டி.சி. ஜேக்கப் - தமிழில் அஜிதா

1947-க்குப் பிந்தைய நவகாலனியச் சகாப்தத்தில் வயநாடு நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான பெரும் வன்முறை வெடிப்பை பதிவு செய்தது. 1970-களின் தொடக்கத்தில் இம்மாவட்டம் நக்சல்பாரிகளின் தளமாக பிரசித்தி பெற்றிருந்தது. 1960 - 70 களில் மேற்கு வங்காளத்தில் வெடித்தெழுந்த நக்சல்பாரி இயக்கம் இந்தியா முழுவதும் பரவியது. வயநாடும் அவற்றுள் ஒன்று.!

1960-களின் இறுதியில் குடியேறிகள், வணிகர்கள் மற்றும் பெருந்தோட்டக்காரர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து இப்பகுதியின் தன்மையை மாற்றியமைத்து இங்குள்ள ஆதிகுடிகளை விளிம்பிற்கு தள்ளினர். 1940-களில் சீனத்தின் மரபுக்கு ஏற்ற வகையில் நடந்தேறிய மாவோவியப் புரட்சியின் தாக்கத்தால் 1960-களில் இங்கு எழுந்த விவசாயிகளின் கிளர்ச்சி. உண்மையில் சேகுவேரிய சாகசப் புரட்சிக் கோட்பாட்டையே பின்பற்றியது. புரட்சிப் போக்கின் முதல் பொறியாக வயநாட்டின் புல்பள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. புல்பள்ளி ஆதிவாசிகளின் பகுதி. உண்மையில் ஆதிவாசிகளால் வடிவமைக்கப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்படவில்லை. எனினும் அவர்கள் ஈவிரக்கமற்ற வகையில் கண்மூடித்தனமாக ஒருவர் மீதமில்லாமல் காவல்துறையால் தாக்கப்பட்டனர். புரட்சிக்கான நுட்ப ரீதியாக இதைப் பார்க்கப் போனால் காவல் நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தியதும், ஒரு சில காவலர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றியதும் தோல்விகளாகவே கொள்ள முடியும். ஆனால் வயநாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அரசின் அடக்குமுறையை ஊடுருவித் தகர்க்கும் இடதுசாரிப் போராளிகளின் புதிய அரசியல் சகாப்தத்தை அது தொடங்கி வைத்தது என்பதில் வெற்றியடைந்தது.

இந்தச் சமயத்தில்தான் இடதுசாரிப் பேராளிகள் நாடு முழுவதும் - குறிப்பாக மேற்கு வங்காளத்தில் - தனிநபர் அழித்தொழிப்புவாதத்தை முன்வைத்தனர். அதாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நடத்தும் ஆயுதப் போராட்டத்தை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது, பெரும் நகர்ப்புறங்களைச் சுற்றிலும் உள்ள கிராமப்புறங்களை விடுவிப்பது, மற்றும் அரசுக்கெதிரான இத்தன்மையிலான மக்கள்போரை தொடர்ந்து நடத்திடுவது ஆகியவையே சிறந்த திசைவழியெனக் கருதினர். அனைத்திந்திய அளவில் வங்கத்தின் சாருமஜ÷ம்தார் இக்கருத்தியலின் முன்னோடியாக இருந்தார். இச்சமூக அமைப்பை அரைக்காலனிய - அரை நிலப்பிரபுத்துவ தன்மையிலானது என வரையறுத்த அவர், தனிநபர் அழித்தொழிப்புடன் கூடிய போர்பாதை என்பது மக்கள்போரை வடிவமைக்கும் தந்திர உத்தி என முன்மொழிந்தார். கோட்பாட்டளவில் கிராமப்புறங்களை மையப்படுத்திய ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் அது வெகுவிரைவிலேயே கல்கத்தாவை மையமாகக் கொண்ட நகர்ப்புற ஆயுதப் போராட்டமாகவும் உருவானது.

வயநாட்டில் இடதுசாரிப் பாராளுமன்றவாதிகளிடம் இருந்து விலகி வந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட வர்க்கீஸ் கைது செய்யப்பட்டு பின்பு மிருகத்தனமாகக் கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் வயநாட்டை புரட்சிகர இடதுசாரிகளின் மறுபெயராக்கியது. அரைக்காலனிய - அரைநிலப்பிரபுத்துவ நாட்டில் கொரில்லா போர்க்குழு மண்டலங்களை ஏற்படுவதற்கு அடிப்படையாக ஒன்றாக நக்சல்பாரிகள் கருதுவது அதன் தனித்தன்மை பொருந்திய நிலப்பகுதிகளைத்தான். வயநாடு அதற்கு ஏற்றதாக இருந்தது. அரசு அங்கு ஏற்படும் மாற்றங்களைத் தீவிரமாகக் கண்காணித்ததோடு சாலைகளை அமைப்பது மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டது. உண்மையில் நக்சல்பாரிகளின் செயல்பாடுகள் வயநாட்டை அணுகக்கூடிய மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையை மிகவும் எளிதாக்கியது.

காவல்நிலையத்தின் மீதான முந்தைய தாக்குதல்களும், அதற்குப் பின்னர் நடைபெற்ற நிலப்பிரபுத்துவ சக்திகள் மற்றும் காவல்துறை உளவாளிகள் ஆகியோர் மீதான தாக்குதல்களும் பொதுவில் நக்சல்பாரிகளின் நடவடிக்கை எனச் சொல்லப்பட்டாலும் அவை வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடு கொண்டவையாக இருந்தன. காவல் நிலையத்தின் மீதான முந்தைய தாக்குதல்கள் இயல்பான நகர்ப்புறக் கொரில்லாக்களின் நடவடிக்கையாக இருந்தது. அதே வேளையில் பிந்தைய தாக்குதல்கள் இயல்பான நகர்ப்புறக் கொரில்லாக்களின் நடவடிக்கையாக இருந்தது. அதே வேளையில் பிந்தைய தாக்குதல்கள் கிராமப்புற இயல்பு மற்றும் தேவையான அளவு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்ததோடு அரசுபடைகளோடு நேரடியாக மோதாத தாக்குதல்கள் ஆகும். வர்க்கீஸ் ஒரு மாவோவியப் புரட்சியாளர். அதே வேளையில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய தலைவர்கள் சாகசக் கோட்பாட்டாளர்கள். இதன் மூலம் விவசாய/ஆதிவாசி இயக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு தெள்ளத்தெளிவாகிறது. மேலும் கிராமப்புற விவசாயப் போராளிகள் அரசு எதிர் நடவடிக்கைகளை அப்படியே பின்பற்றவும் இல்லை. அவர்கள் வடிவம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய இரண்டையும் தங்கள் வர்க்கக் கூட்டினுள்ளும் பொருத்திப் பார்த்தனர். சமூகத்தில் கடுமையாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஆதிவாசிகளின் விடுதலையை இலக்காகக் கொண்டே வர்க்கீஸ் செயல்பட்டார். அதனால்தான் இன்றும் அவர் ஆதிவாசிகள் தங்கள் தலைவர்களை அழைக்கப் பயன்படுத்தும் மரியாதைக்குரிய சொல்லான "பெருமான்" எனும் பெயரால் நினைவு கூறப்படுகிறார்.

அவரது அணுகுமுறையிலுள்ள சாதக - பாதகங்கள் விவாதிக்கப்பட வேண்டியவையே! ஆனால் ஆதிவாசிகளின் உணர்ச்சிக் கூறுகளை வெளிப்படுத்திய விதத்தில் அவர் தவறேதும் இழைக்கவில்லை. இன்றும் கூட எந்த ஒரு ஆதிவாசிப் போராளியின் எதிர்ப்பும் உடனடியாக நக்சல்பாரிகளின் செயல் அல்லது நக்சல்பாரிகளின் தூண்டுதல் என்று உண்மைக்கு மாறாகப் பதிவு செய்யப்படுகிறது. ஆயினும் இது அரசியல் அமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச உரிமைகளை ஆதிவாசி இயக்கங்கள் பெறுவதற்குத் தடையை ஏற்படுத்துகிறது. நக்சலியம் அரசின் அடக்குமுறைக்குத் தோதான ஒரு கருவியாக ஆகியுள்ளது. வயநாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் எங்கெல்லாம் போராளி இயக்கங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் போராடுகிறதோ அங்கெல்லாம் இதைக்காண முடியும்.

வயநாட்டு ஆதிவாசிகளிடையே புதிய அரசியல் விழிப்புணர்ச்சி எழுந்தும், அதற்குக் காரணமான வர்க்கீஸ் இறந்தும் இன்றைக்குச் சற்றேறக்குறைய 30 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக அது பல எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் சந்தித்து வருகிறது. அதியகுடியைச் சேர்ந்த (ஆதிவாசிகளுக்குள் உள்ள படியமைப்பு நிலையில் தாழ்ந்த நிலையில் உள்ள குடி) அடிப்படைக் கல்விக்கூடப் பயிலாத சி.கே.ஜானு அதன் முக்கியமான, புகழ்பெற்ற தலைவர் ஆவார். இலக்கண ரீதியாக அதிய என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள். ஆதிவாசிகளின் புத்தெழுச்சி அவர்களின் நீண்டநாள் கோரிக்கையான நிலம் குறித்து அவர்களை அணிதிரளச் செய்தது.

வர்க்கீஸினால் தலைமையேற்று நடத்தப்பட்ட ஆதிவாசிகளின் கலகம்தான் கேரளச் சட்டம் 1975-ஐ (நிலம் பெயர்மாற்றத் தடைச்சட்டம் மற்றும் நில மீட்புச் சட்டம்) கொண்டு வரக் காரணமாக அமைந்தது. உயர்நீதிமன்றம் 1993 ஆம் ஆண்டில் இதை நடைமுறைப்படுத்த உத்திரவிட்டிருந்தும் அதற்கு மாறாக இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

1975-இல் இச்சட்டம் கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ச்சியாக அமைந்த அரசுகள், எந்தவகையிலாவது இச்சட்டத்தை நீக்கிவிட வேண்டுமென்று 1999 முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. சட்டமன்ற அலகுகளைக் கொண்டு அதை பலவீனப்படுத்தின. இவ்வழக்கு தற்போது உச்சநீதி மன்றத்தில் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. 1990களின் இறுதியாண்டுகளில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதே வயநாட்டு ஆதிவாசிகளுடையது மட்டுமல்ல மாநிலத்தின் பிறபகுதி ஆதிவாசிகளின் கூக்குரலாகவும் இருந்தது. இச்சட்டத்தின் மிக முக்கியமான கூறு கைமாற்றித்தரப்பட்ட ஆதிவாசி நிலங்களை மீட்டுத்தரும். 1975-இல் இருந்து கொடி மற்றும் கட்சி வேறுபாடின்றி அனைத்து மைய நீரோட்ட அரசியல் கட்சி அரசுகளின் இரக்கமற்ற கொடிய மனப்போக்குகளை எதிர்கொண்ட பின்னர் ஆதிவாசிகள் மீண்டும் தங்களது நில உரிமைப் போராட்டங்களைத் தொடங்கினர். ஆகஸ்ட், 30, 2001-ஆம் ஆண்டு மாநில தலைமைச் செயலகம் மற்றும் மாநில முதலமைச்சர் வீட்டின் முன் சி.கே. ஜானுவின் தலைமையில் அமைந்த "ஆதிவாசி சரம சமிதி" சத்தியாக்கிரக போராட்டத்தைத் தொடங்கியது. மாநிலத்தின் தலைநகரத்தில் நூற்றுக்கணக்கான ஆதிவாசிப் பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் திரண்டனர். சத்தியாக்கிரகம் நடைபெற்ற இடங்கள் முழுவதும் அகதிகள் முகாம்களாக மாறியது. சாதகமான ஒப்பந்தத்திற்கு வராதவரை அம்முகாம்கள் ஒன்றுகூட கலைக்கப்படாது என எவ்வித அய்யத்திற்கும் இடமின்றி போராட்டத் தலைவர்கள் அறிவித்தனர்.

தொடக்கத்தில் இப்போராட்டத்தை அரசியல் கட்சிகளும், அரசும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆதிவாசிகள் தங்கள் போராட்டக் களத்தை "ஆதிவாசி கோத்ர மகாசபா" என்ற பதாகையின் கீழ் விரிவாக்கியவுடன் அரசு தன் பிடிவாதத்தைத் தளர்த்தி இறங்கி வந்தது. கட்சிசாரா ஜனநாயக அமைப்புகள், மாநிலம் முழுவதிலும் உள்ள முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற அறிவு ஜீவிகள் ஆகியோர் அளித்த ஆதரவும், காட்டிய உறுதியும் காட்டுத் தீயெனப் பரவி அரசை பேச்சு வார்த்தைக்கு இறங்கிவரப் பணித்தது. அந்நேரத்தில் ஆதிவாசிகளின் போராட்டந்தான் அரசுக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. இறுதியாக அக்டோபார் 16, 2001-இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆதிவாசிகளின் கோரிக்கைகளை கொள்கையளவில் அரசு ஏற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து அகதிகள் முகாம்கள் கலைக்கப்பட்டன. ஆனால் அரசும், குறிப்பாக முதலமைச்சரும் படிப்பறிவற்ற அதியகுடிப் பெண்ணின் தலைமையில் திரண்ட கல்வியறிவற்ற ஆதிவாசிகளினால் தாங்கள் அவமானப்பட்டதை ஒரு போதும் மன்னிக்கத் தயாராக இல்லை என்பதை பின்னர் நடந்தேறிய நிகழ்வுகள் நிரூபித்தன.

அந்த ஒப்பந்தம் பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது.

1. ஒரு ஏக்கர் நிலத்திற்கும் கீழ் வைத்துள்ள அனைத்து
ஆதிவாசி குடும்பங்களுக்கும் பண்படுத்தப்பட்ட ஐந்து
ஏக்கர் நிலம் வழங்குதல்.
2. ஆதிவாசிகள் தன்னிறைவு அடையத் தேவையான
முக்கியத் திட்டங்களை டிசம்பர் 2001-ஆம் ஆண்டுக்குள்
தீட்டுதல்.
3. அமைச்சரவை முடிவின்படி ஆதிவாசிகளின் பகுதிகளை
பட்டியல் 5-இல் சேர்ப்பது மற்றும் மத்திய அரசுடன் இணைந்து அதற்காகச் செயல்படுவது.
4. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டு ஒப்பந்தத்தின்
அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்திட
ஆதிவாசிகள் மிஷன் அமைத்தல்.
5. ஒப்பந்தம் தொடர்பான முடிவு எடுத்தல் மற்றும்
நடைமுறைப்படுத்துதல் ஆகிய அனைத்து
நடவடிக்கைகளிலும் "சமர சமிதி" பங்கேற்பதற்கு
உத்திரவாதம் அளித்தல்.

அகதி முகாம்களை கலைத்திட ஒப்புக்கொண்ட போதிலும், ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்தது.

ஆதிவாசிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை அரசு மதிக்கவே இல்லை. மாறாக, அதை நிறைவேற்றாமல் இருக்க பலவித சாக்கு போக்குகளைச் சொல்லி வந்தது. அரசின் கீழ்த்தரமான, வெட்கங்கெட்ட இந்த நடத்தையை ஆதிவாசி கோத்ர மகாசபை ஏற்கத் தயாராக இல்லை. மேலும் அது எங்கெல்லாம் தங்களுக்கான நிலங்கள் இருந்ததோ அதையெல்லாம் கையகப்படுத்திக் கொள்ள முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி - 2003-இல் கிட்டதட்ட 2000-க்கும் அதிகமான ஆதிவாசிகள் ஆதிவாசி கோத்ர மகாசபையின் தலைமையில் திரண்டு வயநாட்டில் உள்ள முத்தங்கா காட்டை கையகப்படுத்தினர். இக்காடு கொடிய வனவிலங்குகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அது சர்வதேச சுற்றுலாத் திட்டங்களுக்காக முன்பே ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆதிவாசிகள் தங்கள் மரபுவழி ஆயுதங்களையும், விவசாயக் கருவிகளையும் ஏந்தி கையகப்படுத்திக் கொண்ட இக்காட்டுப் பகுதிக்குள் தங்களுக்கான குடில்களை நிறுவினர். தங்களது பகைவர்களான வனக்காவலர்கள், காவல்துறை தகவலாளிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இப்பகுதிக்குள் நுழையாமல் தடுக்க எல்லைக் காவலர்களைப் பணியமர்த்தினர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பட்டியல் 5-இன்படி மத்தங்கா காட்டை ஆதிவாசிகளின் சுயாட்சிப் பகுதியாக ஆதிவாசி கோத்ரா மகாசபை அறிவித்தது. நூற்றுக்கணக்கான சிறப்பு ஆயுத காவல்துறைப் படையை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு காட்டுத்தனமாக அரசு வன்முறையை ஏவிவிட்ட நாளான 19 பிப்ரவரி 2003 வரையிலும் இப்போராட்டம் நீடித்தது. அரசு இத்தகைய நேரடித் தாக்குதல்களை தொடுப்பதற்கு முன்பு சில சுற்றுச்சூழல் அமைப்புகளின் உதவியோடு ஆதிவாசிகளுக்குத் தொல்லை கொடுத்து அவர்களின் உணர்ச்சியைத் தூண்டியது. இதன் மூலம் உண்மையான தாக்குதலின் போது அவர்கள் சட்டரீதியான உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியது.

அரசின் இந்த நடவடிக்கை தன்னியல்பிலேயே விசித்திரத்தன்மை வாய்ந்ததாக இருந்தது. இது வழக்கமான நேருக்கு நேரான தாக்குதலிலும் சேர்த்தியில்லை. அல்லது திட்டமிட்ட அதிகாரபூர்வ நடைமுறையிலான தாக்குதலிலும் சேர்த்தியில்லை. உண்மையில் அது குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது குழுக்களையோ எதிரிகளாகச் சித்தரித்து அவர்களுக்கு எதிராக போராட்டம் ஏதும் நடத்தாத, தங்களின் உரிமைகளுக்காக மட்டுமே நீண்டகாலப் போராட்டத்தை நடத்துகின்ற ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் மீது நன்கு திட்டமிட்டு ஏவிவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். அரசுக்கு எதிரான போராட்டம் என அதைச் சொல்வது கூட சற்று குறுகலான பொருளில்தானே ஒழிய உண்மையில் அப்படி இல்லை. அவர்களின் கோரிக்கைகள் எல்லாம் அரசிடம் எடுத்து உரைக்கப்பட்டாகிவிட்டது. அரசியல் சாசனப்படி அவர்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். இது திருவனந்தபுரத்தில் அகதிகள் முகாம் அமைத்து போராடிய அவர்களின் முந்தைய போராட்டத்தின் தர்க்க மற்றும் உயிர்ப்பான போராட்டத்தின் விளைபொருளாகும்.

ஆதிவாசிகள் கோத்ர மகாசபையின் தலைமையில் முத்தங்கா காட்டை கையகப்படுத்திய ஆதிவாசிகள் அது குறித்த இரகசிய திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே எல்லாவற்றையும் வெளிப்படையாக அறிவித்தும், விளக்கியும் வந்துள்ளனர். இத்தகைய வெளிப்படையான தன்மைதான் போராடும் மக்களிடையே உள்ள ஆயுதங்களிலேயே ஆற்றல் வாய்ந்ததாகும். ஏனெனில் அரசை அம்பலப்படுத்தவும், பீதியடையச் செய்யவுமான திறனை அதுதான் கொண்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்த "முத்தங்கா கையகப்படுத்தும்" போராட்டம் அரசின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியதோடு, அது ஏற்றுக் கொண்டிருந்த பொறுப்பிற்குத் துரோகமிழைத்ததாகவும் ஆக்கியது. 400-க்கும் அதிகமான சிறப்பு ஆயுதப்படையினர் பணிவிடை செய்த தாய்மார்களைக் கூட விட்டுவைக்காமல் காட்டுத்தனமாக தாக்கியதையும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் வீரதீரச் செயல் என அரசு பெருமிதம் கொண்டதை நீதிக்குப் புறம்பாக அரசு கட்டிய கதை என்பதை ஆதாரம் எதுவும் இன்றி இதைக் கொண்டே ஒருவர் எளிதாகக் கூறமுடியும்.

வயநாடு மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிக்கின்ற ஆதிவாசிப் பகுதிகள் மீதும் காவல்துறையின் அடக்குமுறை நீண்டது. மாநில அரசோ பாசாங்குத்தனத்துடன் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்றது. ஆதிவாசிகள் நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னர், பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பும், அதற்காக ஒரு மாதத்திற்கும் மேலான கால அவகாசமும் இருந்தும் கூட அரசியல் ரீதியான தீர்வைக் கொண்டுவர அரசால் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சி.கே.ஜானுவும் அவரது முக்கிய தோழர்களும் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குட்படுத்தப்பட்டது பரவலான கண்டனத்திற்கு உள்ளானது. மேலும் மாநிலத்தில் உள்ள ஆதிவாசிக் குடியிருப்புப் பகுதிகள் அனைத்திலும் வேண்டுமென்றே சித்ரவதையும், துன்புறுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே, உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெற்று எழுந்துள்ள ஆதிவாசிகளை ஒடுக்குவதும், முன்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கணக்கு தீர்த்துக் கொள்வதும்தான்!

ஆதிவாசி இயக்கத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறை அனைத்து சனநாயக அமைப்புகளிடமிருந்தும் பரவலான கண்டனத்தை எழுப்பியது. இதில் சி.பி.ஐ. (எம்) பிறரோடு தங்களையும் இணைத்துக் கொண்டு ஆதிவாசி கோத்ர மகாசபைக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதே நேரத்தில் ஆதிவாசி கோத்ர மகாசபைக் களப்பணியாளர்கள் மீது அளவிற்கு அதிகமான குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது தொடர்ந்தது. மத்திய புலனாய்வுத் துறையினால் காவல்துறை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் போலித்தனமானவையாகவும், வெறுமனே குற்றவாளிகளைக் காப்பாற்றும் கவசங்களாகவும் ஆயின. இதற்கு மாறாக மக்களின் சார்பில் நன்கு அறிமுகமானவர்களும், மதிப்பிற்குரியவர்களுமான ஓய்வு பெற்ற மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விசாரணையின் அறிக்கை ஆதிவாசிகளின் உரிமைகளை மீறிய அரசின் நடவடிக்கையை கண்டித்தது.

இங்கு முத்தங்கா போராட்டத்தின் நீண்ட கால நிகரவிளைவுகளைப் பார்ப்பது பொருத்தமானது. இன்றைய காலச் சூழலில் கேரளத்தில் உள்ள ஆதிவாசிகளின் நிலத்திற்கான போராட்டம் பெருமளவு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதுவே முத்தங்கா போராட்ட முனையின் முக்கியத்துவத்தை உறுதி செய்கிறது. அது கேரள சமூகத்தின் பெரும்பாலான பிரிவுகளையும் முத்தங்கா குறித்தான நிலைப்பாட்டினை எடுக்க வைத்தது ஒன்றும் பெரிய சாதனையல்ல. இதனால் நிலமற்ற ஆதிவாசிகளுக்கு குறைந்த அளவு நிலத்தை வழங்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

ஆதிவாசி நிலப்பிரச்சினை என்பது கேரள விவசாய நிலநிர்வாக நெருக்கடியின் ஒரு பகுதியே ஆகும். உண்மையில் ஆதிவாசிகளை வெளியேற்றி நிலங்களைக் கைப்பற்றிக் கொண்ட குடியேறிகளுக்கும், நிலங்களைப் பறிகொடுத்த ஆதிவாசிகளுக்கும் இடையே பகைமுரண்பாடு இருந்து வந்தது. அரசிடமிருந்து உபரி நிலங்களில் பெரும் பரப்புகள் பெருந்தேயிலைத் தோட்டக்காரர்களின் கைகளில் இருந்தன என்பதையும், அதற்கானதென அவர்கள் வைத்திருந்த நிலஉரிமை ஆவணங்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் தெளிவற்றவையாக இருந்தன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நிலமற்ற ஆதிவாசிகளுக்கோ அல்லது ஆதிவாசியல்லாத பிறருக்கோ வழங்கத் தேவையான அளவிற்கு பண்பட்ட நிலமும் இருந்தது.

பங்கிட்டு அளிப்பதற்குத் தேவையான அளவிற்குப் போதுமான நிலங்கள் கைவசம் இல்லை என்பது வனப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பெரிய தேயிலைத் தோட்டக்காரர்களைக் காப்பாற்றச் சொல்லப்படும் பலவீனமான சப்பைக் கட்டுகளாகும். பலன்விளைவிக்கும் வகையில் நேர்மையான மறு நில அளவை ஆய்வுகளை செய்தல் இத்தகைய ஆக்கிரமிப்பாளர்களை அம்பலப்படுத்தும். உதாரணத்திற்கு மூணாறில் உள்ள டாடா டீ எஸ்டேட் பல பத்தாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை பிடித்துக் கொண்டு தனது தேயிலைப் பயிரிடும் பரப்பை இரட்டிப்பாக்கிக் கொண்டுள்ளது. மாநிலத்திலேயே மிகப் பெரிய நில உடமையாளன் டாடாதான்! அரசு இக்குழுமங்களின் விருப்பங்களுக்குத் தடங்கல் ஏற்படுத்த விரும்புவதில்லை. வயநாட்டிலும் இது போன்ற பல உதாரணங்களைக் காட்ட இயலும். நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட முந்தைய பெருந்தேயிலைத் தோட்ட நிலங்களை எல்லாம் அவைகள் தொழிற்சாலைகள் என்றும், விவசாயம் அல்ல என்ற நொண்டிக் காரணத்தை முன்வைத்தும் விலக்கு பெற்றார்கள். பாதிக்கப்பட்டது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் ஆதிவாசிகளும்தான்! தற்போதுள்ள முதலாளிகளிடமிருந்து உபரிநிலங்களையும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் மீட்டோமானால் கூட, குடியேறிய சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளைத் தொல்லைப்படுத்தாமலேயே நிலமற்றவர்களுக்கு அவற்றை மறுவிநியோகம் செய்து நிலப்பிரச்சினையை எளிதாகத் தீர்த்துவிட முடியும்.

மாநிலத்தின் மக்கள் தொகையில் ஆதிவாசிகளின் எண்ணிக்கை 1%-க்கும் கீழ்தான்! குடியேறிகளின் ஓட்டுவங்கியைப் போல் இது பெரியதல்ல. மிகவும் சொற்பமானது! பெருந்தேயிலைத் தோட்ட முதலாளிகளின் விசயத்தைப் பொறுத்தவரை அவர்களின் பணபலம்தான் ஆட்சியாளர்களுக்கு அமைப்பாக்குவது என்பது உடனடியாகச் சாத்தியமானதும் அல்ல. ஏனெனில் அவர்களும் கூட தலித்துக்களைப் போல் பல்வேறு அரசியல் கட்சிகளாகப் பிரிந்துகிடக்கிறார்கள். சரியாகச் சொன்னால் தற்போதைய சமூக மற்றும் பொருளாதாரச் சமன்பாடு ஆதிவாசிகளுக்கு எளிதாகவே உள்ளது. ஆனால் நிலத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் எனும் நிலையில், அவர்களில் பல துணைக்குழுவினர் அழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும் கூட சமூகநீதி அவர்கள் பக்கம்தான் உள்ளது.

விவசாயிகளின் இயக்கம்

1990-களின் இடைக்காலத்தில் வயநாட்டில் தொடங்கிய விவசாயிகளின் இயக்கம் என்பது சிறு, குறு விவசாயிகள் சந்தைச் சூழலில் சந்தித்த நெருக்கடியின் விளைபொருள் ஆகும். கிறித்தவ தேவாலயத்தைத் தாங்கு பீடமாகக் கொண்டிருந்த அமைப்பினரும் (INFAM) சிறு, குறு விவசாயிகளின் நிலையை மேம்படுத்தத் தொடர்ச்சியான போர்க் குணமிக்க போராட்டங்களை நடத்திவந்த விவசாயிகள் துயர் துடைப்பு மாமன்றமும் (FRF) அரசியல் கட்சிகளைச் சாராத விவசாய அமைப்புகளின் முன்னோடிகள் ஆவர்.

முன்னணி அமைப்புகளாக அரசியல்கட்சி சாராத INFAM/FRF ஆகிய அமைப்புகள் இருந்தாலும் கூட பெருகிவரும் நெருக்கடிச் சூழலில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிசார்ந்த விவசாய அமைப்புகளை உருவாக்கிக் கொண்டனர். நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்தே இந்த இரண்டு அமைப்புகளும் களத்தில் இருந்தன. இப்பிரச்சினையை ஒட்டித் தோன்றிய இயக்கங்களோடு ஒத்திசைவாகவும் செயல்பட்டன. பிரச்சினையின் அடிப்படையில் கூட்டியக்கம் நடத்தப்பட்டது. கூட்டமைப்போ பொது முன்னணியோ இருக்கவில்லை. சில நேரங்களில் குறிப்பிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றுபட்ட இயக்கம் ஏற்பட்டாலும் கூட, வயநாட்டு விவசாயிகளின் இயக்கம் அமைப்பு ரீதியாக ஒற்றுமையின்றியே இருந்தது. பிற்காலத்தில் இடதுசாரிப் போராளிக் குழுக்களும் இவ்வரங்கில் நுழைந்ததோடு, கடன்களைத் திரும்பச் செலுத்தாதற்காக வட்டிக்காரர்களால் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களையும், பிற சொத்துக்களையும் அவை மீட்டும் கொடுத்தன.

உண்மையில் நிலப்பறிமுதல் போன்ற கடன் வசூலிப்பு முறை வங்கிகளால் தொடங்கி வைக்கப்பட்டதாகும். கந்து வட்டிக்காரர்களால் அச்சுறுத்தும் உத்தியாகக் கையாளப்பட்ட இந்த நடைமுறை போராளிக் குழுக்கள் அரும்பிடக் காரணமாகியது. கடன்களைக் கட்ட வேண்டிய கட்டாயத்தாலும், விலைவீழ்ச்சியின் போது அதலபாதாள நிலைக்குத் தள்ளப்படுவதாலும் மற்றும் வறட்சியாலும் பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தங்களுக்குச் செய்யப்படும் நியாயமல்ல எனக் கருதிய விவசாயிகள் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடினர். அதே வேளையில் FRF போன்ற அமைப்புகள் அரசின் பெரு வளர்ச்சித் திட்டங்கள் மீது ஆழ்ந்த கவனம் செலுத்தியதானது, விவசாய வளையத்திற்கு வெளியில் உள்ள எழுத்தாளர்களையும், அறிவு ஜீவிகளையும் இதற்குள் இழுத்து வந்து இப்போராட்டத்திற்கான பெரும் நியாயத்தை வழங்கியது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் FRF விவசாயிகளின் ஏழ்மையைக் குறைக்கவும், அதே வேளையில் அரசின் வருமானத்தை உயர்த்தவுமான மாற்று மேம்பாட்டு ஆலோசனைகளை முன்வைக்கவும் செய்தது. அவற்றுள் அருமையான ஒன்றான தென்னை, பனை மரங்களில் இருந்து இனிப்புக் கள்ளை வடிப்பது மற்றும் வடித்த கள்ளை சந்தைப்படுத்துவது ஆகியவற்றின் சாத்தியக் கூறுகள் முயற்சிக்கப்பட்டன.

"நீரா" அல்லது ‘புத்துணர்வு இனிப்பு கள்’ ஒரு உடலோம்பும் பானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, சராசரி மலையாளியின் உணவுப் பட்டியலில் ஒரு அம்சமாகவே ஆனது. காலனிமயமாக்கத்துடன் கள்ளும் சாராயமும் வரிவிதிப்பிற்குள் வரும் வணிகச் சரக்காக மாற்றப்பட்டன. 1947-இல் இருந்து சாராய ஒப்பந்ததாரர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவு வளர்ச்சி கண்டதுடன் கள்ளுக்கடை உட்பட பிற சாராயக் கடைகளை ஏலம் விடுவதென்பது மாநில அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும் கருவியாகவும் ஆகியது. அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடத்திலும் சாராயத்தில் இருந்து அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தோடு, சாராய வணிகக் கும்பலின் பொருளாதார, அரசியல் செல்வாக்கும் மிதமிஞ்சி அதிகரித்து வந்தது. மறுபக்கம் தென்னை விவசாயிகள் ஓரங்கட்டப்பட்டதோடு மிகக் குறைந்த அளவே பொருள் ஈட்டவும் முடிந்தது.

விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக கர்னாடகாவில் நீராவை வடிப்பதும் விற்பதும் சட்டரீதியான தொழிலாக ஏற்பட்டதைத் தொடர்ந்து கேரளத்திலும் அதைப் பின்பற்ற வேண்டும் என FRF கோரியது. வேடிக்கை என்னவெனில், கள்ளை வடிக்கவும் விற்கவும் உரிமையை கர்னாடகாவில் வென்றெடுத்த பேராசிரியர் நஞ்சண்டசாமி தலைமையிலான விவசாயிகள் இயக்கம் FRF வைத்த அதே கோரிக்கைகளை முன்வைத்து அங்கும் போராடத் தொடங்கினர். எவ்வாறாயினும் நீராவைக் கர்னாடகாவில் சட்டப்பூர்வமாக்கியது அப்பிரச்சினையின் முழு வெற்றி எனச் சொல்ல முடியாவிட்டாலும் கூட அதைக் குறைத்து மதிப்பிட்டுவிடவும் முடியாது. உண்மையில் தேவைப்படுவது என்னவெனில் மரத்தின் மீதான முழு உரிமைதான்! அதாவது கள்ளின் விலையைக் கூட்டவும், கள்ளில் இருந்து வேறுபட்ட பொருள்களைத் தயாரிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ அல்லது தனித்தோ சந்தைப்படுத்தவும் முழு உரிமை வேண்டும். வங்கி அமைப்பு ஏற்படுத்திய கடன் தொல்லைகளை எதிர்த்து ஆற்றல் வாய்ந்த வகையில் FRF செயல்பட்டபோதிலும், விலைச் சிதைப்பிற்கு எதிராக ஒரு காத்திரமான எதிர்ப்பு உத்தியை உருவாக்கவோ அல்லது உழவர்களின் உற்பத்திப் பொருட்கள் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட ஒரு நம்பகத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையை பின்பற்றிடவோ அதால் முடியவில்லை. ஆயினும் குறைந்தபட்சம், பிரச்சினைகள் அடிப்படையில் விவசாயக் கூலிகள் மற்றும் ஆதிவாசிகள் போன்ற பிற அடித்தட்டு மக்கள் பிரிவினருடன் ஒன்றுபட்டு நின்று போராடுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதுதான் FRF போன்ற இயக்கங்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நன்மை ஆகும்.

கேரளம் எனும் பெயர் தென்னை மரத்தின் பெயரை வேர்ச்சொல்லாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். 1980-களின் தொடக்கத்தில் கிட்டதட்ட 600-க்கும் மேற்பட்ட பொருள்களை இத்தென்னை மரத்தில் இருந்து உருவாக்க முடியும் என கேரள விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருந்தனர். கேரளாவில் தொடங்கப்பட்ட முதல் தொழிற்சாலையான தேங்காய்நார் கயிறுத் தொழிற்சாலை தென்னையை அடிப்படையாகக் கொண்டது. கடந்த பல தலைமுறைகளாக இப்பொன்மரத்தின் பயன்களை பிரித்தறிந்து பயன்படுத்த முயற்சி எதுவும் மேற்கொள்ளாததால் இம் மரபார்ந்த தொழிற்சாலைகள் தளர்ந்து கிடக்கின்றன. மேலும் கள் தொழில் பெரும் சமூக விரோத சாராயக் கும்பலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. மெக்சிகோவின் பானமாக "டிகுயிலா" தயாரிப்பு முறையைப் போல நன்கு கற்றுக் கொண்டு பின்னர் பிறழாமல் பின்பற்ற வேண்டியதாகவுள்ள கள்ளில் இருந்து பிற பொருள்களைத் தயாரிக்கும் தொழிலை இப்பழங்குடிகளால் எப்படி வெற்றிகரமாகச் செய்ய முடியும்? இன்று மரங்கள் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளன.

நோயை ஒழிக்க எவ்வித உருப்படியான ஆய்வு முயற்சியும் இல்லை. தேங்காய் மற்றும் கொப்பரையில் ஏற்பட்டு வரும் தொடர் வீழ்ச்சி தென்னை வளர்ப்போர்க்கு கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தேங்காய் விலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பனை எண்ணெய் போன்ற மலிவான சமையல் எண்ணெயின் விலையைச் சார்ந்தே உள்ளது. இந்த சமையல் எண்ணெயில் தேவையை நிர்ணயிப்பதில் டாடா போன்ற பெரும் தொழிற் குழுமங்களே ஏகபோகம் செலுத்துகின்றன. விவசாயிகள் துயர் துடைப்பு மாமன்றம் மற்றும் ஆதிவாசி கோத்ர மகாசபை ஆகிய இரண்டுமே தற்போது பாராளுமன்றவாதக் குழுக்களாகவும், உள்ளூர் மட்டத்தில் இரண்டுமே உள்ளாட்சி அமைப்புகளில் பங்கு வகிக்கக் கூடியனவாகவும் உள்ளன. செங்கொடிக் குழு போன்ற சில இடதுசாரிப் போராளிக் குழுக்களும் இத்தகைய நிலையிலேயே உள்ளன. இத்தகைய போக்கினால் வயநாடு மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள ஆதிவாசிகளும் விவசாயிகளும் அதிகாரத்தைப் பெறும் நிலை உருவாக இன்னமும் எத்தனை காலங்கள் ஆகுமோ?

ஆனால் பாலக்காட்டு மாவட்டத்தின் பிளாச்சிமடாவில் உள்ள பெருமட்டி பஞ்சாயத்து முன்னுதாரணமாக உள்ளது. அங்கு ஆதிவாசிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களோடு இணைந்து நின்று ராட்சத குளிர்பான நிறுவனமான கோகோ கோலாவிற்கு எதிரான தங்களது போராட்டத்தை நிலைத்து நின்று நடத்தி வருகிறார்கள். இப்போராட்டம் தற்போது இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனம் பெற்று பல மட்டங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வயநாட்டின் சில பகுதிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இது சுட்டக்கூடும். தற்செயலாக பிளாச்சிமடாப் போராட்டம் நச்சுக்குளிர் பானமான கோகோ கோலாவிற்கு மாற்றாக தென்னை மரம் சார்ந்த பானங்களை முன் வைக்கப் பேரார்வம் காட்டி வருவதின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பு : நலிந்து வரும் பொருளாதாரத்தினால் கடந்த இரண்டாண்டுகளில் பஞ்சாபில் மட்டும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சியின் பிடியில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட ஆந்திர விவசாயிகளின் பட்டியல் உண்மையிலேயே அந்த அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கேரளத்தில் டீ, காபி மற்றும் மிளகு போன்ற பணப்பயிர்களின் மையமாகத் திகழும் மலை மாவட்டமான வயநாட்டில்தான் பெருமளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வயநாட்டு உழவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகரமான போராட்ட மரபைக் கொண்டவர்கள். இன்று அவர்கள் உலகவங்கி, பன்னாட்டு நிதிமையம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றால் அரங்கேறப்பட்டுக் கொண்டிருக்கும் நவதாராளமயத் தாக்குதலை எதிர்த்து நிற்கிறார்கள். டி.சி. ஜேக்கப்பின் வயநாடு : மரகதக் கிண்ணத்தில் வழியும் துயரம் எனும் நூலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது. ("Wayanad: Misery in An Emerald Bowl") - T.G. Jacob நன்றி: Frontier July 16-22, 2006).

Pin It