stalin 450சென்ற ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இப்போது ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இன்றுவரையில் எந்தப்  பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, ஒரு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையைக் கண்டித்து, கடந்த 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், அதனைக் கறுப்புநாள் என்று அறிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட,  மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் திமுக செயல்தலைவர், தளபதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சில இடங்களைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத் தலைநகரம் சிவகங்கையில், மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் தலைமையிலும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்  கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக  இலக்கிய அணித் தலைவர் தென்னவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு  உரையாற்றினர். திமுக வின் மாவட்டத் துணைச்  செயலர் சேங்கை மாறன் கண்டன முழக்கங்களை முழங்கினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

பண மதிப்பிழப்பை எதிர்த்து இன்று நாம் தெருவுக்கு வந்துள்ளோம். ஆனால் ஏழை, எளிய மக்கள் தெருவுக்கு வந்து ஓர் ஆண்டு ஆகிவிட்டது. மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் தெருவுக்கு வந்துவிட்டது.

1946 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது 10 பவுண்ட் தாள் செல்லாது என்றனர். அடுத்து, 1978இல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, 1000, 5000, 10000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்று அறிவித்தனர். இப்போது நரேந்திர மோடி ஆட்சியில் மூன்றாவது முறை அறிவிப்பு வந்துள்ளது.

முதல் இரு அறிவிப்புகளுக்கும் இப்போது வந்துள்ள அறிவிப்புக்கும்  இடையே ஒரு பெரும் வேறுபாடு உள்ளது. 10 பவுண்டு தாளும்,  78 இல், ஆயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்த்  தாள்களும்  பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தன. சாதாரண மக்கள் அவற்றைப் பார்த்தது கூட இல்லை. அதனால் ஏழை மக்கள் மட்டுமில்லை, நடுத்தட்டு மக்கள் கூட அன்று  பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றோ, பணக்காரர்கள் யாரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. நடுத்தட்டு, அடித்தட்டு மக்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். முதலைகளை அழிப்பதற்காகக் குளத்தைச் சுத்தம் செய்கிறோம் என்றனர். ஆனால் இறுதியில், முதலைகள் எல்லாம் தப்பி விட்டன.  மீன்கள் எல்லாம் இறந்துபோய் விட்டன.

சென்றாண்டு பண மதிப்பிழப்பை அறிவிக்கும்போது அதற்கான காரணங்களாக மூன்று செய்திகளைப்  பிரதமர் கூறினார். 1. கறுப்புப்பண ஒழிப்பு 2. கள்ளப்பண ஒழிப்பு 3. தீவிரவாதிகளின் செல்வ வழி அடைப்பு. இந்த மூன்றில் எந்த ஒன்றேனும் இன்றுவரையில் நிறைவேறியுள்ளதா?

1000, 500 ரூபாய்த் தாள்கள் முடக்கப்பட்டபோது, மொத்தப் பணப் புழக்கத்தில் 86% முடக்கப்பட்டது. அப்படி முடங்கிய பணத்தின் அளவு 15.44 இலட்சம் கோடி என்று அரசு அறிவித்தது. இதில் குறைந்தது 3 இலட்சம் கோடி ரூபாயாவது வங்கிக்கு வராமல் தங்கிவிடும். அவை அனைத்தும் கறுப்புப்பணம் என்பது அரசின் கணக்கு.

ஆனால் என்ன நடந்தது? ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, 15.28 இலட்சம் கோடிரூபாய் வங்கிகளுக்கே திரும்பி வந்து விட்டது. அதாவது 99% பணம் மீண்டும் வந்துவிட்டது. அப்படியானால் எங்கே போனது கறுப்புப் பணம்? கறுப்புப்பணம் எங்கும் போகவில்லை. அவை அனைத்தும் வெள்ளைப் பணமாகி விட்டன. அவ்வளவுதான்! ரோஸ் வண்ணத்தில் 2000 ரூபாய்த் தாள் வந்தது. பச்சை வண்ணத்தில் 500 ரூபாய்  வந்தது. காவி நிறத்தில் 200 ரூபாய் வந்தது. ரோஸ் பணம், பச்சைப் பணம், காவிப்  பணம் எல்லாம் வெளிவந்து விட்டன. கறுப்புப்பணம் மட்டும் வெளிவரவே இல்லை.

கள்ளப் பணமாவது ஒழிந்ததா? புதிய 2000 ரூபாய்த் தாள் வெளிவந்த சில வாரங்களிலேயே அதே மாதிரி கள்ள நோட்டு வந்துவிட்டது. இப்போது அவை மேலும் எவ்வளவு பெருகியுள்ளன என்று தெரியவில்லை.

தீவிரவாதம் முடிந்துவிட்டதா? கடந்த ஓராண்டில்தான் காஷ்மீரில் கூடுதலாகப் போராட்டங்கள் நடந்துள்ளன. ஆக எல்லாவிதத்திலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது. இந்த உண்மை அரசுக்கும் தெரியும். ஆனால் அதனை மூடி மறைக்கின்றனர்.  

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், நாட்டில் நில விற்பனைத் தொழில் (ரியல் எஸ்டேட்), கட்டிடத்தொ ழில் எல்லாம் பெரும் சரிவைக் கண்டுள்ளன. நடைபாதை வணிகர்கள், அன்றாடங் காய்ச்சிகள், சிறுதொழில் செய்தோர் அனைவரும் தள்ளாடித் தத்தளிக்கின்றனர். பாபா ராம்தேவின் பதஞ்சலி வணிகம் மட்டுமே கொடிகட்டிப் பறக்கிறது.     

Pin It