மொழியியல் அறிஞர், தொல்லியல் அறிஞர் என அந்தந்தத் துறைகளில் ஆளுமை பெற்றவர்களைக் குறிப்பிடுவார்கள். ஆகச்சிறந்த ஆளுமை பெற்றவராகக் கருதப்படும் ஒருவரைக் குறிக்கத் தொல்லியல் துறைஞர் எனக் குறிக்கப்பட்டிருந்தது. அறிநர் (புறம்.373:23) அறிஞர் (நற்.214:2) என்னும் பெயர்ச்சொற்கள் அறிந்திருப்பவர் என்னும் பொதுவான பொருளையே குறிக்கும்.

துறை என்னும் வடிவம் பெயராக இருப்பதால் அவ்வாறு வர வாய்ப்பில்லை. வழக்கில் இருக்கும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு சொல்லை உருவாக்குவதை ஒப்புமை ஆக்கம் (Analogical Creation) எனக் குறிப்பர். துறைஞர் என்னும் சொல்லை பேராசிரியர் தமிழண்ணல் பயன்படுத்துகின்றார்.

tamizhannal bookஅந்தத் துறையில் துறை போகியவர், துறை சார்ந்தவர் என்று பொருள் கொள்ளலாம். தொல்லியல் துறை சார்ந்தவர் என்னும் பொருளில் தமிழண்ணல் பயன்படுத்தி இருப்பதாகத் தெரிகின்றது. தொல்லியல் துறைஞர் அத்துறையில் பணிபுரியும் இயக்குநர் முதல் அலுவலக ஊழியர் வரை பலரையும் குறிக்கலாம். தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த இரா.நாகசாமி அவர்களைத் தமிழண்ணல் தொல்லியல் அறிஞர் எனக் குறிப்பிடாமல் தொல்லியல் துறைஞர் எனக் குறிப்பிட்டதற்குக் காரணம் இருக்க வேண்டும்.

தமிழர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தமிழகமோ, தமிழோ தொன்மையான வரலாற்றையோ, நாகரித்தையோ பெற்றிருக்கவில்லை; எங்கள் மூதாதையர் ஆரியப் பார்ப்பனர் போட்ட பிச்சை என்னும் தொனியில் சில நூல்களை இரா.நாகசாமி எழுதியுள்ளார். தமிழைப் பெற்றெடுத்தது வடமொழி தான் என ஓலமிடுவது காலங்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சிந்துவெளி நாகரிகம் திராவிடர்-தமிழ் நாகரிகத்தோடு தொடர்புடையது என்பது வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்களால் நூற்றாண்டுக்கு முன்பே நிறுவப்பட்டுவிட்டது. அதை ஆரியரின் சரஸ்வதி நாகரிகம் என்கின்றார்கள். ஆரியர் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகுவதற்கு முன்பே சிந்து வெளி நாகரிகம் அங்குச் செழித்திருந்ததாகக் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழுக்குத் தாய்மொழி வடமொழி என்று இரா.நாகசாமி போன்றோர் கூறுவது புதியதன்று; தாங்களும் தமிழரே என்று கூறி இந்த மண்ணில் விளைந்தவற்றை உண்டு மோட்டுவளையைப் பார்ப்பவர்கள் காலங்காலமாக இருக்கத்தான் செய்கிறார்கள். உண்ட கடனுக்காகப் புகழ்ந்து பேச வேண்டாம்; நன்றிக்கடனாகப் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடாமல் இருந்தாலே போதும்.

தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி அண்மையில் இயற்கை எய்திவிட்டார். இறந்தவர்களைக் குறைத்துப் பேசக் கூடாது; ஆனால் அவர்களின் எச்சங்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. விட்டுச் சென்றுள்ளார்களே? திருக்குறளே வட மொழியின் நீதி நூல்களை மூலமாகக் கொண்டு பிறந்தது என்பார் இரா.நாகசாமி. வடமொழியில் எந்த நூலும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக்.972) என்று கூறவில்லை. பகவத் கீதையை அருளிய கிருஷ்ணரே ‘நால் வருணங்களை நானே படைத்தேன்’ என்று கூறுகின்றார். பகவானே கூறும்போது வேறு சாட்சி வேண்டுமோ? ஒருக்கால் திருவள்ளுவர் கூறுவது இடைச்செருகலாக இருக்குமோ?

உலகப்பொதுமறையை அளித்த வள்ளுவப் பெருந்தகை, தக்கார் தகவிலர் என்பது அவரவர் / எச்சத்தாற் காணப்படும் (திருக்.114) எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். வடமொழியில் வந்துள்ள எல்லா வகை நூல்களையும் தமிழில் வந்துள்ள தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், அற இலக்கியம், காப்பியம் போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தக்கார் யார்? தகவிலார் யார்? என்பது புரியும்.

இவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணம் தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி பரவலாகத் தெரிந்து விடக் கூடாது என்று The Mirror of Tamil and Sanskrit (2012) என்னும் தலைப்பில் ஆங்கில நூலை எழுதியுள்ளார். தம் விருப்பத்திற்குத் தமிழரையும் தமிழ்நாட்டையும் வெளுத்து வாங்கி இருக்கிறார். வடமொழியே தமிழுக்குத் தாய் மொழி என்று முன்னோர் நூலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு எழுதுகின்றார்.

பேராசிரியர் தமிழண்ணல் தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும் (2013) என்னும் நூலை நூலுக்கு மறுப்பு நூலாக எழுதியுள்ளார். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் வெளியிட்டுள்ளது.

இயல்பாகத் தமிழ் உணர்வு மிக்கவர்களுக்கே இரா.நாகசாமியின் தமிழ்நாடு பற்றிய வெறுப்பான கருத்துகளைப் படித்தால் சினம் கொப்பளிக்கும். தமிழையே வாழ்க்கையாகக் கொண்ட தமிழ்க் கடல் மூதறிஞர் தமிழண்ணலுக்குச் சினம் பொங்குவதில் வியப்பில்லை.

இக்கட்டுரை, தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் ஆங்கில நூலை மதிப்பிட எழுதப்படவில்லை. மூதறிஞர் தமிழண்ணலின் நூல் அந்நூலுக்கு ஆழமாக மறுப்புத் தெரிவிக்கின்றது. தொல்லியல் துறைஞர் (ப.22) எனக் கடுமையாகச் சாடுகின்றார்.

பேராசிரியரின் நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள மு.பொன்னவைக்கோ, இரா.நாகசாமி எப்படி எல்லாம் தமிழர், தமிழ்மீது நஞ்சைப்பாய்ச்சியுள்ளார் என்பதைப் பின்வருமாறு தொகுத்துக் கூறியுள்ளார்.

 1. தமிழ் தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை. சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிடமிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகின்றது.
 2. தொல்காப்பியம் இலக்கண நூலன்று; பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட நடனப் பாடல்களுக்கான கருத்தமைந்த தொகுப்பு அது.
 3. சிலப்பதிகாரம் வரலாற்றுக் காப்பியம் அன்று; அது முழுவதும் புனைந்து கட்டப்பட்ட ஒரு புனைகதை இலக்கியம் (It is not a historic ethic, but a creative work) அது முழுவதும் நாட்டியப் பாடல்களின் தொகுப்பு.
 4. தமிழ் எழுத்துகள் பிராமி என்ற கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து வடிவமைக்கப்பட்டன.
 5. தமிழர் பாவும் பரத முனிவரின் ‘யமகம்’ என்ற மடக்கணியைக் கொண்டே வளர்ந்துள்ளது.
 6. தமிழர்கள் வேதக் கடவுளையே வணங்கினர்
 7. தமிழார்க்கு எனத் தனி வாழ்வு நெறி இல்லை. வடமொழி வேத நெறி மரபு வாழ்வையே பின்பற்றி வாழ்கின்றனார்.
 8. தமிழின் கலை, இசை, நடனம், இலக்கியம் எல்லாம் கடன் பெற்றவையே.
 9. காலந்தோறும் தமிழ், சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிலிருந்து கடன் பெற்று வளர்ந்தது. அதிலுள்ள ஐந்நிலம் என்பது உண்மையான நிலப்பாகுபாடன்று அது நாடகத்தின் சுவையை மிகுவிக்கப்போரும் பின்னணித்திரை போன்றது. தமிழ் அகம், புறம், பற்றிய பாடல்கள் அனைத்துமே நாட்டியமாடப் பின்னணியாகப் பாட எழுதப்பட்ட பாடல்களைப் போன்றனவே ஆகும். எதுவும் உண்மையான வாழ்வு நெறியினின்று கிளைத்தது அன்று.
 10. பொதுவாக நாம் இன்று சிறப்புடன் போற்றும் தமிழ் சார்ந்த அனைத்தும் கற்பனைகளே. இவற்றை உண்மை என நம்பித் தமிழ் உயர்வு பற்றிப் புகழ்தல் எல்லாம் தவறு. (தொல்லியல் துறைஞர், அணிந்துரை, பக்.6-7)

இரா.நாகசாமி ஒரு தொல்லியல் அறிஞராக நேர்மையுடன் எழுதவில்லை. தமிழண்ணல் குறிப்பது போலத் தொல்லியல் துறைஞராகத்தான் வெளிப்படுகின்றார். பிறமொழி சார்ந்து இயங்காமல் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றதே செம்மொழி. தனித்தியங்கும் தன்மை தமிழுக்கு இருப்பதை இராபார்ட் கால்டுவெல் 1856இல் கூறி உள்ளார்.

மொழியை விளக்கும் தொல்காப்பியத்திற்கும் ஐந்நில மரபில் எழுதப்பட்ட சங்கப்பாடலுக்கும் நாட்டிய மரபை ஒப்பிடுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல உள்ளது. பழந்தமிழரின் ஐந்நிலப் பாகுபாடு உண்மையானது இல்லை என்றால் வடமொழியில் விளக்கப்படும் மேலுலகம், கீழுலகம் உண்மையானவையா? அவற்றை நினைத்துத் தூக்க மயக்கத்தில் தமிழுக்குத் எழுதியதாகத் தெரிகின்றது.

தொல்லியல் துறையின் முதல் இயக்குநராகிய இரா.நாகசாமி அகழாய்வுவழி நிறையச் சாதித்திருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர் அமரநத் ராமகிருஷ்ணன் போன்றோர் கூறுகின்றார்கள். கட்டடக்கலைக் கண்காட்சி, திருட்டுப் போன சிலையைக் கண்டறிய உதவுதல் போன்ற பணிகளை மட்டுமே அதிகமாகச் செய்துள்ளார்.

இரா.நாகசாமி வாழ வழிகொடுத்த தொல்லியல் துறைக்கு உண்மையான பணி செய்திருக்கலாம். தமிழ் இலக்கணம், இலக்கியங்களை ஒழுங்காகப் படித்திருக்கலாம், காலமும் கடந்துவிட்டது. அவரும் தம் எச்சத்தை விட்டு மறைந்துவிட்டார்.

தமிழண்ணல் உலகறிந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர். இராம.பெரியகருப்பன் என்னும் இயற்பெயர் கொண்ட அவரிடம் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்ற நூற்றுக் கணக்கானோரில் நானும் ஒருவன். அவருடைய ஆய்வு நூல்கள் அனைத்துமே பழந்தமிழரின் சிந்தனை, வாழ்வியல் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யப் பெரிதும் பயன்படும்.

குறிஞ்சிப்பாட்டு (1961), ஒப்பிலக்கிய அறிமுகம் (1973), சங்கஇலக்கிய ஒப்பீடு: இலக்கியக் கொள்கைகள் (1975), சங்க இலக்கிய ஒப்பீடு: இலக்கிய வகைகள் (1978), தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்: இறைச்சி (1986), உள்ளுறை (1986), மெய்ப்பாடு (1986), நற்றிணை மலர்கள் (2009).

ஆரியப் பார்ப்பனரின் பரவலுக்குப் பிறகு மொழி, இலக்கியம் என எல்லாவற்றிலுமே கலப்பு நிகழ்ந்து விட்டது. இவற்றைக் கொண்டே எல்லாவற்றையும் ‘எங்காத்து’ என்று உரிமை கொண்டாடுகின்றார் தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி. இவர் இவ்வாறு எழுதுவதைத் தொல்லியல் துறையின் இணை இயக்குநர் தி.சுப்பிரமணியன் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

தமிழ் நூல்களாகிய தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவை வட மொழியை அப்படையாகக் கொண்டவை என்று Mirror of Tamil and Sanskrit என்ற ஆங்கில நூலில் எழுதியுள்ளார். பரதரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து பெறப்பட்டவை இவ்விரண்டு நூல்களும் என்பது அவரது முடிவாகும் Thirukural - An Abridgement of Sastras  என்பது அவரது இரண்டாம் நூல். இந்நூலில் திருக்குறள் சமக்கிருத நூல்களின் தொகுப்பு என்று கூறியுள்ளார்.

இவற்றுடன் இவருடைய மூன்றாம் நூலும் வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்நூலின் பெயர் Tamil Nadu the land of Vedas  முதல் இரண்டு புத்தகங்களில் கீழ்க்கண்ட செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

 1. தமிழர்க்கு எழுத்து வரிவடிவம் கிடையாது; பிராமி எழுத்துக்கள் பிராமணர்களால் உருவாக்கப்பட்டவை.
 2. தமிழ் இலக்கியங்கள் சமஸ்கிருத நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.
 3. வர்ணாசிரமக் கோட்பாடு என்ற சாதி அமைப்புமுறை சங்க இலக்கியங்களில் உள்ளது. அது பிராமணர்களால் கொண்டுவரப்பட்டது அல்ல.
 4. அகத்தியர், இந்திரன் போன்ற வேதக் கடவுள்களைத் தமிழர்கள் வணங்கினார்கள்.
 5. திருக்குறள் தர்ம சாஸ்திரங்களில் இருந்து எடுத்து எழுதப்பட்டது.

இவருடைய முழுமையான கருத்து தமிழர்களுக்கு நாகரிகம் என்பது இல்லை. இதைக் கற்றுக் கொடுத்தவர்கள் பிராமணர்கள். அவார்கள் இல்லை என்றால் தமிழர்கள் இனக்குழு மக்களாகவே இருந்திருப்பார்கள் என்று வாதிடுகின்றார். மூன்றாவது புத்தகம் இன்னும் வெளிவரவில்லை. மூன்றாவது புத்தகத்தில் தமிழ்க் கல்வெட்டு, கோயிற் கட்டடக்கலை, சிற்பக்கலை. ஓவியக்கலை ஆகியன சமற்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை என்றுஎழுதப் போகிறார். (சமூக விஞ்ஞானம், 16:6), 2018: 23-24).

இரா.நாகசாமி குறிப்பிடுவதில் உண்மை இல்லாமல் இல்லை; சங்ககாலத்தில் நுழைந்த ஆரிய கருத்துகள் போகப் போகச் செத்த விலங்கு நீரில் மொதித்துப் பெருப்பது போல ஆகிவிட்டன. கோயில், குடி இருப்புப் பகுதியில் தோண்டினால் சிலைகளும் கல்வெட்டுகளும் வேதகால நிலமாகவே காட்டுகின்றன. தி.சுப்பிரமணியன், சாதி என்ற அமைப்பு பிராமணர்கள் தமிழகத்திற்கு வந்த பிறகுதான் வந்தது (ப.27) என்கின்றார்.

காலங்காலமாகப் பழந்தமிழர் வாழ்ந்த பகுதிகளைத் தோண்டி அகழாய்வு செய்ய மறுக்கின்றார்கள். தரவுகளை எடுத்தாலும் ஆய்வு செய்ய மறுக்கின்றார்கள். பொருநை நதிக்கரையின் ஆதிச்சநல்லூர், வையைக் கரையின் கீழடி போன்ற பகுதிகள், சோழநாட்டின் பூம்புகார் போன்ற தொன்மையான பகுதிகளில் இரா.நாகசாமி போன்றோர் பேசும் வேதகால நாகரிகத்திற்குச் சான்றாக ஒரு துரும்பு கூடக் கிடைக்கவில்லை. இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஒரு முடிஅளவு கூட சான்று கிடைக்கவில்லை. ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை மிரட்டிய கதைதான்.

எவ்வளவுதான் முற்போக்கு பேசினாலும் சாதி, மத, இன உணர்வுகள் ஒவ்வொருவரிடமும் ஒட்டி உறங்கிக் கொண்டிருக்கும். மகாகவி, உ.வே.சாமிநாதையர், பரிதிமாற்கலைஞர் போன்றோர் தமிழை வளர்க்கப் பாடுபட்டுள்ளார்கள். உயர்வு - தாழ்வு மேட்டிமை, தீட்டு போன்ற அழுக்கு மூட்டைகளை பலர் மனதிற்குள் சுமந்து கொண்டு தான் திரிகின்றார்கள். இருப்பினும் தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி போன்ற சிலரே வாய்க் கொழுப்புச் சேலையில் வடிந்த கதையாக வெளியே சொல்லித் தங்கள் மதிப்பைக் குறைத்துக் கொள்கிறார்கள். உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.

பதினோராம் நூற்றாண்டில் வடமொழி இலக்கண மரபைப் பின்பற்றிப் புத்தமித்திரனார் வீரசோழியம் என்னும் ஐந்திலக்கண நூலை எழுதியுள்ளார். இந்நூலுக்கு நூலாசிரியரின் மாணாக்கர் பெருந்தேவனார் என்பவர் உரை எழுதியுள்ளார். அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வடநூலே தாயாகி நிற்கின்றமையின், அங்குள்ள வழக்கெல்லாம் தமிழும் பெறும் (வீரசோ.60,உரை). வடமொழியில் இருந்து, தமிழிலும் இருந்தால் வடமொழியின் கொடை; வடமொழியில் இல்லாமல் தமிழில் மட்டும் இருப்பவற்றை என்ன செய்வது?

திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெல் (திராவிட அல்லது.351) திராவிட மொழிகளில் காணப்படும் ஆண், பெண், ஒன்றன்பால் போன்ற பாகுபாடு இம்மொழி பேசும் மக்களின் முற்போக்கான சிந்தனையைக் காட்டுவதாகப் புகழ்கின்றார். வெறும் புகழ்ச்சி இல்லை. வடமொழி போன்ற பெரும்பாலான உலகமொழிகளில் பால் பாகுபாடு உயார்திணை, அஃறிணை அடிப்படையில் இருக்காது. தமிழில் அவள், நங்கை, பெண், தாய், மகன், மனைவி, இல்லாள், கிழத்தி என எத்தனை பெயர்கள் இருந்தாலும் எல்லாமே பெண்பாலில் அடக்கப்படும். இப்படி ஒரு பண்பட்ட திணை-பால் பாகுபாட்டு அமைப்புடைய தமிழுக்குச் சமக்கிருதம் எப்படித் தாய்மொழியாக இருக்க முடியும்? வடமொழியில் பெண்ணைக் குறிக்க வரும் தாரம் (da:ra) ஆண்பலர்பால், பாரியை (bha:rya) பெண் பால், களத்திரம் (kalatra) ஆண்பலர்பால், பால்பாகுபாடு போன்று பொருளதிகாரத்தில் விளக்கப்படும் முதல், கரு உரிப் பொருள் பாகுபாடெல்லாம் வடமொழியில் இல்லாதவை. இவற்றுக்கெல்லாம் என்ன பதில் கூறுவார்கள்?

பெருந்தேவனாரின் வீரசோழிய உரைக்கு குறிப்புரை எழுதும் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையரின் கருத்து இவண் குறிப்பிடத் தக்கது. இவ்வுரையாசிரியர் காலத்தில் எல்லா மொழிகளுக்கும் வடமொழியே அடிப்படை என்ற கருத்து நிலவியது. இக்கருத்து 17ஆம் நூற்றாண்டளவும் தொடர்ந்து இருந்து வந்தமை இலக்கணக் கொத்து, பிரயோகவிவேகம் முதலிய நூல்களால் புலப்படும் (வீரசோ.60, குறிப்புரை).

17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆரியர்களின் மேட்டிமைத் தன்மை எடுபடவில்லை. மொழி சார்ந்த கருத்துகள் மட்டுமல்லாமல் சமுதாயம் சார்ந்த அவர்களின் மூட நம்பிக்கை, பிற்போக்குத்தனம், மதம் போன்றவை கேள்விக் கணைக்கு ஆட்பட்டன. அந்நியரின் ஆட்சி முக்கியமான காரணம். கல்வியைப் பரவலாக்கியதால் விழிப்புணர்வு ஏற்பட்டது.

மாமேதை கார்ல் மார்க்சின் பொதுவுடைமைக் கோட்பாடு ஆதிக்க இருள் சூழ்ந்த உலகிற்குப் புரட்சிகர ஒளியைப் பாய்ச்சியது. சிவப்பு, கருப்பு, நீல நிறங்களைக் கண்டால் மிரண்டு போகின்றார்கள். என்னென்னவோ செய்கிறார்கள்.

தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி தமிழ், தமிழர் மீது சேற்றை வாரி இறைப்பதற்குப் பேராசிரியர் தமிழண்ணல் தக்க பதிலடி கொடுக்கின்றார். கருத்தோடு கருத்து மோத வேண்டும்; அதைவிட்டு விட்டு முற்போக்குச் சிந்தனையாளர்களின் சிலையைத் தகர்ப்பது, காவி பூசுவது, செருப்புமாலை போடுவது எல்லாம் எந்த வகையான பண்பாடு, நாகரிகம் என்றே தெரியவில்லை.

தி.வே.கோபாலையர் குறிப்பிடும் இலக்கணக் கொத்து என்னும் சொல்லிலக்கண நூலை எழுதிய சாமிநாத தேசிகார் தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியைவிட எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. இவருக்கு முன்னோடி அவரே எனக் கூறலாம்.

அடிக்கடி ஏற்படும் ஐயம் இதுதான். இந்தத் தமிழ் மண்ணில் ஊறிய நீரைக் குடித்துக் கொண்டு, விளைந்ததை உண்டுகொண்டு தமிழரின் உழைப்பை உண்ணி போலக் காலங்காலமாக உறிஞ்சிக்கொண்டு எப்படித் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக எழுத முடிகின்றது என்பது விளங்கவே இல்லை.

Mirror of Tamil and Sanskrit  என்னும் ஆங்கில நூலைப் போன்று தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி எழுதிய செந்தமிழ் நாடும் பண்பும் (2021) என்னும் நூலும் வெளிவந்துள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. படித்துப் பார்த்தபோது தமிழண்ணல், தி.சுப்பிரமணியன் போன்றோருக்கு வாய்ப்புக் கிடைத்ததுபோல நமக்கும் கிடைத்துள்ளது என்னும் எண்ணம் எழுந்தது.

இந்நூலில் முப்பத்தாறு கட்டுரைகள் உள்ளன. தினமலரில் தொடர்ந்து வந்தவை என்பதை அணிந்துரை வழி அறிய முடிகின்றது.

இனி தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி செந்தமிழ் நாடும் பண்பும் பற்றி என்ன கூறுகின்றார் எனக் காணலாம்.

நூலின் அறிமுக உரையில் தொல்லியல் துறைஞர் அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் ஒரு கருத்தைப் பின்வருமாறு செய்துள்ளார். ஈராயிரம் ஆண்டுகளாக, தமிழகத்தை அற நெறிப்படுத்தும் நூலக மனுவின் தர்மசாத்திரம் இருந்து வந்திருப்பதைப் பெரிய புராணத்தின் வாயிலாகவும் திருவாரூரில் நீதிகேட்ட பசுவுக்குக் கோயில் எடுத்த இரண்டாம் குலோத்துங்க சோழனையும் மனுநெறி தழைத் தோங்க அவார்கள் ஆண்ட சீர்மையைச் சோழார் காலக் கல்வெட்டுகள் வாயிலாகவும் விவரித்துள்ளேன் (செந்தமிழ்.ப.13). 

நால் வருணத்தை விரும்பும் பார்ப்பனார் சொற்படி மன்னன் நடக்க வேண்டும்; அவ்வாறு நடந்தால் மக்களும் அவன் வழியில் நடப்பார்கள்

ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு மொழிந்து ஒழுகும்

அறம் புரி அந்தணார் வழிமொழிந்து ஓழுகி

ஞாலம் நின்வழி ஓழுகஞ்.                (பதிற். 24:6-9)

மன்னர்களைப் பிடித்தால் போதும் என்பதைப் பார்ப்பனர்கள் நன்றாக உணார்ந்துள்ளார்கள். முடியாட்சிக் காலம் தொடங்கியபோதே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறம்.186:2) என அதிகாரம் கட்டமைக்கப்பட்டுவிட்டது. வடக்கிருந்து தமிழகத்திற்குள் வந்த ஆரியப்பார்ப்பனர் செய்த செயல்களைத் தி.சுப்பிரமணியன் இரா.நாகசாமிக்கு நேர்மாறாக விளக்குகின்றார். பூர்வீகக் குடிகளிடமிருந்த வாழ்க்கை முறைகளையும் பௌத்தம், சமணம் போன்ற மதங்களில் இருந்த கோட்பாடுகளையும் தங்களுடைய கோட்பாடுகளாக மாற்றிக் கொண்டு சனாதானத்தை நிலை நாட்டினார்கள் என்பது உண்மை. இதற்கு இங்கு ஆட்சி செய்த அரசார்களையே ஒப்புக்கொள்ளச் செய்தது அரசனிடம் நாடு அதிகார ஆதிக்கம் இருந்தபோதும் அரசனுக்கும் மேலாக இராஜகுருவாக அதிகாரம் செய்தது சனாதனத்தை வளார்க்க அடிப்படைக் காரணங்களாக அமைந்தன. (சமூக விஞ்ஞானம் 16:61, 2018, ப.28).

மேலுள்ள பாடல் அடிகளும் தி. சுப்பிரமணியன் குறிப்பதும் உண்மையே! சங்க காலம் தொட்டுத் தமிழகத்தில் இன்று வரை மனுதர்ம ஆட்சிதான் நடைபெறுகின்றது. நேரடியாக நாட்டை ஆள வேண்டியதில்லை; ஆள்பவரைக் கையில் வைத்துக் கொண்டால் போதும். வடக்கிருந்து பரவிய ஆரியப் பார்ப்பனர், மூவேந்தர், குறுநில மன்னர்கள் என அனைவரையும் தங்கள் ஆணைக்கு அடிபணிபவார்களாக வைத்துக் கொண்டார்கள். தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்களுடன் வந்த பசுக்களுக்கும் பாதுகாப்பு தேடிக் கொண்டார்கள் (புறம்.9).

பசுக்களை மேய்ப்பவர்கள் என்னும் நிலைமாறி மேய்ப்பிப்பவர் ஆகிவிட்டார்கள். மேய்ப்பிப்பவர் என்றால் பண்ணை ஆட்களை வைத்து மேய்ப்பது தான். மன்னர்களிடம் நிலத்தை தானமாக வாங்கி நேரடியாக நிலத்தில் இறங்கித் தாமே உழுவாமல் பண்ணை ஆட்களை வைத்து உழுவிப்போர் ஆனது போலத்தான் உழுவித்த அந்தணன் (இல.கொத்.71,விளக்கவுரை).

பல்லவர் காலத்திற்குப் பிறகு கோயில்கள், பார்ப்பனர்க்கு நிலம் கொடுப்பது பெருவழக்காக இருந்துள்ளது. சங்க காலத்திலேயே அந்தணக் கபிலர் நாடுகளைத் தானமாகப் பெற்றுள்ளார். பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, ‘நன்றா’ என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ (பதிற்: ஏழாம் பத்து பதிகம்).

சங்க காலம் பொற்காலம் எனப் பெருமிதம் கொள்வதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. அதே வேளையில் ஒரு சேரமன்னர் ஒரு பார்ப்பனரையும் அவரின் மனைவியையும் வேள்வி செய்து சொர்க்கத்திற்கு அனுப்பி உள்ளார். பல முறை தேர்ச்சி பெறாமல் ஒரே வகுப்பில் படித்து மறுபடியும் மறுபடியும் தேர்வு எழுதி மேல் வகுப்புக்குப் போகின்றவனை கஜினி முகமதுக்கு ஒப்பிடுவார்கள். அவ்வாறு ஒருமுறை அன்று ஒன்பது முறை வேள்வி செய்து அவர்களைச் சொர்க்கத்திற்கு ஏற்றிவிட முடியாமல் தோற்றுப் பத்தாவது முறையாகச் செய்து அனுப்பி வைத்தார்களாம். காலங்காலமாக நம் மன்னர்கள் நூலாசிரியர் இரா.நாகசாமி குறிப்பது போன்று மனுதர்ம ஆட்சி செய்ததற்கு நல்ல சான்று.

பல் யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் சேர மன்னனின் புகழ்பாடும் பாலைக் கௌதமனாரின் மூன்றாம் பத்துக்கான பதிகத்தில் பார்ப்பன இணையரைச் சுவார்க்கத்திற்கு பத்துமுறை வேள்வி செய்து ஏற்றிவிட்ட செய்தி பதிவாகி உள்ளது. பாடிப் பெற்ற பரிசில் ‘நீர் வேண்டியது கொண்மின்’ என யானும் என் பார்ப்பினியும் சுவார்க்கம் புகல் வேண்டும் ‘என பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பினியையும் காணராயினார் (பதிற். மூன்றாம் பத்து பதிகம்).

பழந்தமிழகத்தில் ஆரியமயம் வளர்ந்தது உண்மையே. எல்லாவற்றிலும் ஊடுருவல் ஏற்பட்டது. தாக்கத்தை அலசி ஊற்றி விட்டுப் பார்த்தால் தமிழர் நாகரிகம், பண்பாடு தனியாகத் தெரியும். தமிழர் ஆரியத்தில் இருந்து தான் எல்லாவற்றையும் பெற்றார்கள் என இரா.நாகசாமி கூறுவதற்குத் தமிழண்ணலின் பதிவு கடுமையாகவே இருக்கிறது. என்ன செய்வது நெருப்பைத் தின்றால் கருப்பாகத் தான் வரும். கொள்ளை கொண்டவன் தான் கொள்ளையடித்ததைத் தன்னுடையது என்பது போன்றது ஆரியர் செயல் (தொல்லியல் துறைஞர்.ப.22).

இரா.நாகசாமியின் The Mirror of Tamil and Sanskrit  (2012) என்னும் நூலுக்குத் தமிழண்ணல் ஒரு நூல் எழுதியதைப் போன்று செந்தமிழ் நாடும் பண்பும் (2021) என்னும் நூலுக்கும் ஒரு தனி நூலே எழுதலாம். அவ்வளவு வரலாற்றுத் திரிபுகள் நூலுள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பொறுப்போடு எழுத வேண்டிய நாகசாமி போன்றோரே இப்படி எழுதினால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனிடம் யாரும் பெரிய அளவில் மாறுபடுவதில்லை. ஐராவதம் மகாதேவன் குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளைத் தமிழ்-பிராமி எழுத்து என்றார். அசோகரின் கல்வெட்டில் காணப்படும் பிராமி எழுத்தே இந்தியாவில் கிடைத்த முதல் எழுத்து எனப் பரவலாகக் கூறப்பட்டது. அக்கல்வெட்டின் காலமும் கி.மு 3ஆம் நூற்றாண்டு என்பார். இது ஒரு காலம் வரை உண்மை. கீழடியில் கிடைத்துள்ள பானையில் பதியப்பட்டுள்ள எழுத்தின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டு என அறிவியல் ஆய்வு வழி நிறுவி உள்ளனர். தமிழ் எழுத்து வேறு; பிராமி எழுத்து வேறு. முந்நூறு ஆண்டுகள் தமிழ் எழுத்துகள் முந்தையவை என்பதால் பிராமி எழுத்துக்குத் தாய் எழுத்து என்று சான்று இல்லாமல் கூற முடியாது.

புதைபொருள், கல்வெட்டுத் தரவுகள் அடிப்படையான அகச்சான்றுகள், திரித்துச் சொன்னால் வருங்கால ஆய்வாளர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்; செத்துவிட்டோம் நமக்கென்ன என்று பொறுப்பற்ற முறையில் எழுதிவிட்டுப் போகக் கூடாது. மனிதன் எழுதிக் கடவுள் மேல் பழியைப் போட்டதால், கிருஷ்ணர் கூறினாலும் குற்றம் குற்றமே என்கிறார்கள். ஒருவன் இரந்துண்டு தான் வாழ வேண்டும் என்று கடவுள் படைத்திருந்தால் அவன் கெட்டு அழியட்டும் (திருக்.1062) என்பதே தமிழர் அறக்கோட்பாடாகும். நால் வருணத்தை நான்தான் படைத்தேன் என்னும் கடவுளை மட்டும் ஏற்றுக் கொள்வார்களா?

திராவிடம்

திராவிடம் என்னும் கருத்தாக்கத்தைத் தமிழ்த் தேசியம் பேசுவோர் ஏற்றுக் கொள்ளாமை போன்று ஆரியச் சார்புடையோரும் ஏற்றுக் கொள்வதில்லை. திராவிடம் பேசுவது இந்திய ஒற்றுமையைக் கெடுத்துவிடும் என்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை பேசப்பட்டாலும் வேற்றுமை என்பது தெளிவாகவே வெளிப்படுகின்றது. ஆரிய மயத்தால் மொழி, வாழ்க்கை என எல்லாம் சிக்கல் விழுந்த நூலாகிவிட்டன. இரா.நாகசாமி பின்வருமாறு எழுதுகின்றார்.

இக்காலத்தில் திராவிட மொழி, திராவிடப் பண்பு என்பது அந்த எல்லைப் பகுதிகளிலும் இல்லை. அதனால் இப்போதுள்ள கருத்தான திராவிட மொழி என்பதோ திராவிடப் பண்பு என்பதோ ஒன்றும் இல்லை.

எனவே மலையாளம், கருநாடகம், தெலுங்கு, தமிழ் மொழிகளைத் திராவிட மொழிகள் என்பது பகுத்தறிவின்பால் பட வழியில்லை. இவ்வேறுபாட்டால்தான் இந்நான்கு மொழி பேசுவோரி டையேயும் உணர்வுப் பூர்வமான ஒற்றுமையைக் காண முடியவில்லை. திராவிடம் என்று சொல்வதால் தமிழின் பெருமை மங்கி விட்டது. (செந்தமிழ், ப.21).

இரா.நாகசாமி குறிப்பவை எல்லாம் பொய்யும் மெய்யும் கலந்தவை. ஆனால் வரலாறு ஒன்று இருக்கின்றது. தமிழ், திராவிடம் என்பவற்றில் கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த மண்ணிற்கு உரியவை என்பவற்றுக்கு மொழியியல், தொல்லியல், வரலாறு என்பவற்றில் சான்றுகள் உள்ளன. ஆனால் இரா.நாகசாமி பெருமிதமாகக் கூறும் சமக்கிருதத்தின் குடும்ப உறவு இந்தோ ஐரோப்பியக் குடும்பத்துடன் தொடர்புடையது. இங்கு அதற்கு உரிமை கொண்டாடும் தொன்மை வரலாறு இல்லை; அப்படிப்பட்ட சமக்கிருதம் எப்படித் தமிழுக்குத் தாய்மொழியாக இருக்க முடியும்?

தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு தமிழர் என்று சொல்லிக் கொண்டு இவரே தமிழையும் தமிழரையும் முடிந்த அளவு இழிவுபடுத்தி எழுதுகின்றார். மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி பேசுவோர் தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்க மறுப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் திராவிட மொழிகளைப் பேசுவோர் ஒரு குலைக்காய்கள்!

பழந்தமிழில் அக வாழ்க்கை களவு, கற்பு என இரண்டாக அமையும். தொல்காப்பியர் (தொ.பொ.92) ஆரியரின் எட்டு வகை மணமுறைகளில் ஒன்றோடு தொடர்புபடுத்துகின்றார். அது கந்தருவ மணம் எனப்படும். மனுநீதியிலும் குறிக்கப்பட்டுள்ளதாக இரா.நாகசாமி குறிப்பிடுகின்றார். களவு என்பது காந்தர்வ மணம் என்று கண்டோம் (செந்தமிழ்.பக்.26-27).

இவர் மட்டுமில்லை, பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் உட்படச் சிலர் தொல்காப்பியத்திற்கு வேறு உரைகள் இருந்தாலும் உச்சிமேற் புலவர் கொள் நச்சீனார்க்கினியார் உரையையே சான்றாகக் காட்டுவார். நச்சினார்க்கினியர் தான் தொல்காப்பியரைத் திரணதூமாக்கினியர் என்னும் அவரின் தந்தையை யமதக்கினியார் என்றும் குறிப்பிடுகின்றார். (தொ.எ. சிறப்புப் பாயிரம்).

மாயுரம் - மயிலாடுதுறை, வேதாரணியம் - திருமறைக்காடு போலக் கொள்வதா? அல்லது தமிழ் மொழிக்குத் தாய் மொழி எனப் போகிற போக்கில் கொளுத்திப் போட்டு விட்டுப் போனதைப் போலக் கொள்வதா? இவ்வாறு தமிழ், தமிழர் வாழ்க்கை போன்றவற்றை குறைத்து மதிப்பிட முற்காலத்தில் இருந்தே இரா.நாகசாமி போன்றோருக்கு நிறைய வாத்தியார்கள் தோன்றி உள்ளார்கள். இவற்றை எல்லாம் படித்தார்களா? அல்லது இரத்தத்தில் ஊறி மூளைவழி வெளிப்பட்டவையா? தெரியவில்லை.

களவும் கந்தருவமும் ஒன்று போலக் கருதப்பட்டாலும் பலவற்றுக்கு மாறுபட்ட கருத்தை அவர்கள் புகழும் நச்சினார்க்கினியரே இவற்றுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கின்றார். கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும் ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றதற்குத் ‘துறைமை’ என்றார் (தொ.பொ.92, உரை).

இந்த விளக்கத்தின் வழி ஒன்று போலவே கருதப்படும் ஆரியரின் காந்தருவ மணத்திற்கும் தமிழரின் களவு மணத்திற்கும் உள்ள ஒரு மாறுபாட்டை உணரலாம். கந்தருவகுமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இன்பம் நுகார்வர்; ஆனால் அவர்கள் சோர்ந்து இல்லற வாழ்க்கை - கற்பு வாழ்க்கை வாழ வேண்டும் என வடவர் மரபு வரையறுக்கவில்லை. சேர்த்தல் போன்று பிரிந்து அவரவர் வழியில் போய் விடுவார்கள்.

தமிழர் அக வாழ்க்கை மரபில் முதலில் தலைவனும் தலைவியும் களவு வாழ்க்கை வாழ்ந்து தொடார்ந்து கற்புவாழ்க்கை எனப்படும் இல்லற வாழ்க்கையை மேற்கொள்வர். இவற்றை எல்லாம் அறியாமல் தமிழரின் களவு வாழ்க்கைக்கு ஆரியரின் கந்தருவ மணமே மூலம் என்பது போலத் தொல்லியல் நிறைஞர் இரா. நாகசாமி எழுதுகின்றார்.

பழுந்தமிழர் மணமுறை

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட (சிலப்.1:52) என்னும் திருமண முறை சங்க காலத்தில் இல்லை. ஆரியரின் ஆதிக்கம் வீரியம் பெற்றபிறகே எங்கும் பரவுகிறது. திணைக் குழு மக்களின் திருமணம் மகளிரைக் கொண்டு நல்ல நாள் பார்த்து விருந்துடன் எளியமுறையில் நடந்துள்ளது. 86, 136 ஆம் அகநூனூற்றுப் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது. வைதிக முறைப்படியான திருமணம் என்பதற்கு எந்தக் குறிப்பும் இல்லை. நச்சினார்க்கினியரைத் துணைக்கு இழுத்துக் கொண்டு அகநானூற்றுப் பாடல்கள் இரண்டுக்கும் பின்வருமாறு விளக்கம் கொடுக்கின்றார். தமிழர் தம் மண விழாவில் வேத முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன என்பது இப்பாடல்களால் உறுதி செய்யப்படுகின்றது (செந்தமிழ், ப.35).

செஞ்சோற்றுக் கடன்

தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் எழுத்துகள் ஆரியத்தின் மேன்மையைப் பறை சாற்றுபவையாக இருந்தாலும் ஆங்காங்கே ஊறுகாய் போலத் தம் செஞ்சோற்றுக் கடனையும் தீர்த்துள்ளார். தமிழ் மக்கள் சிறந்த பண்பு மிக்கோர் ஆவார். அவார்களது கருத்துகள் எல்லாம் உலகளாவியதாகவே இருக்கும். அதனால் தான் அவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றனர் (செந்தமிழ்.ப.130). சங்கத் தமிழரை நினைத்துத்தான் இவ்வாறு பாராட்டியுள்ளார். அவர் உண்மைக்கு மாறாகப் பல அவதூறுகளைப் பரப்பினாலும் இதற்காக நன்றி கூற வேண்டும்.

ஒன்றிய அரசு இரா.நாகசாமி அவர்களின் பணிகளைப் பாராட்டி பத்மபூசன் (2018) என்னும் உயரிய விருதை வழங்கிப் பெருமைப் படுத்தி உள்ளது. ஒட்டு மொத்தத் தமிழக முன்னேற்றமே ஆரியத்தால் ஏற்பட்டது என்னும் அவர் கருதுகோளுக்காகக் கொடுக்கப்பட்டது என்று கருதக்கூடாது. அவர் மறைந்தபோது (23.1.22) தமிழக அரசு இறுதி மரியாதை அளிக்க வேண்டும் என்று அரிதாக எழுந்த கோரிக்கையை யாரும் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. தொல்லியல் துறையில் அவரின் செயல்பாடுதான் காரணமாக இருக்கும்.

The Mirror of Tamil and Sanskrit  (2012), செந்தமிழ் நாடும் பண்பும் (2021) என்னும் தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் நூல்களை அனைவரும் படிக்க வேண்டும். அப்போதுதான் எதனுடன் முரண்பட வேண்டும் என்பது புரியும். தமிழ் - திராவிடமா? திராவிடம் -ஆரியமா?

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர், இலக்கணவியல் ஆய்வாளர், எழுத்தாளர்.