ஆளுநரின் தொல்லை அன்றாடம் கூடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும், அரசும், ஆளும் கட்சியும், கூட்டணிக் கட்சியினரும் வேறு வேலைகள் எதிலும் கவனம் செலுத்த இயலாத வண்ணம், ஏதேனும் ஒரு விவாதத்திற்குரிய செய்தியை ஆளுநர் பேசிக் கொண்டே இருக்கிறார். அவருக்கு விடை சொல்வதற்கும், அவர் கூறியிருக்கிற தவறான தகவல்களை ஆதாரம் காட்டி மறுப்பதற்கும்தான் எல்லோருக்கும் நேரம் சரியாக இருக்கிறது. இது ஒரு திட்டமிட்ட திசை திருப்பும் உத்திதான் என்று தெரிந்தாலும், மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படிச் செய்வதால், அதற்கு எல்லோரும் எதிர்வினை ஆற்றியே தீர வேண்டியிருக்கிறது.
விடுதலைப் போராட்ட வீரர்களைத் தமிழ்நாடு அரசு சிறப்பிக்க மறந்து விட்டது என்கிறார்.
பசும்பொன் தேவர் ஜெயந்தியையொட்டி 144 தடை உத்தரவு போட்டது தவறு என்கிறார்.ஆரியம் - திராவிடம் என்று எதுவும் இல்லை, எல்லாம் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கற்பனை என்கிறார்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஆளுநர் ஏதேனும் ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்.
திடீரென்று ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு விட்டது என்று ஒரு புகார் வருகிறது. அதனை விசாரித்த காவல்துறை, வீடியோ ஆதாரங்களோடு அதனை மறுத்திருக்கிறது.
இப்படி, தன் வேலைகள் எதனையும் செய்யாமல், வேலை செய்கிறவர்களையும் செய்ய விடாமல், எல்லாவற்றிற்கும் பெரும் இடையூறாக விளங்கும் ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைதான் மாண்புமிகு முதல்வரிடமிருந்து வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்தோம்.
ஆனால் நேற்றைய மணவிழா ஒன்றில், சென்னையில் பேசிய முதல்வர் அவர்கள், ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றவே கூடாது என்றும், குறைந்தது வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரையுமாவது அவரை மாற்றாமல் இருக்க வேண்டும் என்றும் இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது ஒரு நல்ல வேண்டுகோள் என்றே தோன்றுகிறது. எதிர்மறைத் தூண்டுதல்கள் சில வேளைகளில் நன்மை பயக்கும் என்பதும் உண்மைதான். ஆளுநர் ரவி அவர்களின் செயல்பாடுகள் அவரின் நடத்தையையும், அவருக்குப் பின்னால் இருக்கும் ஒன்றிய அரசின் வஞ்சகத் தன்மையையும் வெளிக்காட்டும்!
அதேபோல, வரும் ஒன்றாம் தேதி, திராவிட ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்த இருப்பதாக ஒரு சிறு கும்பல் அறிவித்துள்ளது. அதையும் நாம் வரவேற்போம். திராவிடம் எப்போதும் பேசு பொருளாக இருப்பதற்கு இவை போன்ற நிகழ்வுகள் உதவும்!
பேரறிஞர் அண்ணாவின் வரியை இப்போது நாம் நினைவு படுத்திக் கொள்ளலாம் - “வாழ்க வசவாளர்கள்”.
- சுப.வீரபாண்டியன்