கன்னியாகுமரியில் முழு அடைப்பு போராட்டமாம். பாஜக தலைவர் தமிழசை அறிவித்துவிட்டார்.

ஏதோ கஜா புயல் நிவாரணப் பணியில் அரசு சரியாகச் செயல்படவில்லை என்ற மக்கள் பிரச்சனைக்காக இல்லை, இந்தப் போராட்டம்.

நம்மூர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், அய்யப்பன் கோயிலுக்குப் போனபோது வழியில் சில இடையூறு காரணமாக இவரைக் கேரளக் காவல் துறை அரசுப் பேருந்தில் அனுப்பிவைத்தது.

இதற்காகத்தான் கன்னியாகுமரியில் முழு அடைப்புப் போராட்டம் என்கிறார் தமிழிசை.

தமிழ்நாட்டில் கஜா புயல் ஆடிய தாண்டவத்தால் நிலை குலைந்து போன தமிழக மக்களைப் பற்றிப் பாஜகவுக்குக் கவலை இல்லை.

இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், தமிழகத்தை விட்டுக் கேரளாவுக்குப் பொன்.ராதாகிருஷ்ணன் போக வேண்டிய அவசியம் என்ன?

பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காகக் கண்ணீர் விடாமல் அய்யப்பனுக்காகக் கண்ணீர் விட்டுக் கலங்கி இருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் என்றால் அவர் நாட்டு மக்களுக்கு மந்திரியா அல்லது அய்யபனுக்கு மந்திரியா?

கேரள இடதுசாரி அரசு, மக்களுக்கான அரசாக நல்ல திட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. அங்கே பாஜக செல்லாக்காசு.

அதனால் பாஜக வழக்கமாகச் செய்கின்ற ரத ஊர்வலம், ராமர் கோயில் போன்ற பாணியில் இப்பொழுது அய்யப்பனைக் காரணமாக வைத்து, அங்கு மத அடிப்படையிலான பிரச்னையை எழுப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறது அந்தக் கட்சி. அதன் துருப்புச் சீட்டுதான் பொன்.ராதாகிருஷ்ணனின் திடீர் அய்யப்ப பக்தியும், சபரிமலைப் பயணமும்.

தமிழக மக்களின் இன்றைய வாழ்வுரிமைப் போராட்டத்தைக் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் பாஜக தலைவர் தமிழிசையும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் சபரிமலை என்றும் போராட்டம் என்றும் பேசிக் கொண்டிருப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நாளை மக்களுக்கு இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Pin It