1.பொது சிவில் சட்டமா? சீரான சிவில் சட்டமா? (Uniform civil code or common civil code) என்ற வாத பிரதிவாதங்களுக்கிடையே அனைவருக்கும் புரிகிற வகையில் பொது சிவில் சட்டம் என்பதாக நாம் நமது பார்வையில் அலசுவோம்.

2. இந்திய சட்ட ஆணையம் கடந்த 31.8.2018-இல் தனது 185 பக்க அறிக்கையில் பொது சிவில் சட்டம் “தற்போது தேவையானதுமல்ல விருப்பத்திற்குரியதுமல்ல” என கூறிவிட்டது. அதன் பின்பு கடந்த நவம்பர் 2019ல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பொது சிவில் சட்ட வரைவு மசோதா தீவிர எதிர்ப்புக்குப்பின் பா.ஷ.க அரசு திரும்பப் பெற்றுக்கொண்டு தற்போது மீண்டும் பாராளுமன்றத்தில் மார்ச் 2020 ல் “கிரோபு லால் மீனா” என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

3. தற்போது 22ஆவது இந்திய அரசின் சட்ட ஆணையம், இந்தப் பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளைப் பொதுமக்கள் முன்வைக்க கோரியுள்ளதை அறிவோம்.

4. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டம் அனைவருக்கும் சமமானதாகவும் மற்றும் பொதுவானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உரிமையியல் சார்ந்த சிக்கல்களில் அந்தந்த இன மக்களின், மதங்களின் வாழ்வியல் நெறிமுறைகளையும், விதிகளையும் பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்தந்த மதங்கள் தனிச்சட்டங்களைப் பின்பற்றலாம் என்றவாறு இருந்தது, அது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. உரிமையியல் சட்டங்கள் என்பது திருமணம், வாரிசு, தத்தெடுப்பு, சொத்துரிமை, பராமரிப்பு என்பவையாக உள்ளன. தற்போது ஒன்றியத்தில் ஆளும் பாஷக நடுவணரசு பல்வேறு கலாச்சார, பண்பாடு, மொழிகள், மதங்களை, பின்பற்றும் மக்களின் பன்முகத் தன்மையை அழித்து பொதுமையாக்கப் போவதாகவும் அதற்காகப் பொதுவான உரிமையியல் சட்டம் கொண்டு வர உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதன் தொடக்கமாகவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஓரே ரேசன் என்றவாறு முழக்கங்களை முன்வைத்து அனைத்து மக்களின் மீதும் ஒற்றைத் தன்மையை சர்வாதிகாரமாகத் திணித்து வருகிறது.

5. இந்தப் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மிக முக்கிய காரணமாக இவர்கள் கூறுவது இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் தேவை என்பதும் பொது சிவில் சட்டம் அனைவரையும் சமமாகப் பாவிக்கும், பெண்களை மதத்தில் உள்ள பாகுபாடுகளிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கும் என்பதேயாகும்.

6. சனாதன சக்திகள் சொல்வது போல இந்தச் சட்டம் வந்துதான் அனைத்து மதப் பெண்களையும் பாதுகாக்கும் என்பது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பிற்குப் “பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் 2005 உள்ளது”. முழுக்க முழுக்க அனைத்து மத ரீதியான பெண்களையும் பாதுகாக்கும் சிறப்புச் சட்டமாக இந்தச் சட்டம் உள்ளது.

7. அடுத்ததாக, தற்போது முன் மொழியவுள்ள இந்தப் பொது சிவில் சட்டத்தின் மற்றொரு கூறு அனைத்து மக்களுக்கும் இந்தச் சட்டம் பொதுவானதாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நிலைமை வேறு. எடுத்துக்காட்டிற்கு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சட்டம் போட்டாலும் பார்ப்பனர்கள் மட்டுமே பூஷை செய்யும் உரிமை பெற்றவர்களாக உள்ளனர். அதனை உயர் உச்ச நீதிமன்றங்களும் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. மனுதர்ம வர்ணாசிரம கோட்பாடுகளையே நீதிமன்றங்களும் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது எனவே எந்தச் சட்டங்கள் கொண்டு வந்தாலும் அனைத்துச் சட்டங்களும் மனுதர்ம வர்ணாசிரம அமைப்பைக் கொண்டே இந்தியாவில் இயங்குகிறது.

8. இஸ்லாமிய சமூகத்தில் பின்பற்றப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யும் முறையையும் விவாகரத்து தொடர்பான முத்தலாக் விதிகளையும் காரணம் காட்டியும் மற்ற சிறுபான்மை மக்களும் தங்களுடைய மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதாகவும், மனிதத் தன்மையற்று இருப்பதாகவும் கூறி, இந்த சனாதன சக்திகள் மனித சமூகத்தையே காப்பாற்ற வந்த தூதுவன் போல போர்வையை போர்த்திக்கொண்டு உள்ளீடாக மனுதர்ம இந்து சட்டங்களை மெல்ல மெல்ல திணிப்பதற்காக இந்தப் பொது சிவில் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

9. சிறுபான்மையின மக்களின் உணர்வுகள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகளைச் சீர்த்திருத்தங்கள் செய்வதோ அல்லது அதனை முற்றிலுமாக மாற்றுவதோ அந்தந்த மக்களின் உரிமையாகும். இஸ்லாமிய மதத்திலோ அல்லது மற்ற சிறுபான்மை மதமான கிருத்துவம், பௌத்தம், சீக்கியம், பார்சி, ஷையினம், ஆகிய மதங்களிலோ சட்டத்திற்கு முரணாகவோ அல்லது மனிதத்தன்மையற்ற பாகுபாடுகள் இருக்குமானால் அதில் அரிதாக நீதிமன்றங்கள் தலையிட்டு சரி செய்து வருகின்றன. எடுத்துக்காட்டு தொலைபேசியில் முத்தலாக் கூறுவது ஏற்புடையதல்ல என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு.

10. மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 44வது பிரிவு ஏற்கனவே பொது சிவில் சட்டம் தொடர்பானவற்றை அடிப்படை உரிமைகள் அல்லாத பகுதி மிக்ஷில் “அரசின் நெறிமுறை உணர்த்தும் கோட்பாடுகளில்” வைக்கப்பட்டுள்ளது. இது கட்டாயம் பின்பற்றப்படவேண்டும் என்ற அளவில் இல்லாமல் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே ஆகும். எனவே பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை மக்களின் மீது திணிக்கப்படும் ஒரு வன்முறையேயாகும். எனவே இந்து மதத்திற்குள்ளான ஏற்றத்தாழ்வுகளும், தீண்டாமை வடிவங்களும், வழிபாட்டு உரிமைகளும் பூஷை செய்யும் உரிமையுமின்றி ஒரு மதத்திற்குள்ளே பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றது. குறிப்பாக பண்பாடு, கலாச்சார ரீதியாகவும், இந்து மதத்தில் உள்ள பார்ப்பனர்கள் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொண்டு பஞ்சகட்சம் கட்டிக் கொண்டும், முன் பாதி முடியை மழித்துக் கொண்டு தலையின் மத்தியிலே குடுமி வைத்துக் கொண்டு இந்த இந்து சமூகத்தில் தனித்தப் பிறவிகளாகத் தங்களைக் காட்டி வாழ்ந்து வருகின்றனர். ஆகம விதிகளை முழுமையாக கற்றுக் கொண்டாலும், பார்ப்பனன் அல்லாதோர் கருவறையில் பூஷை செய்ய இயலாது என்ற நீண்ட நெடிய பாகுபாடுகளைக் கொண்ட இந்து சமூகத்தில் முதலில் மாற வேண்டியது இந்து சனாதன தர்மத்தை ஏற்றத்தாழ்வை தாங்கிப் பிடிக்கும் பார்ப்பனர்கள் தான். இந்த ஒட்டு மொத்த இந்து சமூகத்திலே விநோதமாக வாழ்ந்து வருகிற பார்ப்பனர்கள் தங்களையே பூணூல் பஞ்சகட்சம் முடி மழிப்பு தென்கலை வடகலை குறியீடுகள் ஆகியவற்றைத் துறப்பதிலிருந்தே “பொது சிவில் சட்டம்” தொடங்க வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டு வர முதலில் மதங்களுக்குள் உள்ள மனிதர்களிடமே பொது உணர்வு சமத்துவம் உருவாக்கப்படுவது தேவைப்படுகிறது. அது இந்து மதத்தில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.

11.. உண்மையில் இன்றைய சமூக தேவை என்னவென்றால் ஒவ்வொரு மதத்திற்குள்ளேயும், அவர்களுக்குள் அனைவரையும் சமமாக எற்றத்தாழ்வுமின்றி மதிக்கக்கூடிய தனிச்சட்டங்களே இன்றைய தேவையாக உள்ளது.

12. சட்ட ரீதியாக அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி மிக்ஷி ல் சரத்து 25 முதல் 30 வரைஅடிப்படை உரிமைகளில் மதரீதியான வழிபாடு, மத சுதந்திரம் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு உரிமைகள் மற்றும் கல்வி உரிமைகள், வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டு வரப்படவுள்ள பொது சிவில் சட்டம் மறைமுகமாக சிறுபான்மை மதங்களின், மக்களின் அடிப்படை உரிமைகளை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்.

13. இதனால் சிறுபான்மை மக்களுக்கு தற்போது கிடைத்து வருகிற அனைத்து விதமான அடிப்படை உரிமைகளும் முற்றிலும் அழிக்கப்படும். குறிப்பாகப் பிரிவு 30-ல் உள்ள சிறுபான்மையினருக்கானக் கல்வி நிலையங்கள் நடத்தும் உரிமையும், மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவை இல்லாமல் போகும். இதனால் இந்துத்துவ வெறிபிடித்தப் பகுதிகளில் இஸ்லாமிய மாணவர்களை மற்ற கல்லூரிகளில் சேர்த்துக் கொள்வது திட்டமிட்டு நிறுத்தப்படும் அல்லது மிரட்டப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். இடஒதுக்கீடும் கேள்விக் குறியாகிவிடும். மேலும் சுதந்திரமான மற்ற சிறுபான்மை மதங்களின் வழிபாடு செய்யும் உரிமை, கல்வி உரிமை, மத வழிபாடு ஆகியவை முற்றிலும் கேள்விக்குறியாகிவிடும்.

14. இந்திய சமூகத்தில் மேற்படியாகப் பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் சிறுபான்மை மதங்களுக்கிடையே ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும். சிறுபான்மை கிருத்துவ சமூகத்தின் மீது அரசு சார்ந்த இந்துப் பயங்கரவாத குழுக்கள் மணிப்பூரில் தொடர் தாக்குதல் நடத்திப் பெருவாரியான மக்களை வெளியேற்றியது போல மற்ற பகுதிகளிலும் மதமோதல்கள் திட்டமிட்டு உருவாக்க வழி வகுக்கும். மக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு பாஷக சனாதன அரசு நிரந்தரமாக இந்தியாவில் அரசாட்சி செய்வதற்கு அடித்தளமிட்டுக் கொள்ளவே இந்தப் பொது சிவில் சட்டத்தைச் சர்வாதிகாரமாக திணிக்கிறது.

15.  ஆனால் உன்மையில் பொது சிவில் சட்டம் என்பது வேறு ஒன்றுமில்லை. மனுதர்ம வர்ணாசிரமக் கோட்பாடுகளைப் புதிய முலாம் பூசி வேறு வடிவங்களில் பன்முகத் தன்மை கொண்ட மக்களிடம் சிறிது சிறிதாக திணித்து சிறுபான்மையினரின் அனைத்து அடையாளங்க ளையும் அழித்து இந்துத்துவக் கொடுநெறிகளை சமத்துவமற்ற ஒரு வாழ்வியல் முறையை சர்வாதிகாரமாகத் திணிப்பதே ஆகும்.

16.  இந்து மதமில்லாத பிற சிறுபான்மை மதமான இஸ்லாமிய ,கிருத்துவ,சீக்கிய ஷெயின் சமூகத்தினரின் ஒட்டு மொத்த அடையாளங்களை அழித்து பண்பாடு கலாச்சாரங்களை ஒழித்து இந்து மத பண்பாட்டையே ஒட்டு மொத்த இந்திய மக்களின் பண்பாடாக மாற்றுவதற்கான முயற்சியே ஆகும்.

17. இந்த இந்து மதப் பண்பாடு என்பது வேறு ஒன்றும் இல்லை மனுதர்ம வர்ணாசிரம கோட்பாடாகும். மனுதர்ம வர்ணாசிரம கோட்பாடென்பது வேறில்லை, சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தி ஏற்றத்தாழ்வுகளை நிலைப்படுத்துவதே, உழைக்காமல் உண்டு கொழுக்கும் ஒரு பிரிவையும் அவர்களுக்கு அடிமை மற்றும் இழி வேலை செய்வதற்கான ஒரு பிரிவையும் உருவாக்குவதே நிலைப்படுத்தி வைப்பதே ஆகும்.

- வழக்கறிஞர் வெற்றி

Pin It