nerkuppai libraryசிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள சிறிய கிராமம் நெற்குப்பை. இங்கு பிறந்த தமிழறிஞரும், பயண இலக்கிய முன்னோடியுமான 'உலகம் சுற்றிய தமிழர்' சோமலெ அவர்களின் பெயரில் திறம்பட செயல்பட்டு வருகிறது பொது நூலகத் துறையின் "சோமலெ நினைவு கிளை நூலகம்".

சமீபத்தில் இந்த நூலகத்திற்குச் சென்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., "நெற்குப்பை நூலகம் சிவகங்கை மாவட்டத்தில் முன்மாதிரி நூலகமாக செயல்படுவதை நேரில் பார்த்தேன். நம் மாவட்டத்தின் மற்ற கிளை நூலகங்களும், பள்ளி நூலகங்களும், இந்த நூலகம் போன்று சேவை செய்ய வேண்டுமென்ற குறிக்கோளோடு செயல்பட வேண்டும்" என சிவகங்கை மாவட்ட கல்வியாளர்களுக்கான 'வாட்ஸ்அப்' குழுவில் பதிவு செய்து மாவட்டத்தின் தலைமை ஆசிரியர்கள், நூலகர்கள் மத்தியில் நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் 37 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற (அறிஞர் சோமலெ அவர்களின் மகன்) முனைவர் சோமலெ சோமசுந்தரம் அமெரிக்க நூலகங்களில் உள்ள பல நல்ல செயல்களை நெற்குப்பை நூலகர் துணையுடன் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மாதந்தோறும் நூலகத்தை நன்கு பயன்படுத்தும் மாணவர்களுக்கு ‘நல் மாணவ வாசகர்’ பரிசாக இரு நூறு ரூபாய்களையும், நூல்களையும் நெற்குப்பையில் பிறந்த எழுத்தாளர் சேதுராமன் சாத்தப்பன் வழங்கி வருகிறார். நூலகத்தில் இலவசமாக கணினி பயன்படுத்தி பழகவும், சிறுவர்களுக்கான ஆங்கில நூல்களைப் படிக்கவும் மாலை நேரங்களிலும், வார இறுதியிலும், சுற்றியுள்ள குக்கிராமங்களிலிருந்து நடந்தும், மிதிவண்டிகளிலும், பேருந்துகளிலும் மாணவர்கள் வந்து பயனடைகின்றனர்.

“நூலகத்தின் தூய்மையும், தோற்றமும் அனைவரையும் ஒரே பார்வையில் கவர்ந்து விடுகிறது” என்கிறார் நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மலர்விழி.

அமெரிக்காவில் பிறந்து வாழும் தமிழ் இளைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் இனையம் வழியாக இந்த கிராம பிள்ளைகளுக்கு ஓவியம், பொது அறிவு போன்ற பல தலைப்புக்களில் வகுப்புகள் நடத்துகின்றனர். அருகே உள்ள மேலைச்சிவபுரியில் உள்ள கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பயில தினமும் மாலையில் நூலகம் வருகின்றனர். 

மாணவர்களுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் இந்த நூலகம் ஒரு தேன் கூடு போன்று. என்கிறார் இந்த வருடம் 'நல் வாசகர்' விருது பெற்ற திருமதி சரஸ்வதி.

"அசர வைக்கும் அரசு நூலகம்" என விகடன் குழுமம் தம் நூலகத்தைப் பற்றி எழுதியுள்ளதாக பெருமிதத்தோடு கூறுகிறார் நூலகர் திரு. கண்ணன். கோடை முகாம், நூலக வார விழா கலை நிகழ்ச்சிகள், மருத்துவம், பொது அறிவு, வணிகம் தொடர்பான வல்லுனர்களின் இனைய வழி கலந்துரையாடல்கள் என வாசகர்களுக்கு பல சேவைகளைச் செய்து வருகின்றது இந்த கிளை நூலகம். இந்த நூலகத்திற்கு தினமும் இருநூறு வாசகர்கள் வருவது அதன் புதுமையான மற்றும் வித்தியாசமான திட்டங்களுக்கு கிடைக்கின்ற பரிசாகும் என்கிறார் மாவட்ட நூலக அலுவலர் ஜான் சாமுவேல்.

தகவல் - முனைவர் வி.அன்புமணி,

தலைவர், இந்தி மற்றும் இதர மொழிகள் துறை, கொங்கு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு

Pin It