2009 மே 18 - அந்தத் துயரச் செய்தி உலகெங்கும் பரவிற்று! இன்றுவரையில் அதை ஏற்றும், மறுத்தும், கருத்துகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. எவ்வாறாயினும் அந்த நாளுக்குப் பிறகு, இன்றுவரையில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும், அறிக்கையும் இல்லை. அந்த அமைப்பின் போராட்டம் குறித்தோ, அதன் செயல்பாடுகள் குறித்தோ எதுவும் வெளிப்படவில்லை.

1956 முதற்கொண்டே, தமிழ்நாட்டில் ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு இருந்து வந்தது. 1983 ஜூலை முதல், அங்கிங்கெனாதபடி தமிழ்நாடு எங்கும் கட்சிகளின் எல்லைகளை எல்லாம் தாண்டி, விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுக் குரல் கேட்டது!

1991 மே மாதம் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு, காட்சிகள் மாறின. இருப்பினும், விடுதலைப் புலிகளுக்கும், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழ்நாட்டில் ஆதரவு இருந்து கொண்டே இருந்தது!prabhakaran 4551991 இல் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதலமைச்சராக ஆனதும், புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.

1992 மே 14 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இன்று வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதன் முதலாக அது தடை செய்யப்பட்ட நேரத்தில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அதை வரவேற்று, ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்தார். தலைவர் கலைஞர் அவர்கள் அதனை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். 15.05.92 ஆம் நாளிட்ட அனைத்து ஏடுகளிலும் இருவரின் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன.

தலைவர் கலைஞர் தன் அறிக்கையில், ஒன்றிய அரசை நோக்கி மூன்று கேள்விகளை முன் வைத்திருந்தார்.

1. புலிகளைத் தடை செய்துவிட்டு, யாருடன் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறீர்கள்?

2. தடையைப் பயன்படுத்தி ஜெயலலிதா தன் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

3. தமிழ்நாட்டில் புலிகளை ஒழித்து விட்டோம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். அப்படியானால், இல்லாத இயக்கத்திற்கு ஏன் தடை விதிக்க வேண்டும்?

கலைஞரின் வினாக்களுக்கு யாரும் விடை சொல்லவில்லை. ஆனால் புலி என்று பேசினாலே தமிழ்நாட்டில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அது மட்டுமல்லாமல், எம்ஜிஆர் காலத்தில் ஈழத்துப் பிள்ளைகளுக்கு கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டிருந்த இடங்களையும் ஜெயலலிதா அரசு மறுத்துவிட்டது. மீண்டும் 1996 இல் கலைஞர் முதலமைச்சராக ஆன பிறகு தான், அவர்களுக்கு மறுபடியும் கல்விக் கதவுகள் திறக்கப்பட்டன. அதற்கான அரசு ஆணை இங்கு தரப்பட்டுள்ளது.

2001 இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், ஈழ ஆதரவாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.

2001 ஆட்சிக் காலத்தில், பிரபாகரனை இங்கு அழைத்து வந்து தூக்கில் ஏற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா !

ஈழ மக்களுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் நேர் எதிரானவராக இருந்த ஜெயலலிதாவை, 2011 தேர்தலில் ஆதரித்து, இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான், இன்று தாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் என்றும், பிரபாகரனின் வளர்ப்புகள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

இன்று தங்களைப் புலிகளின் வாரிசுகள் என்று சற்றும் வெட்கமில்லாமல் மேடைகளில் பேசுகின்ற சில பிழைப்புவாதிகள், 1991 மற்றும் 2001 காலகட்டங்களில், தடாவும், பொடாவும் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், சிறைப்பட்டவர்களைச் சந்திப்பதற்காகக் கூட, சிறைப்பக்கம் வராதவர்கள்!

இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துச் சொல்வதற்காக, மிக மிக ஆபாசமான சொற்களில், இந்தக் கட்டுரைக்குப் பின்னூட்டங்கள் வரும் என்பதை நாம் அறிவோம்! அவ்வளவு இழிவான, ஆபாசமான சொற்களைப் பயன்படுத்துகிறவர்கள், தாங்கள் புலிகளின் வாரிசுகள் என்றும் சொல்லிக் கொள்வது, மாவீரன் பிரபாகரனுக்கும், ஈழ மக்களுக்கும் அவமானம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்!

ஈழ விடுதலைப் போரில் உயிர் துறந்த அனைவருக்கும் நம் வீரவணக்கம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It