனசை அறுக்கிறது. தங்கள் மகன்களை மகள்களைக் காணடித்து வாழும் வாழ்க்கை அவர்களைச் சித்திரவதைப் படுத்துகிறது. காணாமல் போன தன் மகனைக் கவிதையால் நினைவுகூரும் ஒரு தாயின் கண்ணீர் தீயாலானது.
//என் மகனே
எங்கே உன்னை ஒளித்து வைத்திருக்கிறார்கள்?
மகனே
நீ வாழ்ந்தபோது
நான் ஒரு ராணி போல் இருந்தேன்.
சிம்மாசனத்தின் மீது இருப்பது போல்
எனது முலைகளுக்கு நடுவே
நீ இருந்தபோது
நான் ராணி போல் இருந்தேன்//
சவோராவின் ஆதிவாசிப் பாடலான இதில் ஒரு வரி வரும். அந்த வரி எந்த மகாகவியாலும் எழுதவே முடியாத வரி.
//உடம்பு
வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தால்
அதை
வேறொன்றாக மாற்றிவிடலாம்.
அது செம்பினால் செய்யப்பட்டிருந்தால்
அதை
வேறொன்றாக மாற்றிவிடலாம்.
ஆனால் உடம்போ
களிமண்ணால் செய்யப்பட்டுள்ளது.
அதை யாராலும் மாற்ற முடியாது.//
எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் போகாத இவர்கள்தாம் இயற்கையின் விஞ்ஞானிகள். இவர்களைக் காட்டுமிராண்டிகள் என்பது எத்துணை முட்டாள்தனம்?
அவர்களுக்கு நிகழும் கொடுமைகளை அவர்கள் புரிந்து கொண்டார்கள். கோயா மலையின கவி, அஞ்சையா பாடுகிறான்…
//அவர்களது
அரண்மனை போன்ற வீடுகளை
அலங்கரிக்க
நமது தலைகளைக் கேட்கிறார்கள்.//
குளத்தில் விழுந்த யூகலிப்டஸ் மர இலைகள் மீன்களைச் சாகடித்துவிடும் என்கிற பேருண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். தக்கையின் மீதுதான் நமது காரியார்த்தக் கண்கள். நாம் மீன்களின் நடனங்களைத் தொட்டிகளில் பார்க்கிறவர்கள். இவர்களின் பாடல்களில் வாழ்க்கையே கவித்துவமாக நிரம்பி வழிகிறது. நடனமாடும் மயிலின் நிழல் இன்னொரு மயிலாகி விடுகிறது. வயிறு பறையாகிவிடுகிறது. முலைகள் வாசலின் இரண்டு கதவுகளாகி விடுகின்றன. காதுகள் சியாலி இலைகளாகவும், மூக்கு குளவிக் கூடாகவும் கண்கள் நட்சத்திரங்களாகவும் ஆகிவிடுகின்றன.
நதியில் எப்படி நீரைப் பருகுவது என்று மைனாவுக்குச் சொல்லித்தரும் முண்டா ஆதிவாசிப் பாடலொன்று
//….. முதலில்
நதியை சரியான முறையில் அணைத்துக் கொள்.
அதன் பிறகு
நீ நீரைப் பருகலாம்.//
இது மைனாவுக்கு மட்டுமா? மனிதர்கள் நீர் அருந்துவதை நினைத்துப் பாருங்கள். வாய் வழியாக ஒரு பானையை நிரப்புவது மாதிரி வயிற்றை அவசர அவரமாக நிரப்புவார்கள்.
நம் மூதாதையர்களின் இக் கவிதைகளின் முக்கியத்துவம் என்ன? “இவர்களது பண்பாட்டு அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு வழிமுறையாக இவர்களது வாய்மொழி இலக்கியம் உதவுகிறது. இன்று ஆதிவாசிகள் தங்களது பண்பாட்டு அடையாளங்களையும், அடிப்படையான ஜீவாதார உரிமைகளையும் நிலைநாட்டிக்கொள்ளும் போராட்டத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். எனவே, இன்று போராட்டக் களத்தில் தங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் ஆதிவாசிகளின் குரல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்பது தற்காலத்தின் தேவை என்று நான் உணர்ந்திருக்கிறேன்” என்கிறார் இந்திரன். ஆதிக்க வியாபாரிகளின் கொடுங் கரங்களில் அவ் இயற்கையின் பிள்ளைகள் படும் சித்திரவதைகளைக் கவனப் படுத்துவதன் மூலம் இந்திரன் இந்தத் தொகுப்பின் வழியே நமது தொல்குடிகளுக்கான கவித்துவ நியாயத்தைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார்.
ஆதிவாசிகளின் பாதங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டிய அமைச்சர் பழங்குடிச் சிறுவனை அழைத்துப் பக்கிள் கழற்றச் சொல்கிறார். இந்தத் தொகுப்பைப் படித்தபின் அமைச்சரின் மீது ஆத்திரமும் பழங்குடியினர் மீதும் பரிவும் பன்மடங்காகப் பெருகுகிறது.
- நா.வே.அருள்