மண்ணில் வீழ்ந்திருந்த மாவீரன் ஆர்த்தெழுந்து கூவினான். நான் உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது எனக்குத் தெரியாமல் என் கைகால்களைச் சங்கிலி போட்டுத் தளையிட்டு முடக்கிவிட்டீர்கள். பிணைத்திருந்த கடைசி சங்கிலியையும் இப்பொழுது அறுத்தெறிந்து விட்டேன். இனி என்னை எவராலும் தளையிடவோ சிறைப்பிடிக்கவோ கட்டிப்போடவோ முடியாது”

- “சங்கிலியால் பிணைக்கப்பட்ட மாவீரன்” பர்ரோஸ் டன்ஹாம்

இருபத்தோராம் நூற்றாண்டின் முதற்பத்தாண்டு விரைவில் கழியும். பின்வரும் காலத்தில் புதிய சமுதாயம் - சுரண்டலற்ற ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சோசலிச சமுதாயம் காணத்தக்க சாத்தியக்கூறுகள் எவையேனும் உள்ளனவா என்னும் வினா நேரிய வழியில் சிந்திக்கும் மாந்தர் அனைவருக்கும் இயல்பாக எழும்.

கடந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனி ஆதிக்கத்திலிருந்து நாட்டு விடுதலைப் போராட்டங்கள் உலகமெங்கணும் கொந்தளித்துப் பொங்கி எழுந்தன. இந்திய விடுதலைப் போரும், சீன விடுதலைப் போரும், தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களின் நிறவெறி எதிர்ப்புப் போராட்டமும் கடந்த நூற்றாண்டின் முதற்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்தன. விடுதலை வேட்கையும் அதனை அடைய நடைபெற்ற போராட்டங்களும், மேலும் குறிப்பாக ரஷ்ய நாட்டில் ஏற்பட்ட மகத்தான அக்டோபர் புரட்சியும், சீன வியட்நாம் நாட்டுப் பொதுஉடைமைப் போராட்டங்களும் உலக மக்களைத் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்து புதிய சிந்தனையை உருவாக்கித் தந்தன.

கடந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் எழுப தாண்டுகளாக உலக மக்களுக்குப் புத்தொளி வழங்கிவந்த சோவியத் நாடு, சுவடு தெரியாமல் மறைந்து போயிற்று. இக்காலத்தில் உலக ஏகாதிபத்தியத்தைப் பிடர் பிடித்து அசக்கி ஆட்டி அடக்கி வந்த நாடு உருக்குலைந்து போன பின் அடங்கி ஒடுங்கியிருந்த உலக ஏகாதிபத்தியம் இழந்த சக்திகளை எல்லாம் ஒன்றுசேரத் திரட்டி ஆர்ப்பரித் தெழுந்து தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலக மயமாதல் என்னும் கொள்கைகளைச் சூறைக்காற்று போல மிக ஆவேசமாக உலகம் முழுவதும் பரப்பி, உலகச் செல்வாதாரங்களைக் கபளீகரம் செய்ய வலைவிரித்து வருகிறது. இதன் ஒட்டுமொத்த உருவம் அமெரிக்க ஏகாதிபத்தியம்.

கார்ல் மார்க்ஸ் காலத்தில் முதலாளித்துவம் உலக மயமானது வேறு; இந்நாள் உலகமயமாதல் தன்மையில் வேறு. கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் வெடித்தெழுந்த செய்திப் பரிமாற்றப் புரட்சி இதற்கு முழுவதும் துணை நிற்கிறது. உலக வங்கியும், சர்வதேச செலாவணி நிதியமும், உலக வாணிப மையமும் பேராதரவு நல்கி வருகின்றன. எனவே எல்லா நாடுகளும் ஒரு காலத்தில் அமெரிக்காவைக் காலனியாகக் கொண்டிருந்த பிரிட்டனும் பல்வேறு உலக நாடுகளில் அதிகாரம் செலுத்திவந்த பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் இன்று அமெரிக்காவைப் பார்த்து ஏங்கிக் கையேந்தி நிற்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இந்தப் பின்புலத்தில் விடுதலைப் போராட்டத்தின் விழுமிய இலட்சியங்களை மறந்து தன்னிறைவுப் பொருளா தாரம், அணிசேராமை, காலனி நாட்டு மக்களுக்கு ஆதர வாகச் செயல்படுதல் என்பன போன்ற இலட்சியங்களை முற்றிலும் நிராகரித்து 1-2-3 அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்று விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கும் என்று உணர்ந்தும், எரிபொருள் - பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலையை அரசு கவலைப்படாமல் துணிந்து ஏற்றிவரும் பின்புலத்தில் இந்திய மக்கள் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அண்மையில் இந்து இதழில் வெளிவந்த செய்தியில் நல்லிகுப்புசாமி இளமைப் பருவத்தில் தன் பாட்டியும் தாயும் ஒன்பது கெஜம், ஆறு கெஜம் புடவை முறையே ரூ.18, ரூ.12க்கு வாங்கியதாகக் கூறியிருந்தார். இன்று ஓரடி சதுரக் கைக்குட்டையின் விலை ரூ. 25 என்பதை நோக்க இந்தத் தலைமுறையில் விலைவாசி உயர்வின் அளவு தெரியும்.

ஆயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட போபால் நச்சுவாயு விபத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஓர் அசட்டையான தீர்ப்பை வழங்கி நீதிமன்ற முறையையே கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதிலிருந்து இனி வருங் காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கு நீதிமன்றங்களிலிருந்து எத்தகைய நீதி கிட்டும் என்பது புலனாகிறது.

“பணம் பாதாளம்வரை பாயும்” என்னும் பழமொழிக் கேற்பக் கையூட்டும் ஊழலும் பல்கி ஆறாகப் பெருகி வரும்போது மக்கள் வாக்குகளைப் பணத்தால் அடித்துப் பெறமுடியும் எனும் போது தீயசக்திகள் எவ்வாறு மீண்டும் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியில் அமர முடியும் என்பதனை இமயம்முதல் குமரிவரை நடைபெற்று வந்த அண்மைக்கால நிகழ்ச்சிப் போக்குகள் ஜனநாயகத்தின் இன்றைய அவலநிலையை எடுத்துக்காட்டுகின்றன.

மாநிலத்துக்கு மாநிலம் இன, மொழி, இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்னும் பிரச்சினைகளில் எதிரும் புதிருமாக நிற்கின்றன. நடுவண் அரசு செயலிழந்து நிற்கிறது; இவற்றை நிகழ்ச்சிகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

முதலாளித்துவ காலனி ஆதிக்கம் தொடங்கிய 200-300 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகள் கைப்பற்றிய அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் பழங் குடிகளைக் கொன்று குவித்து இயற்கை வளங்களைச் சூறையாடிக் கொள்ளையடித்ததனை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. அதே நாச வேலையை, இன்று 21ஆம் நூற்றாண்டின் “புதிய பொருளாதாரக் கொள்கை” பொருளாதார மேம்பாடு என்னும் பெயரில் அரசு செய்து வருகிறது; காடுகளும், இயற்கைச் செல்வங்களும் கபளீகரம் செய்யப்பட்டு பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கப் படுகின்றன. வாழ்விழந்து வதைபடும் மக்கள் “நக்சல்கள்” என்னும் பெயரிடப்பட்டுக் கொன்று குவிக்கப்படுகின்றனர். நக்சல்பாரிகள் இயக்கமும் இந்தப் போராட்டமும் வெவ் வேறு பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்றத்தாழ்வு களுமே காரணம் என்பதனை அரசு அறிந்தே உள்ளது.

இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கின்ற இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் இந்திய மக்களின் நலன் களுக்கு எதிராக இடம்பெற்றிருக்கும் விதிகள் யாவை? என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. போபால் விஷவாயு அவலங்களுக்குப் பிறகாவது இந்திய அரசு கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இல்லையேல் நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்காக அமைந்து விடும்.

வேளாண்மை சீரழிந்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். விளைநிலங்கள் எல்லாம் இன்று வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வரும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக அராஜகமும், அடக்குமுறையும் என்கவுண்டர் கொலைகளும் மோசடிகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன என்பதனை ஊடகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்தப் பின்புலத்தில் இந்திய நாட்டின் உற்பத்தித் திறன் 8 அல்லது 9 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என்று தம்பட்டம் அடிக்கிறது. அந்நிய ஆயுள்காப்பு, பொதுக் காப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்து, வரலாறு படைத்த ஆயுள்காப்பு நிறுவனத்தையே நிர்மூலம் செய்யும் அளவுக்கு வளர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.

பாரதிய தொலைபேசி நிறுவனம் இன்று தடுமாறித் தத்தளித்து வருகிறது. உலகமயமாதல், அடிப்படையில் இந்திய வங்கிகள் பன்னாட்டுப் பெருவங்கிகளோடு போட்டியிட்டு நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்னும் தவறான நோக்கத்தில் இன்றுவரை நம்நாட்டைப் பொருளாதாரச் சீரழிவுகளிலிருந்து காப்பாற்றி வந்துள்ள பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கவும் அந்நியநாட்டு வங்கிகளுக்கு இந்திய நாட்டை வேட்டைக் காடாக்குவதற்கும் ஊக்கம் தரும் கொள் கையைக் கடைப்பிடிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அரசு கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையினால் தான் பிறநாடுகளுக்கு ஒப்பானதாக இந்திய நாட்டை ஆக்க முடியும் என்று இந்திய அரசு வெளிப்படையாகப் பிரச் சாரம் செய்கிறது. மோசடிகள் நிறைந்த பங்குச் சந்தையை வளர்க்க வேண்டும் என்றும் அரசு நிறுவனங்கள் பகிரங்க மாகத் துணிந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. இன்றைய அரசு அதிகாரிகள் இதனை முனைந்து திறம்படச் செய்ய முன்வந்துள்ளனர்.

“கூலி உழைப்பு மூலதனம்” என்னும் நூலில் கார்ல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “ஏழை, தான் வாழக் குடிசை அல்லது சிறு வீடொன்றைக் கட்டிக் கொள்ளுகிறான், அதன் பக்கத்தில் பெருமாளிகையொன்று எழுப்பப்படு கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், குடிசை குடிசை யாகவும், மாளிகை மாளிகையாகவுமே இருக்கும். ஆனால் சில காலம் கழிகிறது. ஏழை உழைப்பாளி உழைப்பின் பலனாக நல்லதொரு வீடாக அதனை மாற்றிக் கட்டிக் கொள்கிறான். ஆனால் பெருமாளிகையின் சொந்தக்காரனும் வாளாவிருக்க மாட்டான். அவனும் காலப் போக்கில் மாளிகையை விரிவுபடுத்திப் பெரிதாக்கிக் கொள்வான். ஏற்றத்தாழ்வு, வேற்றுமை தொடரும்.” எனவே இதுதான் “முதலாளித்துவத்தின் பெரும் சாபக்கேடு.” முதலாளித்துவ அடிப்படையில் இந்திய நாடு ஏகாதிபத்திய நாடுகள்போல வளர்ந்தோங்கிச் சமத்துவம் அடைய முடியும் என்பது வெறுங்கனவு. எந்தக் காலத்திலும் எந்தத் திட்டத்திலும் நிறைவேறாது என்பது உறுதி.

இன்றைய இந்திய நாடு தரும் காட்சிகளைத் திரும்பி மீண்டும் காணலாம். வேளாண்மை உயர்ந்தோங்கி வளர்ந்த பஞ்சாப் மாநிலத்தில் விவசாய குடும்பங்களில் 73 சதவிகிதம் கடனாளிகள். ஆண்டொன்றுக்கு வேலை நாட்கள் 103லிருந்து 56ஆகக் குறைந்து போயிற்று. ஒவ்வொரு மாநிலத்திலும் தற்கொலைச் சம்பவங்கள் பல்கிப்பெருகி வந்துள்ளன. தொழிலாளர்கள் எல்லா மாநிலங்களிலும் வேலை இழந்து நிர்க்கதிக்கு ஆளாகி வருகின்றனர். திருப்பூரில் பின்னலாடைத் தொழில் நலிவுற்றுப் பொலிவிழந்து வருகிறது. பரிதாபாத்தில் மோட்டார் தொழிலில் சில ஆண்டுகளுக்கு முன் 20,000 தொழிலாளர்கள் பணியிலிருந்தனர். இப்பொழுது அதன் எண்ணிக்கை 6000 மட்டுமே. எல்லாத் தொழிற்சாலை களிலும் தற்காலிக, பகுதி நேரத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். முதலாளிகள் லாபமோ பன் மடங்கு பெருகி வந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோது ஜாம்ஷெட்பூர் டாடா மோட்டார் கம்பெனி புதிதாக உருவான சுசுகி - மாருதி கம்பெனி போட்டியினால் பல நாட்கள் உற்பத்தி நடைபெறவில்லை. 700 தற்காலிகத் தொழிலாளர்கள் பணி யிலிருந்து நீக்கப்பெற்றனர். அதேசமயத்தில் போட்டியின் விளைவாக விற்பனையும் பாதிக்கப்பட்டது என்பதுவும் ஒரு செய்தி. தொழிலாளர்களுக்குப் பணி உத்தரவாதமோ இருப்பதில்லை.

கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள் நாட்டு நிலைமையைத் துல்லியமாக விளக்கும். 31.60 கோடி இந்தியத் தொழி லாளர்கள் அதாவது மொத்தத் தொழிலாளர்களில் 86 சதவிகிதம். நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கு மேல் (00.40 டாலர்) அதிகமாகக் கூலி பெறுவதில்லை. இவர்களில் 88 விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்கள். பழங்குடியினர் 80 விழுக்காடு பின்தங்கிய வகுப்பினர். 85 விழுக்காடு முஸ்லிம்கள், 90 விழுக்காடு விவசாயத் தொழிலாளர்கள். 90 விழுக்காடு துண்டு துக்காணி நிலங்களில் பயிரிடுவோர். அதேபோது பெண்களின் எண்ணிக்கை 73 விழுக்காடு, ஆண்களின் எண்ணிக்கை 52 விழுக்காடு. இப்புள்ளி விவரங்கள் “சீரமைக்கப்படாத துறைசார்ந்த தொழில் பற்றிய தேசிய விசாரணைக்குழு அறிக்கை” தந்தவை. அதேபோது 2007 ஆகஸ்ட் 10, இந்து இதழ் விசாரணைக் குழுச் சட்டங்கள் எவையும் சரியாக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இது கருப்பின மக்கள் வாழும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளதை விட மோசம்.

இந்திய அரசு நாட்டு வளர்ச்சிபற்றித் தம்பட்டம் அடித்து வரும் அதே வேளையில் உலகில் 20 கோடி மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்தியாவில் நிலைமை மோசம். மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஓரிசா மாநிலங்களில் நிலைமை படுமோசம். குழந்தைகளுக்குச் சத்துணவின்மை, குழந்தை மரணம், சரிசம உணவின்மை என்னும் கேடுகளால் துன்புறும் 88 நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 66ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தப் பின்புலத்தில் பொருளாதார மண்டலங்கள் உருவாவது பற்றிப் பேசப்படுகிறது. இந்திய நாட்டு மக்களில் 24 சதவிகிதத்தினர், அதாவது 22.5 கோடி மக்களுக்கு மட்டுமே வாங்கும் சக்தி உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்கணக்கில் பெருமுதலாளி களும், மாதம் பல ஆயிரம்,லட்சம் சம்பளமாகப் பெறும் அலுவலர்களும் மாத ஊதியம் பெறும் ஊழியர்களும் உள்ளனர். இந்தப் பின்னணியில் ஏழை எளிய மக்கள் வாழ்வதற்கு எந்த உரிமையும் இல்லை “ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்பது பழமொழி.

டாடா, பிர்லாக்கள், சிங்கானிகள் என்று பேசப் பட்ட நிலைமாறி அம்பானிகள் என்று பேசப்படுகின்றனர். தமிழகத்தில் செட்டியார் மூலதனம், நாயுடு மூலதனம், அய்யர் மூலதனம் என்று பேசப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று குடும்பங்கள் ஆதிக்கம் பேசப்பட்டு வருகின்றது. எனவே நிலைமை தமிழகத்தில் தலைகீழாக மாறிவிட்டது என்பது கண்கூடு.

இந்தப் பொருளாதாரப் பின்புலத்தில் சந்தைப் பொருளாதாரம் முதன்மைப்படுத்தப்படுகிறது. பெரு முதலாளிகள் குடிசறயசன கூசயனiபே எனப்படும் முன் ஒப்பந்த அடிப்படையில் நேரிடையாக உற்பத்தியாளர்களிடம் இருந்து பண்டங்களை வாங்கிப் பதுக்கி வைத்துக் கடைகள் மூலமாக விற்பனை செய்து பன்மடங்கு இலாபத்தைப் பெருக்கிக்கொள்ளுகின்றனர். இதில் முகவர்களின் சதியும் உண்டு. காலாவதியான உணவுப் பொருள்களும் மருந்துகளும் இவ்வாறுதான் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

தரிசுநிலங்களையும் புறம்போக்கு நிலங்களையும் தனியார் நிலங்களையும் ஆக்கிரமிப்பதோடு, நிலச் சொந்தக்காரர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய நிலங்களுக்குப் போலிப் பட்டாக்கள், ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்வதும் நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. மணல் கொள்ளை வேறு. இப்போக்கு இமயம் முதல் குமரி வரை வளர்ந்திருப்பது காணலாம். நிலங்களிலும் அக்கம்பக்கங்களிலும் வாழ் வோர், நகர்மயமாதல் என்னும் பெயரால் அரசு அதிகாரிகள் துணையுடன் வெளியேற்றப்பட்டு அங்குத் தொழிற் சாலைகளும், மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் எழுப்பப்படுகின்றன. பாரிஸ் நகரில் 1872ஆம் ஆண்டுக்கு முன் இதே நிலைமை இருந்தது. மக்களின் அழிவின்மேல் அவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக அழ ஈவிரக்கம் இல்லாமல் மனிதநேயமின்றி முதலாளித்துவம் நிர் மாணிக்கப்பட்டு வருகிறது என்று பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதினார். இத்தகைய போக்குகள் இன்று இந்தியாவில் நடைபெறவில்லை என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியாது. அமெரிக்கா பிறந்த நாளிலிருந்து தாராளமயமாதல் என்னும் கொள்கையைத் தொல்லின மக்களை வேட்டையாடுவதற்கே நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தது. இதனோடு பிரஞ்சு நாட்டுக் காட்சியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இதுவே உலகமயமாதலுக்கு இலக்கணம்.

இதுகாறும் இடைநின்ற சிறுவியாபாரிகள் கை வண்டிகளிலும் கூடைகளிலும் சுமந்து சென்று விற்பனை செய்து வயிறு பிழைத்துவந்த ஏழைச் சில்லறைக் கடைக் காரர்களைப் புறந்தள்ளிப் பெருவாணிகர்கள் விலைகளை உயர்த்தி வருகிறார்கள். சந்தைப் பொருளாதாரத்தால் ஒருபுறம் விலைவாசிகள் விண்ணைமுட்ட ஏறும்போது மறுபுறம் வாணிபத்தை அன்றாடத் தொழிலாகக் கொண்டு வயிறு பிழைத்துவந்த சிறுவியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் வாழ்விழந்து அல்லல்படுகின்றனர். இதுபற்றிப் பேசினால் சீனாவில் சந்தைப் பொருளாதாரம் இல்லையா என்று வினா எழுப்பி வாயடைக்க முற்படுவர். ஆனால் சீனாவின் சமூக அமைப்பு வேறு இந்தியாவின் சமூக அமைப்பு வேறு என்பது ஒருக் கணமும் சிந்தித்துப் பார்க்கமாட்டார்கள்.

அண்மையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் பெரும்பயன் ஏதும் விளையப்போவதில்லை. மக்கள் நலப் பொருளாதாரக் கொள்கையை அரசு நடைமுறைப் படுத்தும் வரை எந்தப் பயனும் விளையாது, விளைவது நாசம்தான். இந்தப் பின்புலத்தில் இந்திய இடதுசாரி ஜனநாயக சக்திகளும், அவற்றின் தொலைநோக்குப் பார்வையும் இந்தியப் பொருளாதாரக் கொள்கையை மாற்றுவதற்கான இச் சக்திகளின் தொடர்போராட்டமும் தேவைப்படுகின்றன. ஓரளவு அண்மைக்காலத்தில் நடை பெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டங்கள் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. மார்க்சிய லெனினியக் கொள்கைவழிப்பட்டு நிற்கும் சக்திகள் தம்முள் நடத்திவரும் கருத்தியல் அடிப்படையான சில சில்லறைப் போராட்டங்களை விடுத்து ஒன்றுபட்டா லொழிய இந்திய நாட்டுக்குக் கதிமோட்சம் ஏற்படப் போவதில்லை. இது நடைபெற்றால்தான் நேரிய வழியில் ஜனநாயக சக்திகளை ஈர்த்து ஒன்றுபடுத்திப் புதிய சமுதாயம் படைக்கத்தக்கதான சாத்தியக் கூறுகளை உருவாக்க முடியும். இல்லையேல் மார்க்சியம் திண்ணை வேதாந்தமாகத்தான் இருக்க முடியும்.

ஹோசிமின் 1969ஆம் ஆண்டு மே 10ஆம் நாள் வரைந்த உயிலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “என் வாழ்நாள் முழுவதும் நான் புரட்சிக்குச் சேவை செய்துள்ளேன். உலகப் பொதுஉடைமைத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி கண்டு எவ்வளவு அதிகமாகப் பெருமைப்படுகின்றேனோ அதே அளவுக்குச் சகோதரக் கட்சிகளிடையே தற்போது நிலவிவரும் வேறுபாடுகள் குறித்துக் கவலையும் வேதனையும் அடைகிறேன். மார்க்சியம் லெனினியம் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பதன் அடிப்படையில் உள்ள நியாயத்தை விழிப்புணர்வுடன் வழிகாட்டியாகக் கொண்டு சகோதரக் கட்சிகளிடையே இணைப்பை உண்டாக்குவதற்குப் பயன்தரத்தக்க பணியாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் நம் கட்சி.”

எனவே இந்த அறிவுரை உலக இயக்கத்துக்கு மட்டுமன்று. உள்நாட்டு இயக்கத்துக்கும் பொருந்தும் என்பதனை “நியூசெஞ்சுரியின் உங்கள் நூலகம்” பணிவன்போடு கூறக் கடமைப்பட்டுள்ளது.

மனிதன் முதலில் மனிதப் பண்புள்ள மனிதனாக ஆகவேண்டும். அம்மனிதன் கம்யூனிஸ்டு மனிதனாக வளர வேண்டும் என்று மாமேதை லெனின் கூறியதைப் பணிவன்புடன் எடுத்துக்காட்ட உங்கள் நூலகம் விரும்புகிறது.

Pin It