மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் புதிய கற்கால கற்கோடரி கிடைத்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் திரு. வி. சண்முகநாதன், தனது வீட்டுத் தோட்டத்தில் வாழைக் கன்றுகளை நடுவதற்காகக் குழி தோண்டியபோது, இக்கற்கோடரி கிடைத்துள்ளது. 125 கிராம் எடை, 6.5 செ.மீ. X 2.5 செ.மீ. 3.6 செ.மீ. X 4 செ.மீ அளவிலான இக்கற்கோடரி, இரும்பு பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கு முன் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட கருவியாகும். இவ்வகையான கோடரிகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளன. பல்லாவரம் பகுதியில் மனிதர்கள் பயன்படுத்திய இவ்வகையான பல கற்கருவிகளைக் கண்டுபிடித்த ராபர் புரூஸ் ஃபூட் ‘சென்னை கோடரி’ என்றே பெயரிட்டு, தொல்பொருள் பட்டியலில் சேர்த்துள்ளார். ஆனால் இப்போது கிடைத்துள்ள இக்கோடரியில் சிந்துவெளியில் காணப்படும் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. இக்கோடரி செய்யப்பட்டுள்ள கல் வகை தென்னிந்தியப் பகுதியைச் சார்ந்தது. (விரிவுக்கு பார்க்க: இந்து நாளேடு: 01.05.2006)

 சிந்து சமவெளி அகழ்வாய்வில் சுமார் 500 குறியீடுகள் வாசிக்கப்பட்டுள்ளன. கி.மு. 2600-1900 என்ற காலப் பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய மொழியின் குறியீடுகள் இவை. இக்குறியீடுகள் ஒலி வடிவைச் சார்ந்து அமையாமல் கருத்து வடிவைச் சார்ந்து அமைந்தவை. திராவிட மொழிகளின் எழுதுமுறையான வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி எழுதும் முறையைக் கொண்டவை. பிற்காலத்தில் கிடைத்த ‘பிராமி’ மற்றும் ‘கரோஷ்டி’ எழுத்து வடிவங்களுக்கும் இவ்வகையான குறியீட்டு எழுத்துகளுக்கும் தொடர்ச்சி இல்லை என்று கமில் சுவலபில் கூறுகிறார்.

செம்பியம் கண்டியூரில் கிடைத்த இக்குறியீடுகளை வாசித்த ஐராவதம் மகாதேவன் அவர்களின் கருத்து பின்வருமாறு அமைகிறது: இக்குறியீடுகள் கி.மு. 1500-2000 என்ற காலப் பகுதியைச் சார்ந்தவை. ‘விலா எலும்புகள் வெளித்தெரியும் எலும்புக்கூடு உருவம், குத்துக்காலிட்டு அமர்ந்து இருக்கும்’ வடிவத்தில் உள்ள குறியீடு, சிந்து சமவெளியில் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளது. கோப்பை வடிவத்திலும் சூலம் வடிவத்திலும், குத்திட்ட பிறை வடிவத்திலும் அமைந்துள்ள குறியீடுகளும் சிந்துசமவெளிக் குறியீடுகளில் காணப்படுபவை. சிந்துசமவெளி குறியீடுகளைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த சின்னம் தமிழகத்தில் முழுமையாக கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை. இதற்குமுன் முதுமக்கள்தாழி பானையோடுகளில் இவ்வகையான குறியீடுகள் ஓரிரண்டு தமிழகத்தில் கிடைத்துள்ளன. இக்குறியீடுதான் முழுமையாகக் கிடைத்துள்ளது. இவ்வகையில், தென்னிந்திய - வடஇந்திய வரலாற்றுத் தரவுகளில் இக்கண்டுபிடிப்பு மிக மிக முக்கியத்துவமிக்கது. இதன் மூலம், ஆரிய - திராவிட வரலாற்று முரண்கள் பலவற்றிற்கு விடை கிடைத்துள்ளது. இக்கண்டுபிடிப்பு மூலம் சிந்துசமவெளிப் பகுதியிலும் தென்னாட்டிலும் ஒரே திராவிட மொழியைப் பேசும் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

சிந்துசமவெளிக் குறியீடுகள் திராவிட மொழி பேசும் மக்கள் சார்ந்தவை என்பதை அஸ்கோ பர்போலா விரிவாக ஆய்வு செய்துள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்களும் இது குறித்து ஆய்வு செய்து அவை திராவிட மொழி பேசும் மக்கள் பயன்படுத்திய குறியீடுகள் என்கிறார். தமிழகத்தில் புதிதாகக் கிடைத்துள்ள சிந்துசமவெளிக் குறியீடுகள் மூலம் முன்னெழும்பும் விவாதங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

‘இந்தியா என்று இன்று நாம் வரைந்திருக்கும் வரைபடம் பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது. இதற்குமுன் இன்று நாம் ‘இந்தியா’ என்று கூறும் நிலப்பகுதியில், கறுப்புத் தோலைக் கொண்ட திராவிட இனத்தின் மூதாதையர்களான தொல்பழங்குடிகளே வாழ்ந்திருக்க வேண்டும். சிகப்புத் தோலைக் கொண்ட ஆரிய இனம் ஐரோப்பியப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இந்நிலப்பகுதிக்கு வந்திருக்கவேண்டும். இடம்பெயர்தல் என்பது மனித சமூக வரலாற்றில் இயல்பானதே. இவ்வரலாறு உலக அறிஞர்களால் சாதாரணமான செய்தியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். ஆனால், பிரித்தானியர்கள், இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை இந்திய முதலாளிகளிடம் கொடுத்துச் சென்ற பின்னர் வரலாறு மீண்டும் எழுதப்படுகிறது. இதிலிருந்து ‘பாசிசம்’ உருப்பெறுகிறது. ‘பாரதிய வித்யா பவன்’ சார்ந்தவர்கள் 1950களில் எழுதிய வரலாற்றிலிருந்து இப்பாசிசம் தொடர்கிறது. அண்மைக் காலங்களில் வெறிபிடித்துள்ளது.

மனித இனம் ஒரே இடத்தில் நீண்ட நெடுங்காலம் வாழும் ‘மண்ணின் மைந்தர்’ என்பதாலோ அல்லது பிறிதோர் இடத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தோர் என்பதாலோ விழுமியங்கள் தீர்மானிக்கப்படுவதில்லை. மானிடவியல் கண்ணோட்டத்தில், ‘மண்ணின் மைந்தர்’ என்று கூறுவது பாசிசம். ஆனால், இந்தியாவில் வாழும் ஆரிய இனம் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள், இயல்பான, சாதாரண வரலாற்றைத் திரிப்பதன் மூலம், பாசிசவாதிகளாகச் செயல்படுகிறார்கள். அவ்வகையான பாசிசத்தின் முகத்தைத் தோலுரிக்கவே இவ்வகையான விவாதங்கள் தேவைப்படுகின்றன. மற்ற வகையில், இன்றையக் கண்ணோட்டத்தில் ‘குடியேறி’, ‘மண்ணின் மைந்தர்’ எனும் சொல்லாட்சிகள் பொருளற்றவை.

அண்மைக்காலங்களில் இந்துத்துவா பாசிச சக்திகள் முன்னெடுக்கும் பல வரலாற்றுப் பொய்களை அம்பலப்படுத்த, தமிழகத்தில் கிடைத்துள்ள சிந்துசமவெளிக் குறியீடு எவ்வகையில் உதவும் என்பதே நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும்.

இந்திய வரலாறு என்பது, ‘சிந்து சமவெளி’ அகழ்வாய்வின் மூலமே விவாதிக்கப்படுகிறது. அதன் கால எல்லை கி.மு. 2600-1900 என்பது பலர் ஏற்றுக்கொண்ட வரையறை. இக்காலத் தொடர்ச்சியாக ‘வடஇந்தியா’ என்று இன்று கூறும் நிலப்பகுதியில், ஆரிய இனம் குடியேறியது. அவர்கள் பேசிய மொழி இந்தோ - ஆரியமொழி. இக்காலம் கி.மு. 1000 ஆண்டுகட்கு உட்பட்டவை. இதற்கான சான்றாக, வேத இலக்கியங்கள் கி.மு. (1000-500) அமைகின்றன. இதற்குப்பின் திராவிட, ஆரிய கலப்பு சார்ந்தே ‘இந்தியா’ என்று கட்டப்படும் பண்பாடு உருப்பெற்று வந்துள்ளது. சிந்துசமவெளியைச் சேர்ந்த திராவிட இனத்தின் மொழியும் ஆரிய இனத்தின் மொழியும் வேறானவை. வேறுபட்ட பண்பாட்டு அணுகுமுறைகளைக் கொண்டவை. இவ்விரு இனக்கலப்பு என்பதே இந்தியாவின் சரித்திரம்.

ஆரிய இனம் சார்ந்த மொழிக்கலப்பில், தப்பித்து இருப்பது தமிழ் மட்டுமே. இதில் பெருமை ஒன்றுமில்லை. வரலாற்று உண்மை. இம்மொழி பழமையானது. இதன் தொடர்ச்சி தென்னிந்தியா முழுவதும் காணப்படும் மக்கள் குழுசார்ந்தும், மொழிகள் சார்ந்தும், தொல்பொருள் ஆய்வுகள் சார்ந்தும் உறுதிப்படுகிறது. ஆனால் இதற்கு மாற்றாக வேதகாலமே இந்தியாவின் தொடக்கம் என்றும் வேதங்களில் பேசப்படும் செய்திகள் சார்ந்து மட்டுமே இந்தியாவின் அடையாளத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றும் இன்றைய இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாசிச சக்திகள் செயல்படுகின்றன. இவர்கள் கட்டமைக்கும் சரஸ்வதி நதிப் பண்பாடு, வேதங்கள் பற்றிய கால மதிப்பீடு, இவை சார்ந்து உருப்பெற்ற வைதிக இந்துத்துவம் ஆகிய பாசிசப் பொய்கள், இப்போது கிடைத்துள்ள தென்னிந்திய சிந்து சமவெளிக் குறியீடுகள் மூலம், தகர்ந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பின்புலத்தில், மயிலாடுதுறையில் கிடைத்துள்ள சிந்துசமவெளிக் குறியீடுகளைக் கொண்ட புதிய கற்காலக் கோடரி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பின்புலத்தில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, தாமஸ். டிராட்மென், ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், கமில் சுவலபில் ஆகிய அறிஞர்களின் ஆய்வுகளை மேலும் மேலும் முன்னெடுப்பதின் மூலம் இந்துத்துவப் பாசிசத்தின் வரலாற்றுப் பொய்மைகளை அம்பல்படுத்தலாம்.

படம்: நன்றி தினமலர்

Pin It