ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த முஸ்லிம்களின் இடஒதுக்கீடு எனும் பாதையில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கி, அதுவும் முஸ்லிம்கள் அனுபவித்து விடக் கூடாது என்ற அடிப்படையில் கடைசிவரை குளறுபடிகளை சரி செய்யாமலேயே விட்டு விட்டார் கருணாநிதி.
மீண்டும் முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்ய, "முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி பரிசீலிப்போம்' என்ற பாசாங்கு வார்த்தையை உதிர்க்க, அதையே வேத வாக்காக எடுத்துக் கொண்டு ஒரு சுயநலக் கூட்டம் இவருக்கு வால்பிடிக்க, தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இடஒதுக் கீட்டை உயர்த்துவேன் என்று உறுதியாக சொல்லிய ஜெயலலிதாவின் பக்கம் முஸ்லிம்களின் அலை வீசுவதை அரசல் புரசாலக அறிந்த இந்த அறிவாலயத்துக்காரர், இன்னொரு அவசர விஷயத்தை தனது தேர்தல் அறிக்கையில் சொருகினார்.
அதாவது, "இந்து மதத்தினர் தங்களுக்குச் சொந்தமான இடத்திலோ அரசு புறம்போக்கு இடத்திலோ தங்களின் வழிபாட்டு தலங்களை கட்ட விரும்பினால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக் கட்டி வருவதைப்போல கிறித்தவ, இஸ்லாமிய மதத்தினரும் தங்களின் வழிபாட்டு தலங்களை நிறுவ விரும்பினால், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதியினைப் பெற்று கட்டிடம் கட்டுவதைப் பற்றி அரசு பரிவோடு பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்துக்கள் தங்களது சொந்த நிலத்தில் கோயில் கட்டியதை விட, அவர்கள் எந்த நிலத்தில் வேண்டுமானலும் எப்போது வேண்டுமானாலும் கோயில் கட்டுவதை பெருகிவரும் நடைபாதைக் கோயில்கள் நாள்தோறும் சான்று பகர்ந்து வருகையில், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அவ்வாறு கட்டிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று இவர் கூறியிருந்தால் அதில் அர்த்தமிருக்கும்!
ஆனால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மட்டும் அவ்வாறு கட்டுவது குறித்து இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பரிசீலிப்பா ராம். இதற்கு பல்லைக் காட்டிக் கொண்டு முஸ்லிம்கள் வாக்க ளிக்க வேண்டுமாம்.
சொல்ல முடியாது. இதைக் கூட முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டார் என்று மூளைக்கு மூளை பிரச்சாரம் செய்ய மூளையை அடகு வைத்த கூட்டம் தயாராகலாம். யார் கண்டது?