கவிஞன் காதலன் மற்றும் பைத்தியக்காரன் என்ற புகழ்பெற்ற மேற்கோளோடு ஒப்புநோக்கத் தகுந்தது. இந்தக் கவிஞன் மொழிப்பெயர்ப்பாளன் மற்றும் சிறு பத்திரிகை ஆசிரியன் என்ற தொடர். கவிஞனாக இருப்பது பைத்திய நிலையின் ஆரம்பம். மேகத்தில் சஞ்சரிக்கும் நினைவுகள், மொழியுடனான ஓயாத சல்லாபம் மொழிபெயர்ப்பாளனாக இருப்பது சற்றே முற்றிய நிலை. ஒரே சமயத்தில் மூல மொழி இலக்கு மொழி எனும் கண்ணுக்குத் தெரியாத தாட்சண்யமற்ற இரு கிங்கரர்களுடன் சமருக்கு நிற்றல். பைத்தியத்தின் உச்ச நிலை சிறுபத்திரிகை ஆசிரியனாக இருப்பது. இது பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆனால் சிறுபத்திரிக்கை ஆசிரியனாக இருப்பதில் ஒரு அனுகூலம் உண்டு. இரண்டு அல்லது மூன்றாவது இதழிலேயே பைத்தியம் தெளியத் தொடங்கிவிடும் என்பதுதான் அது. ஆனால் முதலிரண்டு நிலைகளைத் தொட்டவர்களை தன் வாதைகளை அனுபவிக்காமல் பைத்தியத் தன்மை ஒரு போதும் விடுவதில்லை.
அங்கதம் விலக்கிப் பார்க்க இங்கு பைத்தியத் தன்மை என்பதனை தீவிர ஈடுபாடு என நாம் கொள்ளலாம். சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த சி. மணி அவர்கள் ஒரு கவிஞராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் சிறுபத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இம்மூன்று நிலைகளிலும் தீவிரமாக இயங்கியமைக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் ஆக்கங்கள் சாட்சி. ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற வகையில் அவரது மொழிபெயர்ப்புகள் குறித்து மட்டும் எனது கருத்துக்களை இங்கு முன் வைக்க விரும்புகிறேன்.
பார்த்தேன் வெள்ளைப் பூவேலை
வார்த்த சோளை முதுகை
தெரிந்தது முகமே
சி. மணி என்றதும் என் நினைவுக்கு வருவது அவரது இந்தக் கவிதை வரிகள்தாம் கவிதையில் இருண்மை என்ற தலைப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பு நான் வாசித்த ஒரு கட்டுரையில் இவ்வரிகளைப் பயன்படுத்தியிருந்தேன். பிறகுதான் அவரது மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சி. மணி அவர்களது மொழிப்பெயர்ப்புகளைப் பற்றிப் பேசும் முன் பொதுவாக மொழிப் பெயர்ப்புகள் பற்றி சில வியங்கள்.
குறை சொல்வோர் ஏராளம், ஆதரிப்போர் யாருமில்லை, சரியாகச் செய்தவற்றை நினைவு கூறுவோர் ஒருவருமில்லை. ஆனால் தவறுகளை மறக்கவோ யாரும் தயாரில்லை என்கிறது மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய ஒரு பழமொழி. மொழிபெயர்ப்பு இரண்டாந்தர படைப்புச் செயல்பாடாகக் கருதப்படும் தமிழ்ச் சூழலில் இது மிகப் பொருத்தப்பாடுடைய ஒரு பழமொழி. மொழி பெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி இங்கு வெகு அரிதாகவே பேசப்படுகின்றது. அப்பேச்சுக்களும் குறைகளைப் பட்டியலிடவே அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மொழி பெயர்ப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் இங்கு கிடைப்பதில்லை.
இது போன்ற எதிர்மறையான சூழலில் இருந்தபடி தொடர்ந்து இயங்க பெரும் அர்ப்பணிப்பு உணர்வும் பலன் எதிர்பாரா நோக்கும் தேவைப்படுகிறது. அவ்வாறு இயங்கியவர் சி. மணி. சி. மணியினது மொழி பெயர்ப்புத் தேர்வுகள் தனித்துவமுடையவை. தாவோ தே ஜிங், முன்னிலை ஒருமை (உதய நாராயண சிங்கின் மைதிலி மொழிக் கவிதைகள்) மற்றம் ஃப்ராய்ட், பெளத்தம், புத்தம் (மிகச் சுருக்கமான அறிமுகம் நூல் வரிசை) ஆகியன அவரது மொழிப்பெயர்ப்புகளில் குறிப்பிடத் தகுந்தன. எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது அவரது வாழ்நாளுக்கு அவர் மிகக் குறைவான மொழிப் பெயர்ப்புகளையே செய்துள்ளார். ஆனால் அவர் மொழி பெயர்த்த படைப்புகளின் முக்கியத்துவம், மூலத்தில் அவற்றின் கடினத் தன்மை, மொழிப்பெயர்ப்பின் தரம் மற்றும் வாசிப்புத் தன்மை ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் இந்த எண்ணிக்கைக் குறைவு ஒரு பொருட்டில்லை என்பது தெரிய வரும்.
2002ம் ஆண்டு க்ரியா வெளியீடாக வந்த தாவோ தே ஜிங் பைபிளுக்கு அடுத்து உலகில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நூல் வாசிக்க எளிதாக இருக்கும் இந்நூல் மொழிபெயர்க்க அவ்வளவு எளிதானது அல்ல. தாவோ பற்றிய கிட்டத்தட்ட பதினைந்து நூல்களை வாசித்து ஒப்பிட்டு பாட பேதங்கள் பார்த்து இறுக்கமான நடையில் சிக்கலான முடிச்சுகள் கொண்டமைந்த இந்த நூலைத் தமிழில் கொண்டுவர எவ்வளவு பொறுமையும் அர்ப்பணிப்பு உணர்வும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். நூலின் பின் - உள்ளட்டைக் குறிப்பு சொல்வது போல் உலகின் பல்வேறு பண்பாடுகளில் காணும் மறைஞானச் சிந்தனைகளைக் கற்றறிந்தவர் சி.மணி என்பதும் திறம்பட்ட இம் மொழிப்பெயர்ப்புக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.
நன்றாக மூடத் தெரிந்தவனுக்குச்
சட்டம், தாழ்பாள் எதுவும் தேவைப்படுவதில்லை
என்றாலும் அவன் மூடிய பிறகு
அந்தக் கதவைத் திறப்பது சாத்தியமில்லை
தாவோ தே ஜிங் கில் காணும் வரிகள் இவை.
தாவோ தே ஜிங்கை வாசகன் தடையின்றி வாசிக்க உதவுவதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக சி. மணி நினைக்கவில்லை. தாவோ தே ஜிங் என்பதை சரியாக உச்சரிக்கும் விதத்தையும் அவன் தெரிந்திருக்க வேண்டும் என்ற கரிசனம் அவருக்கு. நூலின் பின்னுரையில் அவர் எழுதுகிறார். தாவோ என்பதில் வரும் தா வை தாமோதரன் என்ற பெயரில் வரும் தா மாதிரி உச்சரிக்க வேண்டும். தே என்பதை தேசம் என்பதில் வருகிற தே மாதிரி ஒலிக்க வேண்டும்.
அடுத்து அடையாளம் வெளியிட்ட மிகச் சுருக்கமான அறிமுகம் நூல் வரிசையில் சி. மணி அவர்கள் மொழிபெயர்த்த மூன்று நூல்கள் ஃப்ராய்ட், பெளத்தம், மற்றும் புத்தர். ஃப்ராய்ட் மொழிபெயர்ப்பு என்றதுமே கட்டற்றுப் பெருகி வரும் உளவியல் கலைச்சொற்கள்தான் என் நினைவுக்கு வந்தன. துறைசார் அறிவின் பாலமைந்த மொழிப் பெயர்ப்புகள் என்றாலே இந்தக் கலைச்சொற்கள் ஏற்படுத்தும் மலைப்பும் சலிப்பும் தவிர்க்க இயலாதவை. இதன் காரணமாகவே இம்மாதிரி நூல்கள் பக்கம் போக மொழிபெயர்ப்பாளர்கள் யோசிப்பர். இருநூற்று நாற்பத்தெட்டு பக்கங்கள் கொண்ட ஃப்ராய்ட் நூலில் நூற்று ஐந்து அடிக்குறிப்புகள் காணப்படுவதன் யதார்த்தத்தை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
மறுமலர்ச்சிக் கால வரலாற்றாசிரியரான அந்தோணி கிராஃப்டன் என்பவர் எழுதிய அடிக்குறிப்புகள், ஓர் ஆர்வமூட்டும் வரலாறு என்ற நூலில் சாமானிய வாசகனை வெருட்ட, மிகவும் கற்றறிந்த படைப்பாசிரியன் மேற்கொள்ளும் தந்திரம்தான் அடிக்குறிப்புகள் என்ற கருத்து தொனிக்கும். இந்நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கான தலைப்பே மேதமை துயரமிக்க வரலாறு என்பதாகும். இந்நூலைப் பற்றிய சுவாரஸ்யமான வியம் என்னவென்றால் நூலின் மூன்றில் ஒரு பகுதி அடிக்குறிப்புகள். ஆனால் மொழிபெயர்ப்பில் அடிக்குறிப்புகளின் இடம் இன்றியமையாதது, அதுவும் சிக்கலான உளவியல் போன்ற துறைசார்ந்த நூல்களை மொழிபெயர்க்கும்போது ஏராளமான அடிக்குறிப்புகள் தருவது வாசிப்பில் இடையூறு உண்டாக்கிவிடுமோ, நூலின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடுமோ போன்ற கவலைகளைத் தள்ளிவிட்டு சொல்ல வந்ததை குறையின்றி வாசகனுக்குச் சொல்ல வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுவதே நேர்மையான மொழி பெயர்ப்பாளனுக்குரிய பண்பாகும். அவ்வகையில் சி. மணி அவர்களின் ஃப்ராய்ட் மொழி பெயர்ப்பு நேர்மையான, சமரசம் செய்துகொள்ளாத ஒரு மொழிபெயர்ப்பு என்றே சொல்லவேண்டும். பெளத்தம், புத்தர் ஆகியனவும் மிகச் சிறப்புற சமரசமற்று மொழி பெயர்க்கப்பட்ட நூல்களே.
ஆழ்ந்த மொழியறிவு கொண்ட மொழி பெயர்ப்பாளன் தனது மொழியறிவு மற்றும் துறையறிவு சார்ந்து கலைச்சொல்லாக்கங்களை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல் தானே அவற்றை உருவாக்கவும் தலைப்படுகிறான். தமிழ்க் கலைச்சொற்களில் பலவற்றைப் புழக்கத்திலிருக்கும் வடிவத்திலேயே பயன்படுத்தினாலும், சில இடங்களில் மாறுபடவும் செய்கிறார் சி. மணி. உதாரணமாக ஆழ்மனப் படிமம் என்பதனை தொல்மனப்படிமம் என்றும் ஓரினப் புணர்ச்சி ஓரினப் பால்மை ஆர்வம் என்றும் குறிப்பிடுவது மற்றும் சோர்வச்சம் என்ற புதிய கலைச்சொல்லாக்கம் தருவது.
மிகவும் சிக்கலானதும் மொழிபெயர்க்கச் சவால் விடக்கூடியதுமான படைப்புகளையே சி. மணி அவர்கள் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்துள்ளார். அல்லது மொழி பெயர்க்கக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். தாவோ தே ஜிங், ஃப்ராய்ட், பெளத்தம், மற்றும் புத்தர் போன்ற நூல்கள் மூலமொழி மற்றும் இலக்கு மொழியில் பெற்றிருக்கும் அறிவைக் கொண்டு மட்டுமே மொழி பெயர்க்க இயலாதவை. மேற்குறிப்பிட்ட நூல்கள் அவை இயங்கும் தத்துவம், சமயம் மற்றும் உளவியல் சார்ந்த தளங்களில் ஆழமான புரிதலை வேண்டி நிற்பவை. அத்துடன் பொறுமை, விடா முயற்சி, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தாலொழிய இவற்றை சிறப்புற மொழி பெயர்ப்பது இயலாத காரியம். மிகக் குறைவான எண்ணிக்கையில் மொழிபெயர்ப்புகள் செய்திருந்தாலும், காலம் உள்ளவரை பேசப்படுவதன் ஆக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறார் சி. மணி. இளம் மொழி பெயர்ப்பாளர்கள் அவரின் மொழி பெயர்ப்புகளிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. சி. மணி அவர்களின் மறைவில் ஒரு கவிஞர், சிறுபத்திரிகை ஆசிரியரை தமிழிலக்கியம் இழந்திருப்பதை விடவும் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரை அதிகம் இழந்திருக்கிறது. சி. மணி அவர்கள் மொழி பெயர்த்த சீன ஜென் கவிதையுடன் முடிக்கிறேன்.
வரும்போது போகும்போது விட்டுச்
செல்வதில்லை காட்டு நீர்பறவை
ஒரு சுவடு
தேவையும் இல்லை அதற்கு
ஒரு வழிகாட்டி.