(பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கொண்டு வந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னால் அமெரிக்கா செய்த திரைமறைவு இராஜதந்திர நடவடிக்கைகளை ‘தி இண்டெர்ஸ்ப்ட்’ வெளியிட்டது. அக்கட்டுரையை சுருக்கி தமிழில் இங்கே அளிக்கிறோம். ஆங்கில கட்டுரையின் இணைப்பு. இதன் எதிரொலியாக, “இரகசிய காப்பு உறுதிமொழியை” மீறியதாக இம்ரான் கான் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.)
கடந்த ஆண்டு நடந்த உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின்போது இம்ரான் கான் நடுநிலைமை வகித்ததால், அமெரிக்கா அதிருப்தி அடைந்தது. எனவே பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கானை நீக்குவதற்காக, அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்ததாக ‘தி இன்டர்செப்ட்‘ இணைய ஊடகம் தற்போது ஒரு இரகசிய ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இம்ரான் கானின் கட்சிக்கும் மற்றும் இராணுவத்தினரிடையே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக போட்டி நிகழ்ந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தான், அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் இருவருடனான ஒரு சந்திப்பு, பாகிஸ்தானில் சர்ச்சையாகி இருக்கிறது. பாகிஸ்தான் தூதரும் அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. இதுவே இம்ரான் கானை பதவியிழக்கச் செய்ததாக கசிந்த ரகசிய ஆவணம் கூறுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதிருந்து, இம்ரான் கானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் மோதல் போக்கு அதிகரித்தது. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ராணுவம் தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்றியதாக இம்ரான் கான் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தூதர்- அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பின்போது தயாரிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட ரகசிய ஆவணம் இதற்கு முன் வெளியிடப்படவில்லை. உள்நாட்டில் “சைஃபர்” (மறைக்குறியீடு) என்று அழைக்கப்படும் ஆவணம், இம்ரான் கானுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்திய யுக்திகளை வெளிப்படுத்தி இருக்கிறது. இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டால் அமெரிக்க-பாகிஸ்தான் உறவு மேம்படும் எனவும் இது நடைபெறாவிட்டால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. “சீக்ரெட்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆவணத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலர் டொனால்ட் லூ மற்றும் பாகிஸ்தான் தூதராக இருந்த அசாத் மஜீத் கான் இடையேயான சந்திப்பின் விவரம் அடங்கி உள்ளது.
இந்த ஆவணத்தின்படி, உக்ரைன் போரில் இம்ரான் கானின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா எதிர்க்கிறது. அவர் பதவி நீக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் தலைகீழாக மாற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, சந்திப்பில் உறுதியளித்தபடி, அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேம்படுத்தப்பட்டது. இம்ரான் கான் மாஸ்கோவிற்கு சென்றதால், கோபமுற்ற அமெரிக்கா, பாகிஸ்தான் தூதரை சந்தித்தது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
மார்ச் 2 அன்று, உக்ரைன் விடயத்தில் இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தானின் நடுநிலைமை குறித்து செனட் வெளியுறவுக் குழு விசாரணையில் லூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவின் பங்கைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இருந்து விலகியிருக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு குறித்து செனட் கிறிஸ் வான் ஹோலனின் கேள்விக்கு பதிலளித்த லு, “பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் மாஸ்கோவிற்கு பயணம் செய்துள்ளார். எனவே இம்ரான் கானை எதிர்கொள்வது எவ்வாறு என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்” என்று கூறினார். மேலும் இப்பிரச்சினை குறித்து இம்ரான் கானுடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொள்ளவில்லை என்று வான் ஹோலன் கோபமடைந்தார்.
இந்தக்கூட்டம் நடந்ததற்கு முந்தைய நாள், இம்ரான் கான் ஒரு பேரணியில் உரையாற்றும்போது, உக்ரைனுக்குப் பின்னால் பாகிஸ்தான் அணிதிரள வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார். “நாங்கள் உங்கள் அடிமைகளா? நீங்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்களிடம் எதைக் கேட்டாலும் நாங்கள் செய்வோமா ?” என்று கேள்வி எழுப்பினார். “நாங்கள் ரஷ்யாவின் நண்பர்கள், நாங்கள் அமெரிக்காவின் நண்பர்கள். நாங்கள் சீனா மற்றும் ஐரோப்பாவின் நண்பர்கள். நாங்கள் எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
மேலும், உக்ரைன் குறித்தான பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் அமெரிக்கா அதிருப்தி அடைந்தது குறித்து லூ நேரடியாகப் பேசினார். “அமெரிக்காவும் ஐரோப்பாவும் பாகிஸ்தான் ஏன் இத்தகைய நடுநிலைப்பாட்டை (உக்ரைனில்) எடுக்கிறது என்பது பற்றி மிகவும் கவலையாக உள்ளது. இது எங்களுக்கு அப்படியொரு நிலைப்பாடாகத் தெரியவில்லை. இது பிரதமரின் (இம்ரானின்) கொள்கை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றும் லூ கூறினார். மேலும், அவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் உள்விவாதங்களை நடத்தியதாகவும் ரகசிய ஆவணம் கூறுகிறது.
பின்னர் லு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு பிரச்சினையை எழுப்புகிறார். “ரஷ்ய பயணம் இம்ரானின் முடிவாக பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு (இம்ரான்) எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றியடைந்தால், இங்கு அனைத்தும் மன்னிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். இல்லையெனில் முன்னோக்கி செல்வது கடினமாக இருக்கும்” என்று லு பேசியுள்ளார்.
இந்த நிலைமை சரி செய்யப்படாவிட்டால், பாகிஸ்தான் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளால் ஓரங்கட்டப்படும் என்று லு எச்சரித்தார். “இது ஐரோப்பாவால் எவ்வாறு பார்க்கப்படும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், அவர்களின் எதிர்வினை இதை ஒத்ததாக இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்.” என்று லு கூறியுள்ளார். இம்ரான் பதவியில் நீடித்தால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவால் தனிமைப்படுத்தப்படுவதை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்றும் லு தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போரின் பிரச்சினை “எங்கள் இருதரப்பு உறவுகளை பாதிக்காது” என்று பாகிஸ்தான் தூதர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு விவாதம் முடிந்ததாக ரகசிய ஆவணம் கூறுகிறது. லு அவரிடம், “இந்த சேதம் உண்மையானது, ஆனால் ஆபத்தானது அல்ல” என்று கூறினார். மேலும் “இம்ரான் பதவி பறிக்கப்பட்டவுடன், அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு இயல்பு நிலைக்கு திரும்பும்” என்று லு கூறினார். “அரசியல் சூழ்நிலை மாறுமா என்பதைப் பார்க்க சில நாட்கள் காத்திருப்போம்.” இல்லையெனில், இந்த சிக்கலை நேருக்கு நேர் எதிர்கொண்டு, அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை முடிவு செய்வதாகவும் லு கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் நடந்த சந்திப்பிற்கு அடுத்த நாள், மார்ச் 8 அன்று, பாராளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5, 2023 அன்று ஊழல் குற்றச்சாட்டில் இம்ரான்கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. (கடந்த ஆண்டு இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை அவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறுகின்றனர். தற்போது இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையால் இந்த ஆண்டின் இறுதியில் நடக்க இருக்கும் தேர்தலில் அவர் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.)
ஜூன் 2023 தொடக்கத்தில், இதே குற்றச்சாட்டை இம்ரான் கான் மீண்டும் வலியுறுத்தினார். ரகசிய ஆவணம் வெளியான நிலையில், பாகிஸ்தானிய இராணுவம் அந்நாட்டில் கருத்துக் சுதந்திரத்தைப் பறித்து எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அண்மைய காலங்களில் அங்குள்ள இராணுவம் தலைமையிலான அரசாங்கம், தன் சொந்த மக்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இம்ரான் கானுக்கு மக்களிடம் ஆதரவை எப்படியேனும் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்நாட்டு ராணுவம் செயல்படுகிறது. தனக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கியதோடு, அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு இராணுவத் தலைவர்களுக்கு நிரந்தர உரிமையும் வழங்குவதற்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஜூலை பிற்பகுதியில் பாகிஸ்தானுக்கு சென்ற அமெரிக்க மத்திய தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா,”அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதில்” கவனம் செலுத்தியதாக அறிக்கை வெளியிட்டது அங்குள்ள இராணுவ நடவக்கைகளுக்கு சான்றாக அமையும்.
அரசியல் குழப்பம்
இம்ரான் கானின் கட்சியை இராணுவம் ஒடுக்குவதற்கு எதிரான போராட்டங்கள் அந்த நாட்டைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. அதே நேரத்தில் அம்மக்கள் எரிசக்தி விலை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றையும் எதிர்கொள்ள போராடி வருகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டின் பணவீக்கம் மற்றும் முதலீட்டு விகிதங்களையும் பாதித்துள்ளது. அங்குள்ள குடிமக்களும் ராணுவத்தின் அடக்குமுறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்ரான் கானின் பெயரைக் குறிப்பிடுவது கூட செய்தி நிறுவனங்களால் தடுக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை விட்டு வெளியேறிய பிரபல பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரீப், கடந்த அக்டோபர் மாதம் நைரோபியில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு பிரபல பத்திரிக்கையாளரான இம்ரான் ரியாஸ் கான், கடந்த மே மாதம் விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அவர் காணாமல் போனார்.
கடந்த நவம்பரில், இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட ஒரு கொலை முயற்சியில் அவர் காயமடைந்தார். அவரது ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இவ்வாறு, இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், வரவிருக்கும் தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிடுவதைத் தடுக்க இராணுவம் செய்த முயற்சியாகவே கருதப்பட வேண்டும். ( தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டால், கான் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.) ரகசிய ஆவணத்தைப் பற்றிய இம்ரான் கானின் தொடர்ச்சியான பேச்சுக்கள் அவருக்கு மேலும் சட்ட சிக்கல்களையே அளித்தன. அவர் அரசின் ரகசிய சட்டங்களை மீறினாரா என்பது குறித்து தனி விசாரணை தொடங்கப்பட்டது.
இராணுவம் மற்றும் ஜனநாயகம்
பல ஆண்டுகளாக, பாகிஸ்தானிய இராணுவமும் அமெரிக்க அரசும் பல ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றன. அங்கு இராணுவத்தின் கட்டற்ற அதிகாரத்தின் காரணமாக பாகிஸ்தான் ஒரு முழுமையான விடுதலையை உணர்ந்ததே இல்லை. மேலும் அந்நாட்டு மக்களிடையே இராணுவம் ஒரு வெறுக்கத்தகுந்த சக்தியாக ஆகியுள்ளது. தற்போது நாட்டின் பிரதமரை அகற்றுவதில் அமெரிக்கா தலையிட்டதால் மக்களுக்கு இராணுவத்தின் மீதான வெறுப்பு அதிகரிக்கவே செய்திருக்கிறது.
இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அப்போதைய பாகிஸ்தான் இராணுவத் தலைவர் கமர் பஜ்வா ரஷ்யாவை விமர்சித்து உரை நிகழ்த்தினார். இம்ரான் கானின் நடுநிலைமை கொள்கை, இராணுவத்தின் கொள்கை அல்ல என்று ரகசிய ஆவணத்தில் பதிவு செய்யப்பட்ட லுவின் கருத்தை ராணுவ அதிகாரியின் கருத்து ஒத்திருந்தது.
இம்ரான் கான் பதவி நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை முற்றிலுமாக மாறியது. உக்ரைன் விடயத்தில் பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பக்கம் சாய்ந்தது. தனது நடுநிலைமையைக் கைவிட்டு, பாகிஸ்தான் இப்போது உக்ரேனிய இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கும் நாடாக மாறியிருக்கிறது. பாகிஸ்தானால் தயாரிக்கப்பட்ட குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளின் போரில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பேட்டியில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் உக்ரைனுக்கு பாகிஸ்தான் செய்த இராணுவ உதவியை உறுதிப்படுத்தினார். மேலும், உக்ரைனின் வெளியுறவு மந்திரி இந்த ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார்.
இராணுவத்தை எதிர்த்துப் போராடி பதவிநீக்கப்பட்ட (பாகிஸ்தான்) அரசியல்வாதிகளின் நீண்ட பட்டியலில் இம்ரான் கான் இப்போது இணைந்துள்ளார். அமெரிக்கா ஆட்டுவிக்கும் நபர்கள் உலகெங்கிலும் பதவியில் அமர்த்தப்பட்ட வேண்டும் என்ற மேற்குலக சித்தாந்தங்கள் தற்போதைய ரகசிய ஆவணத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
(அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் நலனுக்காக பிற நாடுகளில் ஆட்சி கவிழ்ப்புகளை நடத்தும் என்பதற்கு தி இண்டெர்ஸ்ப்ட் வெளியிட்டுள்ள ஆவணக்கட்டுரை முக்கிய சாட்சியாக உள்ளது. ஆங்கில கட்டுரையின் இணைப்பு. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சர்வதேச அரசியல் காலச்சுழலில், இந்தியாவில் ‘குஜராத் பைல்ஸ்’, ‘ஹிண்டன்பெர்க் ரிப்போர்ட்ஸ்’, தொடர்ந்து மோடிக்கு பிடெனின் சிவப்பு கம்பள வரவேற்பு; ராகுல் காந்தியின் ஜெர்மனி மற்றும் அமெரிக்க பயணம் போன்ற நிகழ்வுகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை ஆகும்.)
- மே பதினேழு இயக்கம்