ராயன், என்று நண்பர்களாலும் தோழர்களாலும் அழைக்கப்பட்டவரும், சிங்கமாமா என்று என் குழந்தைகளாலும் அழைக்கப்பட்ட சிங்கராயர் (வயது 53) என்ற அற்புதமான தோழர் இன்று நம்மிடையே இல்லை. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக மட்டும் பலராலும் போற்றப்பட்ட தோழர் சிங்கராயரின் பல்வேறு பரிமாணங்களை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ராயர் ஒரு சிறந்த பாடகர் என்பதும், மென்மையான பழைய தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடக்கூடியவர் என்பதும் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சமூக விழிப்புணர்வுப் பாடல்களையும் இன எழுச்சிப் பாடல்களையும் மிகவும் உருக்கமாகவும் எழுச்சியோடும் அவரோடு நம் தோழர்கள் மதுரை தெருக்களில் பாடிய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாக, 1987ல் இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்கள் மீது இலங்கையில் நடத்திய கொடுமைகளை அம்பலப்படுத்தி தமிழக இளைஞர் மன்றத்தின் சார்பாக சிங்கராயரும் நம் தோழர்களும் பரப்புரையில் ஈடுபட்ட போது ஈழத்தமிழ் அகதிகளே இங்கு வந்து பரப்புரை நிகழ்த்துகின்றார்களோ என்று எண்ணும் அளவுக்கு அவர்களுடைய பரப்புரை இருந்தது என்றால் மிகை இல்லை.

சிங்கராயரின் இந்த இன எழுச்சி ஈடுபாடானது தற்செயலான ஒன்றல்ல. வளமான மார்க்சிய புரிதலின் அடிப்படையில் தேசிய இனச்சிக்கலை, சாதியச் சிக்கலை, பெண்ணிய விடுதலைக் கோட்பாட்டை, சூழலியலை, ஏன் விரிந்த பொருளில் பண்பாட்டுப் புரட்சியை உள்ளடக்காத சமூக விடுதலை தமிழ்ச் சூழலில் அர்த்தமற்றது என்ற உணர்வின் / தேடலின் நீட்சியாகத்தான் அவருடைய வாழ்வும் பணியும் இருந்தது. இந்த வேட்கையுடன்தான் அவர் அனைத்திந்திய புரட்சி என்பது பல்வேறு தேசிய இன விடுதலைப்புரட்சிகளின் தொகுப்பே என்ற நிலைப்பாட்டை முன்வைத்த CPI (M) என்ற அமைப்புடன் இணைத்துக் கொண்டு 1982 முதல் 1990 வரை தமிழ் தேசியக் குழுவின் உறுப்பினராக இருந்து மார்க்சியப் பார்வையில் தமிழ் தேசியக் கருத்தியலை செழுமைப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தார். அந்த நாட்களில் நிகழ்த்தப்பட்ட விரிவான விவாதங்களின் அத்தனைக் குறிப்புகளையும், ஆவணங்களையும் தொகுத்து வெளியிடுவதற்கு பெரும்பங்காற்றியவர் சிங்கராயர்தான். பின்னர், தேசிய இனச்சிக்கலிலும் அமைப்பு ஜனநாயக கோட்பாட்டிலும் அனைத்திந்திய கட்சியுடன் எழுந்த கருத்து வேற்றுமைக் காரணமாக பெருமபான்மையானத் தோழர்கள் அமைப்பிலிருந்து விலகி தனியே செயல்படத் தொடங்கினர்.

சிங்கராயர் எழுத்துப்பணியை தமது முழுநேரப் பணியாகக் கொண்டது இந்த காலகட்டத்தில்தான். இப்படி எழுதியும் மொழியாக்கம் செய்தும் வெளியான பல்வேறு படைப்புகளின் அடையாளம் காணப்படாத கர்த்தாவாக சிங்கராயர் இருந்தார். சிங்கராயரின் மொழியாக்கப்பணி என்பது சாதாரணமானது அல்ல. மிகவும் தேவையானன பல்வேறு அரிய படைப்புகளை தமிழில் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர்.

மகாத்மா புலே, தேவி பிரசாத் சட்டோப்பாத்தியாயா, டி.டி.கோசாம்பி, சுனிதி குமார் கோஷ், பால் ஸ்வீசி, ரெஜி தேப்ரே டாம் பாட்டமோர், இர்ஃபான் ஹபீப் போன்ற மிகச் சிறந்த ஆய்வாளர்களின் / மேதைகளின் அரிய படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்த பெருமை அவரைச் சாரும். ஆங்கிலத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஓஷோவின் உரைகளை எளிய/அழகிய தமிழில் தந்தவர் சிங்கராயர். ஆழமான கருப்பொருளைக் கொண்ட பெரிய நூலை சுருக்கமாக தமிழில் தரவேண்டுமென நண்பர்கள் விழைந்தால் அந்த நூலின் சாரத்தைப் புரிந்து கொண்டு அதனை இலகுவாக, அழகாக சுருக்கித் தரும் வல்லமைப் படைத்தவர் சிங்கராயர்.

மொழியாக்கம் செய்யும் போது மூல நூலின் உட்கருத்து சிதையாமல், சுவை குன்றாமல் அழகு தமிழில் (தனித் தமிழில்) படைக்க வேண்டும் என்பதற்காக பொருத்தமான சொற்களுக்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி / உழைப்பு மிகவும் பிரமிப்பானதாகும். (சில பதிப்பாளர்கள் அவருடைய தனித் தமிழ் நடையை ஏற்காமல் அவர்களுடைய வெளியீட்டுக் கொள்கைக்கு ஏற்ப அவருடைய படைப்புகளை திருத்தி வெளியிட்டதும் உண்டு). இருப்பினும், மொழிப் பெயர்ப்புக்கும் மொழியாக்கத்திற்கும் (Transliteration, Translation and Transcreation) உள்ள வேறுபாட்டினை நன்கு அறிந்து தமது படைப்புகளை படைத்துவரும் வெகுச் சிலரில் தலைச் சிறந்தவராக இருந்தார் சிங்கராயர்.

மருத்துவத் துறையில் சிங்கராயரின் பயணத்தை குறிப்பிடாமல் இருக்க இயலாது. ஓமியோபதி மருத்துவத்தை கற்றறிந்து கல்பாக்கத்திலும், சத்தியமங்கலத்திலும் அவர் ஆற்றிய சேவையை அங்குள்ள தோழர்கள் மறக்க இயலாது. (நோயிலிருந்து குணமானவர்களும் அவருடைய கடுமையானச் சொல்லுக்கு ஆளானவர்களும் அவரை மறக்கமாட்டார்கள். இந்த மென்மையான மனிதருக்குள் இத்தனை கோபமா / அகந்தையா என்று எண்ணி வியந்தவர்களும் உண்டு)

மொழியாக்கத்திற்காக அவர் மேற்கொண்ட விரிவான வாசிப்பும் விவாதங்களும், அவர் மேற்கொண்ட சமூகப் பணிகளும் அவரை ஓர் அசலான சிந்தனையாளனாக உருவாக்கியது. இதற்கு எஸ்.என். நாகராசன், ஞானி, பி.என்.ஆர். எஸ்.வி.ராஜதுரை, மதுரை டேவிட் பாண்டியன் போன்ற மார்க்சிய அறிஞர்களின் / உணர்வாளர்களின் ஆளுமைக்கு உடன்பட்டும் எதிர்வினைப்பற்றியும் அவர்களோடு இணைந்தும் கற்ற மெய்யியல் / அரசியல் கல்வியும் ஒரு காரணமாகும். இக் காரணத்தினாலேயே அவருடைய வருகை பல இடங்களில் விரும்பத்தக்கதாக இருக்கவில்லை. எல்லா படைப்பாளிகளுக்கும் இருக்கும் ஒரு விலகல் அணுகுமுறை காரணமாக பல நண்பர்களை அவர் கடிந்து கொள்வதும், அவரை பிறர் கடிந்து விலகிச் செல்வதும் அவ்வப்போது நிகழத்தான் செய்தன.

கோவையில் நடைபெற்ற அனைத்து மனித உரிமைச் சார்ந்த, ஜனநாயக, இன உரிமை காப்பதற்கான, ஆர்ப்பாட்டங்களில், கலந்துரையாடல்களில், கூட்டங்களில், இலக்கிய சந்திப்புகளில், பண்பாட்டு நிகழ்வுகளில் தவறாமல் தம் மனைவியோடு கலந்து கொண்டு தம் இருப்பை தொடர்ந்து பதிவு செய்த ஒரு சிலரில் சிங்கராயரும் ஒருவர்.

ஆழ்ந்த சிந்தனையும் வாசிப்பும் உடைய இவர் எப்படி ஒரு வெகுளித்தனமான படிப்பறிவற்ற ஒருவரை தம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள முடிந்தது என பலருக்கும் வியப்பாக இருந்திருக்கலாம். அவருடைய வாழ்க்கைத் துணை (தோழியர் ராஜம்) இறந்த தம் கணவரை பார்த்து இனி எப்பப்பா உன்ன பாப்பேன்? என்று கதறி அழுததும், அவருடைய உடல் தண்ணீரால் குளிப்பாட்டப்பட்ட போது பச்ச தண்ணீர் உன் உடம்புக்கு ஒத்துக்காதே என்று கதறியதைப் பார்த்து கலங்காதவர்கள் இல்லை. அவர்களிடையே இருந்த அந்த உறவை அவருடைய கதறல் பறைசாற்றியது. சிங்கராயரின் பணிக்கு ராஜம் பெரிதும் துணையாக இருந்தார் என்பது கண்கூடு.

சிங்கராயர் தம் பணியை தொடர எத்தனையோ நண்பர்கள் விளம்பரம் இன்றி உதவியிருக்கின்றனர். நண்பர்கள் செளந்தர், நடராசன், பேரா. தங்கவேலு ஆகியவர்களின் பங்களிப்பை இங்கே குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். தம் வாழ்நாளில் உடன் இருந்த தன் துணைவிக்கு ஏழ்மையை மட்டுமே விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், சிங்கராயரின் துணைவிக்கு உதவிக்கரம் நீட்டுவது சமூக அக்கறை உள்ள அனைவரது கடமையாகும்.

சிங்கராயர் ஒரு தனியாளாக பயணித்தார் என்று நமது தோழமையை தன்னாய்வு செய்வதா? அல்லது அவர் தமக்கான பாதையை தாமே செதுக்கிக் கொண்டார் என்று பெருமை கொள்வதா? அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் மட்டுமின்றி, இரங்கல் கூட்டத்தில் தோழர் ஞானி குறிப்பிட்டது போல தமிழுக்கே ஏற்பட்ட ஒரு மாபெரும் இழப்பாகும்.

Pin It