திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வதில்லை என்று ஒரு சாரார் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!

வாழ்த்து என்பது கேட்டுப் பெறுவதற்கு உரியதன்று என்பது ஒரு புறம் இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான தமிழ்நாடு அரசு இந்து மத விழாவிற்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்னும் கேள்விக்கு நாம் விடை சொல்ல வேண்டித்தான் இருக்கிறது.

tamil scholars on diwaliஇந்தக் கேள்விக்கு ஓர் உள்நோக்கமும் உண்டு. தீபாவளியின் மீதோ, இந்து மதம், கடவுள்கள் மீதோ கொண்ட பற்றினால் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை. இதன் மூலமாகத் திமுக இந்துக்களுக்கு எதிரானது என்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தி, இந்து மக்களின் வாக்குகள் திமுகவுக்குச் செல்லாமல் தடுப்பதுதான் உள்ளிருக்கும் அரசியல் நோக்கம் ஆகும்.

ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்னும் கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

இதே தீபாவளிக்கு மிகக் கூடுதலாகப் பேருந்துகளைத் தமிழ்நாடு அரசுதான் ஏற்பாடு செய்திருக்கிறது. தீபாவளியைக் கொண்டாட ஊருக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு அலுவலக விடுமுறை அளித்திருப்பதோடு, பேருந்து வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

24ஆம் தேதி தொடங்கி, திருச்செந்தூரில் ஒரு வாரம் நடைபெறவிருக்கும் கந்த சஷ்டி விழாவிற்குத் தேவையான முன்னேற்பாடுகளை இப்போதே அரசு செய்யத் தொடங்கிவிட்டது. பக்தர்கள் தங்குவதற்கான இட வசதி, குடிநீர், கழிப்பறைகள், மருத்துவ முதலுதவிக்கான திட்டங்கள் அனைத்தும் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

எல்லா இந்து மத விழாக்களுக்கும் இது போன்ற முன்னேற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்துதான் வருகின்றது. எனவே இந்துக்களுக்கு எதிரானது இந்த அரசு என்பதில் உண்மையும் இல்லை, அதனை இந்துக்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள் நம்பவும் இல்லை! ஆகவேதான் பாஜக போன்ற கட்சிகளின் பொய்ப் பரப்புரைகளைப் புறந்தள்ளிவிட்டு மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கின்றனர்!

சரி இது போகட்டும், ஏன் தீபாவளிக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை என்று கேட்கின்றனர். பெரும்பான்மையான இந்துப் பண்டிகைகள் எந்த அடிப்படையில் நடக்கின்றன என்று பார்க்கலாம். நரகாசுரன் என்னும் அரக்கன் கொல்லப்பட்டதால் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரன் என்னும் ஒருவரை துர்க்கை அழித்து விட்டதால் நவராத்திரி விழா எடுக்கப்படுகிறது. முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்து விட்டார் என்றுதான் சூரசம்கார விழா நடத்தப்படுகிறது. இப்படி இன்னும் பல!

இவை எல்லாவற்றிலும் ஓர் ஒற்றுமை இருப்பதை நம்மால் பார்க்க முடியும். யாராவது ஒருவன் இன்னொருவரால் கொல்லப்படுவதுதான் விழாவிற்கான அடித்தளமாக இருக்கிறது! கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் யார் யார்? பிற மதத்தினரா அல்லது பிற நாட்டினரா? நரகாசுரன் இஸ்லாம் மதத்தைத் தழுவியவரா? மகிஷாசுரன் ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்தவரா? எதுவும் இல்லை. எல்லோரும் இந்துக்களே!

அப்படியானால் ஒரு மதத்திற்கு உள்ளேயே நடந்த இரு பிரிவினருக்கு இடையிலான மோதல்தான் இவை எல்லாம். இன்றைய ஊடக மொழியில் சொல்வதானால் இவை அனைத்தும் “கோஷ்டி மோதல்கள்’’. இந்த கோஷ்டி மோதலில் சிலர் கொல்லப்பட்டு விட்டதைக் கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும், வாழ்த்து சொல்வதும், சொல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பமும் உரிமையும் அல்லவா!

அடுத்தவன் சாவைக் கொண்டாட வேண்டாம் என்று நினைப்பது நல்ல பண்புதானே - கொல்லப்பட்டவன் யாராக இருந்தாலும்!

இன்னொன்றையும் இங்கு நாம் பார்க்கலாம். தீபாவளி கொண்டாடும் எல்லோரும் நரகாசுரன் கொல்லப்பட்ட கதையை நம்பியா இன்று கொண்டாடுகின்றனர்? விடுமுறை கிடைக்கிறது, சில நிறுவனங்களில் போனசும் கிடைக்கிறது, ஊருக்குச் செல்லலாம் உறவினர்களைப் பார்க்கலாம், இனிப்பு தின்னலாம், வெடி வெடிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்னும் இயல்பான கொண்டாட்ட மனநிலைதான் மக்களிடம் இன்று மிஞ்சி இருக்கிறது!

நரகாசுரனை மக்கள் மறந்து நாளாகிவிட்டது! இன்று தீபாவளி என்பது ஒரு கேளிக்கைக்கான விழா! அதற்குத் தமிழ்நாடு அரசு வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும் என்பது என்ன தேவை!?!

- சுப.வீரபாண்டியன்

Pin It