வினா: சிலம்பரசன், காஞ்சிபுரம்
விடை: பேராசிரியர். சுப.வீ
ஒப்பிட்டுப் பார்த்தல் என்பது நம்மிடையே இயல்பாக உள்ள ஒரு குணம். யாரும் யார் இடத்தையும் நிறைவு செய்ய வேண்டியதில்லை என்று கருதுபவன் நான். அறிஞர் அண்ணா இறந்தவுடனும் இப்படி ஒரு வினா பரவலாக எழுந்தது.
தலைவராகப் பொறுப்பேற்றவுடன் திரு ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. தொடக்கத்திலேயே அவர் ஒன்றைக் குறிப்பிடுகின்றார். “நான் கலைஞர் இல்லை. அவரைப் போல் என்னால் பேசவோ, எழுதவோ முடியாது” என்று மிக நேர்மையாக ஒரு செய்தியை அவர் பதிவு செய்துள்ளார். கலைஞரைப் போல் அவர் பேசவும், எழுதவும் வேண்டியதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓர் இயல்பு, குணம், திறமை உண்டு.
கட்சியை நடத்திச் செல்வதில் ஸ்டாலின் எப்படி இருக்கப் போகிறார் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதனை அவர் திறம்படச் செய்வார் என்பதற்கான பல சான்றுகள் உள்ளன. கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர் அவர். கலைஞரால் பயிற்றுவிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டவர். பயிற்சி, துணிவு, உழைப்பு ஆகிய மூன்றும் அவரிடம் உள்ளன. எனவே கலைஞரின் இடத்தை கட்சியில் அவர் நிரப்புவார் என்பதோடு, காலப்போக்கில், கலைஞரைத் தாண்டியும் கட்சியை உயர்த்துவார் என்று நம்பலாம்.
‘கலைஞரைத் தாண்டி’ என்று எப்படிச் சொல்லலாம் என யாரும் வருந்த வேண்டியதில்லை. கலைஞரைத் தாண்டுவதுதான் கலைஞருக்கும் பெருமை!