‘திருமூலர்: காலத்தின் குரல்’ என்ற எனது நூலைத் திறனாய்ந்து திரு பொ.வேல்சாமி கவிதாசரண், சனவரி-பிப்ரவரி 2006 இதழில் எழுதியிருந்த “வைதிகமும் திருமந்திரமும்” என்ற கட்டுரைக்கான எனது மறுமொழி இது.

“தமிழ் என்ற போர்வைக்குள் நுழைந்து கொண்டு அரசியல், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் செயல்பட்டுத் தமிழர்களின் வளத்தைப் பெருக்குகிறோம் என்று சொல்லித் தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டாகிய அதிநவீன காலத்திலும் தொடரலாம் என்பதற்கு” திரு வேல்சாமி என்னைச் சான்று காட்டியிருக்கிறார்.

தமிழ் எனக்குப் போர்வையா கோவணமா என்பதையெல்லாம் வேல்சாமி எப்படி அறிவார் என்பதை அறியேன். ஆனால் ஒன்று தெரிகிறது. ஆறுமுகம் என்ற என் பெயரோடு சேர்க்கப்பட்டிருக்கிற தமிழன் என்ற பின்னொட்டு தங்களுடைய ஒன்பதாம் ஓட்டையில் வரமிளகாயைச் செருகிவிட்டதைப்போலப் பலரைத் துன்புறுத்துகிறது. ‘நீ தமிழன் என்றால் நாங்கள் எல்லாம் என்ன தெலுங்கனா?’ என்ற கேள்வியைத் தங்களுக்குள்ளாகவே எண்ணிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். தமிழோடு அவர்கள் எப்படித் தங்களைச் சார்புறுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது இந்தக் கேள்விக்கான விடை.

குமரிக் கண்டம் பற்றிய நம்பிக்கைகள், செம்மொழி பற்றிய அறிவிப்புகள் போன்றவற்றுடன் எத்தகைய தர்க்க நியாயங்களுக்கும் உட்படாமல் மேற்படி நூல் வெளிவந்து விற்பனையும் ஆகிக்கொண்டிருப்பதாக வேல்சாமி நெஞ்சம் கவன்றிருக்கிறார்.

குமரிக்கண்டம், செம்மொழி இவைபற்றி ஒரு சொற்றொடரும் அந்த நூலில் எழுதப்பட வில்லை. ‘தமிழனுக்குச் சொந்த அறிவு இருக்கிறது; அவன் கடன் வாங்கிக் காலம் தள்ளுகிறவன் அல்லன்; அவனுக்கென்று சமயக் கொள்கைகளும் மெய்யியல் கொள்கைகளும் இருக்கின்றன’ என்ற செய்தியைத் திருமூலரை முன்னிட்டுச் சொல்வதுதான் நூலின் நோக்கம். ‘தமிழனுக்குச் சொந்த அறிவு இருக்கிறது’ என்று சொல்ல வாயை அங்காந்த அடுத்த நொடியிலேயே ஆகாவென்று பொங்கி யெழுந்து, ‘ஆரையடா சொன்னாயது?’ என்று ஆர்த்து, ‘தமிழன் எல்லாவற்றையும் கடன்தான் பெற்றான்’ என்று கண்மூடித்தனமாக ஒரு திறனாய்வாளர் சொல்வார் என்றால் அந்தத் திறனாய்வாளரின் நிறத்தைத் தமிழர்கள் அடையாளம் காண வேண்டாமா?

அந்த ஒற்றை வரிக்குள் குமரிக்கண்டம், செம்மொழி போன்றவற்றுக்கான அறிவிப்புகள் இருப்பதாக அதை எழுதிய நான்கூட அறியவில்லை. அது ஒருபுறமிருக்க, செம்மொழி அறிவிப்புகளுடன் ஒரு நூல் வந்தாலும்தான் என்ன பிழை? வேல்சாமி போன்ற ‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாத நடுவுநிலைத் திறனாய்வாளர்கள்’ வாழ்கிற தமிழ்நாட்டில் அப்படி ஒருநூல் வருவது அவ்வளவு பாவமா?

‘திருமூலர் தமிழர்’ என்பது எந்த வகையில் நியாயம் ஆக முடியும்?’ என்று கேள்வி எழுப்புகிறார். அஃதோடல்லாமல், ‘திருமூலர் ஒரு வட இந்தியப் பார்ப்பனர்’ என்றும் தன்போக்கில் சொல்கிறார். எந்த வடவனும், அதிலும் விதப்பாக எந்தப் பார்ப்பனனும் (அவன் வடவனாக இருந்தாலும் சரி, தென்னனாக இருந்தாலும் சரி) ‘நீச பாசையான’ தமிழ் ஆக்கம் பெறுவதை ஒப்ப மாட்டான் என்பது தமிழர்களுக்குத் தெரியும். சுமிருதி வெல்கென்று கூத்திடுகிற சுமார்த்தப் பிராமணர்களில் சுமிருதிக்கு மறுதலையாக நிலைகொண்டிருக்கும் சைவத்தைப் போற்றி யவர்களும் எவரும் இல்லை. விதிவிலக் காகத் தமிழ் செய்த, தமிழன்வழிச் சைவம் நெய்த ஒன்றிரண்டு பார்ப்பனர்களும் ஓசையின்றி இனநீக்கம் செய்யப்பட்டிருக் கிறார்கள். திருஞான சம்பந்த ஐயர், மாணிக்க வாசக ஐயர் என்ற பெயர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டதில்லை.

திருமூலர் கைலாயத்திலிருந்து வந்தவர் என்ற சேக்கிழாரின் கூற்றை நான் எப்படி மறுதலிக்கலாம் என்று கேட்கிறார். திருமூலர் திருமந்திரத்தில் பேசுகிற செய்திகளுக்கும் சேக்கிழார் திருமூலருக்குத் தருகிற வரை கோட்டோவியத்துக்கும் உள்ள பொருத்தமின்மையை அடிப்படையாகக் கொண்டே சேக்கிழாரின் கூற்றாயினும் அதை மறுதலிக்கலாம் என்று துணிந்தேன். மேலும் அகத்தியனைப் பார்ப்பதற்காகவே தான் கைலையிலிருந்து வந்ததாகவோ, திருவாவடு துறை அரச மர நீழலில் மூவாயிரம் ஆண்டு ஓகமிருந்து ஆண்டுக்கொன்றாக மூவாயிரம் பாடல்களைத் தாம் இயற்றியதாகவோ திருமூலர் திருமந்திரத்தின் எந்த இடத்திலும் சொல்லவில்லை. சேக்கிழார் சொன்னதைக் காட்டிலும் திருமூலர் சொல்லாததற்குக் கூடுதலாகப் பொருள் கொள்ள முடியும். சேக்கிழார் வாய்வழி மரபில் வழங்கி வருகிற கதைகளை, அவர் காலத்தில் கிடைத்த சான்றுகளை அடிப்டையாகக்கொண்டு எழுதியிருக்கிறார். அவரைத் தெய்வநிலைப் படுத்தி, பொய்யாமொழியராக்கி அறிவைத் தேக்கிவிடுவதை அவரேகூட விரும்பியிருப்பாரோ என்னவோ?

சைவ சமயமும் சைவ சித்தாந்தமும் பார்ப்பன-சூத்திரக் கூட்டுறவின் விளைவு என்று அவற்றைக் கடித்துத் துப்புகிற வேல்சாமி, சேக்கிழாரை மறுதலிப்பதுபற்றி மட்டும் ஏனோ மிகவும் வருத்தப்படுகிறார்.

தமிழியக்கமாகவும் நடந்த பத்தி இயக்கத்தின் வீச்சு காரணமாகத் தமிழ் மேலோங்கி நின்ற காலத்தில் தமிழராகப் பிறந்த இராமாநுசரும், தமிழ்நாட்டில் பிறந்த சங்கரரும்கூடத் தாங்கள் எழுதுவதற்கான மொழியாக வடமொழியைத் தேர்ந்துகொண்ட நிலையில், தமிழ் கடையழிந்து கிடந்த காலத்தில் வடக்கேயிருந்து வந்த ஒருவன் (வேல்சாமி சொல்வதுபோல் வடஇந்தியப் பார்ப்பனன்) தனக்குத் தெரிந்த வடமொழியை விட்டுவிட்டுத் தமிழில்தான் எழுதுவேன் என்ற அடத்துடன் எழுதியிருக்க வாய்ப்புண்டா?

திருமூலன் தமிழன் இல்லையென்றால் வேறு எவன் தமிழன்? வேல்சாமியா?

வேத மதத்தோடும் வடமொழியோடும் திருமூலர் செய்துகொண்ட சில உடன்படிக்கைகளைப் பற்றிய திறனாய்வு தனி. பௌத்தத்தை, சமணத்தை மறுதலிக்கவே அவர் வேதத்தைப் போற்றுகிறார். உண்மைதான். (மேற்படி நூலில் வேல்சாமி மேற்கோள் காட்டிய இரண்டு பத்திகளுக்கு அடுத்த பத்தியிலேயே இந்தச் செய்தியைக் காணலாம். இதை வேல்சாமி கவனிக்காமல் விட்டுவிட்டாரா அல்லது கவனமாக விட்டு விட்டாரா?) இந்த ஒரு பிழைக்காகவே திருமூலரை வடஇந்தியப் பார்ப்பனர் என்று தள்ளுவீர்களானால் இதே பிழையைச் செய்த திருநாவுக்கரசரையும் பிறரையும் கூட அவ்வாறு தள்ளுவீர்களோ?

‘கோவணமும் உனக்கு உடையில்லை உருவித் தாடா’ என்பதுபோல, ‘சைவசித்தாந் தத்தைத் தமிழர் சமயம் என்பது மக்களே போலும் கயவர் என்பதற்கு ஒப்பு’ என்று சான்றிதழ் தருகிறார் வேல்சாமி.

“இருப்பது ஒன்றே ஒன்றுதான். ஏனைய எல்லாம் அந்த ஒன்றினுடைய நிழல்கள். உலகம் என்பது ஒரு நிழல்முற்றம். இங்கே நிகழ்கிற எல்லாம் பொய்ம்மைகளே’ என்று பிறிதின் அடையாளத்தை அல்ல, இருப்பையே மறுதலித்துப் பொய்ம்மைக் கனவில் விழித்தெழச் சொன்னது சங்கர வேதாந்தம். சங்கர வேதாந்தம்தான் பார்ப்பன நலன் பேணுகிற வைதிகத்தின் மெய்யான வார்ப்பு.

எல்லாவற்றின் இருப்புக்கும் இடம் கொடுப்பது தமிழ்ச் சித்தாந்தம். பொருள் உண்டு; உயிர்கள் உள; இறை உண்டு. அறிவற்ற நிலை, குற்றறிவு நிலை, முற்றறிவு நிலை என்று மூன்று நிலைகள். இந்த முந்நிலைத் தரை தன்னை அகழ்வாரையும் தாங்கும். ‘எத்தகைய தர்க்க நியாயங்களுக்கும் உட்படாத’ என் போன்றவர்கள் முதற்கொண்டு ‘எல்லா வகையான தர்க்க நியாயங்களுக்கும் உட்பட்ட’ வேல்சாமி போன்றவர்கள் வரை.

வேலியில் போகும் ஓணானை வேட்டியில் விட்டுக்கொண்டதுபோல வேதத்தைச் சைவ சித்தாந்தம் ஒரு பொருட்டாக மதித்துத் தொலைக்கிறது என்பதும் சில சாதியினருக்குக் கருவியாகப் பயன்பட்டது என்பதும் மெய்தான். ஆனால் அதன் ஆளுமையை நிர்ணயிக்கும் கூறுகளாகத் தமிழ்க் கூறுகளே இருந்தன என்பது மறுக்க முடியாதது.

ஒரு மெய்யியல் கொள்கை எல்லா வகுப்பினரின் நலன்களையும் பேணுவதாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. வேல்சாமி தற்போது விதந்து பேசி வருகிற பௌத்தமும் சமணமும்கூடப் பொது நன்மையில் தொடங்கிப் பின் சில தனி நன்மைகளைக் கருதிச் சுருங்கிப் போயின என்பது உள்ளதுதானே. அரச, வணிக வகுப்புகளின் நலன் பேணும் சமயங்களாகத் தானே சமணமும் பௌத்தமும் அமைந்தன? அதனால்தானே அவை ஒழிந்தன?

“சித்தர்களுக்கெல்லாம் மேம்பட்ட சிவயோகச் சித்தர் திருமூலர் என்றும், தமிழ்க் கலாச்சாரத்தைக் கடைந்தெடுத்து வெளியிட்ட வித்தகச் சித்தர் என்றும் ஆறுமுகத் தமிழனால் துணிவுடன் வெளியிடப்பட்டது தான் ‘திருமூலர்: காலத்தின் குரல்’ என்னும் நூல்” என்று பற்களை நறநறக்கிறார். திருமூலர் ஒரு வட இந்தியப் பார்ப்பனர் என்று சொல்கிற இவருடைய துணிவைக்காட்டிலும் விஞ்சியதா என் துணிவு?

சித்தர்களின் அடிப்படைக் கொள்கை, உடம்பின் வழியாகவே பெறவேண்டிய எல்லாவற்றையும் பெறுவது என்பது. தமிழ்ச் சமய இலக்கியங்களில் உடம்புக்கு முதன்மை தருகிற முதல் இலக்கியம் திருமூலர் திருமந்திரம்தான். கோயில் வழிபாட்டைப் பற்றியெல்லாம் சில இடங்களில் திருமந்திரம் பேசினாலும் ‘உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்/ உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்/உடம்பினுள் உத்தமன் கோயில்கொண்டான் என்று/உடம்பினையானிருந்து ஓம்புகின்றேனே’ என்பதும், ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்/ திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்/ உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே/உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே’ என்பதும், ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்/வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்/ தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்/ கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே’ என்பதும், ‘படமாடக் கோயில் பகவற்கொன்று ஈயில்/ நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்காகா/ நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்/ படமாடக் கோயில் பகவற்கு அதாமே’ என்பதும்தான் திருமந்திரத்தின் மையக் கரு. திருமந்திரத்தை ஓரளவு படித்தவர்கள் இதை அறிந்திருப்பார்கள்.

உடம்பின் பெருவடிவம்தான் கோயில் என்பதும் திருமூலரின் கொள்கை. மேலும் கோயில் வழிபாடும் ஆகமங்களும் வேல்சாமி கருதிக்கொண்டிருப்பதுபோல வைதிக வடவனுடையவை அல்ல. அவை தமிழ னுடையவை. அவை வைதிகத்திற்கு முற்றிலும் எதிரானவை. எல்லாவற்றையும் தீயில் போட்டுக் கொளுத்திவிடுகிற - தெய்வக் குழப்பம் கொண்ட வைதிக மரபுக்கும், எல்லாவற்றையும் சாமிக்குப் படைத்துப் பின் பசித்த வயிறுகளுக்குப் புசிக்கக் கொடுத்துவிடுகிற தமிழ் மரபாகிய ஆகம மரபுக்கும் ஒற்றுமை ஒன்றும் கிடையாது. வேல்சாமியினுடைய ‘மலைக்கும் மடுவுக்கும், இருளுக்கும் பகலுக்கும், மாயைக்கும் எதார்த்தத்துக்கும் உள்ள முரண்களுக்குச் சற்றும் குறையாதது’ என்ற சொல்லடுக்குகள் அவர் பயன்படுத்தியிருக்கிற இடத்தைக்காட்டிலும் இங்கே கச்சிதமாகப் பொருந்துவன.

கரையான் புற்றெடுக்க அதில் கருநாகம் குடிபுகுந்ததுபோல இப்போது ஆகிவிட்டது. தமிழ மடையர்களும் வந்தேறிகள் சொன்னதன்பேரில் ‘இவை நம்முடையவை அல்ல; இவற்றை நாம் கடனாகப் பெற்றோம்’ என்று நம்பத் தலைப்பட்டு விட்டதுதான் கோளாறு. வேல்சாமி சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்: ‘அடிமைகள் ஆவதற்குத் தமிழர்கள் இன்றும் அணியமாகவே இருக்கிறார்கள்.’

‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்று பின்னாளைய சித்தர்கள் பாடியதற்கெல்லாம் தீக்கொளுவிய மூலப் பொறி உடம்பைப் பற்றிய மூலன் வரி. சித்தர் மெய்யியல் என்று ஒன்று வகுத்தால் அதில் திருமூலரும் சிவவாக்கியரும் அவரையொத்த ஏனைய சித்தர்களும் ஒரு தட்டிலேயே வைக்கப்படுவார்கள். அந்த மெய்யியலுக்குச் சில அணிகளைப் கூட்டி அழகு படுத்தி வழங்க வேண்டிய கட்டாயம் திருமூலருக்கு இருந்தது. ஏனைய சித்தர்கள் அணிகள் அழகை மறைப்பதாகச் சொல்லி அவற்றை அகற்றிவிட்டார்கள். காலத்தின் தேவைகளுக்கேற்பவே இருசாராரும் செயல்பட்டனர்.

எனவே சித்தர்களின் வரிசையில் முதலாவது ஆளாக வித்தகச் சித்தரான திருமூலரை வைப்பதைப் பொத்தகச் சித்தர்கள் மாறு படுவதில் பொருளிருப்பதாகத் தெரியவில்லை. “பக்தி இயக்கத்தால் தழுவிக்கொள்ளப் பட்டதாக நம் காலத்துச் சூத்திர ஆய்வாளர்கள் பெருமைப்படும் நிலையும் அத்தகைய அவல நிலை இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்வதைக்கொண்டு தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்” என்று கண்ணீர் சிந்துகிற வேல்சாமி, “இவை போன்ற செய்திகளையெல்லாம் மறைத்து விட்டதாகவும்” குற்றம் சாட்டுகிறார்.

தன்னுடைய இந்தக் கூற்றுக்கு மறுதலையாக “தீண்டாமை என்பது 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வழக்கத்தில் வரவில்லை என்பதை வரலாற்று ஆசிரியர் கி.ர. அனுமந்தன் அவர்கள் (இவர் சூத்திர ஆய்வாளரா இல்லையா என்பதைப் பழுத்த திறனாய்வாளரான வேல்சாமி சுட்டிக்காட்ட வில்லை) தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டில் விளக்கியுள்ளார். இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்றுகளும் பிற்காலச் சோழர் காலத்தில்தான் சாதிகள் பெருகி, தீண்டாமை இறுகி நிலைபெற்றன என்பதைப் புலப்படுத்துகின்றன’ என்றும் முன்பத்தி ஒன்றில் இவரே பேசுகிறார்.

திருமூலர் இவற்றைப்பற்றிப் பேசவில்லை என்று இவர் குற்றம் சாட்ட முடியாது. ஏனென்றால் இத்தகைய குலைவுகள் திருமூலர் காலத்தில் கவனம் கோருகிற அளவுக்கு முற்றியிருக்கவில்லை. இவற்றை யெல்லாம் நான் மறைத்துவிட்டேன் என்று இவர் சொல்வதிலும் பொருளில்லை. திருமூலருக்கும் ஏனைய சித்தர்களுக்கும் இடைப்பட்ட வேறுபாட்டை இவற்றின் அடிப்படையிலேயே நூலில் சுட்டியிருக்கிறேன். திருமூலர் தன் காலத் தேவைகளையொட்டிக் கட்டமைத்தார். பின்னாளின் சித்தர்கள் தம் காலத் தேவைகளையொட்டிக் கட்டுடைத் தார்கள். ஆனால் இரு சாராருக்கும் அடிப்படை ஒன்றுதான். கோளாறு என்ன வென்றால் இவையெல்லாம் நூலின் இரண்டாம் இயலிலும் ஐந்தாம் இயலிலும் இறுதி இயலிலும் பேசப்படுகின்றன. வேல்சாமி அவற்றைப் படித்திருப்பார் என்று நான் எண்ணவில்லை. ‘தமிழனுக்குச் சொந்த அறிவு இருக்கிறது’ என்று முதல் இயலில் சொன்ன மாத்திரத்திலேயே நெஞ்சம் பதறிப் பொத்தகத்தை மூடிவிட்டார் என்பது என் ஊகம்.

ப.அருணாசலத்தின் திருமந்திரக் கோட்பாடு, க.வெள்ளைவாரணனாரின் பன்னிரு திருமுறை வரலாறு, விசுவநாதப் பிள்ளையின் திருமந்திரப் பதிப்புக்கு ரமண சாத்திரி எழுதிய முன்னுரை ஆகியவற்றைச் சிறப்பித்து எழுதியிருக்கிறார். (நல்லவேளை இவர்களெல்லாம் தமிழ்க் கோவணத்தைக் கட்டிக்கொண்டு நம் வேட்டியை உருவப் பார்க்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டாமல் விட்டுவிட்டார்.) சிறப்பித்தாக வேண்டிய பங்களிப்புகள்தாம். ஆனால் இவர்கள் சொன்னவற்றையெல்லாம் என்னுடைய நூலில் நான் மாற்றி மாற்றி எழுதியிருப்பதாகவும் சான்றாதாரங்கள் இல்லாமல் சொல்லியிருப்பதாகவும் எழுதியிருக்கிறார். எந்தச் சான்றின் பேரில் அப்படி எழுதினர் என்று எனக்கு விளங்கவில்லை.

வேல்சாமி வைக்கிற குற்றச்சாட்டுகளில் பொருளுடையது ஒன்றே ஒன்றுதான். “வீரமாமுனிவர் விவிலியத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்த நோக்கமும் அதுதான்” என்று நான் மேற்படி நூலில் எழுதியிருப்பது பிழைதான். அறியாமலும் ஆராயாமலும் எழுதிவிட்ட செய்திதான். ஒப்புக்கொள்கிறேன். மேற்படி நூல் முதல் அச்சு விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டின் பொத்தகச் சந்தைக்காக 2005, நவம்பர் மாதம் மறுஅச்சுக்கு வந்தபோது இந்தப் பிழைகளையப்பட்டு விட்டது. இப்போது இந்த வரி ‘கிறித்தவர்கள் விவிலியத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்ததன் நோக்கமும் அதுதான்” என்றிருக்கும்.

இதுபற்றியும் சொல்வதற்குச் செய்தி ஒன்று உண்டு. “எந்த ஒன்றும் மக்களைச் சென்றடைய வேண்டுமானால் மக்களின் மொழியில் சுமந்து செல்லப்பட வேண்டும். தமிழறியாமல் தமிழகத்தில் மதம் பரப்ப வந்த சீகன் பால்கு ஐயர், போப் ஐயர் போன்றோர் தமிழ் கற்றுக்கொண்டது உள்ளதுதானே. வீரமாமுனிவர் விவிலியத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்த நோக்கமும் அதுதான். அவ்வாறே தாய்மொழி என்பதற்காக மட்டுமின்றிப் ‘பேரின்ப வீடு’ என்ற செய்தியை மக்களுக்குச் சுமந்து செல்வதற்காகவும் திருமூலர் தமிழை நாடியதில் வியப்பே இல்லை. திருமூலர் பாசாங்குகள் அற்றவர்” என்பது நான் எழுதியிருந்த பாடம்.

பிறமொழிக் கிறுக்கு என்பது தமிழனுக்குச் சாவம். இப்போது ஆங்கிலம்; அப்போது வடமொழி. சமயத்துறையின் பொதுமொழியாக வடமொழி தலைதூக்கிவிட்ட காலத்தில் தாய்மொழி என்பதற்காக மட்டுமின்றி மக்களை அணுகுவதற்காகவும் தமிழைப் பற்றினார் திருமூலர் என்று சொல்ல வரும்போது அதற்குத் துணையாக கிறித்தவர்கள் தமிழைப் பற்றிய செய்தியையும் சேர்த்துக் கொண்டேன். வீரமாமுனிவர் விவிலியத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்தார் என்பது ஒரு செய்திப்பிழைதான். ஆனால் அதை ஒரு மாபெரும் கருத்துப் பிழைபோலக் காட்டுகிறார் வேல்சாமி.

எனக்கு நோக்கம் விவிலியத்தை யார் தமிழுக்குக் கொண்டுவந்தார்கள் என்பதை ஆராய்வதன்று. சொல்லுகிற செய்தி எதுவானாலும் அதை மக்களுக்கு விளங்கச் சொல்ல வேண்டும் என்று இவர்கள் கருதினார்கள் என்பதை உணர்த்துவது. தமிழ் தான் வீற்றிருந்த பழைய இடத்தைப் பிடிக்க முடியாதபடி இன்றைக்கும் முட்டுக்கட்டை போடும் வடமொழி வம்பர்களையும் அவர்களுக்கு எடுப்பு வேலை செய்கிற தமிழ்ச் சும்பர்களையும் தலையில் தட்ட வேண்டும் என்பது. இது வேல்சாமிக்கு விளங்க வில்லையா அல்லது இதை இவ்வாறு விளங்கிக்கொள்ள அவர் விரும்பவில்லையா?

நிலா அழகாக இருக்கிறதென்று விரல் கொண்டு சுட்டும்போது விரல் ஏன் அழகற்றிருக்கிறது என்று பார்க்கிறவன் கேட்பானேயானால் அதை அவனுடைய பார்வைக் கோளாறென்பதா? அறிவுக் கோளாறென்பதா?

வேல்சாமி கவிதாசரணுக்காக என் நூலின் பேரில் ஒரு கட்டுரையை ஆக்கி வருகிறார் என்பது எனக்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் வேல்சாமியின் வழியாகவே தெரியும். ஆனால் அதில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பது தெரியாது. பின்னர் ஒரு கருத்தரங்கில் பெருமாள் முருகனை நவம்பர் மாதம் சந்திக்க நேர்ந்தபோது வேல்சாமியின் கட்டுரை கவிதாசரணின் சனவரி இதழில் வருவதைப் பற்றிச் சொன்னார்.

அப்போது வீரமா முனிவரும் விவிலியமும் பற்றிய செய்திப் பிழையையும் சுட்டிக் காட்டினார்.

இதுபற்றி வேல்சாமி தன்னுடைய கட்டுரையில் எழுதியிருப்பதையும் அவருக்காக மேற்படிச் செய்தியைப் பேராசிரியர் இன்னாசியிடம் கேட்டுத் தான் உறுதிப்படுத்திச் சொன்னதையும் சொன்னார். பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியதன் பேரிலேயே நூலின் மறு அச்சில் மேற்படிப் பிழையைக் களைய முடிந்தது. இல்லாவிட்டால் மறு அச்சிலும் அது தொடர்ந்திருக்கும். பெருமாள் முருகனுக்கு நன்றியுடையேன். ஆனால் அவருக்கும் முன்னரே நான் வேல்சாமியைச் சந்தித்திருந்தும் இதை ஏன் வேல்சாமி சுட்டிக் காட்டவில்லை என்று எனக்கு விளங்கவில்லை. “குறை களையப்படாமலேயே இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் அதன்பேரில் எழுதிச் சொறிந்துகொள்ள வாய்ப்புண்டாகும்” என்று கருதினாரோ? அப்படியானால் அவருடைய அறிவுலகச் சமூக அக்கறையின் நிறம் என்ன?

“வீரமாமுனிவர் மொழிபெயர்த்த விவிலிய நூலைப் ‘பேராசிரியர்’ ஆறுமுகத்தமிழன் குறிப்பிடுவது மட்டும் போதாது. அதனை உடனே ‘தமிழினி’ வெளியீடாகக் கொண்டு வந்தால் அது இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ்மொழிக்குப் புதிதாகக் கிடைத்த ஓர் அரிய பொக்கிசமாக அமையும்” என்று கட்டுரைக்கு முத்தாய்ப்பு வைக்கிறார். தமிழ்மொழிக்கு அரிய ஆக்கங்கள் கிடைப்பதுபற்றி வேல்சாமிகூட மகிழ்வார் என்பது நல்ல சேதிதான். இந்தச் செந்தமிழ் நெஞ்சரின் ஆய்வுத்திறத்தை நாமும் போற்ற வேண்டாமா?

‘திறனாய்வுச் செம்மல் வேல்சாமி காலச்சுவடு, சனவரி 2006 இதழில் ‘செம்மொழித் தகுதியும் செம்பதிப்புகளின் போதாமையும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஈழத்துத் தமிழறிஞரான கனகசபை என்பார் எழுதிய ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (The Tamil Eighteen Hundred Years Ago) (1904) என்ற ஆங்கில நூல் பற்றி /அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றிக் குறிப்பொன்று தருகிறார்: “ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்- பூம்புகார் பதிப்பகம், 2003. இந்தப் பூம்புகார்ப் பதிப்பில் மூல நூல் ஆசிரியர் பெயர் கனகசபை என்றுள்ளது. கனகசபைப் பிள்ளை என்பதில் பிள்ளையை எடுத்துவிட்டு இவ்வாறு எழுதுவது பதிப்பு நேர்மை அல்ல. இந்த நிலை தொடர்ந்தால் உ.வே. சாமிநாதையர் என்பது வருங்காலத்தில் உ.வே.சாமிநாதன் என்று குறிக்கப்பட வாய்ப்புள்ளது.”

சூத்திரர்களுக்குப் பிள்ளைப் பட்டம் போய்விட்டால் பார்ப்பனர்களுக்கு ஐயர் பட்டம் போய்விடுமே என்று வேல்சாமி பதறுவதாகக் கூட இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆனால் இதற்குப் பொருள் புனைவதா நம்முடைய வேலை? பொருள் புனைந்து ‘கண்களிகூர்ந்து நுண்துளி அரும்பி உரோமம் சிலிர்க்க’ சிலிர்க்க இந்தத் திருவாசகம் என்ன திருக்குறளா, திருமந்திரமா? மேலும் இது அவருடைய விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டது. நமக்குத் தொடர்பில்லாதது.

கனகசபைப் பிள்ளை என்ற பெயரில் அவ்வாசிரியர் நூல் எழுதியதாக இவர் எந்தக் கனவில் கண்டார் என்று தெரியவில்லை. பிள்ளைப் பட்டத்தைத் தூக்கிவிட்டு வெறுமனே கனகசபை என்று மூல நூல் ஆசிரியரின் பெயரை அச்சடித்துப் பதிப்பு நேர்மையைக் கடாசிவிட்டுச் சோரம் போய்விட்டதாக வேல்சாமி குற்றம் சாட்டும் பூம்புகார்ப் பதிப்பு (2003) சூலை, 1956ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூலின் மறு பதிப்பு. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட நூலைத் தமிழாக்கி வெளியிட்டிருக்கிறது. அந்நூலின் முகப்புப் பக்கத்தில் காணப்படும் விவரங்கள் இவை:

ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

ஆங்கில மூலநூலாசிரியர்: திரு.வி.கனகசபை, பி.ஏ., பி.எல்.

தமிழாக்கம்: திரு. கா. அப்பாதுரை, எம்.ஏ., எல்.டி.

ஒருவேளை ஆங்கில மூலத்தில் காணப்பட்ட பிள்ளைப் பட்டத்தைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்தான் கைத்தவறுதலாகக் களைந்துவிட்டதோ என்று ஆராய்ந்தால் ஆங்கில மூலத்திலும் பிள்ளைப் பட்டம் இல்லை. மேற்படி நூலின் ஆங்கில மூலம் மும்முறை பதிப்புக் கண்டிருக்கிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடாக 2000ஆவது ஆண்டிலும், ஏசியன் எடுகேசனல் சர்வீசசின் வெளியீடாக 1979ஆம் ஆண்டிலும் இக்கின்பாத்தம் வெளியீடாக முதற்பதிப்பு 1904ஆம் ஆண்டிலும் வெளி வந்திருக்கிறது. இனி, முதற்பதிப்பு தொட்டு எல்லாப் பதிப்புகளிலுமே நூலாசிரியரின் பெயர் வி.கனகசபை என்றுதான் கண்டிருக்கிறதேயன்றி கனக சபைப்பிள்ளை என்றன்று. நூலுக்கான நூன்முகத்திலும் (preface) நூலாசிரியர் தன்னை வி.கனகசபை என்றே குறித்துக் கொண்டிருக்கிறார்.

இவை இப்படியிருக்க பூம்புகார் பதிப்பகம் பதிப்பு நேர்மை தவறிவிட்டதாக இவர் எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார்?

ஒருவேளை வேல்சாமி தன் ஆய்வுத் திறத் தால் கண்டெடுத்த எவரோ கனககசபைப் பிள்ளை என்பாரும் அப்படி ஒரு நூல் எழுதியிருக்கிறாரோ! அரிய நூல்களின் வெளியீட்டில் அடங்காத ஆர்வம் கொண்ட “ஆய்வுச் செம்மல்” வேல்சாமி அவர்கள் தாம் கண்டெடுத்திருக்கிற கனகசபைப் பிள்ளையின் நூலைத் தம்முடைய சொந்தப் பதிப்பாக வெளியிட்டு தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தனது முதல் பங்களிப்பாகச் செய்து, “பேனைப் பெருமாளாக்கிப் பெருமாளைப் பெரிய பெருமாளாக்குகிற பொருளற்ற குற்றக் களஞ்சியங்களை உருவாக்கியதைத் தவிர வேல்சாமி ஆற்றிய ஆக்கப் பணிகள் என்ன?” என்று கேள்வி கேட்கிற விளங்காதவர்களின் வாயை அடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

“ஆய்வுசூடி அமர்ந்த சாமியை ஏத்தி ஏத்தித் தொழுவேன் யானே !”

Pin It