இந்தியப் பண்பாடு என்பது கிராமப் பொருளாதார அமைப்பிற்கேற்ப அமைந்தது. கிராமப் பொருளாதார உற்பத்திக்கு வேளாண்மையே முதன்மையானது. வேளாண்மைச் சமூகத்தின் மரபான அமைப்பு சாதியப் படிநிலைகள் சார்ந்தது. நிலங்கள் குறிப்பிட்ட மேல்சாதியர்க்கு உரிமையுடையதாகவும், நிலஉரிமையற்று உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்ட மக்கள் கீழ்சாதியராகவும் கருதப்பட்டனர். காலங்காலமான இந்தப் பொருளாதார சமூக உறவே இயற்கையான அமைப்பு என்றாகிவிட்டது. இந்த மரபில் வாழ்ந்துவந்த மக்களிடையே ஆங்கிலேய ஆட்சி சில மாறுதல்களைக் கொணர்ந்தது.
மூபுதிய தொழிலிய அறிமுகத்தால் பழைய பொருளாதாரச் சமூக அமைப்பும் மரபும் மாறுதல் பெறத் தொடங்கியது. கீழ்நிலையிலிருந்த மக்களும் இடைத்தட்டு மக்களும் சாதியக் கெடுபிடியிலிருந்து ஓரளவு விடுபட முடிந்தாலும், அவர்களது வாழ்க்கை தொங்குநிலை பெற்றது என்றே கூறலாம். மக்கள் நகர்நோக்கிய இடம்பெயரல் ஏற்பட்டது. இந்த நகரங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. பழைய - புதிய சமூக மதிப்புகளின் (ஏயடரநள) மோதல்களும் முரண்களும் ஏற்படத் தொடங்கின. இது இன்னும் முடிவடையவில்லை. ஒரு வகையான ஒட்டுப்போடும் இன்றைய மக்களாட்சியில் கிராமங்களின் பழைய நிலைகள் மெல்ல மெல்ல மாறி வருகின்றன. இந்நிலையில், சில கவிஞர்கள் பழைய மாதிரியான கிராம வாழ்வு - மாற்றம் குறித்த தமது எண்ணங்களைப் பதிவு செய்துள்ளதைப் பார்க்கிறோம்.*
மூடநம்பிக்கை:
கவிதை என்பது கிராமத்து வாழ்க்கையை உணர்த்துவது மட்டுமல்ல என்று எல்லோரும் அறிவர். வாழ்க்கை கிராமத்தோடு இணைந்திருக்குமானால் அந்த வாழ்க்கைக்குரியவர்களிடமிருந்து கிராமத்துக் கவிதை பிறக்கவே செய்யும். கிராமத்திலிருந்து அந்நியமாகிவிட்டவர்கள், நகரத்தில் வாழ்பவர்கள் ஆகியோரிடமிருந்து பல்வேறு வகையான கவிதைகள் பிறக்கும். அவற்றிலிருந்து வேறுபட்டவையே கிராமத்துக் கவிதைகள். நமது மதிப்புகள் (ஏயடரநள) யாவும் கிராமத்து வாழ்வில் இருப்பனவே. மூடநம்பிக்கை கொள்ளுதல், அதை வைத்துப் பிழைப்பு நடத்துதல் ஆகியன நகரத்து மனிதர்களிடம் இன்று பரந்து விரிந்துள்ளது. ஆயினும் இது, கிராமத்து மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ள ஒன்று. இதனை பாலா என்ற கவிஞர் (இவர் ஆங்கிலப் பேராசிரியர் பாலா அல்ல) ‘முனியமரம்’ என்ற கவிதையால் வெளிப்படுத்துகிறார்.
“அந்தப் புளியமரத்தைக் கடந்துதான் / எல்லோரும் செல்லவேண்டும் ஊருக்குள் / உருண்டுதிரண்டு நிற்கும் அப்புளியமரம் / ஒட்டுமொத்த ஊருக்கான பயத்தையும் உள்வைத்திருக்கும் / ஒத்தையாய் ஒருவரும் கடப்பதில்லை / முனி இருப்பதாய் சொன்னாலும் / அந்தப் புளியமரத்தை / வாந்தி பேதிமுதல் / நல்லது கெட்டதுவரை / முனியோட வேலதான் என நம்பிய ஊர் / இரவு எட்டு மணிக்கும் / சாமியாடியின் பேச்சுக்கும் / அடங்கிப்போகும். / முனிவிரட்டுதலும் / மூலிகைவைத்தியமும் / மூன்று தலைமுறையாய் வளர்க்கிறது / சாமியாடியின் சந்ததியை / வாக்குக் கேட்டு வருவோரின் / வசதியைப் பொறுத்து வசூலிக்கப்படும் / வகைவகையாய் திருட்டு சாராயம் கோழி என / எல்லாவகை வஸ்த்துக்களும் / ஒருநாள் / அடித்த அசுரக்காற்றில் / அடியோடு சாய்ந்த முனியமரம் / பெருந்திரள் காட்ட பூசையோடு / அகற்றப்பட்டது / பிழைப்புப் போன விசனத்தில் / ஒடுங்கிப்போன சாமியாடிக்கு / பாடம் போட்டாள் சாமியாடி சம்சாரம் / “அட கூறு கெட்ட மனுசா ஒத்தையா குத்தவச்சு ஒக்காராம / ஊருக்குள்ளே போயி சொல்லு! / புளியமரத்தில் இருந்து முனி நேத்து வச்ச / புங்க செடியில் குடியேறிச்சுனு” / அடுத்த பூசை ஆரம்பமானது1 (பாலா)
முனியமரம் என்ற புளியமரம் இனி புங்கமரமாகும். வருணாசிரமத்தின் ஒரு கொடுவினையோ இது என மக்கள் என்றும் உணரவில்லை. இந்தப் புதிய கவிதையில் உரைநடையின் வீச்சு அதிகம் இருந்தாலும், அகவலோசையில் கவிதை அமையவேண்டுமென்ற ஆக்கியின் மனம் தெரிகிறது. மேலும், இது ஒரு பேச்சுக் குரல்தான். கிராமத்தில் நிறைந்திருக்கும் மூடநம்பிக்கையை நன்கு பதிவு செய்துள்ளது. அச்சமே தொல் இனக்குழுமக்களின் நம்பிக்கைகளுக்கும் ஆதாரம்; இதுவே இன்றுவரை ஆதாரம். இக்கவிதை அதனையே பதிவு செய்துள்ளது. இது கிராமத்துச் சாமியாடியை முன்வைத்துப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நகரங்களில் வாழ்பவர்க்கும் உரியது. ஏன் உலகத்து மனிதர்க்குரிய இந்த இனக்குழுக்குணம் இன்றும் தொடரவே செய்கிறது. அச்சம் வருணாசிரம தர்மத்தின் முதலீடாக வேறு வேறு பரிமாணம் கொண்டுள்ளது இன்று.
கிராமத் தோற்றமும் அனுபவமும்
கிராமத்தை ஒரு கவிதையில் கேமரா மூலம் காட்டுகிறார் சமயவேல் என்ற கவிஞர். ‘அம்மாவூர்’ என்ற கவிதையே அது.
“பார்வைபடும் இடமெல்லாம் பனைமரங்கள் / வற்றிய ஆறெனினும் அது வைப்பாறு அல்லவா? / கரையெல்லாம் கும்பல் கும்பலாய் பனைமரங்கள் / ஆறுக்குப் போகும் வழியில் பனைவாடி / வாடி முழுவதும் நிரந்தர வீடுகள் / ஒருபோதும் பதனீர் வற்றாப் பனைமரங்கள் / ஆண்டு முழுவதும் நடக்கும் பனைத் தொழில் நடக்கும் ஊர் / அம்மாவூர் / ஆற்றிலிருந்து விலகிப் போகும் சிற்றோடையில் / குறுமனையிலும் கூழாங்கற்களும் / ஓரத்து நீர்க்குட்டையில் வெள்ளி மீன்கள் / தாத்தாவின் ஓலைக் கொட்டாய் முழுவதும் / கனிகளும் கெண்டைகளும்”2
இக்கவிதைக்கு விளக்கம் விரிவாகத் தேவையில்லை. வைப்பாற்றுக்கரை ஓரத்து ஒரு சில கிராமத்தின் தோற்றமே இக்கவிதை. இன்னொரு கவிதையில் மணல் ஓரக்கிராமம். ஒன்றினை உணரமுடிகிறது. அந்த கிராமத்தில் “நடக்கும் அனுபவத்தைக்” காட்டுகிறார்.
“கடலைக் கீறிக்கொண்டு போகும் ஒரு நிலத்துண்டு / ஒருமலைக் குன்றின் சரிவில் தேவாலயங்கள் நிறைந்த கிராமம் / திகைத்து மிதக்கிறது கண்கள் நம்பா காண்மயக்கம் / குறுமலையில் கால்கள் புதையப் புதைய / சரிந்து குலைகின்றன மூளைமடைப்புகள் / ஓயாப் பெருஞ்சத்தம் உப்புக்காற்று / வெண்மறைப் பரப்பு மச்சவாசம் / சூழ அமிழும் நீல நீலம் - ”3
நடக்கும் அனுபவத்தோடு கடலோரமணல் கிராம அனுபவமும் தொத்திக் கொண்டுவருகிறது. கால்கள் புதைய மலை நடத்துகின்ற கிராம வாழ்வை இங்கே அடையாளம் காண்கிறோம். இதனோடு இன்னொரு கிராமக் கட்சியையும் இவர் கவிதையில் காண்கிறோம். ஆடுகளோடு ஊருக்குள் திரும்பிவரும் ஒரு காட்சி. இதுவே கிராம வாழ்வு. இதனை சமயவேல் கவிதைக்குள் கொண்டு வருகிறார்.
“எனது கிராமத்துக்குச் செல்லும் / வண்டிப்பாதையை எந்தப் பேயோ / அழித்து நாசமாக்கிவிட்டது. / ஊருக்குள் தெருக்களேதும் இருக்கிறதா / தெரியவில்லை / இருட்டு கவசமாய்க்கட்டிய இரவில் / எனக்காக எந்தப் பாதை திறந்திருக்கும்? / நண்பர்கள் இப்போதுதான் ஆடுகளோடு / ஊர்திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் / இருட்டாலும் மறைக்கமுடியாத / புழுக்கைகளின் தடித்த வாசனையோடு / பரவிக் கொண்டிருக்கும் புழுதிக்குள் / மூக்குகளை உரசியபடி ஆடுகள் தங்களுக்குள் / பேசிக்கொண்டுதான் நடக்கின்றன”4
சமயவேலின் கவிதைகளில் கிராமத்துக் காட்சிகளோடு கிராமத்து வாழ்வை அனுபவிக்கமுடிகிறது. கிராமத்து மக்களின் மூடநம்பிக்கை, வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு அச்சூழலையும் உணர முடிகிறது. நீரில்லாத ஓர் ஏரியைக் காட்சிப் படுத்துகிறார் கவிஞர் ஸ்ரீ நேசன். மழையின்றி வறண்டு கோடை வெயில் பதிந்த ஏரியை அடையாளம் காணமுடிகிறது. மழையின்றி வாடும் கிராம வாழ்க்கைப் பின்னணியை அறிய முடிகிறது.
“இங்கிருந்து ரொம்ப தூரத்துக்கு அப்பால் / ஒருகிராமம் இருக்கிறது / அந்தக் கிராமத்துக்கு மேற்கே ஓர் ஏரி / ஏரிக்கரையில் வசிப்பவன் இப்போது அங்கில்லை / ஏரிக்கரையின் மீது ஆள் நடமாட்டமில்லாத / ஒரு மதிய தனிமை / வானில் வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாவின் தலை / யாருமில்லாத ஏரிக்கரையை வெறிக்கிறது. / ஏரிக்குள் பரவியிருந்த மாபெரும் கண்ணாடியும் / கொஞ்ச காலத்திற்கு முன் புதைந்து போய்விட்டது. / இப்போது வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாவின் இரத்தத்தை / புதையுண்ட கண்ணாடி பிரதிபலித்துக் / கொண்டிருக்கிறது”5
சாதியம்
கண்ணாடி, வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாயின் தலை ஆகியன படிமங்களாகி உள்ளன. வற்றிப் போன நீரும் கொளுத்தும் வெயிலும் இந்தப் படிமங்கள் வழி இதன் மதிய நேரத்தின் உக்கிரத்தைக் காட்சிப்படுத்துகின்றன. கிராமம் அற்புதவியச் சுவைக்குரியதல்ல. இப்புறத்தோற்றம் ஒருபுறமிருக்க, இவை மட்டும் கிராமம் இல்லை என்பதை ஆதவன் தீட்சண்யா, அபிமானி ஆகியோரின் கவிதைகள் உரைத்துகின்றன. இந்தியக் கிராம வாழ்க்கை என்பது சாதிய வாழ்க்கைதான். வைதிக வாழ்க்கைதான். சாதியப் படிநிலை வேற்றுமை கிராமத்தில் மிகுதியாகவே இருக்கிறது.
“வார் அறுந்துபோன செருப்பின் கிழிசல்களை / ஒட்டுப் போடவும் / வளவளப்பும் மினுமினுப்பும் பளிச்சிட / பாலிஷ் போடவும் / நிறைமேனிக்கே நீட்டிய / வெங்கடசாமி நாயக்கனின் / ஆசையைப் பூர்த்தி செய்தார். / அயித்து மறந்து கூட / அவனின் தெருவுக்குள் / செருப்பணிந்து போகாதிருந்த / சின்னசாமி பகடை”6
வறுமை: பேச்சுமொழி
‘அயித்து மறந்து கூட’ என்பதில் வெளிப்படும் சாதியக் கீழ்நிலைக்குரல் கிராமத்துக்குரலே. ‘ஆசையைப் பூர்த்தி செய்தார்’ என்று கூறி குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் ஒதுக்கப்பட்ட நிலையை உணர்த்துகிறார் அபிமானி. இக்கவிதை, மனிதர்கள் நடத்தைகள் சாதியப்படிநிலை வேற்றுமைக்கேற்ப இருக்கும் கிராம வாழ்வைக் காட்டுகிறது. கிராமத்தில் சாதிய வாழ்வில் குழந்தைகள் உணவருந்தும் காட்சியை கிராமத்துச் சாதிய மொழியில் தருகிறார் அபிமானி.
“காலம்பற இடிச்சி வச்ச / சோளமாவக் காடியாக்கி / நெளிஞ்ச பாத்திரங்க அஞ்சில் / நெறையாம கஞ்சிய அளந்து தந்து / கள்ளாப்பாப் புள்ளங்க கடிக்க / அவசரமா தேடினா அம்மாக்காரி / அழுக்குப் பானைக்குள் மிளகு வத்தல் / பசி வெரட்டிய அவசரத்துல / சூட்டோடு குடித்த புள்ளைங்களோட / நாக்குகள் வெந்திருந்தது தெரியாமல்”7
இப்பாடலில் குறிப்பிடத்தக்கது இதன் பேச்சுமொழியாகும். பேச்சுமொழித் தொனியே இங்கே கவிதையாகிறது. கிராமத்தில் மக்கள் மனிதர்களாகவும் வாழ வேண்டும். சாதியர்களாகவும் வாழ வேண்டும். இது எவ்வளவு பெரிய கொடுமை. இந்த இரண்டு நிலைகளோடு எளிய வாழ்வு இணையும் அனுபவச் செறிவோடு ஒரு கவிதை அமைகிறது. இது ஒரு பெண்ணின் கவிதை. சுகிர்தராணியின் இக்கவிதை.
“பெரும்பாறைக் குன்றுகள் சூழ்ந்த / என் வெப்பமுற்ற நிலங்கள் / புவியதிர்ச்சியின் வெடிப்பினைப் போல / பிளவுற்றிருப்பதை எப்படிச் சகிப்பேன் / உளுந்துச் செடிகள் கைகளில் சிராய்க்க / புல்லறுத்துக் கட்டிய சுமைகளுக்கு / கூம்பிய இருகை ஏற்றி / கூலியாய்க் குடித்த பழங்கஞ்சியின் / அடர்ந்த கந்தகச் சுவை / நாளமறுந்த சுரப்பினைப் போல் / உடலெங்கும் பரவிக்கிடக்கிறது / பழகிய விலங்குகள் இறந்து போகையில் / சுமந்து சென்று புதைத்துப்போட / வீசிய ஒருபடி நெல்லும் பதராகி / பட்டினியால் புரண்டதும் நினைவிலாடுகிறது / எட்டாத தொலைவில் நின்று / பனை ஓலைகளில் தேநீர் அருந்துகையில் / உதட்டிலிருந்து வழியும் சாதியின் வலி / காலணிகளற்ற பாதங்களை நனைக்க / என் கிராமத்தின் ஓவியம் / தன்னைச் சட்டமிட்டுக் கொள்கிறது / ஒருபோதும் உறங்காத ரெட்டை வழித்தடத்தில்”8
அதிகாரம்: கொடிய நிலை: கூலி உழைப்பு
கிராமத்தின் வெயில் சூழ்ந்த வறண்டநிலை, வேளாண்மைத் தொழிலாளர்களின் கூலி உழைப்புநிலை, வறுமை பசி, இவற்றோடு வலிமையாக இணைந்துள்ள சாதிவெறி - இவற்றை இக்கவிதை கூறுகிறது. இதுதான் தமிழ்க் கிராமம் தமிழ்ப் பண்பாடு என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. இதையே வெளிப்படுத்த இந்த முறையில் வெளிப்படுத்த - பழைய மரபுசார்ந்த கணக்குமுறைப்பட்ட யாப்பியல் பொருத்தமாகவே இராது. அதிகாரத்தை மீறும்போது அதன் வடிவான யாப்பும் மீறப்படுகிறது. இந்த சாதிய வாழ்க்கை எத்தகையை கொடிய நிலை கொண்டது என்பதை ஆதவன் தீட்சன்யாவின் ஒரு கவிதை, துன்பத்தின் புலம்பலாகக் காட்டுகிறது.
“தானிய மணிகளும் கனிகளும் வளங்களும் உமக்கேயாக / களத்து மேடுகளுக்கும் களஞ்சிய குதிர்களுக்கும் / காவல் நின்றோம் யுகம் யுகமாய் / கால் மரத்து வீழ்ந்தபின்னும் / வெள்ளாவியில் அவிந்த / முட்டுத்துணிகளின் தீட்டுக்கறை வாழ்வெல்லாம் படர / அழுக்கின் வியாபகம் ஆதியந்தமறியாமலே / சாவிலும் நீள்கிறது. / யாமே பாதந்தாங்கியும் செருப்பெனும் உருவகம் / தேடினீரென்று / எங்களைப் போலவே வயலடிகளில் உழைத்துச் செத்த / மாடுகளைத் தின்று / பதனமிட்டு செருப்பாக்கித் தந்தோம் தோல்களை”9
இக்கவிதை வரிகளினூடாக, காலங்காலமாக உடலுழைப்பைக் கொடுத்து வேளாண்மையையும் பாதுகாத்து சாதியத்தையும் பாதுகாத்து, அழிவுநிலை பெற்ற கூலி உழைப்பாளிகளின் ஆதங்கத்தைக் காண முடிகிறது. இந்நிலை இன்று வரை நீடிக்கிறது என்பதை “தாண்டவம்” என்ற இக்கவிதையின் இறுதிவரிகள் அறிவிக்கின்றன.
“எங்களது ஓட்டுரிமையும் கூட / உமக்குப் பிடித்த சின்னங்களிடம் மண்டியிட்டு / தனக்குத்தானே / செல்லாததாக அறிவித்துக் கொள்கிறது”10
இவ்வரிகள் மூலம் காலங்காலமாக சாதியக் கெடுபிடிக்குள் மங்கிப் போன கூலி உழைப்பாளரின் வாழ்க்கை ஓட்டுப்போட்டு அரசியல் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் நிலையிலும் வலுவிழந்து போய்விடுகிறது. இதற்கான காரணங்கள் வேறுபல உள்ளன. எனினும் சாதியக் கெடுபிடியால் உள்ளடங்கிப் போன கீழ்நிலை மக்களிடம் முன்னேற்றம் இல்லை என்பதை இவ்வரிகளில் காணவே முடிகிறது.
கிராமத்து வாழ்க்கை - குடும்பம்
ஒரு குடும்பம் ஒரு வீட்டில் கிராம வாழ்க்கை வாழ்ந்து முடித்த வரலாற்றை ஆதவன் தீட்சண்யாவின் ஒரு கவிதை கூறுகிறது.
“தாத்தன் சொத்தில் / அப்பனுக்குப் பாகமாகிப் பிரித்த இங்கேதான் / ஏழுபேரையும் பெற்றெடுத்தாள் / எங்கள் தாய் / பூலப் பூவும் ஆவாரங் கொத்தும் / வேப்பங்குழையோடு பண்ணைப்பூ சேர்த்து / நாலு மூலைத் தண்டையிலும் காப்புக் கட்டு சொருகினால் / அடுத்த பொங்கல் வரை / அசைந்தாடும் இறகு போல / மாடக் குழிக்கு நேர்மேல் / சிம்னியின் கரிமண்டும் சுவற்றில் / பெயரெழுதும் சண்டையில் தினம் கெலிப்பான் தம்பி”11
இப்படிச் செல்லும் இப்பாடல் கிராமத்து வீடொன்றின் வாழ்க்கையை மட்டுமே காட்டுகிறது. வாழ்வின் பரிமாணங்கள் இங்கும் இவ்வாறு இருந்தன என்பதைக் காட்டும் இக்கவிதை கிராமத்து வாழ்வின் முக்கியக் கவிதை எனலாம். வாழ்க்கையின் முக்கிய கவிதையான இதைப் போல, மலை வாழ்சிற்றூர்களின் சூழல் - இயற்கை அழகின் பரிமாணத்தைத் தேன்மொழி தன் கவிதையில் காட்டுகிறார்.
“அப்பா கல்திரி மரம் வெட்டுகையில் / வரும் இசையை / எந்தப் பாட்டிலும் / கேட்டதில்லை இதுவரை. வெத்தலைப் பட்டை மரத்தின் / சிவப்பழகில் மயங்கிக் / கீறுவாய் நீ / காட்டுப்பட்டாணி / பூமரத்தடியிலிருந்து / கொண்டான்டி மரச் செறாவின் / சூரியச் சிதறலை வரைய / முற்படுவேன் நான் / செங்கோரை கிளையில் செய்த / கோடாரி தோலில் தூங்க / அட்டைகள் சிவப்புக் குத்த / யானைச் செந்தட்டி தோலை கொத்த / எள்ளிமுள் பாதங்களில் எதிர / புதர் முட்களைச் சதை கீற / வழியெங்கும் வலி சிதறி நடப்போம் / நாம் வெளிச் சொல்லாத / மலைவாழ்வு பற்றி / அடுப்புக்குள்ளிருந்தும் அழும் / ஆயில் மரச் செறா / எண்ணெய் கசக்கி”13
சிதைவு பெறாத மாசடையாத - இயற்கை சூழ்ந்த எளிய மலைக்கிராமங்களின் வாழ்வு அனுபவத்தைத் தேன்மொழியின் கவிதைகள் காட்டுகின்றன. இயற்கைச் சூழலும் வாழ்வுச் சூழலும் சூழலியம் சார்ந்து வாழ்வைக் காட்டுகின்றன.
கிராமத்து வாழ்வு மாற்றங்கள்
கிராமம் - நகரம் என்ற எதிர் இணைகளில் நகரம் நோக்கிய விருப்பம் மேலெழுகிறது. நகரம் செல்லும் முனைப்பு எழுகிறது. சென்றபின் மனித இயல் அழிந்து போய்விடுவதாக எஸ்.சுதந்திரவல்லி ஒரு கவிதையில் கூறுகிறார். ஒரு பெண் நகரத்துக்கேற்றவளாகத் தன் உடலை மாற்றிக் கொண்டு நகரத்திலேயே வாழப் போவதாகச் சொல்லுகிறாள். பின்னர்,
“இனி வாழ்நாள் முழுவதும் / பட்டணம் தான் இருப்பிடம் / என பூரித்துப் போனாள் / அவளது பேச்சை பட்டண / பாஷையில் மாற்றிக் கொண்டாள் / அவளது கனவு கலைந்து / ஊர்திரும்பிய போது / கனத்தமனத்துடன் / பட்டணத்து ரயிலை மட்டும் / கிராமத்தை நோக்கிக்/ கொண்டு வந்து சேர்த்தாள்”கிராமத்து வாழ்க்கை கனவுகளுக்கப்பாற்பட்ட, இயற்கையானது என்பதை நகரவாழ்க்கையாக மாற்றமுற்ற நிலையின் பின்னணியில் அவர் கூறுகிறார். நகரவாழ்க்கை ஓர் கனவு போன்றதே; கிராம வாழ்க்கை உண்மையானது என்பதைக் கூறுகிறது இக்கவிதை.
சாதியம்: மாற்றம்
கிராமத்து மாற்றங்களில் முக்கியமானது சாதிய மாற்றங்கள், சாதியம் என்பது, ஒவ்வொரு ஒடுக்கப்படும் சாதிகளுக்குள்ளும் இன்னும் ஒரு சாதியை ஒடுக்கி வைக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது. அப்படி எல்லாச் சாதிகளுக்குள்ளும் ஒடுக்கப்படும் நிலை கொண்டது வண்ணார் எனப்படும் சலவைத் தொழில் இனமும், சவரத் தொழில் செய்யும் நாவிதர் இனமும் ஆகும். இவர்களில் நாவிதர் சமூகத்திலிருந்து ஓர் எதிர்ப்புக்குரல் பெரிதாக வெளிவந்துள்ளது. கிராம வாழ்வில் மக்களுடைய பிறப்பு - இறப்பு - திருமணம் மற்றும் எல்லாச் சடங்குகளையும் நிகழ்த்துபவர்கள், ஊருக்குள் கலைஞானம் கொண்டவர்கள், மருத்துவ அறிவு பெற்றவர்கள் நாவிதர்களே! ஆனால் இவர்கள் மற்றவர்கள் முன் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அடிமைகள். இவர்களுக்கென்று தனித்துவம் என்பது மற்றவர்கள் சொல்லைக் கேட்டு அவர்கள் தருவதைக் கொண்டு உணவுண்டு வாழ்பவர்களே.
இது, வருணாசிரமம் மக்களுக்கு அளித்திருக்கும், மாற்ற முடியாதது. இன்று காலமாற்றத்தில் இவர்களிடமும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. நகரங்களுக்குச் சென்று விடும் சிலர் அங்கே வாழும் வாழ்க்கை. கிராமத்தில் வாழ்வதோ பழைய கிராமத்து வாழ்க்கை. மாறிய சூழலில் தங்கள் வாழ்க்கை பற்றியும் தங்களின் மனித நிலை பற்றிய எண்ணங்களும் ஏற்படலாயின. இவற்றின் விளைவாகவே எதிர்ப்புக்குரல்களும் வெளிப்பட்டன. இக்குரல்களில் எந்தவித உள்தடையுமற்ற (ரninhibவைநன) மொழியாக கவிதையாக, கலைவாணன் இ.எம்.எஸ். என்பவரிடம் வெளிப்படுகிறது. இவருடைய கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே பாரம்பரிய தூய்மைக்கு எதிரான குரல் வெளிப்பட்டுள்ளது.
கவிதைத் தொகுப்பு “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” ‘மயிறு’ என்ற சொல்லை கீழானவற்றையே குறிக்கப் பயன்படுத்துவர். கீழ்நிலையினரான நாவிதரின் வாழ்வை அவிழ்க்கும் கவிதைகளை ‘மயிறுகள்’ எனச் சொல்லுகிறார் ஆசிரியர். நாவிதரின் வாழ்க்கை வேர்களற்றுச் சிதறுண்டு போகும் நிலையை இவ்வாறு ஒரு கவிதை பதிவு செய்கிறது.
“சவரம் கீழ்தரம் / எல்லாம் வீடுகளிலும் கேவலம் / பள்ளி பதிவேடுகளில் / அவமானம் / அப்பா அத்து தெறித்து / எங்கியோ களைஞ்சி போனாரு / அம்மா / ஜாதி தீயில் / எரிஞ்சு புகையா போனா / நாங்க ஆளுக்கொரு / குளத்துல முங்குனோம் / ஊருல ஒரு குடும்பம் / சத்தமில்லாம செத்து / கவர்மென்ட்காரன் / கணக்கெடுக்க வரும்போது / அஞ்சாறு / நாசுவக்குடிகளை / காணல”14
ஒதுக்கிக் கேவலப்படுத்தப்படும் மக்களின் தனிக்குரல் வன்முறையாகவும் வரம்பு என்ற எல்லை மீறியும் தான் இருக்கும். இங்கே மொழி - தூய்மை - புனிதம் என்ற பேச்சுக்கே இடம் வராது. கோபத்தின் பேச்சு ஒரு கவிதையில் இவ்வாறு வெளிப்படுகிறது.
“படிப்பு வரலைனா / உங்கப்பன்கூட / செறக்கப் போக வேண்டியது / தானலேன்னு / கூரைபள்ளி கூடத்தை மொழுவ / சாணாங்கி பொறுக்க / அனுப்பி வச்ச / நடராஜபிள்ளை வாத்தியாரை / அண்ணைக்கு ஒரு நாளு / செயர்ல இருத்திவச்சு / அப்பா ஷேவ் பண்ணுகாரு / கிருதால இருந்து / கத்தி கீழே இறங்கி / கழுத்துக்கு கிட்ட வரும்போது தோணுது / அப்படியே வச்சு / ஒரு இழுப்பு இழுத்துர மாட்டாரான்னு. / தாயிளி சாவட்டும்”15
இக்கவிதை புதுவியக்காலக் கவிதைக்குச் சரியான எடுத்துக்காட்டு. ஒரு நாவிதன் கோபத்தில் பேசுவதுபோலவே பதிவாகி உள்ளது. பாலியல் சார்ந்த தடைகளோ எதுவுமே இல்லை. இப்படி எழுதுவது தான் புதுக்கவிதை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. இப்படிப்பட்டவர்களின் கவிதை இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதை மொழியில் தூய்மை பார்ப்பது இந்திய சமூக மரபுக்கு எதிரானது. ஏன் மனிதர்களுக்கே எதிரானது தான், பிராமணர்களில் சிலர் சனநாயகத்தை ஏற்று சமத்துவம் பார்த்து நடந்துகொள்கின்றனர். இந்த மாற்றத்தையும் இவர் கவிதை பதிவு செய்துள்ளது.
“அண்ணைக்கு கம்யூனிஸ்ட்கார / வெங்கட்ராம ஐயர் / எங்க வீட்டுக்குவந்து / தண்ணி குடிச்சிட்டுப் போனாரு / அப்பாவுக்கு கண்ணுல / இரத்தம் வந்துற்று / அம்மாவைப் பிடிச்சு காட்ட / முடியல16
இவ்வாறு மாற்றம் ஏற்பட்டாலும், அய்யர்வீட்டு சாதியப்பின்புலம் அவருக்கு எதிராக இருப்பதையும் பதிவு செய்கிறது.
செட்டித்தெரு வழியாட்டு / பிராமண குடிகளுக்கும் / இது தெரிஞ்சுது / பொம்பளைகளுக்கு / வீட்டு விலக்குமாதிரி / அவரை முணு நாளா / வீட்டுல ஏத்தலையாம் / ஐயருக்க பொண்டாட்டி”17
நாவிதன் வீட்டில் அய்யர் தண்ணீர்குடித்த செய்தி செட்டியார்களின் வீட்டு வழியாக பிராமணகுடிக்கு சென்று, அய்யரை மூணுநாள் வீட்டுக்கு வராமல் செய்து விடுகிறது. மாறிவரும் காலத்தில் மாறாதிருக்கும் சாதிய நிலை கிராம வாழ்வில் சாதாரணமாக நிகழ்கிறது. ஆயினும் மாற்றங்கள் ஏற்பட்டுவரவே செய்கின்றன.
ஒரு காலத்தில் இருந்த நாசுவத்தியின் முக்கியத்துவம் குறைந்து போய் நவீன மாற்றங்களால், கிராமத்தை நீங்கியோ அல்லது பக்கத்து இடத்திற்குச் சென்றோ, பியூட்டி பார்லர்களில் அவர்கள் காத்துக் கிடக்கும் சூழலை ஒரு கவிதையில் காட்டுகிறார். கலியாணச் சூழலில் இச்சித்திரிப்பு இடம் பெறுகிறது.
“கல்யாணத்துக்கு முதநாளு / பொண்ணுக்கு / அக்குளும் அடி முடியும் / வழிக்க போவா / எங்கலீலாசித்தி / அவ போறதும் வாரதும் / யாருக்கும் தெரியாது. / இப்ப நாசுவத்திய கூட / காத்துக் கிடக்காளுக / கண்டவளுக்க பியூட்டிபார்லர்ல”18
கிராமப் பண்பாட்டில் அவர்களுக்கென்று விதிக்கப்பட்டிருந்த தொழிலே இன்று அவர்களை விட்டுப் போய்விட்ட நிலை மாற்றம் இக்கவிதையில் பதிவாகியுள்ளது. இத்தொழில் முறை மாற்றமடைந்து குடும்ப அளவிலும் வெளியேறும் நிலையை ஒரு கவிதை பதிவு செய்கிறது.
தமிழர் - இந்தியர் பண்பாட்டின் கூறுகளில் ஒன்றான நாவித சாதி அமைப்பில் காலங்காலமான சாதியக் கெடுபிடிக்குள் இருந்து வரும் நிலையும், மாறுதல் பெற்று வரும் நிலையும், கலைவாணன் கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன. இது கிராம வாழ்வு சார்ந்ததே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
அறிமுகமாக அமைந்துள்ள இந்தச்சிறிய கட்டுரையில் பல கவிதைகள் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. கிராம வாழ்க்கைத் தோற்றம், வாழ்வியல் அனுபவங்கள், மாற்றங்கள் - இவை குறித்த ஒரு சில கவிதைகளே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஒரு கவிதையையாவது முழுமையாகப் படிக்க வேண்டும், என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை (மேடை முழக்கங்கள் எல்லாவற்றையும் அழித்து வரும் இன்றைய (சூழலில்) இக்கவிதைகள் பெரும்பாலும் உரைநடைப் பாணியிலே அமைந்துள்ளன. பேச்சுத் தொனியின் குரலே இதற்கு அடிப்படைக் காரணம்.
பேச்சு மொழியை எழுதுமொழியில் கட்டமைக்கப்பட்டுள்ளதை, அதிகாரம் இதுவரை மதித்ததில்லை. இது, சாதியம் சார்ந்த வைதிகம் போன்றதே. ‘தமிழ்’ என்றவுடன் இந்த வைதீகமே தோன்றி சொற்களின் தூய்மை குறித்துப் பேசும். ஆனால், வாழ்வும் சமுதாயமும் அப்படியில்லை. சமத்துவமான தூய்மை எங்கும் கிடையாது. எனவே கவிதை மொழியின் வெளிப்பாட்டு நிலையில் விதிகளுக்குட்பட்ட தூய்மை வெளிப்படாது. அதிகார மரபுகளுக்குள் ஒடுங்காது.
கிராம வாழ்க்கை என்பது தமிழகத்தில் முற்றிலும் இன்று மாறிவிட்டது என்றே சொல்லலாம். கிராமம் - நகரம் என்ற வேறுபாடு குறைந்து வருகிறது இன்று. ஆயினும் இம்மாற்றம் பொருள்நிலை மாற்றமேயாகும். சாதிய உணர்வு என்பது அழுத்தமாக்கப்பட்டுள்ள சமூகமே கிராம சமூகம். இன்று நகரம் அளவிலும் இது பரவி உள்ளது. இன்றைய போலியான ஜனநாயகமே இதனைப் பரப்பி வருகிறது. இந்த சாதிய மரபை அறிந்துகொள்ள இக்கட்டுரைப் பொருண்மைகள் பயன்படலாம். வருணாசிரமத்தை எதிர்க்கா விட்டால் ஜனநாயகம் உருவாகாது.
***
து.சீனிச்சாமி 20-ஆம் நூற்றாண்டு தமிழ் கவிதை - புதிய போக்குகளின் தோற்றம் வளர்ச்சி, சந்தியா பதிப்பகம், சென்னை - 2010 பக்கம் 273.
1. பாலா, முனியமரம், புதிய தரிசனம் பதிப்பகம், சென்னை - 2015, பக்கம் 24, 25
2. சமயவேல், பறவைகள் நிரம்பிய முன்னிரவும், மலைகள் வெளியீடு, சேலம், 2014, பக்கம் 26.
3. சமயவேல், மின்னிபுற்களும் மிதுக்கம் பழங்களும், ஆழி பப்ளிசெர்ஸ், சென்னை - 2010, பக்கம், 54.
4. மேலது, பக்கம் 27
5. ஸ்ரீ நேசன், ஏரிக்கரையில் வசிப்பவன், ஆழி பப்ளிசெர்ஸ், சென்னை - 2010, பக்கம், 80.
6. அபிமானி, எதிராக, காவியா, சென்னை - 2004, பக்கம், 5
7. மேலது பக்கம் 30
8. சுகிர்த ராணி, அவளை மொழிபெயர்த்தல், காலச்சுவடு, நாகர்கோவில், 2008, பக்கம் 21.
9. ஆதவன் தீட்சண்யா கவிதைகள், சந்தியா பதிப்பகம், சென்னை, 2011, பக்கம், 93.
10. மேலது, பக்கம் 93
11. மேலது, பக்கம் 144
12. தேன்மொழி, இசையில்லாத இலை இல்லை, மதி நிலையம் வெளியீடு, சென்னை, 2001, பக்கம் 31.
13. எஸ்.சுதந்திரவல்லி, பட்டனத்து இரயிலை மட்டும் கிராமத்தை நோக்கி கொண்டு வந்து சேர்த்தாள், சிலேட் பப்ளிக்கேசன், நாகர்கோவில் 2014, பக்கம் 36.
14. கலைவாணன் இஎம்எஸ், ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள், அறம் பதிப்பகம், ஓசூர், 2015, பக்கம் 60.
15. மேலது, பக்கம் 16
16. மேலது, பக்கம் 36
17. மேலது, பக்கம் 36
18. மேலது, பக்கம் 38