'பெரியார் பெருந்தொண்டர்' என்ற அடைமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர் அய்யா காரைக்குடி இராம.சுப்பையா அவர்கள்.

தான் நன்றாக இருக்க வேண்டும், தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், என்று வாழ்பவர்கள் சராசரியானவர்கள்.

karaikudi rama subbaiahதன் நலனை விட, தன் குடும்ப நலனை விட மக்கள் சமூகம் நன்றாக இருக்க வேண்டும், இச்சமூகத்தில் அனைவரும் சுயமரியாதையோடு, பகுத்தறிவோடு வாழவேண்டும் என்று தன்வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்கள்.

தந்தை பெரியார் மூலம் சுயமரியாதைச் சிந்தனையை உள்வாங்கிய இராம.சுப்பையா அவர்கள் தன்னலமற்ற செயல் பாடுகளால், காரைக்குடியில் பல எதிர்ப்புகளுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர்.

ஒரு பகுதியில் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் முன்னெடுக்க மாட்டார்கள், அந்தப் பகுதியின் ஒரு சிலர்தான் முன்னெடுப்பார்கள். ஒவ்வொரு ஊரிலும் அதுதான் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இராம.சுப்பையா அவர்களும் காரைக்குடியில் மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்பட முயன்ற சிலரில் முதன்மையானவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அஞ்சா நெஞ்சன் அழகிரி, புரட்சிக் கவிஞர் பாரதிதாதன், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், W.P.A. சௌந்தரபாண்டியனார் என்று திராவிட இயக்க -பொதுவுடமை இயக்கத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் அவர்,

சுய மரியாதையோடும், பகுத்தறிவோடும் வாழவேண்டும் என்று தன்வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பெருந்தகையாளர்.

தான் மட்டும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டதோடு இல்லாமல் தன் இணையர் விசாலாட்சி அம்மையார் அவர்களையும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் பங்கேற்க வைத்தவர்.

அன்றைய காரைக்குடியில் பெண்கள் செருப்பு அணிவதும், குடை பிடித்து நடப்பதும் அநாகரீகமான செயல் என்று கருதிய சமூகத்தில், தன் இணையர் விசாலாட்சியை செருப்பணிந்து குடை பிடித்து அழைத்துச் சென்ற துணிச்சல்காரர், கலக்காரர்.

காரைக்குடியில் மட்டும் இயங்காமல் நாகை சுயமரியாதை மாநாட்டில் திறப்புவிழா அறிமுக உரையாற்றியும், சுயமரியாதைத் திருமணங்களைத் தலைமையேற்று நடத்தி வைத்தும், மறுமணத்தை தலைமையேற்று நடத்தியும், ராகு காலத்தில் தன் வீட்டில் திருமணத்தை நடத்தி வைப்பது என்றும் தன் இணையருடன் இணைந்து பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சாரத்தை துணிச்சலுடன் மேற்கொண்டார் அன்றைய காலத்தில்.

தனக்குப் பிறகு தன்னைப் போல இந்தச் சமூகத்துக்குத் தொண்டு செய்ய தன்இளைய மகன் சுப.வீரபாண்டியன் அவர்களை உருவாக்கியவர்.

'தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளை எண்பதடி பாயும்' என்ற முது மொழிக்கு ஏற்ப தந்தையைப் போல், உலகமெங்கும் சென்று பெரியாரின் கொள்கையையும் - பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் பரப்பச் செய்வதையே தன் வாழ்நாள் பணியாகக் கருதி பணியாற்றி வருகிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

பேராசிரியர் சுபவீ அவர்களின் முன்னெடுப்பில் ,திராவிட இயக்கத் தமிழர் பேரவை மண்ணின் மைந்தன் பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்களின் 118 ஆவது பிறந்த நாள் விழாவைக் காரைக்குடியில் நடத்தியது.

அதில் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மாண்புமிகு பெரியகருப்பன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தி உரையாற்றி இருக்கிறார்கள்.

காரைக்குடி மண்ணிலே பிறந்து காரைக்குடி பகுதியில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முன்னெடுத்த மூத்த தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்கள் வாழ்வும், பணியும் காலம் கடந்தும் நம்மை வழிநடத்துகிறது.

பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்களுக்கு 118ஆவது பிறந்ந நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்து நாமும் அவரை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்.

- ‘பெல்' கு.இராசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.