உலகளாவிய பசிக் குறியீட்டுப் (Global Hunger Index) பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 125 நாடுகளில் இந்தியா 111ஆவது இடத்தில் இருக்கிறது. பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அண்டை நாடுகளான இலங்கை 60ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 102 ஆவது இடத்திலும், வங்கதேசம் 81ஆவது இடத்திலும் இருக்கின்றன. ஆனால் பாஜக ஆட்சியில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்திருக்கிறது என்று அவர்கள் தம்பட்டம் கொள்ளும் வேளையில், பசிக் குறியீட்டில் 111 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனவும் மிகச் சிறிய நாடுகளுமான ஆப்கானிஸ்தான், ஏமன், மடகஸ்கர், சிரியா, காங்கோ, டைமர் ஆகிய சில நாடுகள் மட்டுமே இந்தியாவை விடப் பின்தங்கி இருக்கின்றன.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக வெளிநாடுகளிலிருந்து எந்த ஒரு கருத்துக்கணிப்போ அல்லது கணக்கெடுப்போ வந்தால் உடனே அதனைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்திப் பெருமை பேசுவதையும், அதேநேரம் அவர்களுக்குச் சாதகமில்லாத அறிக்கைகள் வெளிவரும்போது அவற்றை இந்தியாவின் மாண்பைக் கெடுக்க வெளிநாடுகள் செய்யும் சதி என்று சொல்வதையும் பாஜக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின் உலக அளவில் இந்தியா விஷ்வகுருவாக உயர்ந்து நிற்கிறது என்றும், ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சரானதால் உலக நாடுகளுடனான உறவை இந்தியா வலுப்படுத்தி இருக்கிறது என்றும் தொடர்ந்து பேசி வரும் பாஜகவினர் இப்போது உலகளாவிய பசிக்குறியீடு வெளிநாடுகளின் சதி என்று சொல்வது முரணான கூற்றாக இருக்கிறது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி,
“உலகப் பசிக் குறியீட்டுப் பட்டியல் எப்படி எடுக்கப்படுகிறது... இந்தியாவில் 140 கோடி மக்களில் 3,000 பேரிடம் தொலைபேசியில் அழைத்து ‘உங்களுக்குப் பசிக்கிறதா?’ எனக் கேட்டு, பட்டினிக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து நான் காலை 4 மணிக்குக் கிளம்பினேன். 5 மணிக்குக் கொச்சி விமான நிலையத்துக்கு வந்தேன். பிறகு அங்கிருந்து விமானத்தில் பயணம் செய்து ஹைதராபாத் வந்தடைந்தேன். இப்படியான நேரங்களில் நான் உணவு சாப்பிட 10 மணிக்கு மேல் ஆகும். இந்த சமயத்தில் போன் செய்து ‘உங்களுக்குப் பசிக்கிறதா?’ என்று கேட்டால், நான் பசிக்கிறது என்றுதான் சொல்வேன்.
இப்படித்தான் பட்டினிக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. இதில் இந்தியாவைவிடப் பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?” என்று கூறியுள்ளார்.
இப்படி நக்கலும், கிண்டலும் நிறைந்த ஒரு பதிலை, பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் அமர்ந்து கொண்டு ஸ்மிருதி இராணி சொல்லியிருக்கிறார். பசிக்கு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது அவருக்கு தெரியாமல் இருக்காது. அப்படி தெரியாமலிருந்தால் அவ அமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவரா என்கிற கேள்வி எழுகிறது. தெரிந்திருந்தும் பொய்யாக இப்படி ஒரு தகவலைச் சொன்னால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வாடும் அத்தனை ஏழை எளிய மக்களையும் அவர் கிண்டல் செய்கிறார் என்று பொருள். ஸ்மிருதி இராணி பேச்சைத் தொடர்ந்து ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இதே தொனியில் ஒரு அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
அதற்கு உலகளாவிய பசிக் குறியீட்டுப் பட்டியலைத் தயாரிக்கும் நிறுவனம் தகுந்த பதிலைத் தெரிவித்திருக்கிறது. அய்க்கிய நாடுகள் அவையின் FAO, UNICEF, உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகளின் பல்வேறு அறிக்கைகளின் மூலம் பசிக்குறியீடு கணக்கிடப்படுகிறது. இந்த நிறுவனங்களின் தரவுகள் பெரும்பான்மையானவை இந்திய அரசும் அதன் மற்ற நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டவை ஆகும். உண்மை இப்படி இருக்க, போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உலக அளவில் இந்தியாவின் மதிப்பை இழக்கச் செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
உலக அளவில் இப்படிப்பட்டத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டுத்தான் ஒன்றிய அரசு அதனுடைய சாதனைகளை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் விளம்பரப்படுத்த “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” என்னும் சாலை நிகழ்ச்சியை நவம்பர் 20 முதல் ஜனவரி 25, 2024 வரை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
ஏழைகளின் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க என்ன செய்வது என்பதைச் சிந்திக்காமல் அது பற்றிய உரையாடல்களை எழவிடாமல் உலகப் பசிக் குறியீட்டு அறிக்கையின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து திசை திருப்புகிறார்கள் இவர்கள். உலகளவில் 111ஆவது இடத்திலருக்கும் இந்நிலையில்தான் தமிழக அரசு கொண்டுவந்த காலை உணவுத் திட்டத்தை, தினமலர் போன்ற அவர்களுடைய பத்திரிக்கைகள் மூலம் இழிவுபடுத்தி, கிண்டல் செய்து எழுதினார்கள்.
பாஜகவின் இயலாமையை இந்திய மக்கள் உணரும் வகையில் ‘இண்டியா ‘ கூட்டணி பரப்புரை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால் அதை விடவும் இன்றியமையாதது, தமிழ்நாட்டு அரசின் பசிப்பிணி போக்கும் முற்போக்குத் திட்டங்களை இந்தியாவின் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டியதாகும்.
- மா.உதயகுமார்