நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் நாள்களில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்து 13.10.2021 அன்று முழுவதுமாக முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிட்டன. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் (மாவட்ட கவுன்சிலர்கள்), 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும், 2,901 ஊராட்சித் தலைவர்களும், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் இந்தத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

stalin 225மொத்தம் 27,003 பதவிகளுக்கு 79,433 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், 2981 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். மீதமுள்ள 24022 பதவிகளுக்கு வாக்கெடுப்பு நடந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டுமே கட்சிகள் போட்டியிட முடியும். ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் சுயேட்சைகள் மட்டுமே போட்டியிட முடியும். கட்சிச் சின்னங்கள் வேலைக்கு ஆகா. போட்டியிடும் உறுப்பினரின் சொந்த மதிப்பீடே மக்களிடம் ஆட்சி செலுத்தும் வண்ணம் செய்யப்பட்ட ஏற்பாடு இது.

140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 138 உறுப்பினர் பதவிகளைத் தி.மு.க. கூட்டணிக் கைப்பற்றி உள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 1381ல் 1027 பதவிகளைத் தி.மு.க. கூட்டணிக் கைப்பற்றி உள்ளது. அதிலும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசு, வி.சி.க ஆகியவற்றை விடக் குறைவானப் பதவிகளைக் கைப்பற்றி மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்து உள்ளது.

காங்கிரசு 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களையும், 30 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களையும் கைப்பற்றி உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கொடுக்கப்பட்ட 4 இடங்களில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களையும், 43ல் 27 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களையும் பெற்று மூன்றாம் நிலைக்கு உயர்ந்துள்ளதோடு அரசியலில் மய்ய நீரோட்டத்தில் பங்கு பெறும் பொதுக் கட்சியாகவும் நம்பிக்கையானக் கட்சியாகவும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தனித்து நின்றப் பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்டக் கட்சிகள் ஒரு மாவட்டப் பதவியைக் கூடக் கைப்பற்றவில்லை. பா.ம.க சில ஒன்றியப் பதவிகளைக் கைப்பற்றி உள்ளது. எஞ்சியவை ஒன்றிய அளவிலும் எந்தப் பதவிகளையும் கைப்பற்றவில்லை. இவர்களை ஒப்பிடுகையில் விஜய் மக்கள் இயக்கம் கூட சில ஒன்றியப் பதவிகளைக் கைப்பற்றி உள்ளது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அக்டோபர் 2 அன்று பாப்பாப்பட்டி ஊராட்சியில், பதவியேற்ற பின்னான முதல் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின் அவர் ஊராட்சித் தேர்தல் பரப்புரைக்குக் கூடச் செல்லவில்லை. ஆனால் அவர் தன் வெற்றியை அங்கேயே ஈட்டிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதல்வர் அவர்கள், தன் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் கடத்தும் செய்திகளை மக்கள் கற்பூரமாகப் பற்றிக் கொள்கிறார்கள் என்றே கருத வேண்டி உள்ளது. “சட்டங்களையும் திட்டங்களையும் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தே செயல்படுத்த இயலும். ஆதலால் மக்கள் உள்ளாட்சியிலும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என அவர் வைத்த வேண்டுகோளை மக்கள் சிரமேற்கொண்டு 95% வெற்றியைத் தி.மு.க. கூட்டணிக்குக் கொடுத்துள்ளார்கள். “இனி உள்ளாட்சியிலும் நல்லாட்சியே” என்று முதல்வர் அவர்கள் தன் நன்றி அறிவிக்கையில் வாய்மொழிந்துள்ளார்.

ஊராட்சித் தலைவர் பதவிகளிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாகவும் தி.மு.க. ஆதரவுடன் களத்தில் நின்றவர்களே வெற்றி பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சித் தலைவராக 21 வயது சாருகலா (இளையவர்) முதல், அதே மாவட்டத்தைச் சேர்ந்த சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவராக 90 வயது பெருமத்தாள் (முதியவர்) வரை தி.மு.க.வின் ஆதரவாளர்கள்தான்!

மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சியில் கைவைக்கப் பெரிதாக திட்டமிட்டிருந்த அ.தி.மு.க விட்டால் போதுமென, “எங்களுக்கும் வாக்களித்தவர்களுக்கு நன்றி” எனச் சொல்லி விட்டது. தேர்தல் ஆணையத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு முடிவுகள் அறிவித்ததாகச் சொல்வதெல்லாம் வழமையான போலிக் குற்றச்சாட்டுகள்தான். ஆதாரமிருந்தால்தான் வழக்குத் தொடுப்பார்களே. கொட நாடு வழக்கை மறப்பாரா முதல்வர் என அவர்கள் அடுத்தக் கவலைக்குத் தாவி இருப்பார்கள். “நாங்கள் வளர்கிற கட்சி”, “எங்கள் வாக்காளர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்”, “நாங்களே கவலைப்படவில்லை” என்றெல்லாம் தோல்வி குறித்துப்பேசி, தன் முன்னே திரளும் இளைஞர்களைக் கேலிப் பொருளாக மாற்றிக் கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.

மொத்தத்தில் மக்கள் விழித்துக் கொண்டார்கள்! தத்துவத்தைத் தலைமை ஏற்றுள்ளார்கள்! ஆம் ஸ்டாலின் எனும் திராவிடத் தத்துவத்தை! இனி வீழ்ச்சி என்பது எம் மக்களுக்கு இல்லை!

- சாரதா தேவி

Pin It