‘நீட்’ என்ற தேர்வை தமிழர்கள் தலையில் திணித்தது போதாது என்று, அதன் மூலம் தமிழ் மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் செய்யும் முயற்சியிலும், மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. இறங்கியுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமாரி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மாணவர்கள் விருப்பத்திற்கு மாறாகத் தேர்வு மையங்களை அவர்களுக்கு அமைத்துள்ளது மத்திய சி.பி.எஸ்.சி.

அதாவது தமிழக மாணவர்கள் கேரளாவின் எர்ணாகுளம், ஆந்திராவின் ஐதராபாத், கர்நாடக ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போய் நீட் தேர்வு எழுத வேண்டும் என சி.பி.எஸ்.சி. ஆணையிட்டுள்ளது.

ஏழை நடுத்தர மக்களுக்குப் பொருளாதாரச் சிக்கலோடு, முன்பின் எந்தத் தொடர்பும் இல்லாத மாநிலங்களில் சென்று தேர்வு எழுதுவதில் இருக்கும் சிரமங்களையும், மன உளைச்சல்களையும் மத்திய அரசு புரிந்துக்கொள்ளவில்லை.

தமிழகம் தவிர்த்த ஏனைய அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள், அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு எழுத வகைசெய்யப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களின் கல்வியில் இப்படிப்பட்ட பேரிடி வீழ்ந்ததைச் சென்னை உயர்நீதிமன்றம் தடைசெய்தும், உச்சநீதிமன்றம் மாணவர்களின் கல்வி நலனைக் கருதாமல் ‘காலம் இல்லை’ என்று சாக்கு சொல்லி சி.பி.எஸ்.சி.க்குத் துணைபோயிருக்கிறது.

காவிரி நீரில்தான் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது என்றால், கல்வியிலும் தமிழக மாணவர்களுக்குப் பச்சை துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

வெந்ததைத் திண்போம், விதிவந்தால் சாவோம் என்ற வறட்டு வேதாந்தத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, அடுத்த தலைமுறைக்காக இப்பொழுது போராட வேண்டிய அவசியத்தை மத்திய அரசு   ஏற்படுத்திவிட்டது.

இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லையென்றாகிவிடும்.

மாணவர் சமூதாயத்தின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதை அவர்கள் உணர்ந்தால் & விடிவு கிடைக்கும்.

Pin It