நவம்பர் 21, உலக மீனவர்கள் தினத்தை ஒட்டி, தலைநகர் டெல்லியில், மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கலந்து கொள்ள இருப்பதாகவும், அப்போது ஒன்றியஅரசின் புதிய மீன்வள மசோதா (The Marine Fisheries bill 2021) தொடர்பாக மீனவச் சங்கங்கள் ஆலோசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

fishermen 381ஆனால் திட்டமிட்டபடி ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் கூட்டத்தில் ஒன்றியஅமைச்சர் கலந்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் சாகு என்பவர் ஒன்றிய அரசின் மீனவ மசோதாக்களை ஆதரிப்பது போலவும், பர்சோத்தம் ரூபாலா மீனவர்களுக்குப் பாடுபடுவது போலவும் பேசினார். இதனால் ஆத்திரமடைந்தத் தமிழக மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக எம்.பி தம்பிதுரை பங்கேற்ற நிலையில், அவர் முன்னர், 15 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் புதிய கடல்சார் மீன்வளச் சட்ட மசோதாவுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படும் எனக் கூறி நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சட்டத்தின் மூலம் மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடிப்பதற்கான நேரம் உள்பட அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். மேலும், இந்தச் சட்டத்தில் யார் மீனவர்கள் என்பதும் வரையறை செய்யப்படவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில், இந்தச் சட்டத்தில் உள்ள குறைகளையும், பாதகங்களையும் இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவை டில்லியில் சென்று சந்தித்து, தமிழ்நாட்டு மீனவர்கள் மனு அளித்தனர். அவரும் திருத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளார். இராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சே.சின்னத்தம்பி, ஒருங்கிணைப்பாளர் கனிஷ்டன், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த அன்பு, ராயப்பன், செழியன் உள்ளிட்டோர் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்தனர்.

இந்த நிலையில் இப்போது நவம்பர் மாதம் உலக மீனவர்கள் தினத்தையொட்டி மீனவர் சங்கங்களை வரச் சொல்லி, பா.ஜ.க ஆதரவாளர்களை மீனவர் பிரதிநிதிகளாக முன்னிறுத்தி, இந்த மசோதாக்களுக்கு மீனவர்கள் ஆதரவு தருவது போன்ற சித்திரத்தை வரைய முற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

இந்தியக் கடல்சார் மீன்வளச் சட்டத்தில் செய்யப்ட வேண்டிய மாற்றங்கள் குறித்து மீனவர்கள் சங்கங்கள் முன்வைக்கும் கருத்துகள் பின்வருமாறு:

இன்ஜின் பொருத்தப்படாத படகுகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு. இன்ஜின் பொருத்தப்படாத படகுகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. அதன் எண்ணிக்கைகள் மிக மிகக் குறைவு. பாரம்பரிய மீனவர்களை எல்லாம் விசைப்படகுக்குப் பழக்கி 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எனவே, படகின் நீளம், இன்ஜினின் குதிரைத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து விதிவிலக்கு கொடுத்தால் சரியாக இருக்கும்.

கடல் மீன்வளச் சட்டத்தில் மீனவர்களுக்கான உரிமையும் பாதுகாப்பும் இருக்க வேண்டும். இதற்கான கமிட்டியில் மீனவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்.

பாரம்பரிய மீனவர்களுக்கான உரிமைப் பாதுகாப்பு என்பது சட்டமாக இயற்றப்பட வேண்டும். மற்ற பழங்குடி மக்களுக்கு என உரிமைகள் உள்ளன. கடல் பழங்குடிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.

மீனவர்களின் இந்தக் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல், மாநில அரசைக் கை காட்டுவது, ஒன்றிய அரசு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது. மீனவர்கள் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றுமாம், ஆனால் அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க மாநில அரசுகள் விலக்குகள் பெற வேண்டுமாம்.

ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு மாநிலங்கள் விலக்குப் பெறுவதும், பிறகு அது சட்டப்படி செல்லுபடியாகுமா என்றக் குழப்பத்தை ஏற்படுத்தி, ஏழை விவசாயிகளையும், மீனவர்களையும் இன்னும் அத்தனை நலிந்த தொழிலாளர்களையும் வாட்டி வதைப்பதே ஒன்றிய அரசின் வாடிக்கையாகிவிட்டது.

இப்போது விவசாயிகள், ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்டியிருக்கிறார்கள். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. அதே போல் மீனவர் சங்கங்கள் முன்வைக்கும் திருத்தங்களை, இந்தியக் கடல் மீன் வள மசோதாவில்(2021) ஒன்றிய அரசு செய்திட வேண்டும்.

மா.உதயகுமார்

Pin It