கவிஞர் இன்குலாபும் நானும் 3-4-2006 ஆம் நாள் இரவு கிளம்பி மறுநாள் காலை திருநெல்வேலியை அடைந்தோம்.

 ஒட்டப்பிடாரம் தனித்தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற பயணம் அது.

இதய அறுவை சிகிச்சைக்குப்பின் இதுபோன்ற ‘சமாளிப்புகளைக் கோரும் பயணங்கள்’ இன்குலாபின் உடல் நலத்துக்கு ஏற்புடையதாய் இருக்காது என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் கிளம்பியிருந்தார், மேலும் அவரது மகளின் திருமண வேலைகளும் அவரை எதிர்நோக்கிக் காத்திருந்தன.அப்படியும் பொதுப்புலத்தில் செயல்படுகிறவர்தான் இன்குலாப்.

எனக்கு இது புது அனுபவம். இதழ்ப்பணிகள் எதிர் நின்றாலும் பயணத்துக்கான யோசனை தெரிவிக்கப்பட்டவுடன் ஒப்புக்கொண்டுவிட்டேன். கட்சி அரசியல் சாராத,மாற்று அரசியல் பேசும் அறிவுஜீவிகள் சிலரேனும் தன் தேர்தல் மேடையில் பங்கேற்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் திட்டமிட்டதே எனக்கு வரவேற்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகப் பட்டது.

தேர்தல் மேடையில் பங்கெடுத்துக்கொள்வதில்லை என்னும் கொள்கைக்கேற்ப இந்த அழைப்பை மறுத்துவிட்டதாக ஒரு பேராசிரியர் பின்னொரு நாளில் சொன்னார். என்னை அப்படியொரு சிக்கல் எதிர்கொள்வதாயிருந்தால், தனித் தொகுதியைப் பொறுத்தவரை அக்கோட்பாட்டைத் தள்ளிவைத்துச் செயல்படுவதே சரியாயிருக்கும் என்பது என் கருத்து. ஏனெனில், தனித் தொகுதிகள் என்ன காரணங்களுக்காக உருவாக்கப்பட்டனவோ அவை இன்றுவரை வென்றெடுக்கப்படவில்லை. இரட்டை வாக்குரிமை கோரிக்கையை விட்டுக்கொடுத்து, தனித்தொகுதியை ஏற்று, செய்துகொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தம் இன்றுவரை ஒரு வஞ்சகத்தனமான மோசடியாகவே வரலாற்றில் பதிவு பெறுவதாயிருக்கிறது. தனித் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் மட்டுமே நிற்கமுடியும் என்னும் ஒற்றை விதியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, தலித் பிரச்சினைகளை ஒரு பொருட்டாகவே கருதாத அரசியல் கட்சிகள் வெற்றிபெற்ற தலித்துகளைத் தம் மக்களுக்காக வாய்த்திறக்க முடியாதவர்களாய் கட்சிக் கட்டுப்பாடு என்னும் அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக அழுத்தி வைத்துக்கொண்டிருக்கின்றன.

தலித் மக்களின் அவலங்களைக் கவனத்துக்குக் கொண்டுவந்து. விவாதித்து. அவர்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக மதித்து, தோழமை பாராட்டி, சமூக நீரோட்டத்தில் சம பங்காளிகளாக அங்கீகரித்து, சமூக நல்லினக்கத்தை வென்றெடுக்கும் முயற்சிகளை இதுவரை மைய-மாநில அரசுகள் முறையாக மேற்கொண்டதில்லை. தனித்தொகுதி உறுப்பினர்கள் அவ்வகையான பணிகளுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியவர்கள் என்று இதுவரை அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக அரசதிகாரப் பகிர்வில் அவர்கள் ஓரங்கட்டப்படுவதற்கே அவர்களது தலித் அடையாளம் பேணப்படுகிறது. அகில இந்திய அளவில் தனித் தொகுதிகளின் இருப்புக்கு இது ஒன்றே அர்த்தமாயிருக்கிறது.

தலித்துகளின் நலன்களைப் பேண அரசியல் சட்டம் குறைந்தபட்ச சட்ட விதிகளையும் அதிகபட்ச சட்டப் பாதுகாப்பில்லாத பரிந்துரைகளையும் வழங்கியிருக்கிறது. அவ்விதிகள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா, பரிந்துரைகள் உரிய கட்டங்களில் ஏற்கப்படுகின்றனவா, நிர்வாகம்-நீதி-காவல் துறைகளின் ஒத்துழைப்போடு தலித் முன்னேற்றத்தில் ஏற்படும் முட்டுக்கட்டைகளும் தேக்க நிலைகளும் தகர்க்கப்படுகின்றனவா, சட்ட ஆட்சியை மதிப்பிடும் அலகாக தலித் முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறதா என்னும் கேள்விகளுக்கான தீர்வுகளை மேலாண்மை செய்யவும், உரிய வழிகாட்டல்களை ஆணைகளாகப் பிறப்பிக்கவும் அதிகாரம் கொண்ட அமைப்பாகச் செயல்பட தனித்தொகுதி உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் நாடு விடுதலைபெற்ற இந்த அறுபது ஆண்டுகளில் தனித் தொகுதிகளுக்கான தேவையையும் அதன் நீட்டிப்பையும் முற்றாகத் தவிர்த்திருக்கலாம். சமூக சமத்துவத்தையும் சமதர்மத்தையும் வென்றெடுத்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் தாழ்த்தப்பட்ட சாதிகளை அவற்றின் இழிநிலைகளோடு தக்கவைத்துக்கொள்ளும் சதிச் செயலாகவே தனித்தொகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன.

தலித் முன்னேற்றத்தை உறுதி செய்யும் அரசியல் பணிக்களம்தான் தனித்தொகுதிகள். அரசியல் சட்டம் வழங்கும் குறைந்தபட்ச விதிகைளையேனும் நடைமுறைப்படுத்தக் கோரும் உரிமையுள்ளவர்களாகத் தனித் தொகுதி உறுப்பினர்கள் இருக்கவேண்டும். பெரும்பான்மை பேசும் அரசியல் கட்சிகள் அந்த உரிமையை வழங்காது என்பதால் தனித் தொகுதிகளில் தலித் இயக்க வேட்பாளர்கள் மட்டுமே வென்றுவரும்போதுதான் அது சாத்தியப்படும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதன்முதலாக 1996 இல் தனித் தொகுதியான ஒட்டப்பிடாரத்தில் தலித் இயக்க வேட்பாளராக நின்று, வென்று, தன் அரசியல் கடமைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி ஒரு முன்மாதிரியை உருவாக்கிக் காட்டியவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். ஆகவே அவரை ஆதரிப்பதும் அவரது தேர்தல் மேடையைப் பகிர்ந்துகொள்வதும் தலித் உணர்வுள்ள ஒவ்வொரு சமூக மனிதனின் கடமையாகும். இதனை இன்னும் ஒருபடி மேற்சென்று வலியுறுத்துவதானால், தலித் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னுரிமைப் பணிகளாக இப்போதுதான் அவர்கள் முதன்முறையாக மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதால், தலித் இயக்க வேட்பாளர்கள் தனியாக நின்றாலும் அல்லது பிற கட்சிகளோடு கூட்டணி வைத்து நின்றாலும் அதை ஒரு விவாதப் பொருளாக்காமல் அவர்களின் வெற்றிக்கு அனுசரணையாக இருப்பதுதான் சமதர்மவாதிகளின் கடமையாக இருக்கவேண்டும். பசித்திருப்பவர்களிடம் தத்துவ அளவுகோலை நீட்டுவது உள்நோக்கம் கொண்ட நிராகரிப்பாகவே அடையாளப்படும்.

1997இல் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இதே ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, சாதிக் கலவரச் சூழலில் நான் தென்மாவட்டத்திற்கு உண்மை அறியும் குழுவில் ஒருவனாகச் சென்றிருந்தேன். தலித் மக்களிடம் அவருக்கிருந்த ஆளுமையையும் செல்வாக்கையும் கண்டு, அவரைத் ‘தென் திசை முளைத்த செஞ்சுடர்’ என்பதாக அடையாளப்படுத்தினேன். அந்தச் சிறப்புச் சுட்டல் அவருக்கு நிரந்தரமாய்ப் பொருந்திவரக்கூடியதுதான் என்பதை இந்தப் பயணத்தில் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

பல்லாண்டுகளாக தென்மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஒரு தொடர் நிகழ்வாகவே தொழிற்பட்டு வந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு போன்றதொரு வீர விளையாட்டாகவே சாதிக் கலவரமும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். அறுவடைக்குப் பின்னும் அடுத்த விதைப்புக்கு முன்னும் உள்ள வேலையற்ற நாட்களில் சிரங்கு பிடித்த கையைச் சொரிந்து கொள்வதுபோல கோடை விழாக்களோடு சாதிக் கலவரமும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. 1997க்குப் பிறகுதான் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அதைத் தங்கள் சாதனையாகச் சொல்லி ஆட்சியாளர்கள் உரிமை கொண்டாடக்கூடும். ஆனால் அதுவல்ல வரலாறு. சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் கிருஷ்ணசாமி தன் மக்களுக்கு ஊட்டிய நியாயத்தின்பாற்பட்ட விழிப்புணர்வின் எதிரொலியே அது என்பதுதான் உண்மை. விரும்பியோ விரும்பாமலோ எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தரமான சமூக நல்லிணக்கத் தேவையை எல்லாத் தரப்பு மக்களும் அப்போது உணரும்படியாயிற்று.

உண்மையைச் சொல்வதெனில் சமாதானத்துக்காகப் போராடிய கடும் சண்டை போலாயிற்று அப்போது நிகழ்ந்த கலவரம். இந்த மாற்றத்தை வரலாறாக்கிக் காட்டியவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். அதனூடாக வேறெந்த அதிகார வர்க்க அரசியல் கட்சிக்காரனையும்விட அவர்தான் சமூக நல்லிணக்கத்தின் அடிநாதமாகச் செயல்பட்டிருக்கிறார். அடிப்படையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொது மனிதனாகச் செயல்படுவதையே தன் அரசியல் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடேபோல் நாங்கள் பங்கேற்ற ஒட்டப்பிடாரம் கூட்டத்தில் 25 மறவர்குல இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வந்து புதிய தமிழகத்தில் இணைந்து டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் செயல்படுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

"இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். இன்று அது நிஜமாகியிருக்கிறது. இது நம் மக்களின் நல்லிணக்கத்துக்கான வெற்றிப்படி. இதை நாம் முழுமை செய்யும்போது நம்மை யாராலும் வெல்ல முடியாது” என்று அவர்களை வரவேற்றுப் பேசினார் டாக்டர் கிருஷ்ணசாமி. மாவீரன் சுந்தரலிங்கம் இப்படிப்பட்டதோர் நல்லிணக்கச் சூழலில்தான் மறவர் படைத்தளபதியாகக் களமாடிப் புகழடைந்திருக்கக்கூடும். அந்த மாவீரனுக்கு இணையாக ஒட்டப்பிடாரம் தந்த மற்றொரு பெருமகனான வ.உ. சிதம்பரனாரும் நினைவுகூரப்பட வேண்டியவர்.

"சிதம்பரனார் செக்கிழுத்தார்; கப்பலோட்டினார் என்பதெல்லாம் மெய்தான். இங்கே நாம் அவரை நினைவு கூர்வதற்கு அதைவிடவும் முக்கியமான காரணம் இருக்கிறது. அவர் சாதிகள் இருப்பதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை. சாதிகள் இல்லாவிட்டாலும்கூட வேறு ஏதேனும் ஒருவகையில் - உதாரணத்துக்கு நற்குணத்தார் - தீக்குணத்தார் என்பதுபோல மனிதர்களிடையே வேறுபாடுகள் இருக்கும் என்று சொல்லி. சாதிகளின் இருப்பை அங்கீகரிக்கிறார். ஆனால் சாதிகளுக்கிடையே பிணக்குகளும் மோதல்களும் கலவரங்களும். பகைத் தாக்குதல்களும். தீண்டாமையும் நிலவுவதை கடுமையாக எதிர்க்கிறார். சாதியச் சமூகங்களின் நல்லிணக்கத்திற்காக அவர் ஓர் எளிய வழியைச் சொன்னார். அதாவது பொதுச் சொத்துகளை எல்லாரும் அனுபவிக்க உரிமை வேண்டும். அவற்றை யாரும் தனிச் சொத்துகளாகப் பாவித்து யாருக்கெதிராகவும் தடை போடக்கூடாது. அதுபோலவே தனிச் சொத்துகளை அவரவரே அனுபவித்துக் கொள்ளட்டும்; அவற்றைப் பொதுச் சொத்துகளாகக் கோருதல் கூடாது என்பது அவர் முன்வைத்த தீர்வு.

ஊருக்குப் பொதுவான சாலைகள், கோவில்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், தோப்புகள் போன்றவை ஒரு சாதியாருக்கு மட்டும் சொந்தம் என்று உரிமை கொண்டாடி பிற சாதியாரைத் தடுக்கக்கூடாது என்பது அவர் சொல்லும் நியாயம். இதைக் கடைபிடித்தால் சாதி மனிதர்களிடையே தோன்றும் உயர்வு தாழ்வுகள், தீண்டாமை, பகை ஆகிய கேடுகள் முளைவிடுவதற்கான வாய்ப்புகளே அடிபட்டுப்போகும். அவரவரும் தன்மானத்தோடும் தன்மதிப்போடும் வாழ்வது உறுதிசெய்யப்படும். அதன் பிறகு முற்றத்து சமதளத்தில் பதித்த சதுரக் கற்கள் மாதிரி சாதிகள் ஒன்றோடொன்று இணக்கமாக, நட்பாக, சமமாக வாழ்ந்துதானே ஆகவேண்டும். அவர் மேலும் ஒன்றையும் அழுத்தமாகச் சொன்னார். ஆட்சி அதிகாரத்தில், பட்டம் பதவிகளில், கல்வி வேலை வாய்ப்புகளில் அந்தந்த சாதிக்குரிய பங்கை அவரவர்க்கும் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும். அப்படிப் பிரித்துக் கொடுத்துவிட்டால் சாதிகளிடையே ஒற்றுமையின்மையும் பகைமையும் நிலைத்துபோகும் என்பதும், உத்தியோகங்களில் தகுதியில்லாவர்கள் வந்துவிடுவார்கள் என்பதும், கணக்கற்ற சாதிகளுக்கு எண்ணிக்கையில் குறைந்த அரசுப் பணிகளைப் பிரித்துக் கொடுப்பது இயலாது என்பதும் பொருத்தமற்ற வாதங்கள் என்று தகுந்த உதாரணங்களோடும் வழிமுறைகளோடும் ஆணித்தரமாக விளக்குகிறார்.

இந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில்தான் தனித் தொகுதிகளும் ஏற்படுத்தப்பட்டன. தனித் தொகுதிகள்தாம் அரசியல் ரீதியாக சமூக நல்லிணக்கத்தின் திறவுகோல்களாகச் செயல்படவேண்டும். ஆனால் இந்தியத் தேர்தல் முறை அதை முடமாக்கிப் போட்டிருக்கிறது. யாருக்குச் சுதந்திரம் தேவையோ, சுதந்திரத்தின் அருமை தெரியுமோ, அவர்கள்தான் எல்லாருடைய சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் உத்தரவாதம் அளிப்பவர்களாய் இருப்பார்கள். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஏற்கனவே அந்த வகையில் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறார். அந்த வெற்றி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு மக்களைத் தேடிச் செல்கிறார். மற்றவர்கள் படைபலத்தோடும் பண பலத்தோடும் அணிவகுத்துக் களம் இறங்கியிருக்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமி 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதிக்கும் தொகுதி மக்களுக்கும் ஆற்றிய பணிகளையும், இரவு பகல் பாராது கண் சோராது துணை வருகின்ற இளைஞர்களையும் நம்பியே வலம் வருகிறார். அவர் வெற்றி பெறவேண்டும். அதன் மூலம் இந்தத் தொகுதியை முன்மாதிரியாக மாற்றிக் காட்டுவது அவருக்கு சாத்தியமாக வேண்டும். அவரைப் போன்ற தலித் அமைப்புகளைச் சார்ந்தவர்கள்தாம் தனித் தொகுதிகளின் வரலாற்றுக் கடமைகைளை நிறைவேற்றியாக வேண்டும்.”

இதே மேடையில், டாக்டர் கிருஷ்ணசாமி, தன்னோடு அமர்ந்திருக்கும் எங்களைச் சுட்டிக் காட்டி, "இவர்கள் என் சொந்தக்காரர்கள் அல்ல; சாதிக்காரர்கள் அல்ல. ஒவ்வொருவரும் வெவ்வேறு சாதியையும் மதத்தையும் சேர்ந்தவர்கள். கவிஞர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர், சமூக சேவகர், களப்பணியாளர் என்று பலரும் இங்கே வந்திருக்கிறார்கள். ஒருவர் இஸ்லாமியர், ஒருவர் நாடார், ஒருவர் தேவர், ஒருவர் சாதி தெரியாதவர், ஒருவர் நாயுடு என்று எல்லாருமாகச் சேர்ந்துவந்து எனக்கு நீங்கள்தான் முக்கியம் என்பதைச் சொல்ல வந்திருக்கிறார்கள்” என்று மக்ளைப் பார்த்துப் பேசினார். ஒருவர் சாதி தெரியாதவர் என்று அவர் சொன்னது என்னைத்தான். "சாதியற்றவர்” என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்குக் கூட அது படிமானமுள்ள சொல்லாயிருக்க வில்லை. இந்தியச் சமூக மனிதனில் தன்னிச்சையான சாதியத் தாக்கம் இப்படியாகத்தான் இருக்கிறது. இங்கே ஒரு நபர் சாதியுள்ள தலித்தாயிருப்பதைவிட சாதியற்ற தலித்தாய் அறியப்படுவது ஆகப்பெரும் நட்பற்ற இருப்பாகவும் பொருளற்ற அருவருப்பாகவும்தான் கலங்கடிக்கிறது.

நாங்கள் ஒரு நாளைக்கு மூன்று கூட்டங்களாக ஆறு கூட்டங்களில் கலந்துகொண்டோம். கூட்டங்களில் பேசிய நேரத்தைவிட அடுத்தடுத்த ஊர்களுக்குப் பயணம் செய்த நேரமே அதிகம். அந்தப் பயணத்தினூடே டாக்டர் கிருஷ்ணசாமி அந்தத் தொகுதிக்கு எப்படி வந்தார், அந்த உடை முள்காட்டை எப்படிப் பண்படுத்தி வெற்றியை அறுவடை செய்தார் என்பதை நாங்கள் அறிந்துகொள்ள முடிந்தது. "நீங்கள் உதவினால் இதை நானே எழுதுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வீரம் செறிந்த வரலாறாக, விடுதலை வரலாற்றுக்குச் சரியான திறவுகோலாக அது இருக்கும்” என்றேன். "என்கூடவே வந்தால் பயணம் செய்துகொண்டே பேசலாம்” என்றார். அது முடிந்தால் உண்மையிலேயே தலித் வரலாற்றில் ஒரு முக்கிய கணுவாயிருப்பதோடு தென்மாவட்டங்களின் மானுட வரலாறாகவும் அமையக்கூடும். அவருக்கேற்ப நான் நெகிழ்ந்து கொடுப்பதும், எனக்கேற்ப அவர் அதன் தேவையை உணர்வதும், இருவர் நேரங்களும் நெருடலற்ற அனுசரணைகளோடு குவியம் கொள்வதும், அனைத்துக்கும் மேலாக ஒரு வரலாற்று நெருக்கடிக்குள் எங்களை நாங்களே சிக்க வைத்துக் கொள்வதும் கூடுமானால் அப்படியொரு நூல் சாத்தியமாகும். பார்க்கலாம்.

எங்கள் முதல் கூட்டம், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, நாடார்கள் அதிகம் வாழும் ஊர்ப் பிரமுகர்களோடு முக்கிய தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மேடை ஏறியதும் தொடங்கியது. நானே முதல் பேச்சாளன்.

"இது அரசியல் கட்சிகளின் கூட்டணிக் காலம். யாரோடும் யார் வேண்டுமானாலும் கூடலாம்; பிரியலாம்; மாறலாம்; மீண்டும் கூடலாம். ஒரு தடையும் இல்லை. ஒரு நெறிமுறையும் இல்லை. எய்ட்ஸ் நோய் இப்படியொரு சூழலில்தான் பரவுவதாகச் சொல்கிறார்கள். சமூகத்தைத் தாக்கிக் கொண்டிருக்கும் அரசியல் எய்ட்ஸ் நோய் இது. இவர்கள் எதற்காக இப்படிப் பரபரக்கிறார்கள். சேவை செய்வதற்காகவா? அல்லது பங்கு போட்டுக் கொள்வதற்காகவா? தொகுதிகளில் ஏதேனும் காரியம் நடக்கிறதென்றால் அது காசு பார்ப்பதற்காகத்தான் என்பது இன்றைய ஆட்சி அதிகாரச் சூத்திரமாகியிருக்கிறது. இதுதான் சமூகத்தின் மேல் அரசியல் கட்சிகள் திணித்து வரும் - எந்த மருந்தாலும் தீர்த்துவிட முடியாத எய்ட்ஸ் நோய்.

ஒட்டப்பிடாரம் ஒரு தனித் தொகுதி. இதில் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்தான் நின்று வெல்ல வேண்டும். ஆட்சியதிகார சுகம் கண்ட பெரிய கட்சிகளின் சார்பில் நின்று, ஒருவர் வென்று வருவாரானால், அவரது கட்சித் தலைமையையும், கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி, தொகுதி மேம்பாட்டுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் துரும்பைக் கிள்ளிப் போடக்கூட அவருக்கு அதிகாரமும் இல்லை; அனுமதியும் இல்லை. அவர்கள் சொந்தத்தில் கொஞ்சம் சுகம் பார்த்துக் கொள்ளலாமே தவிர, மக்கள் பிரச்சினைகளில் தன் கட்சி எடுக்கும் முடிவுக்கு மௌன சாட்சியாக மட்டுமே இருக்க முடியும். சொந்தச் சகோதரனே செத்தாலும் தன் சுண்டு விரலைக்கூட அதற்காக அசைக்க முடியாது. வேண்டுமானால் உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டுத் தானும் சாகலாம்.

தன்னுடைய மானத்தைக் காத்துக்கொள்ள முடியாத ஒருத்தர் தொகுதியின் தன்மானத்தை எப்படி கட்டிக் காப்பாற்றுவார். ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் காப்பாற்றுவார். காப்பாற்றிக் காட்டி இருக்கிறார். இந்தக் கூட்டம் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்ததோடு தொடங்கியது. அரசியல் எப்போதும் அழுக்காய்த்தான் இருந்திருக்கிறது. ஆனால் மக்கள் நலம் பேணும் அரசியல் தலைமை காமராசரோடு அருகிவிட்டது என்றால் மிகையாகாது. அவர்தான் ஒரு தாழ்த்தப்பட்டவரை உள்துறை அமைச்சராக நியமித்து பெருமைப்படுத்தியவர். அதன் பிறகு, ஒரு தலித் அமைச்சர் ஆதிதிராவிட நலத்துறைக்கு அப்பால் நகர அனுமதிக்கப்பட்டதே இல்லை. காமராசருக்கு மாலையிடுவது ஒரு தனித் தொகுதி வேட்பாளருக்கு வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல; மனங்கனிந்த நன்றி அறிவிப்பும்கூட. சகோதரர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு ஐந்தாண்டுக்காலம் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார். தொகுதிக்கும் தொகுதி மக்களுக்கும் அவர் ஆற்றிய பணிகளை நீங்கள் அறிவீர்கள். அவரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் உங்களை நீங்களே கௌரவித்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை”

எல்லா ஊர்களிலும் டாக்டர், தான் செய்த பணிகளைப் பட்டியலிட்டுப் பேசினார். இணைப்புச் சாலைகள், சமூகக் கூடங்கள், குடிநீர் குழாய்கள், சிறுபாலங்கள், கல்விக்கூடங்கள்... என அதைக் கேட்கக் கேட்க எங்களுக்கே நிறைவான தகவல்களாயிருந்தன. அவருடைய காரியார்த்தமான எளிய மொழி மக்களிடம் மிகுந்த நட்பையும் சொந்தத்தையும் கோரியது. மொழித் தோரணம்கட்டி ஆடம்பரப்படுத்துவதற்கு அவரிடம் வெற்றுச் சவடால்கள் இல்லை என்பது எல்லாருக்குமே சந்தோஷமான விஷயமாகப்பட்டது. அவர், தான் ஆற்றிய பணிகளோடு அதற்கு முன்பும் பின்பும் என்ன நடந்திருக்கிறது என்று ஒப்பிட்டு நினைவுபடுத்தினார். சாலை போடுவதற்கு மாலையில் கொட்டிய சரளைக் கற்கள் காலையில் காணாமல் போன கதையை நினைவு கூர்ந்தார். "நான் கல்லை அள்ளிப்போக வரவில்லை. உங்கள் உள்ளத்தை அள்ளிப்போகத்தான் வந்திருக்கிறேன்” என்று மிகவும் கவித்துவமாகச் சொன்னபோது எழுந்த கைத்தட்டல் வெகுநேரம் கேட்டது.

"நான் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த ஐந்தாண்டுக் காலத்தில் அரசுநிதி முழுவதையும் பொதுச் சொத்தாக மாற்றிக் கொடுத்திருக்கிறேன். எந்தப் பணிக்காவது நான் இவ்வளவு வாங்கினேன், அவ்வளவு வாங்கினேன் என்று உங்களில் யாராவது ஒரு குறையாவது சுட்டிக்காட்ட முடியுமா? என் கட்சிக்காரர்கள் தொகுதியிலுள்ள வணிகர்களிடம் நன்கொடை என்னும் பெயரில் ஒரு ரூபாயாவது வாங்கியிருப்பார்களா?” என்றெல்லாம் அவர் கேட்டபோது மேடைக்கு வெகு தொலைவில் நின்றவர்கள்கூட மிகுந்த ஓசையோடு கைதட்டி வரவேற்றது அவருடைய நேர்மைக்கு மகுடமாயிருந்தது.

எல்லா இடங்களிலும் நாங்களே எதிர்பாராத அளவு கூட்டம் இருந்தது. வழியெங்கும் அவருக்கு வரவேற்பும் வாழ்த்தும் பெருகின. எல்லாப் பிரிவினரும் அவருக்கு இயல்பாகவும் இணக்கமாகவும் கையசைத்து நின்றது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அப்போதுதான் "ஒரு மானாவாரி நிலத்தை இந்த அளவு பண்படுத்துவது என்றால் அதற்குப் பின்னால் கடுமையான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டுமே. அதை எழுத வேண்டும். முடிந்தால் நானே அதைச் செய்கிறேன்” என்று நூல் எழுதும் ஆசையை நான் வெளியிட்டது.

Pin It