அறிவார்ந்த இனச்சேர்க்கை மூலம் ஓரினத்தை மேம்படுத்துவது என்பதுதான், இனமேம்பாட்டியலின் அடிப்படைக் கொள்கை. ஆனால், சாதி அமைப்பில் இது போன்ற சிறந்த இனச்சேர்க்கை எப்படிச் சாத்தியமாகும்? பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் கலப்பு மணம் புரிவதைத் தடுக்கும் எதிர்மறை அமைப்பாகவே சாதி அமைப்பு இருக்கிறது.

- அண்ணல் அம்பேத்கர் (சாதியை அழித்தொழிக்கும் வழி)

சங்கர்...

   பிரணய்...

   நந்தீஷ்...

பட்டியல் வகுப்பினரின் துயரப் பட்டியல் தொடர்ந்து கொண்டே போகிறது.           

                தேசிய குற்ற ஆவணக் கழகத்தின் தரவுகளின்படி, ஆணவக்கொலையின்கீழ் 2015ஆம் ஆண்டு 251 வழக்குகளும் 2016ஆம் ஆண்டு 77 வழக்குகளும் இந்தியாவெங்கும் பதியப்பட்டுள்ளன. எனினும் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் தனிச்சட்டம் இன்னும் கொண்டுவரப் படவில்லை. சட்டம் கைகட்டி நிற்கிறது. சாதிவெறி கோரத் தாண்டமாடுகின்றது.

                கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படுவது, குற்றம் இழைக்கத் துணிபவர்களைக் குற்றச் செயல்களிலிருந்து தடுக்கும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் போது, சாதிவெறிக் கொடுமைகளைத் தடுத்து, கடுமையாகத் தண்டிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. எனினும் சட்டங்கள் மட்டுமே சமுகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.

தாலாட்டிச் சீராட்டி வளர்த்த பிள்ளைகளையே வெட்டிச் சாய்க்கும் கொடூரம் மனதைப் பதற வைக்கிறது. அந்த அளவுக்குச் சாதிய வன்மம் தலைதூக்கி இருப்பது, சமூகத்தின் சாபக் கேடு. சாதி ஒழிய வேண்டுமெனில் சாதியைக் கட்டமைத்திருக்கும் சனாதன தர்மம் ஒழிய வேண்டும். இந்து மதம் ஒழியாமல் சாதி ஒழியாது.

”தீண்டாமை ஒழிப்புக்கோ, சாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழிக்க வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒருநாளும் உங்களது தீண்டாமைத் தன்மை ஒழியவே ஒழியாது” என்கிறார் தந்தை பெரியார் (குடிஅரசு,. 28.07.1935). இச்சமூக அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர சாதி ஒழிப்பையே முதன்மை நோக்காகக் கொண்டு பெரியாரிய இயக்கங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும். இம்மண்ணில் இருந்து சாதி ஒரு நாள் கட்டாயம் அகற்றப்படும். அது திராவிடச் சிந்தனை கொண்ட பெரியாரிய இயக்கங்களால் மட்டுமே இயலும்.  

சாதி என்னும் மாயச்சுவர் மனிதர்களை விலங்குகளினும் கேடான நிலைக்குத் தள்ளும் அவலம் நீடிப்பதை அறிவார்ந்த சமூகம் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மானுடம் நம் முகத்தில் காறி உமிழும்.

Pin It