ஸ்ரீலங்கா அதிபர் தேர்தலில், கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேயின் வெற்றி எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் நாளில், தமிழர்களின் பகுதிகளில் குண்டுகளை வெடித்து, வாக்குச் சாவடிகளுக்கு வருவதற்கே அச்சம் ஏற்படுத்தியதும், பல இடங்களில், நேரடியாகவே தமிழர்களை வாக்குப் பதிவு செய்ய விடாமல் தடுத்ததுவும், கூடுதல் வாக்கு வித்தியாசத்திற்குக் காரணங்களாக இருக்கலாம்.

எனினும் ராஜபக்சேயின் வெற்றிக்குத் தமிழர்களும் ஒரு விதத்தில் காரணமாகியுள்ளனர். தமிழர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்றிருந்தால், குறைந்த பட்சம், முதல் சுற்றிலேயே 58.5 % வாக்குகள் பெற்று, வெற்றி பெற்ற நிலை வந்திருக்காது. 50 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகளையே இருவரும் பெற்றிருப்பின், இரண்டாவது சுற்றுத் தேர்தல் தேவையாகியிருக்கும். அப்போது தமிழர்களின் வாக்குகளை நாட வேண்டிய தேவை இருவருக்கும் வந்திருக்கும்.

தேர்தல் களத்தில் தமிழர்களின் வாக்குகள் பல பக்கமும் சிதறிவிட்டன. சம்பந்தனார் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணி, பொன்சேகாவை ஆதரித்தது. டக்ளஸ், கருணா போன்ற துரோகிகள் ராஜபக்சேவை ஆதரித்தனர். சிவாஜிலிங்கம் சுயேச்சையாய்த் தேர்தலில் இறங்கினார். மலையக மக்களின் வாக்குகள் ஒரே திசையில் இல்லை. இரண்டு கொலைகாரர்களில் எவன் வென்றால் என்னவென்று கருதிப் பலர் வாக்களிக்கவில்லை.

இப்படிச் சிதறிப்போன வாக்குகள், ஒரு விதத்தில் ராஜபக்சேவுக்கு உதவியாய்ப் போய்விட்டன. சிங்களர்களைப் பொறுத்தளவில், தமிழினத்திற்குக் கூடுதல் கொடுமைகளைச் செய்தவனைத்தானே ஆதரிப்பார்கள்.

தமிழர்களுக்கு, தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் தான் தலைவர் என்றால், சிங்களர்களுக்கு ராஜபக்சேதானே தலைவராக இருக்க முடியும். எனவே சிங்களர் வாக்குகளில் பெரும்பான்மை, ராஜபக்சேவுக்குக் கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

ஈராக் நாட்டையே அழித்தொழித்தபின், அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில், ஜார்ஜ் புஷ் தோல்வி அடைவார் என்றே உலகம் எதிர்பார்த்தது. ஆனால் அவர் வென்றார். ஆனாலும் அந்த வெற்றி இழுபறியாகத்தான் இருந்தது. அப்படி ஒரு வெற்றிதான் ராஜபக்சேவுக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. அமெரிக்கர்களுக்கு இருந்த மனிதநேயமும், ஜனநாயக உணர்வும் கூடச் சிங்களர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடியும் வெல்லும் ” என்றான் பாரதி.

ஆனால் நடைமுறையிலோ, பலவேளைகளில், மறுபடியும், மறுபடியும் சூதுதான் வெல்கிறது.

-சுப.வீரபாண்டியன்

Comments

1 comment

1
Theepan
ஐயா வீரபாண்டியனாரே

தேர்தலில் மகிந்த வென்றது இருக்கட்டும். பிரபாகரனை மேதகு எனவும் கருணா மற்றும் டக்ளசு ஆகியோரை துரோகிகள் என்றும் வருணிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? உங்களுக்குத் தெரியாதா இப்போது இங்கு எல்லாமே மாறிவிட்டது. அப்பாவி வன்னிமக்களின் பிள்ளைகளைக் கடத்திக்கொண்டு போய் யுத்தகளத்தில் பலிகொடுத்த பிரபாகரன்தான் இப்போது துரோகி. வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த மக்களிடம் வந்து கேட்டுப்பாருங்கள்! என்ன சொல்கிறார்கள் என்று? சயனைற்றை உட்கொண்டு இறந்து போகத் துணிச்சல் இல்லாமல் இராணுவத்திடம் சரணடைந்து கோடாலிக் கொத்தில் "வீரச்சாவை" அணைத்துக்கொண்ட ஒரு கோழைதான் உங்கள் மேதகுவா? எதற்கு மேதகு என்று என்ற வார்த்தையின் பெறுமதியைக் குறைக்கிறீர்கள்? இப்போது வன்னி மக்களுக்கு எல்லா உண்மைகளும் விளங்கிவிட்டது. எங்களுக்குத் தெரியும் நாங்கள் என்ன செய்யவேண்டும். யாரை ஆதரிக்கவேண்டும்? யாரைத் தள்ளிவைக்கவேண்டும்? என்று. வன்னிமக்கள் மட்டுமல்லாது முன்னாள் போராளிகளும் பிரபாகரனைத் துரோகி என்றுதான் சொல்கிறார்கள்! நீங்கள் கனவுலகிலிருந்து வெளியே வாருங்களெமக்குத் தமிழகத்திலிருந்து சினிமாப் படங்களும் முகத்தில் பூசும் கிறீம்களும் காஞ்சிபுரம் சாறிகளும் வந்தால் மட்டுமே போதும். மற்றபடி வன்னி மக்களுக்காக என்று சொல்லி தமிழகத்தில் நடந்த எந்தவொரு போராட்டத்தையும் இங்கு நாங்கள் கணக்கில் எடுக்கவில்லை என்பதை அறிக! இருப்பினும் எமது உண்மை நிலையை அறிந்து கருத்துக்களை வெளியிடும் சில அரசியல்தலைவர்கள் பத்திரிகையாளர்களை நாம் என்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம். சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்ததை எண்ணி இப்போது இங்கு பலர் வருந்துகிறார்கள். இப்போது இங்கு எல்லாமே மாறிக்கொண்டு வருகிறது. தயவுசெய்து இனியாவது உண்மைகளைப் புரிந்துகொள்ளுங்கள். பிரபாகரனை வழிபடுவது உங்கள் உரிமை. ஆனால் தயவு செய்து அவரை எங்களுடன் சம்மந்தப்படுத்தாதீர்கள். எம்மைப் பொறுத்தவரை எமக்கு அவர் வேண்டா நபர்!

இப்படிக்கு
தீபன்
திருநகர்
கிளிநொச்சி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.